வால்மீகி ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஏழ்மை நிலையில் உள்ள பல உயிர்களைக் காப்பதற்காக அவர் கொள்ளையடித்தார். அந்த வால்மீகிதான் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த இராமாயணம் என்ற இதிகாசத்தைப் படைத்த வால்மீகியாக, இலக்கியப் படைப்பாளியாக மாறினார். இதேநிலை யாருக்கும் வரலாம்.
- நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்
உலக நாடுகள் எங்கும் தூக்குக் கயிறு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் 21ஆம் நூற்றாண்டிலாவது இதற்கு தீர்வு கிடைக்குமா? என்ற ஏக்கம் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். அச்சமயம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதி, மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் போன்றோர் மரண தண்டணை தொடர வேண்டும் என்ற கருத்தைத் தனித்தனியாகத் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் மரண தண்டனை வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியச் சிறைகளில் 50 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.
1945லேயே அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. மக்களவையில் 25.11.1956இல் மரண தண்டனை ஒழிப்பு தனி நபர் மசோதா விவாதத்திற்கு வந்தபொழுது அன்றைய அமைச்சர் பொறுப்பிலிருந்த எச்.வி. படாஸ்கர் இதனை ஒழிக்க காலம் இன்னும் கனியவில்லை என்றார். 1957இல் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு கேரள அரசாகும். இந்த அரசில் ஈ.எம்.எஸ். முதல்வராகவும், நீதிபதி கிருஷ்ணய்யர் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். அந்நாளில், சி.ஏ.பாலனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சி.ஏ.பாலன் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தார். கடைசியாக கேரள உள்துறை அமைச்சராக இருந்த நீதிபதி கிருஷ்ணய்யரிடம் மனு ஒன்றை அளித்தார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரால் பாலனின் மனு நிராகரிக்கப்பட்ட போதும், கிருஷ்ணய்யர் போராடி பாலனை தண்டனையிலிருந்து காப்பாற்றினார். இதேபோன்று எடிகா அன்னம்மா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்தும் விடுவித்தார். அப்போது அவர், ‘கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது’ என்று மகாத்மா காந்தி சொன்ன கருத்தை சொல்லி வாதாடியுள்ளார்.
1962-67களில் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் மரண தண்டனை தேவையில்லை என்று தெரிவித்தார். டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு ஏராளமான கருணை மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றைத் திருப்ப அனுப்பாததால் தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நின்றன. அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் இதுகுறித்து பிரதமர் நேருவிடம் முறையிட்டார். ஜவஹர்லால் நேருவும் ஒரு சிறப்புத் தூதரை குடியரசுத் தலைவரிடம் அனுப்பிக் கருணை மனுக்களை நிராகரித்துத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். ஆனால், குடியரசுத் தலைவர் நேருவின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால் டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்த காலம் வரை குற்றவாளிகள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1967இல் சட்டக் கமிஷன் அறிக்கை தூக்குத் தண்டனை கெடுபிடிகளை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1953லிருந்து 1963 வரை இந்தியாவில் மட்டும் 1422 பேர் தூக்கிலிடப்பட்டனர். இதன் காரணமாக, ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறார் என்றால், அதற்கான அத்தியாவசியமான காரணத்தை குறிப்பிட்டாக வேண்டும் என்று 1973இல் மத்திய அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற தியாகத் தீபங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947இல் விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைக்கார சார்ஜண்டை கொலை செய்ததற்காக குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின் 1947ஆம் ஆண்டு அவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். நேதாஜி இயக்கத்தில் இருந்த கேப்டன் நவாஸ்கான், கேப்டன் தில்லான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தெலுங்கானா போராட்டத்தில் 11 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மலேசிய கணபதி தூக்கிலிடப்படும்போது பண்டித நேரு அதைத் தடுக்கக் குரல் கொடுத்தார். 1946இல் கோவை சின்னியம்பாளையத்தில் ஆறு கம்யூனிஸ்டு தோழர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும், நக்சலைட் தலைவர் நாகபூஷண் பட்நாயக், தமிழகத்தில் கலியபெருமாள், தியாகு ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கியபோது தமிழகத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.
