
அடிவைத்த நாள்முதலாய்
அடிப்பட்டு வதைப்பட்டு
அல்லற்பட்ட
என் தமிழே
அந்நாளில் நீ
பண்டிதரின் நாவில் மட்டும்
பவனி வந்த காரணத்தால்
பாமரர்க்கு உன் மீது
பற்றுதலே வரவில்லை...
இந்நாளில்
தெருவோரத் தமிழனுக்கும்
தெளிவாகும் புதுக்கவிதை
வருங்காலம் அவர்களிடம்
வந்து சேரும்
வாழ்வுண்டு உனக்கு என
வாழ்த்துகிறேன்...
இந்திய வரலாற்றை
கங்கையில் தொடங்காதே
காவிரியில் தொடங்கு...
நாம் அனைவரும்
திருக்குறளுக்குச்
சொந்தக்காரர்கள் என்பதால்
இங்கே பைபிள் நமக்காக
பாட்டரங்கம் அமைக்கிறது...
விந்தையில்லை என்றாலும்
வித்தியாசமான விழாதான்
இது பகுத்தறிவாளரும் போற்றும்
பழந்தமிழர் விழா...
இங்கு பொங்கல் வரும்
புத்தாண்டு வரும்
புதுமையான
சிந்தனைகள் வருவதில்லை
பலருக்கு
பொங்கலும் புத்தாண்டும்
வருவதெல்லாம்
புதும்படங்கள் பார்ப்பதற்கே...
இதுவரையில்
விதிகளை மட்டுமே
செய்து விட்டு
வேலை செய்ய மறந்திருந்தோம்
இனியாகிலும்
விதிகள் செய்வதோடு நில்லாமல்
வேலையை செய்ய
தொடங்குவோம்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
நன்றி : அதிகாலை.கொம்
No comments:
Post a Comment