Saturday, March 27, 2010

குறையுமா இந்த சுமை?





இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். இந்த தலைவர்களின் நிலையோ மிகவும் பரிதாபம். படிப்புதான் வாழ்க்கையின் ஆதாரம். இதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் டியூசன்,மியூசிக்,யோகா போன்ற வகுப்புகள். இப்படி பயணம் சென்றால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும். இதுதான் பெரும்பாலான பெற்றோரின் கனவு. இந்த கனவு நிறைவேறுகிறதோ இல்லையோ குழந்தை பருவத்திலேயே முழு சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.

வீடு - பள்ளி - வீடு - டியூசன் செண்டர்,ஹோம் ஒர்க் இப்படி இயந்திர ஓட்டம்தான் குழந்தைகளுக்கு. இவை எல்லாம் சேர்ந்து படிப்பு மீது ஆர்வம் வருவதறகு பதில் பயம்தான் வருகிறது. விளையாட இடம் இல்லை, இடம் இருந்தாலும் நேரம் இல்லை. தங்க கூண்டில் கிளியாக மாற்றப்படுகின்றனர். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டும் பெற்றோர், அவர்கள் சுமக்கும் புத்தகப் பையை தூக்கி சுமந்து பார்த்தவர்கள் எத்தனை பேர்? என் குழந்தைக்கு லேட்டஸ்ட் பேஷனில் ஸ்கூல் பேக் வாங்கி கொடுத்திருக்கிறேன் என்று பெருமையாக கூறுகின்றனர். எல்கேஜி படிக்கும் மகன் கூட, அவன் எடைக்கு புத்தகப் பையை சுமக்கும் கொடுமை பற்றி பெற்றோருக்கு கவலை இல்லை. எல்லா புத்தகத்தையும் எடுத்து கொண்டாயா என்பதில் உஷாராக இருக்கின்றனர். பள்ளிகளில் அன்று என்னென்ன வகுப்புகள் உள்ளன என்பதை கூட பார்ப்பதில்லை. அதிக எடை சுமப்பதால் குழந்தைகள் கூன் போடும் நிலை. இதனால்,முதுகுவலி உள்ளிட்ட உடல்வலி. அதைவிட மனரீதியான பாதிப்பு. இந்த சுமையை குறைக்க கல்வியாளர்கள் பேசினார்கள்... பேசுகிறார்கள்... பேசுவார்கள். சுமைமட்டும் தொடர்கிறது. இப்போது குழந்தைகளின் புத்தக சுமை பற்றிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி உள்ளது. ஒரு பேனா, ஒரு பென்சில், ஒரு நோட்டு, ஒரு புத்தகம் போதாதா? அதை முடிவெடுக்க உத்தரவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார் வழக்கு தொடர்ந்தவர். அதில் நியாயம் இருக்கிறது. விசாரித்த உயர் நீதிமன்றம், புத்தக சுமையை குறைப்பது பற்றி மூன்று மாதத்தில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. மூன்று மாத்துக்கு பிறகு சுமை குறையுமா?

No comments: