Tuesday, February 1, 2011

அழியும் சிறுதொழிலும் உயரும், விலைவாசியும்



‘’தக்காளி ஒரு கிலோ....கத்திரிக்காய் கால்கிலோ....... காலிபிளவர் ஒண்ணு....... முட்டைக்கோஸ் கால்கிலோ........ பல்லாரி நூறு கிராம்....... அப்புறம்.... வேற என்ன வேணும்?”

“அவ்வளவுதான். பில் எவ்வளவுப்பா?”

” 500 ரூபாய் கொடும்மா”

”என்னாது....? ஐநூறா...?”

“இன்னக்கித்தான் இந்த வெல நாளை எழுநூறாகும்“

மேற்கண்ட உடையாடல் கதைக்கான கற்பனையல்ல.... நமது தேசத்தின் காய்கறிக்கடைகளில் எல்லா மொழிகளிலும் ‘கதை‘க்கப்படுவதன் தமிழாக்கமே.

வட மாநிலத்தில் ஒரு டயர் கம்பெனிக்காரன் டயர் வாங்கினால் பல்லாரி வெங்காயம் இலவசம் என்று எழுதியிருக்கிறானாம்.... லாரி டயர் வாங்கினால் ஐந்து கிலோ... கார் டயர் வாங்கினால் ரெண்டு கிலோ..... என்று விளம்கரம் செய்யும் அளவுக்கு விலை உயர்ந்து வரலாறு படைத்துள்ளது.

மதுரை மாநகரின் நாளங்காடியில் கொட்டிவைக்கப்பட்டுள்ள காய்கறிகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு நகரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மதுரை மாநகரின் நாளங்காடியின் ஜீவாதாரமே தேவாரம், கம்பம், தேனியை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்தும், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பகுதிகளில் இருந்தும் வரும் காய்கறிகள்தான். காய்கறிகளின் வரத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விட்டதால் காய்கறிகளின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்து விலை உச்சத்திற்கு சென்றுள்ளது.

காய்கறிகளின் விலை (கிலோவில்): சென்ற மாதம் 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்பாது 40 ரூபாயை நெருங்கியுள்ளது. வெங்காயத்தின் விலையும் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. 8 ரூபாயாக இருந்த அவரைக்காய் 24 ரூபாயாகவும், 10 ரூபாயாக இருந்த புடலங்காய் 30 ரூபாயாகவும், 12 ரூபாயாக இருந்த முருங்கை பீன்ஸ் 28 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஐந்து ரூபாய்க்கு விற்ற தேங்காய் இன்று 15 ரூபாயாக உள்ளது. தற்போதைய நிலையில் கிலோ 30 ரூபாய்க்கும் குறைவாக காய்கறியே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.(ஆதாரம் தினமலர் 23-12-2010 நாளிதழ்)

மதுரை மட்டுமல்ல கொங்கு மண்டலத்தின் ஆகப்பிரதான காய்கறி மார்க்கெட்டான ஒட்டன் சத்திரத்திலும் இதே நிலைதான். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திராவின் காய்கறிகளின் வரத்தும் குறைந்ததால் அங்கும் விலைவாசி உயர்ந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் ஐந்து நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு நூற்றி ஐம்பது ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கி ஒரு வாரம் பயன்படுத்தினார்கள். இப்போது அதே அளவு காய்கறிகள் வாங்க அறுநூறு ரூபாய் செலவாகிறது. நீண்ட மழை பெய்து முடித்த பிறகு, வேலைவாய்ப்பு கிடைக்காத அன்னாடங்காய்ச்சிகளால் இதை சமாளிக்க முடியவில்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி, நூறு ரூபாய் செலவழித்து குழம்பு வைக்க வேண்டி நிலை உள்ளதால் குடும்பத்தலைவிகள் குழம்பிப் போய் உள்ளனர். (பாவம் மக்கள் எவ்வளவுதான் தாங்குவார்கள்) எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் மாதக்க டைசியில் பட்ஜெட்டில் துண்டல்ல... வேட்டியெ விழுகிறது. இதன்பொருட்டே பல குடும்பங்களில் சண்டைகள் வருகிறது.

நாடு முழுவதும் சமையல் காய்கறிகளின் விலையேற்றத்தால் மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில்தான் நம் இளவரசர் மதுரையில் செட்டிநாடு உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட்ட செய்தியையும் படிக்க நேர்ந்தது.

நவம்பருக்கும் டிசம்பருக்கும் இடையில் மூன்று மடங்கு விலையேறியதால் அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல.... ஐ.டி. நிறுவனங்களின் பணிபுரிபவர்கள் கூட அரண்டு போயிருக்கிறார்கள். (அ(லைக்கற்றை ஒதுக்கீடு). ராசாவுக்கு வழக்கு பயம். அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு வாழ்க்கையே பயம்.)

ஆனால் இப்படி உயர்த்தப்படும் விலைவாசியால் காய்கறி உற்பத்தியாளர்களாக விவசாயிகளின் பொருளாதாரம் உயருமா..? இந்த விலை ஏற்றத்தால் அவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெற்றிருக்குமா..? பருவகாலங்களொடு போராடிப்போராடியே வெளிரிப்போன முகங்களோடிருக்கும் அவர்கள் மகிழ்ச்சியடைவார்களா...? மேற்கண்ட வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை இல்லை. என்பதே.

சென்னை, மதுரை போன்ற பெருநகர நாளங்காடிகளில் கொட்டிவைக்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் இதை விட நான்கு மடங்கு விலைக்கு விற்கப்படும் ரகசியம் வெங்காயங்களுக்கும் தெரியாது... தக்காளிகளுக்கும் தெரியாது...... அவைகள் அடைக்கப்பட்ட கோணிப்பைகளுக்கும் தெரியாது... விவசாயிகளுக்கும் தெரியாது. விவசாயிகள் பொறுமுகிறார்கள். அவர்களின் வெங்காயத்திற்கு கிலோவுக்கு பத்துரூபாய் கூட கிடைக்கவில்லை. ஆனால் கிலோ அறுபதுக்கும் எழுபதிற்கும் நுகர்வோரிடம் விற்கப்படுகிறேதே....... இது என்ன விசித்திரமான முரண்பாடு?

இன்றைய நுகர்வு வாழ்வில் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்து விற்பவர் உற்பத்தியாளர்தான். ஆனால் வேளாண் விளைபொருள் விற்பனைக்கு மட்டும் விலை நிர்ணயம் செய்பவர் உற்பத்தியாளராகிய விவசாயிகளல்ல... இடைத்தரகர்கள்தான். விவசாயிகளுக்கும் நுகர்வோருக்குமிடையில் காலாட்டிக்கொண்டே தரகர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறிகளைக் குவித்து வைத்துவிட்டு ஒரு டீ குடித்து வருவதற்குள் பேரம் முடிந்து விடுகிறது. வாங்கிய பொருளை விற்பதற்கான மார்ஜின் வரைமுறை இல்லாமலிருப்பதால் விலைவாசி விண்ணைத் முட்டுகிறது. சாமானியருக்கு கவலை கண்ணைக் கடடுகிறது.

”1928 ஆம் ஆண்டில் வெள்ளையர் அரசு அமைத்த ராயல் கமிஷன் அளித்த அறிக்கையின்படி நடைமுறைப் படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் 1959 திருத்தியமைக்கப்பட்டு, பின்பு 1987ல் மீண்டும் திருத்தி(எத்தனை திருத்தி..?)யமைக்கப்பட்டு. தமிழகத்தில் விளையும் சுமார் 40 விழுக்காடு விளைபொருட்கள் இந்த விற்பனைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 21 விற்பனைக் குழுக்களும், 277 விற்பனைக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.” (யோவ் என்ன செஞ்சு என்னய்யா புண்ணியம்... வெலைவாசிய கட்டுக்குள்ள வைக்கமுடியலையே...) விற்பனைக் கூடங்கள் வெறும் அலுவலகங்களை வைத்துக் கொண்டு விற்பனை கட்டணம் வசூலித்து, அனுமதிச்சீட்டு கொடுக்கும் வேலையை மட்டும் செய்து வருவதால் தரகர்கள் கண்டபடி விலை வைக்கத்தொடங்கியதன் விளைவே இந்த விலையேற்றம்..

மக்கள் தொகை 3 சதவீதம் என்ற அளவில் உயர்கிறபோது உணவு தானிய உற்பத்தி 1.6 சதவீதம் தான் உயர்கிறது. காரணம் என்ன? உணவு தானியங்களை விடுத்து பணப்பயிர்களை நோக்கிய நகர்வு விவசாயத்தில் உள்ளது. லேஸ், குர்குரே போன்ற சிப்ஸ்களை தயாரிக்க வடமாநில உருளைக்கிழங்கு விளைச்சலை பெப்சி வளைத்துப் போட்டிருக்கிறது. பெப்சியின் வருமானத்தில் 50 சதவீதம் உருளைக் கிழங்குகள் மூலமாகவே கிடைக்கிறது. உணவுப் பயிர் உற்பத்தியை ஊக்கப்படுத்த நமது ஆட்சியாளர்கள் தவறியதால் விலை உயர்வு அலைக்கற்றை ஒதுக்கீட்டின் முறைகேடுகளையும் தாண்டி விண்ணோக்கிப் பாய்கிறது.

தமிழக அரசின் 11ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் விவசாய நிலங்களின் அளவு 37.05 விழுக்காடாக குறைந்து விட்டது என்ற அபாயகரமான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 1993- 94ல் 25 விழுக்காடாக இருந்த வேளாண் உற்பத்தி, 2005- 06ல் 13.03 விழுக்காடாக சரிந்துள்ளது. அதேபோல் 2001- 02 ல் 76.89 இலட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2004- 05ல் 61.40 இலட்சம் டன்னாக குறைந்துள்ளது. (நெலத்துல வெவசாயம் செஞ்சா அதை எப்பிடி செறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு குடுக்குறது....? அவங்களுக்கு குடுத்த வாக்குறுதியவாவது காப்பாத்த வேணாமா...?) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விவசாயிகளை மட்டும் விரட்டாமல் இலட்சோப லட்சம் சிறிய வியாபாரிகளையும் கோடிக்கணக்கான ஊழியர்களையும் துரத்துகின்றது.

பால்க்காரர், தயிர்கார அம்மா, கீரைக்கார பாட்டி, பச்சரிக்காரத்தெரு, நெய்க்காரன்பட்டி என தொழிலையே தங்களின் விணைப் பெயராக்கிக் கொண்டவர்கள் தமது முன்னோர்கள்.

“காவிரிப் பூம்பட்டினத்தில் பட்டினபாக்கம், மருவூர்பாக்கம் என்று இரு பிரிவுகள் இருந்தன. வணிகர்கள் வசித்து வந்த அவ்விடத்தே சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன. அங்கே கடல் வழியே வந்த குதிரைகளும், நிலத்தின் வழியே வந்த மிளகுப்பொதிகளும், இமயத்திலுண்டான மணிகளும் பொன்னும், குடகுமலையில் பிறந்த சந்தனமும் அகிலும், காவிரியில் உண்டான வளங்களும், ஈழநாட்டிலிருந்து வந்த உணவுப்பொருள்களும், பிற அரிய பொருள்களும் கூடி வளம் மிகுந்த பரந்த இடத்தையுடைய தெருக்கள் இருந்தன. இப்பண்டங்களில் சிலவான, தக்கோலம், தீம்பு இலவங்கம், கற்பூரம், சாதி முதலிய மணப்பொருள்களை விற்பவர்கள் வாசவர் எனப்பட்டனர். வெற்றிலை கட்டி விற்கும் தொழிலையும், கயிறு திரித்து விற்கும் தொழிலைச் செய்தவரும் பாசவர் எனப்பட்டனர்......“ என்று நீண்டு செல்லும் சிலப்பதிகாரத்தின் பதிவுகள் யாவுமே நமது அடுத்த தலைமுறைக்கு வெறும் கற்பனைகள் என்ற எண்ணத்தைப் போதிப்பவையாகிக் கொண்டிருக்கின்றன.

திண்டுக்கல் பூட்டு, திண்டுக்கல் சுருட்டுத், கும்பகோணம் பாத்திரத்தொழில், காஞ்சிவரம் நெசவுத் தொழில் உடன்குடி பனைத்தொழில்,சில்லுகருப்பட்டி, பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி, கூறைப்புடவை, ஊத்துக்குளி வெண்ணை, மணப்பாடு மீன்பிடித் தொழில், பெரியதாழை கருவாடு என நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் தங்களின் உயிரோடும் உடலோடும் கலந்து வளர்த்து வந்த தொழில்கள் அனைத்தும் கத்தியின்றி கத்தலின்றி சத்தமில்லாமல் வழக்கழிக்கப்படுகிறது.

கும்பகோணம் வெற்றிலை சீவல், கோவில்பட்டி கடலை மிட்டாய், நெல்லை அல்வா, கடம்பூர் போளி, உடன்குடி சில்லுக்கருப்பட்டி, மணப்பாறை முறுக்கு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கல்லிடைக்குறிச்சி அப்பளம், தூத்துக்குடி மக்ரோன், சாத்தூர் சேவு, திண்டுக்கல் மலைப்பழம், மதுரை மல்லிகை, மதுரை இட்லி, மாப்பிள்ளை விநாயகர்கோடா, அய்யனார் கலர்கம்பெனி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாட்டுச் சமையல் என ஊரின் பெயரிலேயே வாசனையும், சுவையும் கலந்திருந்த நமது உணவுத் தொழில்களும் பெரு வியாபாரிகளின் வாழ்வாதாரங்களாகி விட்டதால் சிறு குறு வியாபாரிகளின் ஜீவாதாரம் கேள்விக்குறியாகிவிட்டன. குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் நசுக்கப்படுகின்றன.

பெருவணிக வளாகங்களில் விற்பனைப் பெண்களாய் இருப்பவர்களின் பூர்வீகம் கேட்டுப்பாருங்கள்..... இவர்களின் பாட்டனார் பாரம்பரியத் தொழிலின் நிபுனத்துவமானவராய் இருந்திருப்பார்.

உற்பத்தியாளர்களாய் இருந்த ஒரு சமூகத்தை நுகர்வோராக மாற்றியதால்தான் விலையேற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. “ஒரு கிராமத்திற்குத் தேவையானவற்றை அந்த கிராமே உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும்“ என்றார் ஜே.சி. குமரப்பா. ஆனால் நடைமுறையில் எல்லாமே தலைகீழாய் உள்ளது. கடந்த இருபதாண்டு காலத்தில் நம்முடைய ஆட்சியாளர்களின் உற்பத்தி தொடர்பான தவறாக கொள்கைகளால்தான் விலையேற்றங்கள் நிகழ்கின்றன என்று பொருளாதாரம் படித்தவர்கள் சொல்கிறார்கள். இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயம். உயர்ந்து நிற்கும் விலைவாசியை தேர்தலுக்குள்ளாவது குறைப்பார்களா..... இல்லையெனில் வெங்காயத்திற்கான விலையாய் ஆட்சி அதிகாரங்களைக் கொடுப்பார்களா.....?

(சூரியக்கதிர்15-01-2011 இதழில் வெளியான கட்டுரை)

No comments: