இவ்வுலகத்தில் பேனாமுனைக்கு உள்ள வலிமை வேறெதுவுக்குமில்லை.அவ்வலிமையினால் சாதித்தவர்கள், சாதித்துக்கொண்டிருப்பவர்கள் பலபேர். இச்சூழ்நிலையில் பணத்துக்காக எழுதுவதும்,பத்திரிக்கை நடத்துவதும் நல்ல எழுத்தாளர்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் தலைகுனிவையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரத்தில் தடுக்க தைரியமில்லாத நீங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தட்டு தடுமாறிக்கொண்டு போகும் ஒருவரை போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்து தலையங்கத்தில் நேற்று நடந்த கலவரத்தை நேரில் கண்ட நமது நிருபரின் பேட்டி என பல கோணங்களில் புகைப்படத்துடன் போட்டு, இந்தியாவில் அமைதி பூங்காவாய் இருக்கும் தமிழக மக்களை பீதிக்குள்ளாக்கினீர்கள். இச்சூழ்நிலையில் தொப்புள்கொடி உறவுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் கொதித்தெழுந்து பல முனை போரட்டங்களை நடத்தினர்.உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்று போராட்டம் நடத்தினர்.நாளையும் நடக்கும்.தமிழீழம் கிடைக்கும் வரை நடந்து கொண்டேயிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நாங்கள் தடாவையும் பொடாவையும் கண்டு பயப்படாதவர்கள்.இறப்பது ஒருமுறைதான் எப்படி இறந்தோம் என்பதை விட எதற்காக இறந்தோம் என்பதை இந்நாடே நாளைய வரலாற்றில் சொல்லுமளவுக்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இனத்துக்கு துரோகம் செய்யும் சில பேரின் தமிழீழ போராட்டதுக்கு எதிரான பேட்டியை மட்டும் கொட்டை எழுத்தில் போட்டு அவருடன் சேர்ந்து நீங்களும் கொக்கறிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்.
இலங்கையில் நடப்பது தமிழின மீட்பு போராட்டம் அங்கே சிரமப்படும் மக்களுக்காக உயிரையும் துச்சமென நினைத்து போராடிக்கொண்டிருக்கும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக எழுத சொல்லவில்லை.அங்கே நடக்கின்ற உண்மை சம்பவங்களை மட்டும் தெரிந்தால் எழுதுங்கள் இல்லவிட்டால் அதை பற்றி எழுதாமல் விட்டுவிடுங்கள். ஒன்று மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஈழத்தில் நடக்கும் இனப்போரில் வீரமரணமடையும் புலிவீரர்களின் உடல் புதைக்கப்படவில்லை.அம்மண்ணில் விதைக்கப்படுகிறார்கள். ஒரு விதை விதைக்கப்பட்டால் நாளை அது பலமரங்களை உருவாக்குகின்ற பாடம் படித்திருப்பீர்கள். ஒரு நாட்டு இராணுவத்தையே தலைகுனிய வைத்த வீரத்தியாகிகள் அவர்கள்.இழப்பதற்கு இனி இவர்களிடம் ஒன்றும் இல்லை என்று ஆனபின்புதான் அவர்கள் ஆயுதமேந்தி போராடுகிறார்கள்.இவர்கள் கேட்பது எல்லாம் சுதந்திரமாய் தமிழன் தமிழனாய் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதுதான்.
30ஆண்டுகளில் பல போராட்டங்கள் நடந்தேறின அவர்கள் இழந்தது ஏராளம்.தமிழீழம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றது. சில குள்ளநரிகளின் சுயநல பேச்சை கேட்டு ஒன்றை பத்தாய் திரித்து எழுதி ஈழ மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களை சிறையில் அடைத்துவிட்டோம் என்று இறுமாப்பு கொண்டிருந்த வேளையில் அவர்கள் விடுதலையாகி வெளியே வந்த போது அவர்களை வரவேற்க திரண்டிருந்த கூட்டத்தினரை கண்டு கூனிக் குறுகிப்போனீர்கள் என்பதுதான் உண்மை.இவர்களை ஆதரித்து எழுத முடியாவிட்டாலும் இந்நிகழ்வினை அணைக்க முயலவேண்டாம்.
பிற்காலத்தில் இதுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகுதூரத்திலில்லை. நடிகை ஒருத்திக்கு நான்குநாள் காய்ச்சல் நாடே சலசலக்கிறது என்று எழுதும் நீங்கள் எத்தனை முதியோர்கள் இங்கேயும் ஈழத்திலும் உண்ண உணவுமின்றி உடுக்க உடையுமின்றி காடு மலைகளில் கொட்டும் பனியிலிலும் கொளுத்தும் வெயிலிலும் இருக்க இடமில்லாது வாழ்கின்றார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? நடிகைகளின் அங்கங்களை பற்றியே எழுதிக்கொண்டிருக்கும் உங்களுக்கு வீரபோராட்டதின் விலைமதிப்பு எங்கே தெரியப்போகிறது.
பட்டினிப்போரில் பாழும் ஈழத்தில் பாலில்லாமல் பரிதவிக்கும் குழந்தைகள் இருக்கையில் பல ஆயிரம் லிட்டரில் கடவுளுக்கு பாலபிசேகம் செய்து பாலையும் வீணடித்ததை எழுதும் உங்களை என்ன சொல்வது? இதனால் யாருக்கு என்ன பயன் என்று உங்களால் சொல்ல முடியுமா? பள்ளிக்கு செல்லவேண்டிய பச்சிளங்குழந்தைகள் பதுங்கு குழிக்குள் அடைப்பட்டு கிடக்கின்றனர்.அங்கு நம் தமிழர்கள் வாழ்க்கையே போராட்டமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் சாகப்பிறந்தவர்கள் இல்லை தமிழீழத்தை ஆளப்பிறந்தவர்கள். நாளை மலரபோகும் தனி ஈழத்தின் சரித்திரத்தையும் சரித்திர நாயர்களை பற்றியும் நீங்கள் எழுதும் காலம் வெகுவிரைவில் இல்லை.
ஈழத்தமிழர்களுக்காக எதையும் செய்ய துணிந்த சில இயக்கங்கள் தமிழீழம் தான் தீர்வு என்றும், தனி ஈழம் கிடைக்கும் வரை அவர்களுக்கு ஆதரவாக போராடுவோமென்று போராடிகொண்டிருப்பவர்களை பற்றி வாழ்த்தி எழுத மனமில்லை என்றாலும் அவர்களை பற்றி அவதூரக எழுதுவதை நிறுத்துங்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடே ஈழத்தமிழர்களுக்காக கொதித்தெழுந்திருப்பதை சகிக்க முடியாவிட்டால் இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு பணம் சம்பாதிக்கும் தொழில் எத்தனையோ இருக்கு அதையாவது செய்யுங்கள்.
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன் துபாய்.
Friday, December 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment