Saturday, August 13, 2011

முற்றுப்பெறாத தமிழீழ விடுதலைப் போராட்டமும், நியூட்டனின் மூன்றாவது விதியும்!



நியூட்டனின் மூன்றாவது விதி சிங்கள அரசை நன்றாகவே ஆட்டிப் படைக்கின்றது. ஒரு பக்கம் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை சர்வதேச நாடுகளின் சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை அதிகரிக்க, மறு பக்கம் சனல் - 4 இன் 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காட்சிப்பதிவு சிங்கள தேசத்தின் ஒட்டுமொத்த விம்பத்தையும் அடித்து நொருக்கி அம்மணமாக்கியுள்ளது.

எந்த விலை கொடுத்தாவது சிங்கள அரசைக் காப்பாற்ற முயன்ற இந்திய நடுவண் அரசுக்கும் சனல் - 4 வெளியிட்ட காட்சிப் பதிவு சிக்கலை உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்காலில் வைத்து ஈழத் தமிழர்கள் ஈவிரக்கமின்றிப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட பின்ரும் தமிழர்களுக்கான நீதி சிங்களத்தால் தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வுகளை சிங்களத்தின் வெற்றியாகக் கொண்டாடிவரும் சிங்கள தேசியவாதத்திற்கு எதிராகத் தமிழீழம் மீண்டும் போர்க்கோலம் பூணுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் அதை நோக்கியே தமது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்கள். எத்தனை இழப்புக்களை ஏற்படுத்தினாலும், எத்தனை விலிகளைத் தந்தாலும் எங்கள் தமிழீழ தாகம் தணியாது என இடித்துரைத்த ஈழத் தமிழர்கள் தலை நிமிர்ந்தே நிற்கிறார்கள். தமிழீழ மக்களது அடுத்த கட்ட நகர்வுக்கான நேரத்தை சிங்கள தேசியவாதமே வெகு விரைவில் உருவாக்கிக் கொடுக்கப் போகின்றது.

தமிழீழ மக்கள் எதையும் சிங்களத்திடம் யாசித்து மட்டுமே பெறமுடியும் என்ற சூத்திரத்திலிருந்து சிங்கள அரசு விலகுவதாக இல்லாத நிலையில், மீளெழுந்துவரும் தமிழகத்தின் தமிழீழ மக்கள் குறித்த எழுச்சி இந்திய ஆட்சியாளர்களுக்கு நிரந்தர தலைவலியாக உருவெடுத்து வருகின்றது. சிறிய கட்சித் தலைவர்களிடமும், சிறிய தொகையான தமிழ்த் தேசியவாதிகளிடமும் தேங்கிப்போயிருந்த தமிழீழ ஆதரவுத் தளம், தமிழகத்தின் ஆட்சிபீடம் வரை உயர் விரிவாக்கம் பெற்றுள்ளது. அமரர் எம்.ஜி.ஆர். அவர்களது காலத்தை நினைவூட்டுவது போன்ற அக்கறையை ஈழத் தமிழர்கள்மீது இன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காட்டி வருகின்றார்.

இன்னொரு பக்கமாக, தமிழகத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ ஆதரவுப் பேரலையை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வட மாநிலங்கள் வரை நகர்த்தி வருகின்றார். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைகோ அவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டு தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்கள். முதன் முறையாக, இந்தியத் தேசியக் கட்சியொன்றின் தலைவர் ஒருவர் வெளிப்படையாகத் தமிழீழத்தை ஆதரித்துப் பேசியது மிகவும் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகின்றது.

பிரித்தானிய தொலைக் காட்சியான 'சனல் 4' வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' என்ற காட்சி ஆவணம் பல நாடுகளிலும் மீள் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இது வெளிப்படுத்திவரும் அதிர்வலைகளினால் சிங்கள அரசு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த வாரத்தில் இந்தியாவின் 'ஹெட்லைன் ரூடே' தொலைக்காட்சிக்கு சிங்கள அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பேட்டியில் இதனை அவதானிக்க முடிந்தது. சிங்கள ஆட்சியாளர்கள் நிதானம் இழந்து வருகின்றார்கள் என்பதை கோத்தபாயவின் வார்த்தைப் பிரயோகங்கள் நிரூபித்தன.

விடுதலைப் புலிகளை மட்டுமே மையப்படுத்தியிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டம், சிங்கள தேசம் தமிழ் மக்கள்மீது நடாத்தி முடித்த கொடூரங்கள் காரணமாக சர்வதேசப் பரப்பெங்கும் வியாபித்து வருகின்றது. அதனைத் தோற்கடிக்க சிங்கள தேசம் அத்தனை பிரயத்தனங்களையும் மேற்கொண்டு வருகின்றது. சிங்கள தேசத்திற்கு இதுவரை நேசக் கரமாக விழங்கிய இந்திய நடுவண் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் மீள் எழுச்சியினால் கலங்கிப்போயுள்ளனர். இந்தச் சாதகமான சூழ்நிலையைச் சரியான வகையில் பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே ஈழத் தமிழர்கள் தமக்கான நியாயத்தினை வென்றெடுக்க முடியும். அதற்கான பெரும் தார்மீகப் பொறுப்புக்கள் புலம்பெயர் தமிழர்களுக்கே உள்ளது என்பதை நாம் அவசியம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments: