Monday, December 14, 2009

போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!

நிறைய விஷயங்கள் கடந்த பத்து நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. நல்லனவும்,
அல்லாதனவும். மே 17-க்குப்பின் ஈழமக்கள் தொடர்பாக இந்தியாவில் நடந்த மிக
முக்கியமான முன்னேற்றம் கடந்த வாரத்தின் பாராளுமன்ற விவாதம்தான். இதனை
நேர்மையான அக்கறை யுடன் முன்னெடுத்த பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
உள்ளிட்ட இன்னபிற கட்சிகள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
பாராளுமன்ற விவாதத்தின் எதிரொலியாக இலங்கையின் உயர்மட்டக் குழு ஒன்று -
அதில் ராஜபக்சேவின் சகோதரர்கள் கோத்தபய்யா, பசில் இருவரும் உள்ளடக்கம் -
புதுடில்லி வந்து -அல்லது வரவழைக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீள்
குடியமர்வு, அரசியல் தீர்வு தொடர்பாக முக்கிய விவாதங்கள்
நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அனைத்துலக மனித உரிமை நீதி விசாரணையாளர் ஒருவர் கூறியுள்ளதைப் போல உலகின்
ஜனநாயக அமைப்பு களும், உபகரணங்களும் வழங்குகிற வாய்ப்புகளை தமிழர்கள்
இதுவரை காலமும் தவறவிட்டார்கள். இப்போதேனும் அக்குறை சரி செய்யப்பட
வேண்டும். அனைத்துலக அரங்கைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப்புலிகள் அதே
பெயருடன் உலகோடு உரையாடுகின்ற நாள்வர இன்னும் நீண்ட காலம் ஆகலாம்.
அதேவேளை அரசியற்தன்மை கொண்ட முயற்சிகள் உடனடியாக முன் நகர்த்தப்படவேண்டிய
தேவை உள்ள காரணத்தினால் அவர்களே வேறு பெயரில் இயங்குவதுகூட இன்றைய
காலச்சூழலில் பிழையான தல்ல. விரைவாகவும், உறுதியாகவும், துணிவாகவும்
இயங்கவேண்டிய காலகட்டம் இது. அவ்வாறு செய்யவில்லையென்றால் இரண்டு
காரியங்கள் நடக்கும்.

ஒன்று தமிழர் பிரச்சினையில் இப்போது உலகம் காட்டி வருகிற அக்கறை
குறையும், அதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரியத் தொடங்கிவிட்டன. இலங்கை
தொடர்பான அமெரிக்க செனட் அவையின் சமீபத் திய அறிக்கையும், கடந்த வியாழன்-
வெள்ளி நாட்கள் கொழும்பு வந்த தென் ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுப்
பொறுப்பாளர் ராபர்ட் பிளேக்-ன் செய்தியாளர் களோடான உரையாடல்களும் நம்
பிக்கைத் தரவில்லை. ""இந்தியப் பெருங் கடலில் அமெரிக்க மேலாண்மைக்கு இலங்
கையை நாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அது நட்பின்
ஊடாகவென்றால் அப்படியே ஆகட்டும்'' என்பதான கொள்கை மாற்றத்தை அவதானிக்க
முடிகிறது.

தமிழ் மக்கள் மீது நடந்த போர்க் குற்றங்களில் தீவிர அக்கறை காட்டி வந்த
அமெரிக்கா திடீரென வேகம் குறைத்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசினை
பெற்றுக் கொண்டு உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா உலகின் மோசமான மனித உரிமை
மீறல் குற்றவாளிகளாக ஸிம்பாப்வே, சூடான், பர்மா நாடு களை பெயர்
குறித்துக் குறிப்பிட்டார். ஆனால் இந்நாடுகளையெல்லாம்விட பெருங்கொடுமை
செய்த இலங்கையை சொல்வதை தவிர்த்தார்.

அதேநாள் -அதாவது டிசம்பர் 10, உலக மனித உரிமை நாளன்று ஐ.நா. பாதுகாப்பு
அவையில் அமெரிக் காவின் பிரதிநிதி ஸ்டீபன்ரப்பிடம் "இன்னர்சிட்டி' இணைய
இதழின் நிருபர் இலங்கையின் தமிழருக்கெதி ரான போர்க்குற்றங்கள் பற்றியும் -
அவை தொடர்பான அமெரிக்க வெளியுறவுப் பிரிவின் முந்தைய அறிக்கைகள்
பற்றியும் கேட்டபோது, ""அவற்றை நாங்கள் எமக்குள் விவா திப்போம், பின்னர்
இலங்கை அர சோடும் விவாதிப்போம்'' என்றார். ஆக, போர்க்குற்றங்களை ""அனைத்
துலக நீதி விசா ரணை'' என்ற சட் டகத்திலிருந்து பவ்யமாக அகற்றி
""இருதரப்பு உரை யாடல்'' என்ற மிகக் குறிய அர சியல் வெளிக்குள் அமெரிக்கா
நகர்த்த முயல்கிற தென்பது தெளிவா கத் தெரிகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை, சீனாவின் மேலாதிக்கப் பிடியில்
வருவதைத் தடுத்து இந்தியப் பெருங்கடலில் தன் ஆளுமை இறுக்கத்தை
நிலைநிறுத்துவதே முதன்மை இலக்கு. அந்த இலக்கிற்குள் தமிழர்
தலையெழுத்துக்கு முக்கியமான இடம் உண்டா, இல்லையா என்பது போகப் போகத்தான்
தெரியும். ஆனால் இப்போது கிடைக்கிற சமிக்ஞைகள் நம்பிக்கை தருவதாக இல்லை.
இவற்றையெல்லாம் உடனுக்குடன் உள்வாங்கி வேகமான பதில் இயக் கம் தருகிற
அரசியல் கட்டமைப்பும், வளங்களும் ஈழத்தமிழர்களுக்கு இன்று இல்லை என்பது
மிகப்பெரிய குறையாக உள்ளது. கிடைக்கிற பிறிதொரு செய்தியின்படி
இந்தியப்பெருங்கடலில் துரிதகதியில் தன் ஆளுமையை விரிவாக்கி வரும் சீனாவை
கட்டுப்படுத்துகிற ஆற்றல் இந்தியாவுக்கு இல்லை என்று அமெரிக்கா மதிப்பீடு
செய்துள்ளதாகவும் தெரிகிறது. எனவேதான் அமெரிக்கா இலங்கையை தானே
நேரடியாகக் கையாளும் முடிவினை எடுக்க முனைந்துள்ளதாகவும்
சொல்லப்படுகிறது.

இன்னொன்று களத்தில் -அதாவது இலங்கைக்குள் இயங்கும் ஓரளவுக்கு நேர்மையான
தமிழ் அரசியற் சக்திகளும், புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழீழ
விடுதலைப்புலிகள் இயக்க வழிநடத்துதலில் வலுவாகத் தெரிகிற அரசியல்
அமைப்பினை முன் நிறுத்தவில்லையென்றால் தமிழருக்கான அரசியல் வெளியை
சிங்களப் பேரினவாதமும் உலக உளவு அமைப்புகளும் பின் நின்று இயக்குகிற
பரிதாப நிலையே ஏற்படும்.

கடந்த இதழில் நாம் எழுதியிருந்த "புதிய குழு புருடா' ஓர் சிறு உதாரணம்.
அக்கட்டுரையைப் படித்துவிட்டு களத்தின் விபரமறிந்த ஒருவர்
தொடர்புகொண்டார். இலங்கை அரசே புதிய தமிழ் போராளிக் குழுக் களை
அறிமுகப்படுத்த நான் குறிப்பிட்டிருந்த காரணம் மட்டுமல்லாது இன்னொரு
காரணத்தையும் அவர் கூறி அதையும் தயவு செய்து எழுதுவதோடு பிற தமிழ்
ஊடகங்களிலும் வெளிவரச் செய்து தகவல் பரப்புங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
அவர் கூறிய காரணம் ஆபத்தான சதித்தன்மை கொண்டது. இதுவே அது : ""கட்டளைத்
தொடர்பின்றி இன்று இலங்கைக்குள் நூற்றுக்கணக்கான போராளிகள்
இருக்கக்கூடும். அவர்கள் பழிதீர்க்கும் வெறியோடு நாள் பார்த்துக்
காத்திருப்பார்கள். இப்படி புதிய குழுவொன்று வீரியமான முழக்கத்தோடு களம்
வருகையில், அந்த அறிவிப்பினை தமிழ் இணைய தளங்கள் பிரபலப்படுத்துகையில் -
அதனை நம்பி முன் குறிப்பிட்ட போராளிகள் அக்குழுவை தொடர்புகொள்ள
முயல்வார்கள். அதன் மூலம் போராளிகளை அடையாளம் கண்டு அழித்தொழிக்கும்
இராணுவப் புலனாய்வுச் சதிதான் அது'' என்று அவர் கூறினார்.

பொதுவாக நாம் நினைப் பதுபோல் சிங்களவர்கள் மொக் கர்களும்,
மூடர்களுமல்லவென் பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். நாம்தான்
வாய்ச்சொல் வீரர்களாக, கூச்சல் கூடாரமாக, சொந்த உறவுகளின் பிணங்களின்
மீதே நின்று அரசியல் நடத்தத் துணியும் ஒழுக்கமற்ற இனமாக இருக்கிறோம்.

எந்த அளவுக்கு ராஜபக்சே கும்பலின் சிங்களப் பேரினவாதம் ஆதிக்கக்
கும்மாளம் ஆடுகிறதென்றால் இருபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை
படுகொலை செய்த அதே முல்லைத்தீவு நிலப்பரப்பில், புதுமாத்தளன் நந்திக்கடல்
ஓரத்து மாமரக் காடுகளுக்கு அருகில் ""சிங்கள தேசிய யுத்த வெற்றி நினைவுச்
சின்னம்'' பிரம்மாண்டமாய் எழுப்ப கடந்த புதன்கிழமையன்று ராஜபக்சே
அடிக்கல் நாட்டியுள்ளார்.

தமிழர் இன அழித்தல் செய்து முடித்த தளபதிகள் சூழ நிற்க, சிறப்பு
அதிரடிப்படை யினரின் அணிவகுப்புக்குப் பின் சிங்கள தேசியக்கொடியை
ராஜபக்சேவும், தொடர்ந்து முப்படைக் கொடிகளை தளபதியர்களும்
ஏற்றியுள்ளார்கள். அதனினும் கொடுமை வன்னி நிலப்பரப்பு நீண்ட காலத்திற்கு
இனி ராணுவப் பிடியில்தான் இருக்கும் என்ற செய்தியாய் வன்னி ராணுவத்
தலைமையகத்துக்கென தனி வண்ணக்கொடி அறிமுகம் செய்யப்பட்டு அதுவும்
ஏற்றப்பட்டிருக்கிறது.

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதி களில் மட்டுமே சுமார்
முப்பதாயிரம் அப்பாவித் தமிழர்களின் எலும்புக்கூடுகள் தெய்வத்தின் நீதி
கேட்டுப் புதைந்து கிடக்க, தமிழீழ நிலமெங்கும் அதற்கும் மேலான
போராளிகளின் ஆத்மாக்கள் என்றேனும் தமிழீழக் கனவு நனவாகுமென்ற
நம்பிக்கையோடு விதையாகிக் கிடக்க, சிங்களப் பேரினவாதம் வெற்றித் திமிரில்
மிகக் குறைந்தபட்ச மனித உணர்வுக் கரிசனைகூட இன்றி இனவாத
வெறிக்கூத்தாடுகிறது.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த அனைத்துலக மனித
உரிமை நீதி விசாரணையாளர் தனது உரையொன்றில் கூறியிருந்தார், ""உலகில்
ராஜபக்சே போல் சிறுபான்மை இன மக்களை கொடூரமாக நசுக்கி அழித்த சர்வாதி
காரிகள் பலர் இருந் திருக்கிறார்கள். ஆனால் அம்மக்களின் போராட்டங்களை அவ்
வாறு கொடூரமாக அழித்தபின் தோற் கடிக்கப்பட்ட மக்களின் இனமான உணர்வுகளை
ஆசுவாசப்படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொண்டார்கள். உள்ள நேர்மையோடு செய்
தார்களோ இல்லையோ, குறைந்தபட்சம் உலகக் கருத்தை திருப்திபடுத்தவேண்டும்
என்ற அரசியற் தேவையினையாவது அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த
குறைந்தபட்ச மானுடப்பண்பும், அர சியற்பண்பும்கூட ராஜபக்சே சகோதரர்களுக்கு
இல்லை யென்பது விசித்திரமாகவும் வியப்பாகவும் இருக்கிறது''
என்றிருந்தார்.

தமிழ் மக்களின் புண்பட்ட உணர்வுகள் பற்றி துளியளவும் அக்கறை காட்டவேண்டிய
அவசியமில்லையென ராஜபக்சே கூட்டம் நினைக்கிறதே, அதற்குக் காரணம் அவர்களின்
இனவெறித் திமிரா - இல்லை தமிழராகிய நமது கேவல நிலையா என்ற கேள்வியை சில
நேரங்களில் தவிர்க்க முடியவில்லை.

வானூர்தி விபத்தில் மரணமடைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களின்
மனைவியார் கடந்த வாரம் தன் கணவரது தொகுதியில் போட்டியிட்டபோது -
எதிர்க்கட்சிகள் யாரும் போட்டி வேட்பாளரை நிறுத்தவில்லை. துயரின்
காலச்சூழமைவை போற்றும் மேன்மை அரசியல் மாச்சரியங்களைக் கடந்து
அங்கிருக்கும் அரசியற் கட்சிகளுக்கு இருக்கிறது.

அவ்வாறே தெலுங்கானா வினை-எதிர்வினை காட்சிகள். இன, மொழி அடையாளங்களை
அழுத்தி அடக்கிப் புதைத்துவிட்டு "கார்ப்பரேட் அரசியலை' கட்டியெழுப்பலாம்
என கவு காணும் நவயுக அரசியல் வியூகவாதிகளின் கணக்குகள் ஒரே நாளில்
தகர்ந்து தவிடுபொடியாவதை தெலுங்கானா காட்டி நிற்கிறது.

காலம் வரும்... முல்லைத்தீவு புதுமாத்தளன் பரப்பில் எழுப்பப்படும் சிங்கள
வெற்றிச் சின்னத்தை தமிழ் தலைமுறை யொன்று தகர்க்கும், தமிழ்க்கொடி அங்கு
பறக்கும்.No comments: