Saturday, February 12, 2011

ஜனநாயகவாதிகளே, டர்பன் கட்டிய நரி இடும் ஊளைக்கு உங்கள் பதில் என்ன?..

சிறிது நாட்களாகவே உணவுப் பொருள் பாதுகாப்பு மசோதா என்று ஆரம்பித்து அரசாங்க உணவுக் கிட்டங்கியில் உணவு தானியங்களை எலிகள் திண்ணும் பிரச்சனை வரை கேள்விப்பட்டு கொதித்தெழுந்தவர் முதல் தமது பங்குக்கு ’உச்’ கொட்டியவர் வரை அனைவரும் நேற்றைய செய்தித் தாளில் டர்பன் கட்டிய குரூர நரி (மன்மோகன் சிங்) ஒன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஊளை இட்டதைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் ..

கடந்த சில மாதங்களாகவே இந்த உணவு தானியப் பொருள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க இந்த பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று , உச்சநீதி மன்றம் உணவுக் கிடங்கில் எலிகள் சாப்பிட்டு , அழுகிப் போகும் உணவு தானியப் பொருட்களை ஏழை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

நீலச் சாயம் முக்கின நரி
அந்த உத்தரவை சிறிது நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் மாண்புமிகு அமைச்சர் சரத் பவார். பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு உச்ச நீதி மன்றம் அட்வைஸ் தான் பண்ணுச்சு .. ஆர்டர் பண்ணலைனு கப்சா விட்டார் அந்த மாண்புமிகு..

கொஞ்சம் பொறுங்க.. எலி சாப்பிட்டு முடிக்கட்டும்

கடைசியில் உச்ச நீதி மன்ற பெஞ்சு கடுப்பேறி அசிங்கமாக திட்டாத குறையாக கூறியது. உணவுப் பொருட்களை இலவசமாக விநியோகச் சொன்னது கட்டளையே தவிர அறிவுரை கிடையாது என்று கிழித்து விட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் டர்பன் கட்டிய அந்த ஊதா நரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது சாயத்தை தன் வாயாலேயே நக்கி நக்கி நீக்கியிருக்கிறது.

நரி கூறுகையில் ”ஏழைகளுக்கு உணவு தானியங்களை இலவசமாக கொடுக்க முடியாது. இந்தியாவில் 37% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்கள அனைவருக்கும் இலவசமாக கொடுக்க முடியாது. ஆனால் இந்த அரசாங்கம் ஏழை மக்களைக் காப்பாற்ற அந்த தானியங்களை குறைந்த விலையில் விற்கும்.

உச்ச காமெடி மன்றம்
இப்பொழுது அனைவருக்கும் கொடுத்துவிட்டால் நாளை பொது வினியோக முறையின் கீழ் மக்களுக்கு கொடுக்க உணவு தானியங்கள் இல்லாமல் உணவுத் தட்டுப்பாடு வரும் அபாயம் இருக்கிறது” என்று ஊளையிட்டிருக்கிறது அந்த நரி . மேலும் “உச்ச நீதி மன்றம் அரசின் கொள்கைகளுக்குள் தலையிடக் கூடாது” என்று பவ்வியமாக கூறியிருக்கிறது (சட்டத்தை அவ்வளவு மதிக்கிறாராம்)

சரி, நரியின் இந்த ஊளையின் முழுப் பரிமாணமும் என்ன என்று பார்ப்போம். இந்தியாவில் 37% பேர் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளார்கள் என்பதே கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அளவிட இந்த அயோக்கிய சிகாமனிகள் (மன்மோகன்,சிதம்பரம்,மாண்டேக் சிங் அலுவாலியா) மேற்கொண்ட முதல் திட்டம், வறுமைக் கோட்டிற்கான அளவீடை மாற்றி அமைப்பது. இந்த மக்கள் விரோதிகளின் கணக்குப்படி பார்த்தால் நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு 18 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிப்பவர்களும் கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு ரூபாய்.11.40 க்கு குறைவாக சம்பாதிப்பவர்களும் தான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்
அதாவது இவர்களைப் பொறுத்த வரை நகரத்தில் ஒரு நாளைக்கு இருபது ரூபாய் சம்பாதிப்பவன் எல்லாம் டாட்டா , அம்பானியுடன் போட்டியிடும் அளவுக்கு பெரும்பணக்காரர்கள். உங்களுக்கே தெரியும் இருபது ரூபாயை வைத்துக் கொண்டு இன்றைய விலைவாசியில் மூன்று தேரத்திற்கு தேனீர் மட்டும் தான் குடிக்க முடியும் என்று.

இந்தியா - வல்லரசு
இந்த அயோக்கியர்கள் சொல்லும் கணக்கே இவ்வளவு கேவலமாக இருக்க என்.சி. சக்சேனா தலைமையிலான வறுமைக் கோட்டுக்கான வல்லுனர் குழுவின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் வ.கோ.கீ உள்ளவர்களின் அளவு 50%.

அதே நேரத்தில், முறைசாராத் துறைத் தொழில்களின் தேசிய ஆணையம் தனது அறிக்கையின் முதல் பக்கத்தில் 83 கோடியே 60 லட்சம் இந்திய மக்கள் (நமது மக்கள் தொகையில் 77 சதவீதத்தினர்) ரூபாய் 20 அல்லது அதற்கும் குறைவான தொகையில் ஒருநாள் பொழுதைத் தள்ளுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது (இதில் 18 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்).

இவ்வளவு கொடூரங்கள் இங்கு இந்தியாவில் நடந்தேறிக் கொண்டிருக்க உணவுப் பொருட்களை எலி திண்று நாசமாகப் போனாலும் பரவாயில்லை மக்கள் திண்ணவேண்டுமானால் காசு கொடுத்துச் சாப்பிடட்டும் என்று இந்த நரி இங்கு ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.

வயிராற சாப்பிடும் உணவுப்பஞ்சம் இல்லாத ஜீவன்கள்

இங்கு நம் பசித்த மக்களுக்குக் கிடைக்காத உணவு தானியங்கள் ஐரோப்பிய பெரு முதலாளிகளின் பன்றிப் பண்ணைகளில் பன்றிகளுக்கு உணவாக நமது மக்களுக்கு கொடுக்கப்படும் விலையை விட குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன என்பது தெரிந்தும் நாம் கோபப்படாமல் இருந்தால் மனிதனாக இருப்பதில் அர்த்தமே இல்லை.

இந்திய துணைக்கண்டம் வாழ் ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் ஜனநாயகவாதிகளே !! .. ஏழை மக்களுக்கு உணவு கொடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கொடுக்க முடியாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவர்களது கொள்கைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் திமிர்த்தனமாக பதிலளித்திருக்கும் இந்த அயோக்கியர்களின் ஊளைக்கு உங்கள் பதில் என்ன ?...

உலகவங்கியின் தாளத்திற்கேற்ப இங்கு ஆட்டம் போடும் மன்மோகன் சிங் , ப.சிதம்பரம் ஆக்யோரைத் தூக்கி எறிந்து விட்டு இதே போல் இந்தியாவில் 2001 ம் ஆண்டில் பஞ்சம் இருக்கையில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்களை ஐரோப்பிய நாட்டு பன்றிப் பண்ணைகளுக்கு ஏற்றுமதி செய்த பா.ஜ.க வின் கரசேவை புகழ் அத்வானியை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா ?..

இல்லை ஆயிரக் கணக்கான விவசாயிகளின் நிலத்தைப் பறித்து டாட்டா முதலாளிக்குத் தாரைவார்த்த சி.பி.எம் ஆட்சியை வரவழைக்கப் போகிறீர்களா ?..

உங்களுக்கு வேண்டுமெனில் நீங்களும் சேர்ந்து தான் மோதிப் பெற வேண்டும்.

நீதி வேண்டுமா ?.. தேர்தலை புறக்கணியுங்கள்...
புரட்சி ஒன்று தான் ஒரே வழி ..

http://senkodimaruthu.blogspot.com/2010/09/blog-post_08.html

1 comment:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

சரியாக சொன்னீர்கள்; புரட்சி ஒன்று தான் நீதியை பெறுவதற்கான வழிபோல்; இப்போதைக்கு!!

வாழ்த்துக்கள் வீரா... நேரம் கிடைககியில் நிறைய படிக்கிறேன்..

நன்றிகளும்..

வித்யாசாகர்