Sunday, December 13, 2009

ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை!




“ஹலோ நாங்க கன் மியூசிக்ல இருந்து கால் பண்றோம்...” “ஐய்ய்ய்ய்ய்... நான் ரேவதி டெண்த் படிச்சிட்டு இருக்கேன்.”

“ஓகே... ஓகே... ரேவதி உங்குளுக்கு நல்லாப் பாடத் தெரியுமா?”

“உஹூம்... எனக்கு வீட்டைவிட்டு ஓடத்தான் தெரியும்.”

“ரேவதி... என்னது ஓடத்தான் தெரியுமா?! சரி, வீட்ல வேற யார் இருக்காங்க ரேவதி பக்கத்துல?”

“இருங்க எங்க தாத்தா இருக்காரு தர்றேன்.”

“ஹலோ தாத்தா உங்க நேம் என்ன?”

“முத்துசாமி...”

“ஹலோ முத்துச்ச்ச்சாமி... உங்க ஹாபி என்ன?”

“இங்க அவனவனுக்கு கோவணமே காத்துல பறக்குது இதுல ஹாபியாவது... கோபியாவது?”

“முத்துசாமி என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க முத்துச்சாமி?”

“வேறென்ன விவசாயம்தான்.”

“முத்துச்ச்சாமி வாட்? யு மீன் அக்ரிகல்ச்சர்?”

“ஆமா அதே கல்ச்சர்தான்.”

“வாவ்... முத்துச்சாமி அப்ப உங்க கிட்ட வயல் இருக்குமே?”

“இல்ல காங்கிரீட் தரைதான் இருக்கு.”

“யூ ஆர் வெரி கிரேஸி முத்து... வயலுக்கு வாட்டர் விடுவீங்கில்ல?”

“இல்ல கம்பங்கூழுதான் தினம் கரைச்சு ஊத்துவேன்.”

“வாட் கூழ்? முத்துச்சாமி... அப்ப பசுமாடெல்லாம் நிச்சயம் வெச்சிருப்பீங்க... அது என்ன குடுக்கும் கரெக்ட்டா சொல்லுங்க முத்துச்சாமி..”

“ஆங்.. தினமும் ரெண்டு கூடை சாணி குடுக்கும்.”

“முத்துச்சாமி... யூ மீன் கவ்டங்? அத வெச்சு என்ன பண்ணுவீங்க முத்துச்சாமி?”

“வறட்டி தட்டுவோம்”

“கிரேட். வறட்டியா? எதுல வெச்சு முத்துச்சாமி?”

“ஒண்ண மாதிரி அரைலூசுக எதிருல வந்தா அதுக மூஞ்சீல வெச்சு.”

என்ன குழப்பமாக இருக்கிறதா? இது நாம் அன்றாடம் ஏதாவது ஒரு சேனலில் கேட்டுத் தொலைக்கும் கண்றாவிகள்தான். எதிர் முனையில் பேசுபவர் யார்? வயது வித்தியாசம் என்ன? பெரியவர்களை எப்படி மரியாதையோடு அழைப்பது? என்கிற எந்தக் கருமமும் புரியாமல் பல்லுப் போனவர்களைக்கூட ஏதோ... கூட கோலி குண்டு விளையாடியவர்களைப்போல, இந்த காம்ப்பியர்கள் அழைப்பது அபத்தத்தின் உச்சம்.

இப்படி இவர்கள் தங்களது “மேதகு” முதலாளிகளையும் “வாட் விஸ்வநாதன்?” “சம்பளம் ஏன் டிலே சபாபதி?”ன்னு நொடிக்கு நூறு தடவை பெயர் சொல்லி அழைத்தால் ஒப்புக் கொள்ளலாம் எங்கும் சமத்துவம்தான் என்று. ஆனால் அங்கெல்லாம் பம்பிப் பதுங்கிவிட்டு காசு கொடுத்து போன் போடுபவர்களை இப்படியா வயசு வித்தியாசமின்றி பெயர் சொல்லி அழைப்பது?

திருந்துங்கப்பா.

பச்சையாகச் சொன்னால் ஒருபுறம் வெட்கமாகவும் இருக்கிறது... மறுபுறம் குற்ற உணர்ச்சியாகவும் இருக்கிறது. அந்த எண்பத்தி நான்கு வயது இளைஞரது ஓயாத உழைப்பைப் பார்க்கும்போது.

தனது 19 -ஆவது வயதில் பெரியாரைக் கண்டதில் இருந்து இன்றுவரை அவரது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளையும் அவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்களும் நம்மை மெய்யாகவுமே மெய்சிலிர்க்க வைப்பவை.

அந்த இளைஞர்தான் வே.ஆனைமுத்து.

இயன்றவரையிலும் எந்த ஓட்டுக்கட்சிகளிடமும் தன் தன்மானத்தையும் சுயமரியாதையையும் அடகு வைக்காமல் பெரியாரது படைப்புகளை வெளிக்கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பவர்தான் ஆனைமுத்து.

அவர் செய்த பணிகளிலேயே தலையானதாக நான் கருதுவது 1974-ல் வெளிவந்த “பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” என்கிற அந்த மூன்று தொகுப்புகளைத்தான். நான் சிறுவனாக இருந்தபோது வந்த தொகுப்புகள் அவை.

தட்டச்சு செய்ய கம்ப்யூட்டர்களும் பலவண்ணங்களில் அச்சடிக்கும் ஆப்செட் மிஷின்களும் அறிமுகமாகாத காலகட்டம் அது. அவ்வளவு ஏன் நகலெடுக்கும்(அதாங்க ஜெராக்ஸ்) கருவிகளும்கூட வராத காலத்தில் பெரியாரது பேச்சுக்களையும் கட்டுரைகளையும் தொகுத்து மூன்று பெரிய வால்யூம்களாகக் கொண்டு வருவது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன? அப்பணிகளுக்கு அன்று தோள் கொடுத்தவர்கள் அநேகம் பேர்.

இதோ... இன்று அதே சிந்தனைகள் தொகுப்பு 35 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் மெருகூட்டப்பட்டு ஒன்பதாயிரம் பக்கங்களில் இரண்டாம் பதிப்பாக நம் முன் தவழ இருக்கிறது. அதுவும் முதல் பதிப்பில் இடம் பெறாத எண்ணற்ற தகவல்களோடு. ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெரியாரது கட்டுரைகள்... பேச்சுக்கள்... நேர்காணல்கள் என இருபது தொகுப்புகளாக வருகிற பிப்ரவரியில் வெளிவருகிறது.

முன்பதிவுக்கான தொகை 3500 ரூபாய் என்பது நம்மைப் போன்ற தனி மனிதர்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் இரண்டு மூன்று தோழர்கள் இணைந்து வாங்கினால் அது சாத்தியப்படக் கூடிய சமாச்சாரம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதையும்கூட ஓரிரு தவணைகளில் அளிக்கலாமாம்.

ஆனைமுத்து அவர்களிடம் பணபலம் எதுவும் இல்லை. ஆனால் நினைத்ததைச் சாதிக்கக் கூடிய மனபலம் இருக்கிறது.

‘வரலாறு’ என்பதில் வெறும் பானிப்பட்டுப் போர்கள் மட்டும் அடங்கியிருக்கவில்லை. அதில் நமது பாட்டன்... முப்பாட்டன்களது போராட்டங்களும் அடங்கியிருக்கின்றன.

ஏனென்றால் வரலாற்றைப் படிப்பவர்கள் மட்டுமே வரலாற்றைப் படைப்பவர்களாக மாற முடியும்.

எனவே அழையுங்கள் : 94448 04980

உங்களின் அழைப்புக்காக ஆனைமுத்து அவர்களது அலைபேசி காத்திருக்கிறது.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மட்டுமே எழுதிப் பழகிய அந்த ஈரோட்டுக் கிழவனது போராட்டங்களால்தான் நம்மில் பலர் இன்று பட்டதாரிகளாகவும், பெரிய பெரிய பொறுப்புகளிலும் அமர்ந்திருக்க முடிகிறது.

அவன் அன்று கருப்புச்சட்டை போட்டிராவிட்டால் நம் தலைமுறை இன்று வெள்ளைச்சட்டை அணிந்திருக்க முடியாது.

அந்தக் கிழவன் போராடியிருக்காவிட்டால் அன்று கூனிக்குறுகி கக்கத்தில் இடுக்கியிருந்த துண்டை நாம் இன்று நமது தோள்களுக்கு மாற்றி கம்பீரமாக நடை போட்டுக் கொண்டிருக்க முடியாது.

படிப்பறிவில்லாத பெரியார் அன்று போர் முரசு கொட்டாது இருந்திருந்தால் இன்று காதல் திருமணங்களும் சாதி மறுப்புத் திருமணங்களும் கைம்பெண்களது மறுமணங்களும் சாத்தியப்பட்டிருக்காது.

ஆம்... ஒவ்வொரு சமூக மாற்றத்தின் பின்னணியிலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் சிந்தப்பட்டே வந்திருக்கிறது.

நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அப்படிச் சிந்தியவனின் வரலாற்றை வெளிக்கொணரும் முயற்சிக்குத் துணையாவது நிற்போம்!


No comments: