Tuesday, May 7, 2013

வீழ்வோம் என்று நினைத்தாயோ

2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாளன்று, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களில், சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் தங்கள் சொந்தங்களை மட்டுமின்றி, தங்கள் அங்கங்களையும், அவயங்களையும் இழந்து, நகரக்கூட வலுவற்றுக் கிடந்த நாற்பதினாயிரத்திற்கும் அதிகமானோரை கொன்று குவித்து, எந்த மண்ணின் மீட்சிக்காக போராடினார்களோ அந்த மண்ணிலேயே அம்மக்களை புதைத்து மூடிய பிறகு, சிங்கள இராணுவத்தின் தலைமை கூறியது: போர் முடிந்துவிட்டது என்று. அந்த செய்திக்குப் பிறகுதான் சிங்கள பெளத்த இனவாத அரசின் அதிபர் இருக்கும் மகிந்த ராஜபக்ச கூறினார்: புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம். இலங்கையின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த அந்த போராளிக் குழுவை அழித்துவிட்டோம் என்றார். அப்படித்தான் நினைத்தார்கள், நம்மை அழித்த சிங்கள பெளத்த இனவாத அரசு மட்டுமல்ல, நமது அழிப்பிற்குத் துணைபோன தெற்காசிய வல்லாதிக்கங்கள் மட்டுமல்ல, நமக்காகவே தங்கள் வாழ்வும் அரசியலும் இருப்பதாக கண்ணீர் வடித்த அரசியல் கலைஞர்கள் கூட கூறினார்கள்: எல்லாம் முடிந்துவிட்டது என்று. இதற்குமேல் ஈழத் தமிழினத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில், அதனை ராஜபக்ச அரசின் வாயிலாகத்தான் செய்ய முடியும் என்றார்கள். தமிழீழ மண்ணி்ன், மக்களின் விடுதலைக்காக தங்களின் இளமையை மட்டுமின்றி, தம் குடும்ப உறவுகளைத் துறந்து, கல்வி, வாழ்க்கை, எதிர்காலம் என்ற அனைத்தையும் துறந்து, புலிகளாய் களமாடிய எம் மாவீரர்களின் போராட்டம் அன்றைய தினம் மெளனிக்கப்பட்டது என்ற அறிவிப்போது எல்லாம் முடிந்துவிட்டது என்று உலகமே கூறியது. சிங்கள பெளத்த இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து தமிழினத்தைக் காக்க களமாடி உயிர் நீத்த 46 ஆயிரம் மாவீரர்களின் ஆன்மா தாகம் விடுதலை என்கிற விடிவு ஏற்படாமலேயே அடங்கிவிட்டதா? அப்படி அடங்கிவிடத்தான் முடியுமா? விடுதலைக்கான போராட்டம் மெளனிக்கப்படலாம், விடுதலைக்கான நியாயம் இல்லாமல் போகுமா? இல்லை, நமது போராட்டம் ஒரு களத்தில் தோற்றது உண்மையே, ஆனால் மற்றுமொரு பாதையில் அந்த போராட்டம் வேறொரு வடிவில் தொடரும் என்று கூறினாரா எம்மினத்திற்காக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்த எம் தலைவர், அது நடவாமல் போய்விடுமா? என்று உலகெங்கும் வாழ்ந்த தமிழர் நெஞ்சங்களில் எழுந்த கேள்விகளே, அவர்களின் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றது. இலங்கை எனும் சிறியதொரு தீவில் நடந்ததொரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி முடிக்க பார்த்த சக்திகளுக்கு உலகமே ஆதரவாக நின்றது. ஆனால், இலங்கைத் தீவில் அந்த உன்னத, தியாகப் போராட்டத்தை முடக்க முடிந்த சர்வதேச வல்லாதிக்கங்களுக்கு, தமிழினம் அந்தத் தீவைத் தாண்டி தனது போராட்டத்தை தொடர்ந்தபோது முடக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை, திகைத்து நின்றது. ஈழமென்ற வார்த்தை கூட ஒலிக்கக்கூடாது என்று அரசு உத்தரவு போட்டு தடுக்க நினைத்தார்கள் தாய் தமிழகத்தில்! இதற்கு மேல் ஈழம் என்று சொல்லி இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்று பேசினார்கள்... இல்லை, இல்லை, திமிராக எச்சரித்தார்கள். நாம் பேசினோம், நாம் தமிழராய் தலை நிமிர்ந்து பேசினோம். எம்மக்களிடேயே மேடை போட்டு, தமிழீழ விடுதலையின் நியாயத்தைப் பேசினோம். எம் இனத்தின் விடுதலைக்கு எதிராக கூறப்பட்ட அபாண்டங்களை உடைத்தெறிந்து, எம் மாவீரர்களின் தியாகப் போராட்டத்தை பேசினோம். எம் மக்களின் துயரத்திற்காக எமது புலிகள் அழவில்லை. மாறாக, அவர்களின் அழுகையை துடைக்க தம் உயிரைப் பணயம் வைத்து வெங்கொடுமை சாக்காட்டில் வீரத்துடன் விளையாடினார்கள் என்று நெஞ்சை நிமிர்த்துப் பேசினோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் பயங்கரவாதமல்ல, மாறாக, சிங்களம் ஈழத் தமிழினத்தின் மீது திணித்த அரச பயங்கரவாதத்திற்கு பதில்வாதமென்றோம். மக்கள் ஏற்றார்கள், தமிழ்நாட்டில் அரசியல் மாறியது. ஈழம் இதற்கு மேல் தமிழ்நாட்டில் அரசியல் அல்ல என்றவர்கள், இன்று ஈழத்தைப் பற்றிப் பேசாமல் அரசியல் இல்லை என்கிற நிலையைக் கண்டார்கள். தங்களின் பழைய நாடகத்தை புதுப்பித்து அரங்கேற்றினார்கள், எடுபடவில்லை. தங்களின் அரசியல் பாதையை மாற்றினார்கள், மக்கள் நம்பவில்லை. ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று முழங்கினார்கள். என்ன அந்தத் தீர்மானம், அதில் எங்கே இருக்கிறது ஈழத் தமிழினத்திற்காக நியாயம் என்று தமிழ்நாட்டின் மாணவர் சமுதாயம் பொங்கியெழுந்து குரலெழுப்பியது. வெற்று மனத்தோடு ஆர்ப்பரித்தவர்கள் அடங்கிப்போனார்கள். போராட்டம் கைமாறியது. எந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சுவரொட்டி கூட ஒட்டுக்கூடாது என்றார்களோ, அந்தத் தலைவனின் படம் எம் இளைய சமூகத்தினரின் ஆடைகளின் மலர்ந்த புன்னகையோடு ஆட்சி செய்வதைக் கண்டு நாணினார்கள். புலிகளை அழித்துவிட்டோம், இதற்கு மேல் தமிழர்களுக்குத் தருவதற்கு ஏதுமில்லை என்று சிங்கள இனவாத அரசியல் தலைமை பேசியது. புலிகள் யார்? தமிழர்கள் யார்? எப்படி பிரிப்பது? பிரிக்கத்தான் முடியுமா? சிங்கள பெளத்த இனவாத அரசு தொடர்ந்து பயங்கரவாதத்தை முறியடித்து தன் இனத்திற்கு விடுதலை பெற்றுத்தர தமிழரிடையே உருவான எழுச்சியின் அடையாளம்தான் புலி. அது மிருகமல்ல, வீர உணர்ச்சியின் எழுச்சி வடிவம். அதைத் தம் இதயத்தில் தாங்கிய எம் மாவீரர்கள் எதிரியின் பலத்தைக் கண்டு அஞ்ஞாமல், துஞ்சாமல் இரவும், பகலுமாக போராடினார்கள். அவர்கள் வேறு நாம் வேறல்ல. பிரித்துப்பேசி ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முடித்தவிட திட்டமிட்டார்கள். அந்த இராஜதந்திரம் தமிழினத்திடம் தோற்றுப்போனது. உலக அளவில் எழுந்தோம், நிமிர்ந்தோம், போராடினோம், எமது போராட்டத்தின் நியாயம் களத்தில் பெற்ற தோல்வியால் முடிங்கிவிடாது என்று இன்றுவரை பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் கடந்த ஆண்டு இதே மே 18ஆம் நாளை ‘விழ விழ எழுவோம், விதையாய் வீழ்ந்த நாங்கள், விடுதலையாய் எழுவோம்’ என்று விடுதலையுணர்வுடன் ஆழ்கடல் அலையென ஆர்ப்பரித்து எழுந்தோம். எம்மைப் பொறுத்தவரை மே 18 துக்க நாளல்ல, எமது விடுதலையின் அடுத்த அத்தியாயம் தொடங்கப்பட்ட நாள். இந்த நாளில் நாம் ஒரு புதிய உத்வேகத்தைப் பெறுகிறோம். அது நமக்காக போராடி உயிர் நீத்த நம் மாவீரர்கள் நமக்கு வழங்கியுள்ள ஆன்ம சக்தி அளிக்கும் உத்வேகம் அது. அதன் உந்துதலால்தான் சர்வதேசத்தை இன்றுவரை நாம் உலுக்கி எடுக்கிறோம், இந்திய அரசியலை நம்மை நோக்கி வெற்றிகரமாக திருப்பியும் உள்ளோம். இந்த ஆண்டில் நாம் முன்வைக்கும் முழக்கம்: வீழ்வோம் என்று நினைத்தாயோ என்பது. வீழ்வோம் என்று நினைத்தாய், பல கோடி விழுதுகளுடன் எம் இனத்தின் விடுதலையை முன்னெடுக்க எழுந்துள்ளோம் என்பதை இந்த மே 18ஆம் நாளில் நாம் ஒன்றுகூடி உலகிற்கு பறைசாற்றுவோம். கனடாவில் வாழும் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கும், நாம் தமிழர் கனடாவிற்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகள். தமிழர் தாகம், தமிழீழ தாயகம்.

No comments: