Wednesday, April 22, 2009

மனித நேயம் என்பது வெறும் அலங்காரச் சொல்தானா...?

முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் படை நடவடிக்கையின்போது கொலையுண்டிருக்கிறார்கள். 1300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றிருக்கிறார்கள். சர்வதேச அவதானிகள் தெரிவித்த மனிதப் பேரவலம் அங்கு நிகழ்ந்தி ருக்கிறது. முல்லைத்தீவுக் கடற்கரையில் இரத்த ஆறு ஓடும் அபாயம் இருப்பதாக ஐ.நா.உட்பட பல தரப்புகளும் கவலையுடன் ஊகம் தெரி வித்திருந்த போதிலும் எவராலும் அதனைத் தடுக்க முடியாமற் போயிற்று! உலக வரலாற் றில், சமீப காலத்தின் பெரும் மனித அழிப்பு நடை பெற்றிருக்கிறது. நினைக்கவே இரத்தத்தை உறைய வைக்கும் இந்த மனித உயிர் இழப்புக் கண்டு ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் அனைத் தும் வெட்கித் தலைகுனியவேண்டும்.உரிய காலத்தில், உரிய வேளையில் தமது சக்திகளைப் பயன்படுத்தி இந்த மனித அழிவை, தமிழர் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தவில்லை என்ற பழியை சர்வதேசம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இது சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயங்களில் ஒன்றாகிவிட்டது. இத்தகைய ஓர் மனிதப் பேரழிவு கொடுமை எந்த இனத்திற்கு ஏற்பட்டிருந்தாலும் அது மனித நேயத்திற்கு விழுந்த பேரடியாகும்; பேரிடி யாகும். இதுபோன்ற மனித அழிவு உலகில் வேறெங்கு நடைபெற்றாலும் தாங்க முடியாதே. அது குறித்த அக்கறைக்குப் பதிலாக, அசட்டைத் தனம் மேலோங்கி நின்றதாலேயே, ஏனைய நானாவித ஒவ்வாத எண்ணங்கள் வந்து மேவி இப்படியொரு துன்பியல் பேரழி வைத் தந்திருக்கிறது.போர் முடிவுக்கு வந்ததும் தமிழர்களின் உரிமைகள் வழங்கப்படும், பிரச்சினை தீர்க்கப் படும் என்ற கோஷங்கள் அர்த்தமற்றுப் போய் விட்டன. இன ஒற்றுமை, சகோதரத்துவம் என் பன ஒரேயடியாக நிர்மூலமாகிவிட்டன. மக்கள் அழிந்த பின்னர் அவை வெறும் வேதாந்தமா கவே மிஞ்சி நிற்கின்றன.முல்லைத்தீவில் ஒருநாளில் ஓராயிரத்துக் கும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிட்டமை மனித உரிமை, மனிதநேயம் என்பவை எல் லாம் வெறும் அலங்காரச் சொற்களே அன்றிச் கவைக்கும் உதவாதவை என்பதனை வெளிப் படுத்தி உள்ளன. இது குறித்து முழு மானிட உலகமும், தமது இயலாமை குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டும். உயிர்கள் காப்பாற்றப்படவேண்டியவை, பேணப்படவேண்டியவை. அழிக்கப்படவேண்டி யவை அல்ல என்பதனை அர்த்தபுஷ்டி உள்ள தாக்க வேண்டுமென்ற சிந்தனை செயலுருப் பெறுவதற்கு பிடிவாதமும்மேலோங்கும்போக்கும் மனிதர்களிடம் இருந்து அகல வேண்டும் என் பதனை வன்னிப் பேரழிவு எடுத்தியம்புகிறது.போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள லட்சக் கணக்கான மக்களில் எஞ்சியுள்ளவர்களின் கதி என்னவாகப்போகிறது என்பதனை நினைத்துத் தமிழ் உறவுகளின் நெஞ்சங்கள் இப்போது திணுக்குறுகின்றன. அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகும். ஆனால் ஏற்கனவே உண்டான இழப்புக்களின்போது மக்களின் உயிர்கள் காப் பாற்றவேண்டியவை, பறிக்கப்படவேண்டி யவை அல்ல என்ற மனித நேயம் முதலிடம் பெற்றிருக்கவில்லை. அங்கே எஞ்சியுள்ளவர்களைக் காப்பாற்றுவ தற்கேனும் ஐ.நா.உட்பட்ட சர்வதேசம் நேர் மையுடனும் மனித நேயத்துடனும் விரைந்து செயற்படுவதற்கு மனங்கொள்ளுமா? அதுவே இப்போதைய உடனடித்தேவை. தமிழர் நெஞ் சங்களை மீண்டும் மீண்டும் உறைய வைக் காமல் தடுக்க வழி ஒன்று பிறக்காதா? உலக நீதியின் பால், மனுநீதியின் பால், மனித நேயம் சிறிதளவேனும் பிறக்கக்கூடாதா?

No comments: