இந்த நாடு எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது விளங்கவில்லை. தமிழ் நாட்டு அரசின் ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி மக்களை மதி மயங்க செய்ததா? அல்லது இலவச தொலைக்காட்சியின் தொடர்கள் அவர்களின் மூளையை முற்றிலுமாய் அழித்ததா? புரியவில்லை. இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சீர்கேடும் நாட்டு மக்களின் உயிர் ஆதாரத்திற்கு உலை வைப்பவையாக இருக்கின்றன. மக்களின் உயிரோடு விளையாடுவதென்பது மிக இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது.
மக்களின் உயிர், மாற்று தன்மை மிக்கதல்ல என்கின்ற உள்ளார்ந்த உண்மை வெளிப்படையாக, அழுத்தமாக தெரிந்திருந்தும்கூட உயிர்களை குறித்த அக்கறையோ, உயிர்கள் மேல் ஒரு துளிக்கூட உண்மையான நம்பிக்கையோ அற்றவர்களாய் இவர்கள் இருக்கிறார்கள். நாள்தோறும் செய்தித்தாள்களில் கொலை, கொள்ளை என செய்திகள் வருகிறது. மனித உயிர்கள் கொல்லப்படுவதை குறித்து கொஞ்சமும் கவலை அற்றவர்களாய் இவர்கள் இருக்க காரணம் என்ன? இந்த கொலைக்கான காரணங்களை காவல்துறையினர் கதை, வசனம் எழுதி வெளியிடும்போது அதற்கான அடிப்படை, ஒருவருக்கு ஒருவர் இடையே மனக்கசப்பு, போட்டி மனப்பான்மை. இதுவே அழித்தொழிப்பின் காரணமாக இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் அதைவிட மேலாக ஒரு காரணம் இருக்கிறது. அவர்களின் செயல்களில் லாப வெறி செழித்தோங்கி இருப்பதை காண முடியும். மனைச்சந்தை பெரும் வர்த்தகமாக வளர்ந்து வந்தபோதுதான் அதற்கான லாப பங்கீடு, அதற்கான கழிவுத் தொகை இப்படி பல்வேறு காரணங்கள் லாப நோக்கைக் கொண்டு கொலையை வெற்றிகரமாக நடத்தி முடித்தன. ஒரு மாந்த வாழ்வு என்பது கேவலம் பணத்திற்காக அல்லது, பதவிக்காக அழித்தொழிக்கப்படும் அவலம் மாந்த நாகரீகத்தை கேவலப்படுத்துகின்றன. மனித உயிர் என்பது அளவிட முடியாத ஆற்றல் வாய்ந்தது. இந்த மண்ணை மாற்றி அமைக்கும் மாபெரும் திறன் கொண்டது. இந்த பூமி இயங்குவதற்கு அடிப்படையானது.
ஆனால் இவ்வளவு சிறப்புக் கொண்ட மனித உயிர்கள் கொல்லப்படுவது கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதும்கூட. ஆனால் கண்டிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் கிடையாது. காரணம் உயிர்மேல் கொண்ட அச்சம் அவர்களை அநீதியைக் கண்டு பொங்கி எழும் மனதை பாழடித்துவிட்டது. நீதிக்காக அவர்களின் வாழ்வு என்பது நிர்மூலமாக்கப்பட்டது. உலகெங்கும் ஆயிரக்கணக்கான உயிர்கள் போராயுதங்களால் பெரும் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தால் கொத்துக் கொத்தாய் உயிர்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. பகைமையால் ஏற்பட்ட கருத்து சீரழிவு பலரின் உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுகின்ற செயல்கள். இவைகளுக்கான காரணங்கள் பலவாறு சொல்லப்படுகின்றது. ஆனால் தூக்குத்தண்டனை கொடுப்பதுகூட தவறு என வாதிடும் ஒரு மகத்தான வாழ்வியலை நோக்கி இந்த உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
உயிருக்கு உயிர் என்கின்ற கோட்பாடு ஏற்புடையதல்ல என்கிற உயரிய தத்துவம் இன்று உயர்ந்தோங்கி நிற்கிறது. ஆக, மாந்தத்தின்மேல் அக்கறைக் கொண்ட அனைவரும் மனித உயிர்களை காப்பாற்ற அணியணியாய் களத்திலே இருக்கிறார்கள். அவர்கள் எதனையும் எதிர்பார்த்து அல்ல, இந்த மாந்தம் அழிந்துவிடக் கூடாது என்கிற ஒரே நேர்க்கோட்டில் அவர்களின் சிறப்புப் பயணம் சென்றுகொண்டிருக்கிறது. இதற்காக அவர்கள் இரவு பகல் பாராது சிந்திக்கின்றார்கள். எல்லா நேரங்களிலும் உழைக்கின்றார்கள். உலகத்தை ஒன்றிணைக்க பெரும் முயற்சி எடுக்கின்றார்கள்.
எப்படியாவது உயிர்கள் போவதை தடுத்துவிட முடியாதா? போர்களிலும் இயற்கையின் சீற்றத்திலும் போகும் உயிர்களை காப்பாற்ற முடியாதா? பசி, பஞ்சம், வறுமையில் போகும் உயிர்களை தடுத்து வைக்க முடியாதா? மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொள்ளும் உயிர்களை நிறுத்தி வைக்க முடியாதா? என்றெல்லாம் பலவாறு அவர்களின் வாழ்வு ஓய்வு, உறக்கம் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கேவலம் பணத்திற்காக மனித உயிர்களை குறித்து கொஞ்சமும் கவலைப்படாத கொடும் நெஞ்சம் படைத்தவர்கள், கேடு நிறைந்தவர்கள், இந்த மண்ணிலே மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்கிறார்கள்.
அவர்களின் தனிமனித வாழ்வின் உயர்வுக்காக, மகிழ்வுக்காக, ஆடம்பர வாழ்க்கைக்காக எத்தனை உயிர்களை பலி கொடுக்கவும் அவர்கள் தயங்குவது கிடையாது. அதுவும் நம்பிக்கையோடு நோய் தீரும் என்று வாங்கி அருந்தும் மருந்திலேக்கூட நஞ்சு கலக்கும் வேலையை இந்த கனத்த நெஞ்சம் கொண்டவர்கள் செய்கிறார்களே என்ற செய்தி சில நாட்களாக ஊடகங்களை உலுக்கி எடுக்கிறது. மருந்து கடைகளில் காலவதி ஆனதா? இல்லையா? என்பதை கண்டறிய நாம் மருந்தை திறந்து சோதித்தறிய முடியாது. அந்த கலன்மீது ஒட்டப்பட்டிருக்கும் துண்டு குறிப்புத்தான் நமது நம்பிக்கை. அதிலிருக்கும் தகவல்தான் நமக்கு அளிக்கப்படும் உத்திரவாதம். அதை பார்த்துத்தான் நாம் மருந்தை வாங்கி நோய் தீர்க்க அருந்துகிறோம்.
ஆனால் அதையே சாவு வர வைக்கும் சாத்தானாக உருமாற்றும் இந்த உள்ளமற்ற கொடியவர்களை என்னச் சொல்லி அழைப்பது என்பது இன்றுவரை விளங்கவில்லை. போலி மருந்து தயாரிப்பு என்கிற செய்தி சமீப நாட்களில் மக்களை மருந்து கடை பக்கம்கூட செல்ல அச்சமடைய செய்கிறது. தலைவலிக்கென்று வாங்கும் மருந்துக்கு நமது தலையை திருகிக் கொள்ளும் ஆற்றல் இருக்கிறதோ? யார் அறிவார்? இதய வலிக்கு வாங்கும் மருந்தில் நமது இதயத்தை உடைத்தெறியும் நிலை இருக்கிறதோ? அந்த மருந்திற்கு தான் தெரியும். எவ்வளவு கேவலம்.
தமது வாழ்வின் மகிழ்ச்சிக்காக இந்த மாந்த குலத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்யும் இவர்களை என்னச்சொல்லி அழைப்பது? இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? கேடு நிறைந்த இந்த வாழ்வு இவர்களுக்கு தேவைதானா? என்றெல்லாம் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, இதற்கான மறுகட்டமைப்போ, இல்லையென்றால் இதை மாற்றுவதற்கான செயல்வடிவமோ இதுவரை நாம் செய்யவில்லை. இதில் முழுக்க முழுக்க பணவெறி மட்டும்தான் குறிக்கோளாய் இருந்திருக்கிறது. காலவதி ஆகிப்போன மருந்துகளை அழிப்பதற்காக அனுப்பும்போது அவற்றை மீண்டுமாய் அதே மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்து அந்த மருந்தின் மீது இருக்கும் லேபிள் என்று சொல்லப்படும் குறிப்பு சீட்டை மட்டும் எடுத்தெறிந்து விட்டு அதே மருந்திற்கு புதிய குறிப்பு சீட்டை ஒட்டி, புதிய மருந்தாக கடைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பும் மிகப்பெரிய மோசடியை செய்திருக்கிறார்கள்.
இதில் தனிநபர் ஒருவருக்கு மட்டுமே பங்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. இதன் உள்கட்டமைப்பில், வெளி அரங்கில் எத்தனை பேர் பங்குதாரர்களாக இருக்கிறார்களோ, யார் யாருக்கெல்லாம் இந்த உயிர்கொல்லும் இயக்கத்திற்கு கழிவுத்தொகை செல்கிறதோ என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியாத உண்மையாக இருந்து கொண்டிருக்கிறது. அரசு அதிரடியாக நடவடிக்கை என்ற பெயரில் சில நிறுவனங்களை மூடி, முத்திரையிட்டிருக்கிறது. சிலரை தேடி வருகிறது. இவ்வளவு பெரிய மோசடி மூளை இவர்கள் மட்டும்தானா? இவர்களுக்கு அப்பால் யார் இருக்கிறார்கள் என்கிற செய்தியெல்லாம் நமக்கு தெரிவதற்கு முன்னால் மீண்டும் ஒரு பென்னாகரம் இடைத்தேர்தலோ அல்லது பிரேமானந்தாவோ, நித்தியானந்தாவோ, கல்கி பகவானோ ஊடகங்களிலே வந்து முகம் காட்ட தொடங்கிவிடுவார்.
பிறகு, இந்த மோசடி மருந்தை குறித்த சிந்தனை நம்மிடமிருந்து மறக்கடிக்கப்பட்டுவிடும். மீண்டுமாய் நாம் பழையபடி கிளுகிளுப்பு செய்திகளிலும், குத்தாட்ட நடனங்களிலும் நம்மை ஒப்படைத்துவிட்டு, அநியாயத்திற்கு துணைபோகும் கூட்டத்தில் ஒருவராக இணைந்துவிடுவோம். இதையெல்லாம் மாற்றி அமைக்க, ஒரு ஆற்றல் வாய்ந்த, திறன் கொண்ட அமைப்பு நிறுவப்பட வேண்டும். மக்களின் உயிர் காக்கும் பிரச்சனையிலேயே இவ்வளவு கேவலங்கள் நிகழ்கிறது என்றால், இந்த நாட்டின் வளர்ச்சி குறித்து, இந்த நாட்டின் மக்கள் நலன் குறித்து சிந்திப்பது உண்மையிலேயே சிறப்பானதாக தெரியவில்லை. போபால் விஷவாயு ஆயிரக்கணக்கான மக்களை பழி வாங்கியது.
இதுவரை அந்த மக்களுக்கு விடிவு அல்ல, வெறும் நிவாரணம்கூட வழங்குவதற்கு அந்த நிறுவனம் தயாராக இல்லாமல் பல்வேறு சாக்கு போக்குகளை சொல்லி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று அதே நிறுவனம் வேறொரு பெயரில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. தடுப்பார் யாரும் இல்லை. உயிர் கொடுப்பதற்கோ அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அப்படிதான் இந்த மோசடி மருந்து விற்பனையில்கூட நிறுவனங்கள் பூட்டி முத்திரையிடப்படும். மேலோட்டமாக சிலர் கைது செய்யப்படுவார்கள். பின்னர் அதே நிறுவனம் வேறொரு பெயரில் மீண்டும் இயங்கத் தொடங்கும். கேட்பதற்கு யாரும் கிடையாது.
இந்த நாட்டு மக்களின் உயிராதாரப் பிரச்சினையை கட்டிக் காப்பதற்கு நாதிக் கிடையாது. இதையெல்லாம் பார்க்கும்போது நமது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்விதான் நம்முன் எழுகிறது. நாம் அநீதியைக் கண்டு அமைதி காத்தால் நாளை நாமும் அந்த அநீதிக்கு பலியாகலாம். இப்போதே சொல்லிக் கொள்வோம் அநீதிக் கண்டு பொங்குவாய் வா வா என.
No comments:
Post a Comment