Monday, May 20, 2013

தமிழீழ சுதந்திர சாசன வரைபு எமது விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்!

நியாயமான சம உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ நினைத்த எம்மினத்தின் மீது சிங்களப் பேரினவாத அரச இயந்திரத்தால் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளில் இருந்து எம் மக்களையும், பூர்வீகமாக நாம் செறிந்து வாழும் தாயக நிலப்பரப்பையும், எதிர்கால சந்ததியையும் காப்பாற்றும் பொருட்டு...... ....எமது முன்னைய அரசியல் பிரதிநிதிகளால் கூட்டாக முன் வைக்கப்பட்டது தான் தனித் தமிழீழத்துக்கான கோரிக்கையும் அதற்கான மக்கள் அங்கீகாரமுமாகும். ஆரம்பத்தில் எமக்கான உரிமைகளை வேண்டி தமிழ் அரசியல் தலைவர்கள் அறவழியில் முன்னெடுத்த போராட்டங்களை சிங்கள அரச பயங்கரவாதம் ஆயுத வன்முறைகொண்டு அடக்க முனைந்தது, இதனால் தான் வேறு வழியின்றி எம் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். நீண்ட கால ஆயுதப் போராட்டமே எமக்கென்றொரு நிழல் அரசை நிறுவ துணை நின்றதுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை சர்வதேச அளவில் பேசுபொருள் ஆக்கியது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுடன் விடுதலைக்கான போராட்டங்களும் சர்வதேச நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட்டன. இதனாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டமும். பல நாடுகளால் தடைசெய்யப்பட்டது. இத்தடையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியே எமது விடுதலைப் போராட்டத்தை எதிரி பின்னடைவுக்கு இட்டுச் சென்றான். அதற்கு சர்வதேசத்தில் பல நாடுகள் துணையாக நின்றன. அவர்களால் முன்வைக்கப்பட்ட காரணம் எமது விடுதலைப் போராட்டம் ஜனநாயகமற்றதென்றும் ஆயுத வன்முறை ரீதியிலானதும் என்பதே. சர்வதேச நாடுகளுக்கு ஒவ்வாமையாக இருந்த எமது ஆயுதப் போராட்டம் 2009 ல் ஆயுத மெளனிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தாற் தான் தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைக் கொடுக்க முடியவில்லை என்று இத்தனை காலமும் சொல்லி வந்த சிங்கள அரசு ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டு நான்காண்டுகள் ஆன நிலையிலும் இன்று வரை தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச உரிமைகளைக் கூட வழங்க முன்வரவில்லை. மாறாக முன்னரை விட மோசமாக மக்களை அடிமைகள் போல நடாத்தி வருவதுடன், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போதல், கைதுகள் எம் பூர்வீக நிலங்களில் பலவந்தமான சிங்களக் குடியேற்றம், கலாசார சீரழிவு என திட்டமிட்ட முறையில் தமிழர் இனவழிப்பை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. எமது விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்காமைக்காக சொன்ன காரணங்களை கவனத்திற் கொண்டே புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்பவும் ஜனநாயக விழுமியங்களை மதித்தும் அதற்கேற்ப தமிழ் மக்களின் அபிலாசை தமிழீழம் ஒன்றே என்பதை சர்வதேச சமூகத்துக்கு மீண்டும் வலியுறுத்தவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைத்துள்ளனர். இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொள்ளும் சுதந்திர சாசன வரைபு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல். தனித் தமிழீழத்துக்கான வரைபுகள் முன் வைக்கப்படுவது இது தான் முதல் தடவை அல்ல. 1976 ல் வட்டுக் கோட்டைத் தீர்மானமும், 1985 ல் தமீழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபும் முன் வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபானது அனைத்துத் தமிழ் பேசும் மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய எந்தக் காலத்துக்கும் பொருத்தமான வரைபென்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் சர்வதேசத்தின் முன்நிலையில் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழ சுதந்திரசாசன வரைபு தொடர்பில் உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ் அமைப்புகளினதும், மக்களினதும் கருத்தினையும் ஆலோசனையையும் அங்கீகாரத்தையும் வேண்டி நிற்கின்றது. தமிழ் மக்களின் விடுதலை வேட்கையின் எண்ணங்களில் இருந்து வரும் கருத்துக்களால் இச்சாசனம் மேலும் மெருகூட்டப்படவுள்ளதால் சர்வதேச நாடுகளால் மறுக்கப்பட முடியாத ஒரு சாசனமாக இது அமையும். எனவே அனைவரும் இதற்கு பூரணமான ஆதரவை வழங்க வேண்டும். அதேவேளையில் தனித் தமிழீழம் குறித்து ஏலவே முன்வைக்கப்பட்ட வரைபுகளுக் கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றினையும் முழுமையாக உள்வாங்கி தமிழீழ சுதந்திர சாசனத்தை அனைத்துத் தமிழ்பேசும் மக்களும் ஏற்கக் கூடிய வகையில் நிறைவானதொரு சாசனமாக அமைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வதுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தமிழீழ சுதந்திர சாசன வரைபிற்கு எம்முடைய ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் __._,_.___

No comments: