Tuesday, March 26, 2013

ஐ.நா செயலாளர் நாயகத்தின் இனஅழிப்பைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகரை நோக்கிய கையெழுத்து வேட்டை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனஅழிப்பு, மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பாகத் தயாரிக்கப் பட்டுள்ள அறிக்கைகளையும் அவை பற்றிய ஆய்வுகளையும் உடனடியாகப் பகிரங்கப் படுத்துமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தின் இன அழிப்பைத் தடுப்பதற் சிறப்பு ஆலோசகர் Adama Dieng அவர்களை வேண்டும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையெழுத்து வேட்டையொன்றை உடனடியாக தொடங்கியுள்ளது. 'இன அடிப்படையிலான பாரிய மனித உரிமை மீறல்களும், அனைத்துலக சட்ட விதிகளுக்கு மாறான குற்றங்களும் இடம்பெறுமிடத்து அவை பற்றிய தகவல்களைச் சேகரித்து, அத்தகைய குற்றங்கள் இன அழிப்பாக மாறாது தடுப்பதற்காக செயலாளர் நாயகத்தின் ஊடாக ஐநாவின் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை போலக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது' எனும் ஐ.நாவிதிகளை சுட்டிக்காட்டி இந்த கையெழுத்து வேட்டையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும் தடுப்புக்குமான விவகார அமைச்சு முன்னெடுக்கின்றது. எதிர்வரும் யூலை 31ம் நாள் வரை இடம்பெறவுள்ள இக்கையெழுத்து வேட்டையில் நேரடியாக ஒப்பமிட்டுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதோடு https://www.change.org/fr/p%C3%A9titions/the-honorable-adamadieng-release-of-2007-report-and-all-documents-regarding-tamils-in-sri-lanka எனும் இணையவழியூடாகவும் மின்னொப்பம் இட்டுக் கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை நோக்கிய கோரிக்கையின் விபரம் : மாண்புமிகு அதியாமா தியாங் அவர்கள், இன அழிப்பைத் தடுப்பதற்கான செயலாளர் நாயகத்தின் சிறப்பு ஆலோசகர் 866, ஐக்கிய நாடுகள் நிறுவன பணிமனை நியுயோர்க் நகர், 10017 ஐக்கிய அமெரிக்கா மதிப்புக்குரிய தியாங் அவர்களுக்கு வணக்கம், இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனஅழிப்பு, மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பாகத் தயாரிக்கப் பட்டுள்ள அறிக்கைகளையும் அவை பற்றிய ஆய்வுகளையும் உடனடியாகப் பகிரங்கப் படுத்துமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகின்றோம். சிறிலங்கா நாட்டுக்கான ஐநாவின் நிபுணர் குழுவின் கணிப்பின்படி அங்கு நடந்தேறிய இறுதி யுத்தத்தின் போது 40 000 தமிழ் பொது மக்கள் கொலை செய்யப் பட்டுள்ளார்கள். அதேவேளை ஐநா உள்ளக மீளாய்வுக் குழுவின் மதிப்பீட்டின்படி 70 000 பொது மக்கள் கொலை செய்யப் பட்டுள்ளார்கள். மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை மதிப்புக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசேப்பு அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிண க்கத்துக்குமான ஆணைக்குழு முன் வழங்கிய தனது தகவல்களின் படி இறுதி யுத்தத்தின்போது 146 679 எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் கதி என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். ஓரளவு முற்று முழுதாக சிங்கள இனத்தவர்களை மட்டும் கொண்டுள்ள அரசினாலும் அதன் முகவர்களினாலும் (பாதுகாப்புப் படை போன்றவை) தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார, மத உரிமைகள் தொடர்ந்தும் இன அடிப்படையிலான தாக்குதல்கட்;கு உள்ளாக்கப் பட்டு வருகின்றன. யுத்தம் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்களாகிய நிலையிலும் தமிழ்த் தேசத்தை அழிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. பாரம்பரிய தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இனப் பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள், அரசியல் உரிமைகளை அடக்கி ஒடுக்குதல், இராணுவமயமாக்கல், இராணுவ ஆதிக்கம் என்பனவே இன்று தமிழர் பிரதேசங்களில் நிலவும் யதார்த்த நிலைமையாகும். தமிழ் இனத்தை அழித்தொழிக்க இனவாத சிங்கள் அரசினால் மேற்கொள்ளப் படும் இத்தகைய இனவாத நடவடிக்கைகளை எமது மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகின்றோம். இத்தகைய குற்றச் செயல்கள் இன்று எவ்வாறு பாரதூரமாகி விட்டன என்பதையும், இவ்வகை ஆபத்தினுள் வாழும் எமது மக்களின் மன உறுதியையும் தாக்குப்பிடிக்கும் வலிமையையும் நாம் சாட்சியாகவே கண்டு அவற்றினை உலகத்தவர்க்கு எடுத்துக் காட்டியும் வருகிறோம். ஆனாலும் இவற்றின் பாதிப்பினை உலகம் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனாற்றான் சிறீலங்கா அரசானது தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' எனக் காட்டித் தப்பித்துக் கொள்ள முனைகின்றது. இதே போன்றுதான் சிரிய நாட்டு அரசாங்கமும் தனக்கு எதிரானவர்களைப் பயங்கரவாதிகள் எனப் பெயரிட்டுத் தப்பித்துக் கொள்கிறது. தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் தங்கள் கையிலுள்ள அனைத்து தகவல்களையும் உடனடியாக வெளியிடுமாறு மரியாதையுடன் கோருகின்றோம். தமிழ் மக்களின் பாதுகாப்பு விடயத்தில் 'அமைதியான இ,ராஜதந்திரம்'; வெற்றியளிக்கவில்லை என்பதை ஐநாவின் உள்ளக மீளாய்வு அறிக்கை மூலம் அறியக்கூடியதாக உள்ளது. ஒரு இலட்சம் மக்களின் இறப்புகளின் பின்னணியில் பகிரங்கமான இராஜதந்திரம் ஒன்று மட்டுமே ஏற்றதென நாம் திடமாக நம்புகின்றோம். தங்கள் வசம் உள்ள அனைத்துத் தகவல்களையும் எதுவித தாமதமுமின்றி வெளியிடுமாறு இத்தால் தங்களை நாம் வலியுறுத்துகின்றோம். இவ்வாறு செய்வது தங்களின் பணிக்கென வழங்கப்படுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டதாக அமையும் எனவும் குறிப்பிட விரும்புகின்றோம். இதன் தொடர்பிலான ஐநாவின் விதியினையும் இங்கு தருகின்றோம். 'இன அடிப்படையிலான பாரிய மனித உரிமை மீறல்களும், அனைத்துலக சட்ட விதிகளுக்கு மாறான குற்றங்களும் இடம்பெறுமிடத்து அவை பற்றிய தகவல்களைச் சேகரித்து, அத்தகைய குற்றங்கள் இன அழிப்பாக மாறாது தடுப்பதற்காக செயலாளர் நாயகத்தின் ஊடாக ஐநாவின் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை போலக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது' அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் சிறப்புற நிறைவேற வாழ்த்துகின்றோம். நன்றி. இவ்வாறு கையெழுத்து வேட்டையின் கோரிக்கை விபரம் அமைந்துள்ளது. நாதம் ஊடகசேவை

No comments: