Saturday, November 28, 2009

சூரியனைத் துப்பாக்கி துளைப்பதிலை...

உனக்காக
இதோ ...இதோ ஒரு எழுச்சிப் பயணம்!

சென்னையிலிருந்து கன்னியா குமரி!
செல்கிறோம் எங்கள் இதயங்கள் குமுறி!

நீ
எங்கிருக்கிறாய் என்பது
எங்களுக்குத் தெரியாது
ஆனால்-
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்பதை
உலகம் முழுவதும் உணர்ந்திருக்கிறது!


அவர்கள்-
எங்கே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது
ஆனால்-
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்
என்பதைத்தான்
அவர்களும் கூட அறிந்து கொள்ளவில்லை!


நீ
தேசத்தை பிரசவிப்பதற்காக
அன்றாடம் உன்னையே
ஆயுத சிகிச்சைக்கு
ஆளாக்கிக் கொள்கிறாய்!

அவர்களோ-
ஒரு குழந்தையை கொல்வதற்காகத்
தாயின் வயிற்றையே
பீரங்கி கொண்டு பிளக்கப் பார்க்கிறார்கள்!


நீ-
விடுதலையை தேடுகிறாய்;
உன் மக்களுக்கான
விடியலைத் தேடுகிறாய்!
அவர்கள்
உன்னையே தேடுகிறார்கள்!

துப்பாக்கி முனைகளுகுச்
சொல்லி வைக்கிறோம்-
சூரியக் கதிர்களை துளைக்க முடியாது!

எமதர்மக் கைகளை எச்சரிக்கிறோம்-
வெண்ணிலவை வலை வீசி
வீழ்த்தியவர் கிடையாது!

ஒருவனைப் பிடிக்க ஒரு லட்சம் படையா?
உண்ண மறுத்தால் அதற்கும் தடையா?
உலக சரித்திரம் படித்ததே இல்லையா?

இனிமேல்-
காந்தி சிலைகளில் உள்ள கைத்தடியை அகற்றுங்கள்!
அதற்கு பதிலாகத்
துப்பாக்கி ஒன்றை அதன் தோள்மீது மாட்டுங்கள்!

இந்த ஆண்டு
அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவுக்குத்தான்!
ஆமாம்...
அமைதி என்பதற்கான
புதிய அர்த்ததைப் பூமிக்கு தந்ததனால்!

அன்றொரு நாள்-
பிரபாகரன் எனபது பெயராக இருந்தது.
இப்போது-
பிரபாகரன் என்பது பிரமிப்பாய் ஆனது!
இனிமேல்
பிரபாகரன் எனபது பிரளயமாய் ஆகாதோ?

எங்கள்
இலட்சியக் கனவுகளின் சுமைதாங்கியே!
பொன்னாடை தோள்மீது போர்த்துவதாய்ச் சொல்லி
உன்மீது சிலுவை அறைந்தது யார்?

நீ ஏசுவல்ல-
ஆனால்
இறப்பினும் நீ உயிர்த்தெழுவாய்!
ஒரு பிரபாகரனாய் அல்ல...
ஒரு லட்சம் பிரபாகரனாய்!

உன்னுடைய
மூச்சுக் காற்று முகாமிட்ட இடமெல்லாம்
பட்டாளம் தனைச்சாய்க்கும் பாசறைகள் உண்டாகும்!

உன்னுடைய
பாதங்கள் நடந்த பாதைகளிலெல்லாம்
புல்லும் கூட புலியாக மாறும்!

உன்னுடைய
சுட்டும் விழிச்சுடர் தொட்ட இடமெல்லாம்
ஜோதி கருவாகும்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
அங்கே உருவாகும்!

கவிஞர் மு.மேத்தா

No comments: