Saturday, March 5, 2011

கத்தியின்றி ரத்தமின்றி வரப்போகும் யுத்தமான 2011 சட்டமன்ற தேர்தல் - ஒரு சுதந்திரப் போர் வாசகர்களே...

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. அந்த ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்க வேண்டிய முக்கியத் தூண்களாக இருப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகை ஆகியவைகளாகும். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை, செய்திகளை சொல்வதுடன் நின்றுவிடாமல் ஜனநாயகத்தின் மற்றொரு தூணான சட்டமன்றத்திற்கு நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல ஆட்சியாளர்கள் வரவேண்டும் என்பதற்காக நல்லவர் யாரென்பதை மக்களுக்கு தெரியப்படுத்த முடிவு செய்துள்ளது சூரியகதிர்.

இன்று நாம் சுவாசிக்கின்ற இந்த சுதந்திர காற்றானது இந்த மண்ணின் மீது பற்றுக்கொண்ட நம் முன்னோர்களின் உயிர் இழப்பினாலும் தியாகத்தினாலும் கிடைக்கப்பெற்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆரோக்கியமான சூழல் கொண்ட இந்தியாவை, தமிழகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

சாதாரண மக்களின் ஓட்டுத்தான் அரசை தீர்மானிக்கின்றது. அந்த அரசு செலவிடுகின்ற ஒவ்வொரு ரூபாயும் சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் வருகின்றது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அதிகாரம் கைக்கு வந்தவுடன் மக்கள் நலனை மறந்துவிட்டு அவர்களை கடும் சிரமத்திற்குள்ளாகிவிடும் அவலநிலையும் உருவாகின்றது. ஆகையால் வரவிருக்கின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் கடந்த கால ஆட்சியாளர்களின் நிர்வாகத்திறமை மக்கள் நலப்பணி போன்றவைகளை சிறப்பாக யார் செய்தார்கள் என்பதன் அடிப்படையில் நாட்டு நலன் கருதி மக்கள் நலன் கருதி மீண்டும் நல்லவர்களையே ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்பதுதான் இந்த தலையங்கத்தின் நோக்கம்.

2006 & 2011 &ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நடந்த சில சம்பவங்களை பார்ப்போம். பனையூர் இரட்டைக்கொலை வழக்கு, திருச்சியில் இருவர் காரில் உயிரோடு வைத்து எரிக்கப்பட்ட கொலை வழக்கு, சேலத்தில் ஒரு காலத்தில் சட்டத்தை பாதுகாத்த இன்ஸ்பெக்டர் குப்புராஜ் குடும்பத்தை சட்டம் பாதுகாக்கத் தவறியதால் குப்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு. ஈரோட்டில் ஆள்கடத்தல், வீட்டை இடித்தல், நிலம் அபகரித்தல் ஆகியவைகளை செய்ததற்காக வழக்கு. திருச்சியில் 2007 &ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருச்சியின் முக்கிய அமைச்சர் குடும்பத்தினர் ஒரு ஹோட்டலை அபகரிக்க திட்டமிட்டது தெரியவந்ததும் அந்த ஹோட்டலை நடத்தி வந்தவர் அமைச்சர் குடும்பத்தின் திட்டத்தை விவரித்து பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல் ஆய்வாளர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர், தமிழக டி.ஜி.பி. முதலைமைச்சர் அலுவலகம் என்று பாதுகாப்புக்கோரி மனு கொடுத்தார். அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் ‘ஹோட்டலை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம் என்றும் பொதுவாழ்வில் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது’ என்றும் விளம்பரம் கொடுத்திருந்தார். அதன் பிறகு திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆயுதமேந்திய ரவுடிகளுடன் காரில் திமுகவின் கொடியை பறக்கவிட்டுக்கொண்டு பாதுகாப்புக்கொடுக்க வேண்டிய போலீசார் உடன் வர, அந்த ஹோட்டலை அபகரித்தனர். குற்றம் நடந்ததை விவரித்து முதலமைச்சர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்த போது, பாதுகாப்புக்கோரி மனு கொடுத்த போது மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது கொடுத்தது போலவே இப்போதும் ரசீது கொடுத்தார்கள். ரசீது கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. இதற்குப் பதில் முதலமைச்சர் அலுவலகத்தின் தனிப் பிரிவை தபால் நிலையமாக மாற்றியிருந்தால் கூட பொது மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கும். தி.மு.க. கொடியை பறக்கவிட்டு ரவுடிகளுடன் வந்து குற்றத்தை செய்த சம்பவமானது ஒவ்வொரு தி.மு.க.வினரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாகும். முதலமைச்சரின் கீழ் செயல்படுகின்ற போலீஸ் துறையே இந்த குற்றத்திற்கு பாதுகாப்பாக உடன் வந்துள்ளார்கள். இவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வாக்களித்த ஒவ்வொரு குடிமகனும் வேதனைப்பட வேண்டிய விஷயமாகும்.

குற்றத்தை செய்ததோடு மட்டுமில்லாமல் அந்த ஹோட்டலை நடத்தி வந்த தொழிலதிபர் மீது ஒரு போலியான எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. முதலமைச்சர் தன்னுடைய ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்ற உண்மை தெரிந்துதான் காலத்திற்கு ஏற்ப தன்னுடைய ‘பெண் சிங்கம்’ கதையில் நேர்மையான அதிகாரி மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு பண்ணுவது போன்று கதை அமைத்தாரோ என எண்ணத் தோன்றுகிறது.

முதலமைச்சர் அவர்களே இவ்வளவு பெரிய திமுகவில் நல்லவர்களே இல்லையா? அல்லது நல்லவர்களுக்கு இது போன்ற பதவிகளுக்கு வருவதற்கு தகுதி இல்லை என்று நினைக்கிறீர்களா?

முதலமைச்சர் அவர்களே இன்றைய இளைஞர்கள் பள்ளியில் படித்த போது எங்கோ தமிழகத்தின் மூலையில் அரியலூரில் நடந்த ரயில் விபத்திற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த லால்பகதூர் சாஸ்திரியை பற்றியும் மற்றும் நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாகிகள் பற்றியும் தினமும் பக்தியுடன் தேசீய கீதத்தை பாடி ஒரு இந்தியனாக தினம் தினம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இதுபோன்ற கிரிமினல் தகுதிகளை உடையவர்கள் தான் ஆட்சியாளர்களாக வருவார்கள் என்று தெரிந்திருக்கவில்லை. பள்ளி பாடத்திட்டத்தில் இது போன்ற தவறானவர்கள்தான் ஆட்சி பொறுப்பிற்கு வருவார்கள் என்றும் அவர்களை சமாளிப்பது எப்படி என்ற படிப்பினையும் சேர்த்திருந்தால் இன்றைய இளைஞர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்க மாட்டார்கள். உங்களுடைய தலைமையில் இயங்கும் அமைச்சர் பெருமக்களின் செயல்பாடுகளினாலும் உங்கள் தலைமையில் இயங்கும் போலீஸ் துறையின் செயல்படாத காரணத்தினாலும் சாதாரண மக்கள் பல துன்பங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் தினம் ஒரு பாராட்டுவிழா, தினம் ஒரு கலைவிழா என்று நேரத்தை செலவழித்தது சரிதானா என்று எண்ணிப்பாருங்கள்.

2008&ம் ஆண்டு மே மாதம் திருப்பூரில் காங்கிரஸ் இயக்கத்துக்காக உயிர் நீத்த கொடிகாத்த குமரனின் பெயரில் அமைந்துள்ள குமரன் ரோட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரின் குடும்பத்தினர் ரவுடிகளின் துணையுடன் ஒரு ஹோட்டலை அபகரித்துக் கொண்டனர். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரின் கவனத்திற்கு மேற்கண்ட சம்பவத்தைக் கொண்டு சென்றபோது அமைச்சர் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கோபப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பல நெருக்கடிகளுக்கும் நிர்ப்பந்தத்திற்கும் உட்படுத்தப்பட்டனர்.

வாசகர்களே... மேலே கூறப்பட்ட குற்றங்களைச் செய்தவர்கள் சாதாரண மக்கள் அல்ல. மக்களை வழிநடத்திச் சென்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவர்கள். இது போன்ற ஒரு ஆபத்தான சூழ்நிலையை நாடு இதுவரை சந்தித்திருக்கவில்லை. போலி மருந்து, கலப்பட பெட்ரோல், கலப்பட உணவு, போலி கோர்ட், போலி காவல்நிலையம் என்று அரசாங்கமே போலியோ என்று மக்கள் சந்தேகப்படும் அளவுக்கு நிர்வாக சீர்கேடு நடந்ததற்கு யார் காரணம்?

கிறிஸ்து, இந்து, முஸ்லீம் மற்றும் அனைத்து மதத்தினரும் தங்களுக்கு என்று ஒரு கடவுளை வழிபடுகிறார்கள். அதனடிப்படையில் தங்களை நல்வழிப்படுத்திக்கொண்டு தவறு செய்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்ற அச்சத்தில் நல்லவர்களாக இருக்க முயற்சி செய்வார்கள். மதத்தின் மீதோ கடவுளின் மீதோ நம்பிக்கை இல்லாமல் இருப்பதினால்தானோ என்னவோ இன்றைய ஆட்சியாளர்கள் எந்தத் தப்பையும் செய்யத் தயங்குவதில்லை.

அந்தக் காலத்திலே வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சொத்துக்களை விற்று மக்களுக்காக நஷ்டத்தில் கப்பல் ஓட்டினார் கப்பலோட்டிய தமிழர் வ.ஊ.சிதம்பரனார் என்பது வரலாறு. இன்றைய ஆட்சியாளர்களோ மக்கள் பணத்தில் தங்களுக்காக கப்பல் கம்பெனி நடத்துவாக கேள்விப்படுகின்றோம். இந்த ஆட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்கின்ற சில தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். ஆனால், ஆயிரக்கணக்கான குற்றங்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்துவருவது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர்களின் உரிமை, கச்சத்தீவை மீட்டெடுக்கும் முயற்சி போன்ற அனைத்திலும் தமிழகத்தின் உரிமைகளை இன்றைய தி.மு.க அரசு விட்டுக்கொடுத்துவிட்டது. தி.மு.க. ஆட்சியில் திமுகவினரும் ரவுடிகளும் கைகோர்த்து குற்றங்கள் செய்து பொது மக்களை துன்பத்திற்குள்ளாக்குவது மிக சாதாரணமாக உள்ளது. போலீஸ் செயலிழந்து உள்ளது. விலைவாசி பல மடங்கு அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் கடன் சுமையோ ஒருலட்சம் கோடியை தாண்டிவிட்டது. மற்றும் பெருகிவிட்ட ஊழல்கள் இவைகள்தான் கடந்த 5 ஆண்டு ஆட்சியின் அடையாளங்களாக தெரிகின்றன.

இப்போது 2001 & 2006ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி பற்றி பார்ப்போம். ஜெயலலிதா அவர்கள் ஒரு நல்ல கண்டிப்பு மிக்க ஆசிரியையாகவும் அவருடைய அமைச்சர்கள் அந்த ஆசிரியையின் கீழ் நல்ல பண்புள்ள மாணவர்களாகவும்தான் இருந்தார்கள். நிர்வாகத்திறமை இன்மை அல்லது பதவியை தவறாக பயன்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக தண்டிக்கப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். போலீஸ் துறையில் எந்த வித அரசியல்தலையீடும் இல்லாமல் போலீசார் தலைநிமிர்ந்து சட்டத்தை பாதுகாத்தார்கள். அதனால் மக்கள் எந்த வித இன்னல்களுக்கும் ஆளாகாமல் நிம்மதியுடன் வாழும் சூழல் இருந்தது. சட்டம் பாதுகாப்பாக இருந்தது. அதனால் சட்டம் மக்களைப் பாதுகாத்தது. விலைவாசி குறைவாக இருந்தது. தமிழகத்தின் கடன் சுமையும் குறைவாக இருந்தது. காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற விஷயங்களில் போராடி தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டினார் ஜெயலலிதா. ‘கச்சத்தீவை மீட்டெடுத்தால்தான் மீனவர் பிரச்னை தீரும்’ என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் ஜெயலலிதா. சிறப்பான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமையை வலிமை ஆக்கினார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டு 2001&2006 &காலத்தில் சிறப்பான நிர்வாகத்தை ஜெயலலிதா அவர்கள் கொடுத்தார்கள்.

மேற்கண்ட இரண்டு ஆட்சியாளர்களின் நிர்வாகத்திறனையும் மக்கள் வாழ்ந்த சூழ்நிலையையும் ஒப்பிட்டு பார்க்கையில் நாட்டு மக்களுக்கு எந்த ஆட்சி நன்மையை செய்தது என்று பார்த்தால் அது ஜெயலலிதா தலைமையிலான அ.திமுக ஆட்சிதான் என்பது அனைவரும் உணரக்கூடிய ஒன்று. அதிகார துஷ்பிரயோகம், ஊழல், வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போன்ற தி.மு.க. அரசின் செயல்கள் தேச விரோதம் என்றால் அதை அமைதியாக வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்ல அந்த தி.மு.க. ஆட்சியை தாங்கிப்பிடித்து மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கிய காங்கிரஸ் செய்த செயல் தேசதுரோகமாகும். ராஜீவ்காந்தி மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது. ஆனால், இலங்கையில் ரத்த உறவுகளான தமிழர்கள் கொத்து கொத்தாக இலங்கை அரசினால் கொலை செய்யப்பட்ட போது அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த தமிழக அரசையும் மத்திய அரசையும் ராஜீவ் காந்தியின் ஆத்மாகூட மன்னிக்காது.

இந்த தமிழ் மண் வீரம்மிக்கது. மகாகவி சுப்ரமணியபாரதியார், வாஞ்சிநாதன், வ.ஊ.சிதம்பரனார், வீரபாண்டியகட்டபொம்மன் போன்ற வீர தமிழர்கள் பிறந்த மண்தான் இந்த தமிழ் மண். மக்கள் கொடுத்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு வன்முறை மூலமாக மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்குபவர்களுக்கு பதில் ஆயுதம்தான் என்றால்... அதையும் எடுக்க துணிந்தவர்கள்தான் இந்த மண்ணின் இளைஞர்கள். ஆனால், சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கின்றவர்கள் என்பதால் அவர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம். நாட்டின் மீது பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் ஜாதி, மதம், கட்சி போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு நடக்கின்ற அவலங்களை பார்த்து கோபப்பட வேண்டும்.

அந்த கோபத்தினை வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும். உங்களை சுற்றி மாற்றம் தேவை என்றால் அந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஆம்! இந்த தவறான ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டைக்காப்பாற்ற நீங்கள் ஒவ்வொருவரும் பாரதியாராக, வ.ஊ.சிதம்பரனாராக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, ஜான்சிராணியாக மாறவேண்டும். இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களை அகற்றும் சக்தி நம் ஒவ்வொருவரின் ஓட்டுதான். ஆகையால் உங்களிடத்தில் இருந்தே உங்கள் வரிப்பணத்தை திருடி உங்களிடமே அதை கொடுத்து உங்கள் ஓட்டை விலைக்கு வாங்க முயற்சிக்கும் தேசத் துரோகிகளின் லஞ்சத்திற்கு விலை போய் உங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கிவிடாதீர்கள்.

வாசகர்களே.. சட்டம் பாதுகாப்பாக இருந்தால்தான் அது தன் கடமையை செய்து மக்களைப் பாதுகாக்க முடியும். ஜெயலலிதா அவர்களின் ஆட்சியையும் கருணாநிதி ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் சட்டம் யார்கையில் பாதுகாப்பாக இருக்கின்றது என்று தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. மிகப்பெரிய ஆலமரம் சிறுவிதையில் இருந்து முளைப்பதைப் போல் உங்கள் ஓட்டு என்கின்ற சிறுவிதைதான் நாளைய தமிழகத்தை, இந்தியாவை பாதுகாத்திட முடியும். வரவிருக்கும் தேர்தலில் நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொருவரும் உங்களுடைய ஓட்டுக்களை உங்கள் நண்பர்களின் ஓட்டுக்களை, உங்கள் உறவினரின் ஓட்டுக்களை சிதறவிடாமல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அணிக்கு வாக்களித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். தி.மு.க. தலைமையிலான தேசவிரோத சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றால் எகிப்தில் மக்கள் நலனை மறந்த சர்வாதிகார ஆட்சியையே மக்கள் ஒன்றுபட்டு தூக்கி எறிந்ததைப் போல மக்கள் கொடுத்த அதிகாரத்தை மக்கள் விரோத செயல்களுக்காக பயன்படுத்திய இந்த தி.மு.க. ஆட்சியை அகற்றிட வேண்டும் என்றால் கத்தியின்றி ரத்தமின்றி வரபோகின்ற யுத்தமான 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுக்க வேண்டிய ஆயுதம் ஓட்டு!

http://www.suriyakathir.com/issues/innerpage.php?key1=T1

No comments: