Sunday, March 21, 2010

தற்பொழுதுதான் யதார்த்தமான யுத்தம் ஆரம்பிக்கிறது! இதில் பங்கெடுங்கள்!


‘தமிழீழம்’ மீதான பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் கிடைத்த மகத்தான ஆணையைப்பற்றிப் பிரெய்ன் செனிவரத்னா, ‘இத்தனை வருடங்களாக நான் ஈடுபட்ட போதிலும் இத்தகைய தீர்ப்பினால் நான் பிரமிப்பு அடைந்தேன்’ என தமிழ்நெட்டிற்கு வழங்கிய சிறப்புக் கட்டுரையில் எழுதுகிறார்.

“சமஷ்டியின் காலம் எப்பவோ முடிவடைந்து விட்டது. தமிழ் பிரதேசங்கள் கொழும்பின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்படாவிடின், இலங்கைத் தீவில் அமைதியோ, அபிவிருத்தியோ ஏற்படமுடியாது. இலங்கையில் உள்ள தமிழ் பிரதேசங்களில் இத்தகைய வாக்கெடுப்பு நடத்தினால் 100 வீதம் ‘ஆம்’ என்றே வாக்களிப்பார்கள். ஏழு கோடி தமிழர்கள் உள்ள தமிழ் நாட்டில், இப்படியொரு வாக்கெடுப்பு நடத்தினாலோ, டெல்லி அரசு ஓடி ஒளிப்பதற்கு இடம் தேடவேண்டி வரும் என அவர் எழுதுகிறார்.

அவரின் கருத்துப்படி, உலகளாவிய இந்தக் கவலைக்கிடமான நிலைமையின் கரு, பிரித்தானியக் காலனித்துவமும், அதனைத் தீர்ப்பதில் பின்னடைவு ஏற்படுத்திய உலக நடவடிக்கைகளும் ஆதலால், இதற்கு உலகமே பதிலளிக்க வேண்டும். யதார்த்தமான யுத்தம்,, ஆயுத ரீதியில் இல்லாவிட்டாலும் தற்பொழுதுதான் தொடங்குகிறது. நம்பிக்கை இழப்பதினால், ஒன்றையும் அடைய முடியாது. ஆனால், தமிழர்களின் இளைய சமுதாயம், நம்பிக்கையெனும் ஒளிக்கதிரை மிளிரச் செய்கிறது என அவர் கூறினார்.

‘இலங்கைத் தீவில் தமிழீழம் பற்றிய வெளிநாட்டுக் கருத்துக்கணிப்பு’ எனும் 42 பக்கங்கள் அடங்கிய டாக்டர் செனிவரத்னாவின் கட்டுரையின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன. முழுக் கட்டுரையையும் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பும் வாசகர்கள் ஆங்கிலக்கட்டுரையை இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம். 78 வயது டாக்டர் செனிவரத்னா ஆஸ்திரேலியாவில், வசிக்கும் புகழ் பெற்ற சிங்கள வைத்தியர். அவர் பன்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் தமிழீழக் கொள்கையை நீண்ட காலமாக ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ வாக்கெடுப்பு - இதுவரை உலகம் முழுவதிலும் இப்படியொரு தீர்ப்பை எந்த விடயத்திலும், எந்த இடத்திலும் நான் காணவில்லை. புலம் பெயர் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகத் தமிழீழம் எனும் வேறு நாட்டை விரும்புகிறார்கள் என்ற கூற்று மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது ஒன்றாகும். இத்தனை வருடங்களாக இவ்விடயத்தில் ஈடுபட்ட போதிலும், இந்தத் தீர்ப்பினால் நான் பிரம்மிப்படைந்தேன்.

இலங்கைத் தீவில் என்பது ஒரு குடியேற்ற நாட்டின் அமைப்பு. தமிழர்கள் இந்த வாக்கெடுப்பின் மூலம் கேட்பதும், பேராதரவோடு உறுதிப்படுத்துவதும், தோல்வியுற்ற இந்தக் குடியேற்ற அரசமைப்பைக் கலைக்க வேண்டும் என்பதே. 70 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழ் நாட்டில், இப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால், டெல்லி அரசு மாத்திரமல்ல அத்துடன் அவர்களின் உளவுத்துறையான ‘ரா’ அமைப்பும் ஒளித்தோட வேண்டி வரும்.

இலங்கைத் தீவில் தமிழ் பிரதேசங்களாகிய வடக்கிலும் கிழக்கிலும் ஒரு வாக்கெடுப்பைப் பார்க்க நான் ஆசைப் படுகிறேன். ஆனால், அத்தகைய வாக்கெடுப்பை இராஜபக்சேவின் இராணுவ சீருடையுடனோ அல்லது இல்லாமலோ பணியாற்றும் அடிவருடிகளைத் தவிர்த்தும், அல்லது வாக்காளர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என தமது எஜமானர்களுக்கு முறையிடுவதற்கு வேவு பார்க்கும் தமிழ் ‘உதவியாளர்களைத்’ தவிர்த்தும் இது நடைபெற வேண்டும். அதாவது, ஒரு நம்பகமான வாக்கெடுப்பில், இலங்கைத் தீவில் இராணுவம் அப்பிரதேசங்களில் இருந்து விலக்கப்பட்டு, இராஜபக்சேவின் பல்லக்குக் காவிகளான கருணா, பிள்ளையான் போன்றவர்களும் தவிர்க்கப்பட்டால் நூறு வீதம் தமிழீழத்திற்கு ஆதரவான வாக்குகள் சுலபமாகக் கிடைக்கலாம்.

சமஷ்டித் தீர்வின் பயனின்மை

அன்றும் (1945-ல்) அதனிலும் பார்க்க இன்றும், இந்தப் பொறுப்பற்ற, நாசகாரமான பிரித்தானியக் குடியேற்ற அமைப்பை இல்லாது ஓழிக்கும் வரை, இலங்கைத் தீவில் அமைதியோ, அபிவிருத்தியோ வரப்போவதில்லை. அப்படிச் செய்வதன் மூலம் கிடைப்பது ‘ஈழம்’ எனப்படலாம். அல்லது வேறொன்றாகலாம். ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் நிர்வாக உரிமை, சிங்களவர்களின் கைகளுக்கு வெளியே கொணரப்பட வேண்டும். நார்வே வாக்கெடுப்பு முடிவுற்று (98.95 மூ தமிழீழ ஆதரவு வாக்குகளின் பின்) சில நாட்களில் இலங்கை தீவில் நடைபெற்ற நடைமுறை தமிழீழ அரசை நிறுவியதில் பங்கெடுத்த நார்விஜிய மந்திரி எரிக் சோல்கைம் (அது 2009-ல் அழிக்கப்படும் முன்) சமஷ்டி அரசியல் இலங்கைத் தீவின் பிரச்சனைக்கு ஒரு உகந்த தீர்வு எனக் கூறினார். மதிப்பிற்குரிய மந்திரியும், இலங்கைத் தீவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில ‘நடு நிலைமை வகிக்கும்’ தமிழ்ப் பிரமுகர்களும் இன்னும் தமது கடந்த கால எண்ணங்களுடனே வாழ்கின்றார்கள். சமஷ்டி பற்றிய காலம் எப்பொழுதோ கடந்து விட்டது.

இலங்கைத் தீவில் சமஷ்டி ஆட்சி இயங்குவதற்கு, தமிழர்கள் கொழும்பில் நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்கள் சித்த சுவாதீனம் அடைந்தாலொழிய அத்தகைய நம்பிக்கை வைப்பதை நான் எதிர்பார்க்க முடியாது. தமிழர்கள் எதனைக் கட்டியெழுப்பினாலும், அது அழிக்கப்படும் என்பதை இராஜபக்சே திட்டத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

இந்த யதார்த்தத்தை, ஹரோ-வின் கன்சர்வேட்டீவ் வேட்பாளராகிய டாக்டர் ரேச்சல் ஜாய்ஸ் எடுத்துக் கூறும்போது ‘எனது நீண்ட கால நோக்கில் இலங்கைத் தீவின் அமைதிக்கு ஒரே நேர்மையான பாதை ஈழத்தை அமைக்கும் ஒரு அரசியல் தீர்ப்பாகும். அது ஒன்றுதான் நீண்ட நோக்கில் வெற்றியளிக்கக் கூடிய தீர்ப்பு’.

தமிழ் வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு:

தமிழ் வாக்கெடுப்பில் எதிராக ‘இல்லையென வாக்களித்த’ 561 (0.28 மூ) மக்களின் மனதில் எத்தகைய தீர்வு இருந்ததென அறிய ஆவற் பட்டேன்.

1. விடுதலை கிடைத்தபின் இலங்கைத் தீவில் இருந்த அதே நிலையைத் தொடர்வதன் மூலம் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவோ அல்லது மூன்றாந்தரப் பிரஜைகளாகவோ வாழ்வது.

2. தமிழர்கள் எல்லாவற்றையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறுவது.

3. சிங்கள எஜமானர்கள் கொடுப்பதைக் கைநீட்டி இரந்து பெறுவது.

4. சிங்கள ஆட்சியாளர்களின் உதார குணத்தை நம்பி ‘சமஷ்டி ஆட்சி’ கிடைக்குமென எதிர்பார்ப்பது.

சமஷ்டித் தீர்வு, அரசியல் அறியாமை உடையவர்களுக்கே ஏற்றதாகும். (இல்லையென வாக்களித்தவர்கள், நடுநிலைமை எனக்கூறும் பிரமுகர்கள், இலங்கை தீவில் அரசியல் சரித்திரப் பதிவுகளை அறியாத பரிதாபத்திற்குரிய எரிக் சோல்கைம் போன்ற வெளிநாட்டவர்கள்) கனடாவில் இவ்வாக்கெடுப்பிற்கு எதிராக ஒரு பரப்புரை மேற்கொள்ளப்பட்டதற்குக் காரணம், இத்தகைய ‘ஆம்’ எனும் செய்தி இலங்கைத் தீவின் அரசை எட்டினால், வாக்காளர்கள் இலங்கைத் தீவிற்கு காலடி எடுத்து வைப்பதைப் பாதிக்கும் என்பதாகும். பல வருடங்கள் என்னுடன் வேலை செய்த கனடிய காங்கிரஸின் நிலைப்பாட்டில் நான் கவனம் செலுத்தினேன்.

கனடாவில் வாக்கெடுப்பு நடைபெற்ற அதே சமயம், வியன்னாவில், இலங்கை தீவின் சில தமிழறிஞர்கள் (நான் சந்தித்த சிலரும்;) உள்ளக சுயநிர்ணயம், திம்புக் கொள்கை பற்றி ஆலோசித்தனர். இத்தகைய அழிகரைகளினால் திசை திருப்பப்படாமலும், தளர்ச்சி அடையாமலும், பயமடையாமலும் தமது வாக்கெடுப்பை அமைதியாக கொண்டு செல்லும்படி அதை ஏற்படுத்தியவர்களுக்கு நான் கூறுவேன். தமிழ் இளைஞர்கள் எமக்கு ஒளியூட்டுபவர்கள் - ஊடகங்களின் ஆதரவின்றியும் இவர்கள் பிரித்தானியாவில் நடாத்திய இவ்வாக்கெடுப்பு இளைஞர்களிலேயே தங்கியிருந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலேயே இளைஞர்களின் பங்கெடுப்பு தெளிவாக விளக்கப்பட்டது. அவர்கள் முழுமூச்சாக இந்த புனிதப்பணியில் பங்குபற்றி, தமிழீழம் எனும் குறிக்கோளை அடையும் வரை ஈடுபட வேண்டும் என அதில் கூறப்பட்டது.

இக்கவலைக்கிடமான நிலை குடியேற்ற அரசினால் ஏற்பட்டது. அதன் பொறுப்பு பிரித்தானியாவையே சாரும்:

பிரித்தானியாவின் குடியேற்ற அரசையும், இலங்கைத் தீவில் இருந்த குழப்ப நிலையைத் தீர்க்க முற்பட்டு மேலும் ஆழமான குழப்பங்களை உண்டாக்கிய கோல் ப்ரூக், கேமரூன், டொனாமூர், சோல்பரி ஆகியோரையும் அவர்களோடு கூடிய ஆளுணர்களையும் இந்த நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் சேரும். சிங்களவர்களின் தற்போதைய நாடகத்திற்கு இவர்களே வழியமைத்துக் கொடுத்தார்கள். பிரித்தானியா இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவது இதற்கு ஒரு முதற்படியாகலாம்.

1833-ல்’ கோல்ப்ரூக்-கேமரூன் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பிரித்தானியரால் தமது நிர்வாக வசதிக்கு கொணரப்பட்டு, சுற்றுப்புறங்களின் வளர்ச்சியில் பாராதூரமான அலட்சியங்களையும் அதனால் நாட்டுக்கு எல்லாவற்றிற்கும் மேலான தீங்கையும் விளைவித்தன. ஹியூஜ் கிளைகோன் என்பவர் தனது ‘கிளைகோன் குறிப்பு’ எனும் நூலில் 1799-லேயே சிங்களவர்களும் தமிழர்களும் வேறாக குடியமர்ந்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். முற்காலந்தொட்டு, இலங்கைத் தீவை சிங்களவர்கள் வலபா ஆற்றின் தெற்கு மேற்குப் பகுதிகளின் உள்நாட்டிலும் தமிழர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் பிரிந்திருந்தார்கள். அவர்கள் இருபாலாரும் தமது மதம், மொழி, பழக்கவழக்கங்களில் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

இப்படிப்பட்ட முக்கியம் வாய்ந்த குறிப்பினை கிளைகோன் அனுப்பிய பின்பும் கோல்ப்ரூக் ஆனவர் கோட்டே, யாழ்ப்பாணம், கண்டி இராச்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொழும்பில் மத்திய அரசு அமைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தார். சமூக பிரதிநிதித்துவத்தையும் சர்வதேச வாக்களிப்பையும் அழிப்பது, ‘சிறுபான்மையினரின் அழிவு’ க்கு வழிவகுக்கும் என அகில இலங்கைத் தீவின் தமிழ் காங்கிரஸ் சரியாக எடுத்துக்கூறியது. இலங்கைத் தீவினை முழுவதும் ஒரு தேசம் எனத் தவறாக எண்ணியமைதான் ஆட்சியாளர்கள் விட்ட பெரிய தவறாகும். உண்மை நிலையானது யாதெனில், இலங்கைத் தீவு ஒரு நாடு. அதில் சிங்களவர், தமிழர் என இரு தேசிய இனங்களும், இந்தியத் தமிழர், இலங்கைத் தீவின் முஸ்லீம்கள், இந்திய முஸ்லீம்கள், பரங்கிகள், மலேயர் என வேறு ஐந்து சமுதாயத்தினரும் இருந்தனர்.

டொனாமூர் குழுவினர்க்குச் சமஷ்டி ஆட்சியைக் கோரி கண்டிச் சிங்களவர்களால் ஒரு பலமான அறிக்கை விடப்பட்டது. ‘எமக்கு, எமது மக்கள் சுயமாக வாழ வேண்டும். அதற்கு அமெரிக்காவைப் போல ஒர் சமஷ்டி ஆட்சி வேண்டும். அதன் மூலம் எல்லாத் தேசிய இனங்களும் மற்றவர்களின் தலையீட்டைத் தவிர்த்துத் தமது சொந்த தேசியத்தை வளர்க்கலாம்’ என அது கோரியது. இக்கோரிக்கை இன்றையத் தமிழர்களின் பிரச்சனைக்கும் வாக்கெடுப்பிற்கும் மிகவும் முக்கியமானதாகிறது. 1840-ல் கண்டியில் வாழ்ந்த விவசாயிகளுக்குத் தமது காணியை உறுதிபடுத்துவது முடியாத காரியமாய் இருந்தது (இன்று இராணுவக் கட்டுப்பாட்டில், வடக்கில் இருக்கும் தமிழரின் நிலைபோல்!). 1948-ல் சோல்பரியின் குழுவானது இலங்கை அரசின் யாப்பில் சிறுபான்மையினர்க்கு எதிராக ஒன்றையும் காணமுடியவில்லை எனக் கூறியது.

1948-ன் பின் தமிழர்கள் தமது இறையாண்மையைச் சிங்கள பெருபான்மை அரசிடம் இழந்துவிட்டார்களா?:

இதற்கு மறுமொழி நிச்சயமாக ‘ஆம்’ என்பதே. இதற்குத் தனியே பிரித்தானியா மாத்திரம்தான் பொறுப்பு எனக்கூற முடியாது. இலங்கைத் தீவின் மக்களுக்கு 60 வருடகாலமிருந்தும், அவர்கள், பிரித்தானியரால் செய்யப்பட்ட அழிவை நிவர்த்திச் செய்வதற்குப் பதிலாக அதனுடன் கூடிய அழிவை உண்டாக்கியுள்ளனர். 1972 குடியரசு யாப்பின் மூலம் சோல்புரி யாப்பில் இருந்த பாதுகாப்பளிக்கும் ஷரத்துகளை அகற்றி தமது குறிக்கோள்களை அடைந்தனர். இதனால் 1. தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் தனக்கு விரும்பிய எதையும் செய்யலாம் (கல்வி, தொழில் ஆகிய எல்லாவற்றிலும் பாகுபாடு). 2. இலங்கைத் தீவினை சிங்கள பௌத்த நாடாக மாற்றலாம்.

6வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் அரசுரிமையை ஒழித்தது. 1983-ல் ஜெயவர்த்தனாவின் குண்டர்களும், கொலைகார மந்திரிகளும், புத்த பிக்குகளும் நடாத்திய இனப்படுகொலையின் பின்னும், தமிழ் பிரதேசமென அழைக்கப்படுவதை இது தடுத்தது. இதன் மூலம் இலங்கைத் தீவிலோ, வெளிநாட்டிலோ தமிழர்களுக்கு இலங்கைத் தீவிற்;குள் ஓர் தனிநாடு கோர முடியாது. சரித்திர பூர்வமாக ஓர் தமிழரசு இருந்தததை மறுக்கும் முயற்சியும் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. தமிழரசு என ஒன்று இல்லாவிடின் தமிழ் மக்கள எப்படி இறையாண்மையைக் கோர முடியும்? என்பதே சிங்கள அரசின் தர்க்கம்.

போரும் இன அழிப்பும் - பயங்கரவாதத்தின் சுற்றுமாற்று:

கீழ்கண்ட சம்பவங்கள் நடைபெற்றன.

1. சிங்கள மக்களைக் கொண்ட இராணுவமும், தமிழ் மக்களைக் கொண்ட இராணுவமும் (விடுதலைப் புலிகள்) யுத்தத்தில் மோதின.

2. தமிழருக் கெதிரான இனக்கலவரங்கள் தொடர்ச்சியாகத் தமிழர்களை அடிபணிந்து சிங்கள பௌத்த அரசைச் சர்வமத சர்வகலாச்சார அரசாக ஏற்கும்படி வற்புறுத்தியது.

3. இந்து சமுத்திரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இலங்கைத் தீவினைவிட வேறு இடம் இருக்க முடியாது என சர்வதேசங்கள் காய் நகர்த்தின.


உள்ள தமிழர்களால் என்ன செய்ய முடியும்?

1. அவர்களை நாட்டிலிருந்து கலைக்கலாம். 13 இலட்சம் தமிழ் மக்கள் முன்னரேயே சென்றுவிட்டனர். மற்றவர்கள் தற்போது வெளியேறிவருகின்றனர். எப்படியாயினும் சிலர் மிஞ்சியுள்ளனர்.

2. அவர்களை அகதிகளாக்கலாம். இங்கு ஏறத்தாழ 5 இலட்சம் தமிழர்கள் இந்நிலையிலேயே தற்போது உள்ளனர். தமிழ் நாட்டில் 1இ50இ000 ஆயிரம் பேர் அகதிகளாக உள்ளனர்.

3. அவர்களை ‘காணாமற் போகச் செய்யலாம்’. உலகத்தில் காணாமற் போக்குவதில் (ஈராக் முதலிடத்தைப் பெறுகிறது) இலங்கைத் தீவு இரண்டாமிடத்தைப் பெறுகிறது. இப்படிக் காணாமற் போகிறவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாவர

4. அவர்களைக் கொன்றுவிடலாம். அதாவது இன அழிப்புச் செய்யலாம். தற்போது 2,50,000(பெரும்பாலும் அதனிலும்கூட) தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இது இனஅழிப்பு நடவடிக்கையாகும் :

ஐ.நா-வின் சட்டத்தின்படி ஒரு தேசிய, சமய, கலாச்சார குழுவினரை முழுதாகவோ பகுதியாகவோ அழிக்கும் எண்ணத்துடன் செய்யப்படுவது இனப்படுகொலை என மொழியப்படும். இலங்கைத் தீவுத் தமிழரைப் பொறுத்தவரையில், இலங்கைத் தீவில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் பகுதியினர் அவர்களாகும்.

இனஅழிப்பில் பலவிதங்கள் உண்டு – கலாச்சார, பொருளாதார, சமய இனஅழிப்பாகியன. இவற்றை அழிக்கும் நோக்கோடு செய்யும் செயல்கள் இனஅழிப்பாகும். இலங்கைத் தீவின் அரசு இத்தகைய எல்லா வகை இனஅழிப்புகளையும் புரியும் குற்றவாளியாகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கும் தமிழர்களின் நிலைமை தமிழர் சிங்கள என்ற வரையறைவுக்கப்பால் ஒரு மனித உரிமைப் பிரச்சனை. உலகளாவிய பரிமாணத்துடன் உலகளாவிய பின்தங்கல் நிகழ்ந்ததால் அதற்கு உலகளாவிய தீர்வு தேவை. மனித உரிமைப் பிரச்சனை இனிமேல் உள்நாட்டுப் பிரச்சனை எனத் தட்டிக்கழிக்க முடியாது. இதனால்தான் தென்னாபிரிக்காவில் நிற வேற்றுமை ஒழிக்கப்பட்டது. இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இலங்கைத் தீவும் இதற்கு விதிவிலக்காக முடியாது.

நம்பிக்கை இழப்பதன் மூலம் ஒன்றையும் அடையமுடியாது:

சர்ச்சில் கூறியது போல் எங்கும் போரிடுங்கள் என நான் கூறவில்லை. ஆனால் தோல்வி மனப்பாண்மையைத் தவிருங்கள் என்றுதான் கூறுகிறேன். இராணுவத்துறை அல்லாத பல மார்க்கங்கள் இன்று உள்ளன. எனவே இராணுவ முறையில் போர் தொடங்கும்படி நான் கூறவில்லை.

உண்மையான போர் தற்போது தொடங்குகிறது. சம்பிரதாயமானப் போர் முடிந்திருக்கலாம். ஆனால் போருக்கான பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. ‘நாங்கள் வெளிநாடுகளில் இருக்கிறோம்’ என சார்ல்ஸ் டிகோல் நாஸிகள் பிரான்ஸிற்கு வரும்போதும், கூறினர். ஆனால் வெளிநாட்டில் இருப்பதால்தான் உங்கள் பொறுப்புகள் இன்னும் கூடியவையாக உள்ளன. 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வெளிநாட்டில் இருந்தும் தமது பிரச்சனையைத் தீர்க்கமுடியவில்லை என்றால் அவர்களில் அல்லது அவர்களது வழிமுறைகளில் அல்லது இரண்டிலும் ஏதோ பிழை இருக்க வேண்டும்.

கிழக்குத் தீமோரில் அப்படியொரு சாட்டு ஏற்கப்படலாம். ஏனெனில் அங்கு புலம்பெயர் மக்கள் குறைவாகவும் கல்வியறிவில் குறைவாகவும் இருந்தனர். இலங்கைத் தீவின் தமிழரின் நிலை வேறு. இத்தனை வலுவுள்ள புலம்பெயர் சமுதாயத்தை உலகில் உள்ள எந்தவொரு விடுதலை இயக்கமும் கொண்டிருக்க முடியாது என்பதை நான் அறிவேன்.

‘ஈடுபடுங்கள்’ என்பதே பிரெயின் செனிவரத்னா தமிழர்களுக்கு கூறிய தொகுப்பான புத்திமதியாகும்.

No comments: