கற்பனைகளிலேயே ஒருமாத காலமாய்க் கொடுத்துக் கொண்டிருந்த முத்தங்களை உண்மையாக்கும் தினம் இன்று என மீண்டும் கற்பனையோடே, ஊருக்குச் சென்று திரும்பியக் காதலி அணுவைப் பார்க்க ஆவலோடு சென்று கொண்டிருந்தான் ஞானி. வழக்கமாக அணு நிற்கும் அந்த மகளிர் விடுதியின் தெருமுனையில் ஞானி தான் புதிதாக வாங்கிய சொகுசு மகிழ்வுந்தை நிறுத்தினான்.
நொடிகள், நிமிடங்களாகியது, நிமிடங்கள் மணியானது, ஆனால் கற்பனையிலேயே இருக்கும் ஞானிக்கு அந்த மணித்துளிகள் பெரிதாகப் படவில்லை. அவளைப் பார்க்கும் ஆவலில் ஒரு மணி நேரம் முன்பே வந்து நின்றிருந்தான். சில முறை அணுவை அலைபேசியில் பிடிக்க முயன்றும் முடியாமல் போயிற்று. அவளது வீட்டில் இருக்கும் பொழுது அலைபேசியின் தொடர்பு இருக்காது. தீடிரென்று பனியில் மயங்கியிருந்த புற்களெல்லாம் உணர்வு பெற்றது. தூரத்தில் ஒரு சுடிதார் அணிந்து அந்த வானவில் நடந்து வந்து கொண்டிருந்தது. அவள் அணுதான்.
"ஹேய், எவ்வளவு நேரமா இங்க நிற்குறேன் தெரியுமா? என்னை ஒரு மாதிரி பார்த்துட்டுப் போராங்கப்பா எல்லோரும்" என்று சொல்லிக் கொண்டே அவள் கரத்தைப் பிடித்தான்.
"எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்ட, சீக்கிரமா வந்து இங்க நிக்காதன்னு. சரி அது போகட்டும் இதுதான் நீ புதிதாய் வாங்கியதா, நல்லா இருக்குடா" என்று அணு கூறிமுடித்துக் கொண்டே அவனை எப்பொழுதுமே அசத்திவிடும் அந்த கண்ணக் குழியை ஒரு புறமாகக் காட்டினாள்.
அவன் வந்து காத்திருந்தாலும் பரவாயில்லை, அவள் சீக்கிரம் வந்து நின்று அவளை அந்தத் தெருமுனையில் எல்லோரும் ஏதோ போல் பார்த்துவிட்டுப் போகவேண்டாமென்றுதான் எப்பொழுதுமே சீக்கிரம் வந்துவிடுவான் ஞானி. "சரி உள்ளே ஏறு, இன்னைக்குப் பூராவும் நீ என்னுடந்தான் இருக்கனும். நிறைய இடம் சுற்றலாம் வா" என்றான் ஞானி.
நகரத்தின் நெரிசல் அதிகம் இல்லாத அந்த இடத்தில் வேகமாகச் சென்றவனை திடீரென்று ஒரு ஆள் தடுத்து நிறுத்தினார். அங்கே கொஞ்சம் கும்பல் அதிகமாக இருந்தது. படபடப்புடன் பேசிய அந்த நபர் "இங்கே ஒரு ஆள் அடிபட்டுக் கிடக்கிறாரு, அவரை ஆஸ்பத்திரிக்கு இட்னு போணும்பா" என்று பேசி முடித்தார். எதுவும் யோசிக்காமால் "நான் அவசரமா போறேம்பா, பின்னாடி வர்ற வண்டியில கேளு" என்று கூறிவிட்டு வாகனத்தை எடுத்து விட்டான்.
நடந்ததைப் பார்த்த அணுவிற்கு கோபம் வந்துவிட்டது. "எல்லார மாதிரியும்தான் நீயும் இருக்க, பாவம் ஒரு உயிர் போராடிகிட்டு இருக்கு, நீ பாட்டுக்கு இப்படிப் போற" என்று கோபித்துக் கொண்டாள்.
இன்னைக்கு காலையிலேயே கவலைன்னு தினசரிப் பலன்ல போட்டிருந்தது நடக்காதுன்னு நினைச்சுட்டு வந்த ஞானிக்கு அது இன்று இவளால் நடந்துவிடும் என்று புரிந்தது. "ஹேய், உன் கூடப் பேசியே ஒரு மாசம் ஆகுதுப்பா. நான் இன்னைக்கு நிறைய கனவுகளோட வந்தேன், அதுவும் இது இப்போ வாங்கின வண்டி, இதுல போயி இரத்தக் கறையெல்லாம் படனுமா? நான் இன்னைக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாதுன்னு நினைச்சு வந்தா, இப்படியா எனக்கு நடக்கனும்" என்று அலட்டிக் கொண்டான் ஞானி.
"ஹலோ, இங்க பழைய மகாபலிபுரம் சாலையில திருவான்மியூர்ல இருந்து 40 நிமிட தூரத்துல ஒருத்தர் அடிபட்டுக் கிடக்குறாருங்க, அங்கே ஒரு ஆம்புலன்ஸ் அனுப்புங்க" என்று அவசர தகவலுக்குப் பேசிவிட்டு மூச்சு விட்டாள் அணு. "நீ என்னை சமாதானப் படுத்த முயற்சிக்காத, ஒரு உயிர் மேல அக்கரையில்லாத உனக்கு எதுக்குக் காதல்" என்று மீண்டும் அவனைக் கடிந்து கொண்டாள்.
இவளைச் சமாதானப் படுத்துவதிலேயே அரை நாள் கழிந்து போனதும், இடையே ஒரு கூரியர் பற்றி ஞாபகம் வரவே இந்தப் பிரச்சினைக்கிடையில் வீட்டிற்குப் பேசி விட அலை பேசி எடுத்தான். இவளிடம் பேசும்போது இடைஞ்சல் செய்யப் போவதாய்க் கூறியிருந்த ஒரு நண்பனைத் தவிர்ப்பதற்காக அலைபேசியை அமர்த்தி வைத்திருந்தான். அதை சரிசெய்து கொண்டு அம்மாவிற்குப் பேசினான்.
"ஏம்பா எங்க இருக்க, உடனே அடையார் மலர் ஆஸ்பத்திரிக்கு வந்திடுப்பா, காலையில மகாபலிபுரத்துக்கு ஒரு ஆளைப் பார்க்க போன அப்பாவுக்கு விபத்தாயிடுச்சுப்பா. அவரோட ஒரு காலை எடுத்திட்டாங்க. அரை மணி நேரத்துக்கு முன்னாடி வந்திருந்தா காலைக் காப்பத்திருக்கலாம்னு சொல்றாங்கப்பா. சீக்கிரம் வா" என்று அழுது அழுது பேசி முடித்தாள் ஞானியின் தாய் சத்யா.
இன்னும் எத்தனை நாள்தான் மனிதர்கள் இப்படி மனிதம் இழந்து இருக்கப் போகிறார்கள் எனப் புரியவில்லை.
No comments:
Post a Comment