பண்டைய இந்தியாவில் மரண தண்டனையை பற்றி எவரும் அறியவில்லை. அய்ந்தாம் நூற்றாண்டில் சீனத்திலிருந்து வந்த பாகியான் என்ற பௌத்த அறிஞர், மரண தண்டனை இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஹொய்சோ என்ற அறிஞர் இதே கருத்தை கூறியுள்ளார். ஆனால் ஆதி காலத்தில் உலகில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை சென்று வைகோவின் முயற்சியால் இக்கட்டுரையாளர் மூலம் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. 1984 செப்டம்பர் 27 சென்னை உயர்நீதிமன்ற மண்டபங்களில் புதிர் இறுகிக் கொண்டே போகிறது. ஏழாண்டுகளாக நடந்து வரும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பு அன்று கூறப்பட்டது.
தீர்ப்பு மனுதாரருக்கு எதிராகப் போகுமானால், இந்திய விடுதலைப் போரின் முதல் வீரர், நமது செவிகளில் பெயரும் புகழும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட முன்னோடி வீரபாண்டிய கட்டபொம்மனின் சட்டப்பூர்வ வாரிசை, இந்தியா இழக்கும்! தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக அமையுமேயானால் தண்டனைக்குரிய குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை வழங்குவது நமது நாட்டில் அரிதானதில்லை. எனினும், தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக வருமானால் மனுதாரர் குருசாமியின் வழக்கு நமது நாட்டின் சட்ட வரலாற்றில் தனித்தத் தன்மை கொண்டதாக ஈடு இணையற்றதாக அமையும்.
1977இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ அவர்கள் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டப்படி (மிசாவின் கீழ்) பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அதே சிறையிலிருந்த கைதி குருசாமியை அவர் அறிய நேர்ந்தது. குருசாமி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார். குருசாமியின் சிலம்பம் செய்யும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், குருசாமியின் அப்பாவித்தனம் ஆகியவை வைகோ அவர்களை ஈர்த்தது. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வைகோ மனதிற்குள் உறுதி செய்தார். அவரது மரணத் தண்டனை ஏற்கனவே மும்முறை (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில்) உறுதி செய்யப்பட்டிருந்தது. குருசாமி போட்ட கருணை மனு இந்திய அரசால் மும்முறை தள்ளப்பட்டுவிட்டது.
அவர் தமிழ்நாட்டு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். சென்னை உயர்நீதி மன்றமும் தண்டனையை உறுதி செய்தது. அவரது வழக்கு எண். எஸ்.சி.87/1976. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் இந்தியத் தலைமை நீதிமன்றம் தள்ளிவிட்டது. சிறையில் வைகோ அவர்களும், குருசாமியும் அவ்வப்போது பேசிக் கொண்டதில், குடும்பச் சொத்து காரணமாக குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார்.
வைகோ மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றவுடன் குருசாமியைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையரான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர், 1969இல் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் வைகோ விவரிக்க, குருசாமி கதை கேட்டு குடியரசுத் தலைவர் மனம் இரங்கி இடைக்காலத் தடையும் வழங்கினார்.
துரதிர்ஷ்டவசமாக, மேல் குறிப்பிட்ட கருணை மனு தள்ளுபடி ஆகிவிட்டது. (ஏற்கனவே ஒரு முறையும் கருணை முறையீடு தள்ளப்பட்டுள்ளது) தூக்கிலிடப்பட வேண்டிய நாள் 1981 செப்டம்பர் 15 என்றும் குறிக்கப்பட்டுவிட்டது. வைகோ மீண்டும் ஒரு கருணை முறையீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அய்ம்பது பேர் கையெழுத்திட்டு 1981 செப்டம்பர் 8 அன்று (குடியரசுத் தலைவரிடம்) தந்தார். அதை (அப்போதைய) உள்துறை இணை அமைச்சர் வெங்க சுப்பையாவிடம் தருமாறு வைகோ கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தண்டனை தள்ளுபடி செய்யப்படவில்லை. அப்பொழுது நாள் செப்டம்பர் 9 ஆகிவிட்டது. குருசாமிக்குச் சாவு மணி அடிக்க இன்னும் அய்ந்தே நாள்தான் உள்ளது. வைகோவின் வேகமான முயற்சியால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. ஆனால் தள்ளுபடி செய்யப்படவில்லை.
இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்தானா கட்டபொம்மன் பரம்பரை தானா என்ற உண்மையைக் கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசைப் பணித்தது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டது. பின்னர், அவரது வழக்கு தண்டனைக் குறைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் குற்றவாளி எவருக்கும் (கிரிமினல் எவருக்கும்) தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.
இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி, தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என ஒரு தீர்ப்பில் கூறினார். ஏற்கனவே, தந்த முறையீட்டுக்கு மாற்றாக நீதிபதி சின்னப்பரெட்டி அவர்களது தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மேலும் ஒரு முறையீடு தரப்பட்டது. அதில், குருசாமி ஏற்கனவே சிறையில் அய்ந்தாண்டாக வாடியுள்ளார் என்று கூறப்பட்டது.
1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21 காலையில் தூக்கு நாளாக தேதியும், அதிகாலையில் நேரமும் குறிக்கப்பட்டுவிட்டது. சென்னையிலிருந்த வைகோ அவர்களுக்கு நெல்லையில் இருந்து நண்பர் குட்டி என்ற சண்முகசிதம்பரம் குருசாமிக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்பட்டு தூக்கு உறுதியாகிவிட்டது என்ற துயர செய்தியை தெரிவித்தார். உடனே வைகோ அவர்கள் மறைந்த சீனியர் வழக்கறிஞர் என்.டி.வானமாமலையை இரவென்று பாராமல் அவரை எழுப்பி இப்பிரச்சினையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். அந்த ஆலோசனையின்படி டெல்லியில் உச்சநீதிமன்றத்துக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்ககோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன. அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதி கோர வேண்டும்.
இருப்பதோ இரண்டு, மூன்று நாட்கள். அதற்குள் அந்த தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் என்று அனைத்து மட்டங்களிலும் நிராகரிக்கப்பட்டு, இனி வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தது. என்ன செய்வது? முயற்சி செய்து பார்ப்போம் என்று நான், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சந்தூர்கர் அப்போதுதான் பொறுப்பேற்று, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். மாலைப் பொழுதாகி விட்டது. இருப்பினும் எப்படியாவது இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வாங்கியாக வேண்டும் என்ற கடினமான சூழ்நிலை. அவரை சந்தித்த இக்கட்டுரையாளர், ‘நீதிபதி அவர்களே குருசாமி நாயக்கரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அவர் சென்னை உயர்நீதி மன்ற பதிவாளருக்கு பாளையங்ககோட்டை சிறையிலிருந்து தந்தி அனுப்பி உள்ளார். அந்த மனுவை ஏற்று வழக்கு எண் கொடுத்து உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதி தர வேண்டும்’ என கேட்க சென்றபொழுது, நம்பிக்கை என்பது இக்கட்டுரையாளருக்கு துளியளவும் இல்லை. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நிலையில் தான் தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீதிபதி, இக்கட்டுரையாளர் கூறிய முழுமையான விவரங்களை கேட்டறிந்தார். மனிதாபிமானத்துடன் சட்டத்தில் வழி இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் அதன் பலன் உரியவருக்கு கிடைக்க வேண்டும் என்ற அனுமதியை நீதிபதி அளித்த போது எனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது.
அதன் பின் பதிவாளருடைய அனுமதியின் பேரில் வழக்கு எண்ணாகி, நீதிபதி இராமசாமி, டேவிட் அன்னுசாமி ஆகியோரிடம் காலை 10.30 மணிக்கு அவர்கள் அமரும்பொழுது விவரத்தை சொல்லி அனுமதி பெற்றாகி விட்டது. மதியம் 2.30 மணிக்கு இடைவேளைக்கு பிறகு வழக்கு வருகின்றது. வழக்கில் வழக்கறிஞர் என்.டி.வானமாமலை ஆஜரானார். இவ்வழக்கில் எவ்வித வழக்குக் கட்டணமும் வாங்காமல் என்.டி.வானமாமலை ஆஜரானார். என்.டி.வானமாமலை நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடினார். அவரோடு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் உடன் ஆஜரானார். அப்போது பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த, பின் நீதிபதியான பத்மினி ஜேசுதுரை அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்து இறுதியில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் செல்பேசி, தொலைநகல் (பேக்ஸ்) போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் கிடையாது. நீதிபதிகள் பப்ளிக் பிராசிக்யூட்டரிடம் தமிழக அரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் (அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம்), பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திடமும் உடனே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததை தெரிவித்து, மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்ற ஆணையை தெரிவித்தனர். அன்று மாலை 4.30 மணிக்கு அரசிடம் தெரிவித்த கருத்துகளை, நீதிமன்றத்தில் பப்ளிக் பிராசிக்யூட்டர் தெரிவித்தவுடன், அந்த கருத்துகள் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்ற விவரமான ஆணையை பிறப்பித்தனர். அன்றைக்கு 24 மணி நேரத்தில் தூக்குக் கயிறை தூக்கிலிட்டது பெரும் செயலாக எனக்கு பட்டது. இந்த பிரச்சினையை எப்படி தீர்த்தோம்? எப்படி சாதித்தோம்? என்பதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்னால் சாதித்த இந்த அனுபவம், முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்ற படிப்பினையை தந்தது.
இவ்வழக்கு தூக்குத் தண்டனை வழக்கானதால், அப்போது பல நண்பர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலர் விசாரித்தனர். குறிப்பாக பழ.நெடுமாறன், இரா.செழியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவரான ஏ. நல்லசிவம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ப.மாணிக்கம், சொ.அழகிரிசாமி, இலங்கைத் தலைவர்கள் அ.அமிர்தலிங்கம் தம்பதியினர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன், பாரிஸ்டர் கரிகாலன், படைப்பாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி போன்றோர் மட்டுமல்லாமல்; விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம், பேபி சுப்பிரமணியன் (பேபி இளங்குமரன்), பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போன்ற எனக்கு நெருக்கமான பலர் இதுகுறித்து அக்கறையுடன் ஆர்வம் காட்டினர்.
அதைப்போன்றே உச்சநீதிமன்றத்தில் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்பார்ப்பு என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக வைகோ அவர்களை பாராட்டினர். இந்து பத்திரிகை இதுகுறித்து எழுதியது. இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.
இக்கட்டுரையாளர் அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல முறையீடு தாக்கல் செய்யும் பொறுப்பை நிறைவேற்றினார். அதில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் நான்கு நிலைகளில்தான் தூக்குத் தண்டனை விதிப்பது நியாயமாகும் என்று கூறியது. அவையாவன:
1. வேறு மாற்றுக் கருத்து, எந்தக் கேள்வியுமின்றி இடம் இல்லாத நிலையில் ‘அரிதினும் அரிதான வழக்கு’களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
2. முதிர்ச்சி வாய்ந்த ஒரு சமுதாயத்தில் கண்ணியம் என்று மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின்படியும் கூட கொலையே தொழிலாகக் கொண்டோர் இரக்கத்திற்கு உரியோரில்லை.
3. கொலையுண்டவனுக்கு ஆதரவாக நிற்க யாருமில்லை என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
4. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது. இதனுடன் (குருசாமியின்) நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150 பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். அப்படியே தான் தூக்கிலிடப்பட்டு விட்டாலும் தனது உடல் வைகோவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படித்தனர்.
“தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப் படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன். அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!” என்றது அந்தத் தீர்ப்பு!
நீதிபதிகள் தம் தீர்ப்பில் விஷ ஊசி வழக்கில் டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனையைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க அதுவே (அந்தத் தாமதமே) மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
செர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (உயர்நீதிமன்றத் தீர்ப்பில்) எடுத்துக்காட்டப் பட்டது. (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.465) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ.அய்.ஆர்.1980, எஸ்.சி.898).
மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் குருசாமியின் வழக்கு அடங்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தனர். தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை ‘கன்விக் வார்டர்’ ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.
குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். அவரது வழக்கில் தரப்பட்ட முன் எடுத்துக்காட்டு இல்லா தீர்ப்பு இந்திய நீதியின் போக்கில் இடம்பெறும். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் இல்லை; இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட் ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டது இதுவே முதன் முறை!
குருசாமி வழக்கு மூலம் திரு.பி.எச்.பாண்டியன் ஆஜரான வழக்கில் மாகாளி நாடார் போன்ற பல தூக்குத் தண்டனை கைதிகள் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் முன் உதாரணத் தீர்ப்புகளாக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கின்றனர்.
உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இதுவரை 135 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன், பூட்டோ போன்றோர் தூக்கிலிடும்பொழுது உலக அளவில் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. தூக்குத் தண்டனை பிரச்சினையில் சீனா, ஈரான், ஈராக், பாக்கிஸ்தான், சூடான், அமெரிக்கா போன்ற நாடுகள் சற்றும் மனம் இரங்காமல் கடுமையாக நடந்து கொள்கின்றன. ஆனால், அமெரிக்காவில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு, அங்கு பல மாநிலங்களில் கடுமையான முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆசிய, ஆப்ரிக்க கண்டங்களை சேர்ந்த நாடுகளே தூக்குத் தண்டனையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளன. சிங்கப்பூர் இதில் முதல் இடம் வகிக்கிறது.
சிங்கப்பூரில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள், எந்தவித அறிவிப்புமின்றி ஏதாவதொரு வெள்ளிக் கிழமையன்று தூக்கிலிடப்படுவர். பின்னர் தான் வெளி உலகுக்கே தெரிய வரும். நைஜிரியாவை சேர்ந்த 21 வயதே ஆன கால்பந்தாட்ட வீரர் டோச்சி, துபாய் அணியில் விளையாடுவதற்கு ஆசைப்பட்டபோது, பலர் அவருக்கு பாகிஸ்தான் சென்று விட்டால் உனது கனவு நனவாகும் என்றனர். இதனை நம்பி இஸ்லமாபாத் சென்றார். அங்கும் அவரது ஆசை நிறைவேறாமல், கையில் பணமில்லாமல் ஒரு சர்ச்சில் தங்கினார். அங்கு ஸ்மித் என்ற ஒரு நபர் டோச்சியை சந்தித்து பேசி, சிங்கப்பூர் மார்க்கமாக டோச்சியின் சொந்த நாடான நைஜீரியாவுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வழியனுப்பினார். அப்போது அவர் சில மாத்திரைகளை டோச்சியிடம் கொடுத்து இதனை சிங்கப்பூரில் மாலச்சி என்ற என் நண்பர் பெற்று கொள்வார் என்று சொல்லியுள்ளார். டோச்சி இந்த மாத்திரைகளுடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தபொழுது, அவரை சந்தேகப்பட்டு கைது செய்தனர். இரண்டு ஆண்டு காலமாக வழக்கு விசாரணைக்குப் பின் அப்பாவியான டோச்சி தூக்கிலிடப்பட்டார்.
இங்கிலாந்து நாட்டில் டங்கன் பிரபு, பிரபுக்கள் அவையின் தலைவராக இருந்தபோது முதன் முதலாக தூக்குத் தண்டனை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார். மவுண்ட்பேட்டன் பிரபுவை கொலை செய்தவர்களுக்குகூட இங்கிலாந்து அரசு தூக்குத் தண்டனை வழங்கவில்லை. தென் ஆப்பிரிக்காவில் 1995இல் மரண தண்டணை ஒழிக்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஐ.நா. பொது மன்றம் தூக்குத் தண்டனை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் எதிர்த்தன. இத்தீர்மானத்தை 99 நாடுகள் ஆதரித்தன. 52 நாடுகள் எதிர்த்தன. 18 நாடுகளில் மரண தண்டனை போர்க்கால குற்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டும், 27 நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்படுகின்றன. 1976ஆம் ஆண்டு கனடா நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. கனடாவில் இதற்கு முன்பு கொலை குற்றங்கள் 3.09 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருந்தது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்து கொலைக் குற்றங்கள் குறைந்து விட்டன. 1983ஆம் ஆண்டுகளில் அங்கு 2.74 என்ற அளவில் கொலைக் குற்றங்கள் நடந்தேறின.
1985ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் லஞ்சம் வாங்கியதாக சோவியத் நாட்டிலும், சீனாவில் அரசுக்கு விரோதமாக உளவுத் தொழிலில் ஈடுபட்டதற்கும், விபசாரத்திற்கும், சீனா, கயானாவிலும், பொருளாதாரக் குற்றத்திற்காக ஈராக் நாட்டிலும், கற்பழிப்புக் குற்றத்திற்காக சீனா, எகிப்து, சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, டுனீசியா ஆகிய நாடுகளிலும், களவு மற்றும் பயங்கர ஆயுதங்களை கையாண்டதற்காக சீனா, நைஜீரியா, சவுதி அரேபியா, சிரியா, உகாண்டா போன்ற நாடுகளிலும், போதைப் பொருள் குற்றத்திற்காக ஈரான், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளிலும், சீனாவிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்ற வாதமும் உள்ளது. 1949ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற பன்னாட்டு சட்ட மாநாட்டில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது சுமார் 75 நாடுகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. அய்க்கிய அமெரிக்க நாட்டில் நடந்த மாநாட்டில் 70 வயது கடந்த முதியவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் நிறைவேறியது. இருந்தபோதிலும், 76 வயதான மகமத் முகமது தகா என்ற சூடான் நாட்டுத் தலைவரும், 78 வயதான பையோடர் ஃபெடரன்கோ என்பவரும் அமெரிக்காவிலிருந்து சோவியத் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டு அரசியல் காரணமாக தூக்கிலிடப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் உலகளவில் நடைமுறையில் உள்ளது.
தூக்கிலிடுதல், துப்பாக்கியால் சுடுதல் ஆகிய இரண்டு நடைமுறைகள் இந்தியாவில் உள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கொலை, கொலை செய்ய முயற்சி, கூட்டமாகச் சென்று கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல், அரசாங்கத்திற்கு எதிராகப் போர் ஆயத்த வேலைகளை செய்தல், எதிரிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது.
இந்திய இராணுவச் சட்டம் 1950இன் படியும், விமானப் படைச் சட்டம் 1950இன் படியும் கடற்படைச் சட்டம் 1956இன் படியும் படைவீரர்கள் தவறு செய்தால் மரண தண்டனை விதிக்க இடமுண்டு. பயங்கரவாதிகளுக்கு 1987ஆம் ஆண்டின் சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்க வழியுள்ளது. 1967ஆம் ஆண்டு சட்ட வரையியல் குழு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது என்ற பரிந்துரையை அளித்தது. இந்தியாவில் மாவட்டத் தலைமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் தனி நீதிமன்றம் ஆகியவை மரண தண்டனைகளை விதிக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் மரண தண்டனைக் குற்றவாளிகள் மீது கருணைக் காட்ட அதிகாரமும் இருக்கிறது.
perarivalan_228இந்தியாவை பொறுத்தவரை அப்சல் குரு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் இன்றைக்கும் தூக்குக் கயிற்றின் பிடியில் இருக்கின்றனர். அப்சலுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து அன்றைய காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் ‘இந்த தீர்ப்பு காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டார். இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சிகள் தோல்வியடையும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கருத்தை ஒட்டியே எழுத்தாளர் அருந்ததி ராயும் வெளிப்படுத்தியுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து, அப்சலின் மனைவி கருணை மனு ஒன்றை உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் அனுப்பி இருந்தார்.
மரண தண்டனை குறித்து எதிர் சிந்தனைகளை விட்டு ஆக்கபூர்வமாக நாம் சிந்திக்க வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அவ்வகையில் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தூக்கிலிட்ட இந்தியாவில் இந்திராவும், ராஜிவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை எல்லாம் தூக்கிலிட்டு விட்டால் குற்றங்கள் குறையும் என்பது எள்ளளவும் உண்மையல்ல. கீதா சோப்ரா, சஞ்சய் சோப்ரா ஆகிய இருவரை கொன்றதற்காக 1980ஆம் ஆண்டில் பில்லா, ரங்கா ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். 1984இல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக மக்பூல் பட் என்பவர் தூக்கிலிடப்பட்டார். இதனால் எல்லாம் குற்றங்கள் குறைந்தனவா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. இந்த தண்டனைகளுக்கு பிறகுதான் ஆட்டோ சங்கர், தற்போது அப்சல் குரு போன்றவர்கள் உருவாகினர்.
தற்போது உலகளவில் 1,252 பேர் தூக்குத் தண்டனை நிழலில் தவிக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை 389 பேர் தூக்குத் தண்டனை கைதிகளாவர். ஐ.நா. பொது மன்றத்தின் தீர்மானத்தின்படி 2007இல் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரச்சாரத்தின் அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினர். அக்கடிதத்தில் நீதிபதிகள் ராஜேந்திர சச்சார், சேத்தி, அட்மிரல் எல்.ராமதாஸ், மோகினி கிரி, உபேந்திரா பக்ஷி, ஆஸ்கார் அலி இன்ஜினியர், அருணா ராய், ஆஷிஸ் நந்தி, ஆனந்த பட்டவர்த்தன் என எண்ணற்றோர் கையொப்பமிட்டிருந்தனர். உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு பின் தான் கருணை மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. அவ்வாறு கருணை மனுவை அனுப்பினாலும் அதற்கான மேல் நடவடிக்கைகள் இல்லாததால் உடனடியாக நீதி கிடைப்பது தாமதமாகின்றது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இன்னொரு விசித்திரமும் நடைபெற்றது. ஒரு கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மூவரும் தனித்தனியாக வெவ்வேறு நீதிமன்றங்களில் முறையிடுகின்றனர். அதில் ஒருவரது மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மற்றொருவருக்கு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. வேறொருவர் குடியரசுத் தலைவரின் கருணையால் உயிர் தப்புகிறார். இவ்வாறு நீதிபதிகளின் தீர்ப்புகள் மாறுபடுகின்றன.
1980ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘சாட்சிகளை ஆழ்ந்து விசாரித்து தீர்ப்பு அளிப்பதோடு மட்டுமல்லாது அதன் பின் விளைவுகளையும் பார்க்க வேண்டும். அரிதினும் அரிதாக மரண தண்டனைகள் விதிக்கப்படலாம்’ என்று கூறியுள்ளது. திருச்சி சிறையில் வாடிய பெரிய கருப்பன், கோவை சிறையில் இருந்த அவிநாசி ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இராஜஸ்தான் மாநிலத்தில் சதி குற்றத்திற்காக பலருடைய பார்வையில் படும்படி மரண தண்டனையை பலருக்கு விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து இந்திய அட்டர்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் 1985ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் ‘ஒரு மனிதத் தன்மையற்ற குற்றத்தை மனித தன்மையற்ற தண்டனையின் மூலம் சந்திக்கக் கூடாது’ என்று கூறியது.
1985ஆம் ஆண்டு மார்ச்சில் இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனையைப் பற்றி விவாதம் நடந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நீக்க விருப்பம் உள்ளவராக இருந்தார். ஆனால், அன்றைய உள்துறை அமைச்சர், ‘தற்சமயம் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்தார். 28.4.1989 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனை போன்ற பயங்கத் தண்டனைகளை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 1977ஆம் ஆண்டு டில்லியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயபிரகாஷ் மரண தண்டனையை எதிர்த்தார்.
உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், ‘அரசியலமைப்புச் சட்டம் 72, 161 பிரிவுகள் தவறான வழியில் அல்லது பொறுப்பற்ற தன்மையில் பயன்படுத்தப்படுகின்ற போது அதனை திருத்தும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு; ஒருவருக்கு மன்னிப்போ அல்லது கருணையோ காட்டும்பொழுது சமுதாயத்தில் ஏற்படக் கூடிய விளைவுகளையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டத்தை சார்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் குற்றவியல் சட்டம் 302ஆவது விதிப்படி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. இந்த சட்டம் ஆங்கிலேயர்கள் இயற்றியது. இதே போன்ற சட்டம் இங்கிலாந்தில் இன்று ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் இன்றும் நடைமுறையில் வைத்துக் கொண்டு மனித உயிர்களை பறிப்பது எந்த வகையில் நியாயம்?
இன்றைக்கு தூக்கு மர நிழலில் தவிக்கும் பலருக்கு வாழ்க்கை இருண்டு கிடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் குருசாமி நாயக்கர் போன்று விடா முயற்சிகளை மேற்கொண்டால், அதற்கான பலன்களை அவர்கள் எட்டலாம். தூக்கின் மூலம் மானிட உயிர்களை பறிப்பதால் எந்தவித ஆக்கப்பூர்வமான பலன்களும் வரப் போவதில்லை. நாகரீகத்தை நோக்கிச் செல்கின்ற மானிடமும், மனிதாபிமானமும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். ராஜிவ் காந்தி படுகொலையில் சிக்கித் தவிக்கும் மூன்று பேரும், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் இந்த தண்டனையின் கீழ் தான் உள்ளனர். இந்தியாவில் உள்ள மரண தண்டனை கைதிகள் அனைவரும் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் பயணிக்கவே விரும்புகின்றனர். நீர்க் குமிழியின் ஆயுள் சில நிமிடங்களே; மானிடத்தின் ஆயுள் வருடங்களில். இந்த போக்கில் பழி வாங்கல், அழித்தல் என்பது பழங்கால பிரிட்டானிய வரலாற்றில், ஆங்கிலேய சாக்ஸன் ஆட்சி காலத்தில் இருந்த கொதிக்கும் எண்ணெயில் போடுவது, தீயில் போடுவது, காலை வெட்டுவது போன்ற கொடூரமான தண்டனைகள் போன்றதாகவே இதுவும் உள்ளது. எனவே, இதில் மன மாற்றங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் தான் ஐ.நா. பெருமன்றமும் தூக்குத் தண்டனையை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தியுள்ளது.
பொது மன்னிப்பு என்ற வார்த்தை நடைமுறையில் இருப்பது பயனற்று விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பல வழக்குகளில் சம்பந்தமில்லாத பலர் பலியாகியிருக்கின்றனர். எல்லாவற்றும் சூழலும், நடைமுறைகளுமே காரணமாகின்றன. எது ஒன்றும் மாற்றத்திற்குரியதுதான். மாற்றங்கள் சில நொடிகளில் ஏற்படும். இன்றைக்கு சரி எனப்படுவது நாளையே தவறாகி விடும். அப்போது வருந்தி என்ன பயன்? குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அதன்பிறகு பல அறிவியல் அற்புதங்களை அவன் படைத்தான். அந்த அற்புதங்கள் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்றால் மரண தண்டனையில் மாற்றங்கள் அவசியம் வரவேண்டும். அதுவே நாகரீக பாதைக்கு அழைத்துச் செல்லும் அணுகுமுறையாகும்.
மரண தண்டனை குறித்து பிரச்சாரங்களை அதற்கான ஆர்வலர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்கின்றனர். இந்த இயக்கத்திற்கு உலக அளவில் ஆதரவு பெருக வேண்டும். அந்த ஆதரவில் தான் இந்த நோக்கம் வெற்றி பெறும். குழந்தைகள் பிறக்கும் பொழுது தவறு செய்ய வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. வளர்ந்த பின் வளருகின்ற சூழலை ஒட்டியே தவறு செய்ய முற்படுகிறார்கள். மானிடவியலும், சமூகவியலும், அரசியலும் இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தால் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் உறுதியாக ஏற்படும்.
ஆதிகாலத்தில் ஒரு சட்டம் நிலவி வந்தது. குற்றவாளி குற்றம் செய்தால் அவன் என்ன குற்றம் செய்தானோ அதற்கு தகுந்தமாதிரியே தண்டனை அமையும். அதாவது பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்பது போன்ற தண்டனை. அதேபோன்று இப்பொழுதும் ஒரு உயிரை எடுத்தவனின் உயிரையும் எடுக்க வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காகவே குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புகிறோம். அந்த தனிமையில் அவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திருந்த வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை. தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்ட நாடுகளில் நடைபெறுகின்ற குற்றங்களைவிட, தூக்குத் தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளில்தான் குற்றங்கள் அதிகமாக உள்ளன. நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியது போல, குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டுமேயன்றி அவர்களின் உயிரை பறித்தல் தகாத செயலாகும்.
நன்றி-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
Tuesday, August 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment