Monday, March 21, 2011

வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?

தாயே உன்னடி சரணம்! அம்மா தாயே உன் பாதம் சரணம் !!

“சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை” என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க.

இந்த அறிக்கை அம்மாவைக் குத்தியதோ இல்லையோ, மார்க்சிஸ்டுகளை குறிபார்த்து அல்லையில் குத்திவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் எட்டுக்கும் பத்துக்கும் திமுக அதிமுகவிடம் காவடி எடுக்கும் சூழ்நிலையால் மனம் வெறுத்துப் போன கட்சித் தோழர்களில் சிலர் , “நாமும் வைகோ பண்ணின மாதிரி பண்ணிடலாம்” என்று சொல்லத் தொடங்கி விட்டால் தங்கள் நிலை என்ன என்பது தா.பா, மற்றும் ராமகிருஷ்ணனின் கவலையாக இருக்கக் கூடும்.

“அப்ப எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லைங்கிறீங்களா? நாங்கள்லாம் மானம் கெட்டு பதவிக்காக அலைகிறோம் என்கிறீர்களா?” என்று வைகோ வை கேட்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்டுகளின் விருப்பம். ஆனால் அப்படிக் கேட்பதில் பல ஆபத்துகள் இருக்கின்றன என்பதால், “வைகோ தனது முடிவை மறுபரீசிலனை செய்து, அதிமுக அணியில் பங்கேற்க வேண்டும்” என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு வேண்டுகோளை அன்பு சகோதரி விடவில்லை என்பதும், அன்பு காம்ரேடுகள்தான் விட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சுயமரியாதை இழந்து” என்ற சொல்லுக்கு பொது வரையறையை எப்படி நாம் சொல்லமுடியும்? அது பற்றி நமது வரையறையும் தேர்தலில் பங்கேற்கின்ற கட்சிகளின் வரையறையும் வேறு வேறாக இருக்கலாமல்லவா? கூட்டணிக் கட்சிகளிலேயே சுயமரியாதை பற்றிய வைகோவின் வரையறையும், தா.பா வின் வரையறையும் வேறுபடலாமே!

ஏழு, எட்டு என்று தொகுதி எண்ணிக்கையைக் குறைத்து வைகோவை ஜெ அவமதித்தது என்னவோ உண்மைதான். ஆயினும், “அம்மா எப்ப கூப்டுவாரோ?” என்று போயஸ் தோட்டத்து வாசலில் வைகோ காத்திருக்கவில்லை என்பதும் உண்மை. அம்மா என்னிக்கு கூப்புடுவார்னே தெரியாமல், தெனம் காலையில சாப்பாடைக் கட்டிகினு வந்து தா.பா தலைமையில் தோட்டத்து வாயிலில் காத்திருந்தார்கள் வலது இடது தலைவர்கள்.

கோர்ட்டுலயாவது இன்னிக்கு வாய்தான்னு போட்டுட்டா, சாயங்காலத்துக்குள்ள எப்பவாவது கூப்ட்டுறுவாய்ங்க. ஆனா என்னிக்கு வாய்தான்னே தெரியாம நாள் கணக்கில காத்திருக்கிற கொடுமை இருக்கே அது பெருங்கொடுமை. கோர்ட் வாசல்ல வாய்தாவுக்கு ஒக்காந்திருக்கிறவன் கிட்ட, “சார் உங்கள எப்ப கூப்புடுவாங்க?”ன்னு கேட்டு எந்த மீடியாக்காரனும் வந்து டென்சனக் கிளப்ப மாட்டான். இங்கயோ அந்த நிம்மதியும் கிடையாது. டென்சனும் ஆக முடியாது. அம்மா கூப்புடுவாங்களா மாட்டாங்களான்னு தெளிவா தெரியாதபோதே, “இரட்டை இலையின் வெற்றிக்குப் பாடுபடுவோம்”னு டிவிக்கு பேட்டி கொடுக்கணும். கொடுத்தாங்க.

இதெல்லாம் சுயமரியாதைக் கேடுன்னு நாம் நினைக்கலாம். அம்மாவைப் பொருத்தவரை இதெல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு வைக்கப்படும் என்ட்ரன்ஸ் எக்ஸாம். இந்தக் கட்டம் வரையில் நடந்த விசயங்கள் எதுவும் தமது சுயமரியாதையை சிதைத்து விட்டதாக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கருதவில்லை. தங்கள் சுயமரியாதை பத்திரமாக இருப்பதாகவும், வைகோவின் சுயமரியாதைக்குத்தான் அம்மா சோதனை வைத்திருப்பதாகவும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக பல்வேறு விதமான என்ட்ரன்ஸ் எக்ஸாம்களிலும் பாஸ் பண்ணி, ஒவ்வொரு கூட்டணிக் கட்சியிலயும் எத்தனை ஆழ்வார்களுக்கு சீட் என்றும் முடிவாகி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தாகிவிட்டது. எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்று உடன்பாடு இறுதியாக வேண்டும். அப்புறம் அந்த தொகுதியில யாரை நிப்பாட்றதுன்னு அந்தந்த கட்சி முடிவு செய்யணும். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் கூட்டணி அரசியலில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு, தருமம். மரபுகள் தருமங்களை உடைத்துக் கடாசுபவரல்லவோ புரட்சித்தலைவி! அது மட்டுமல்ல, நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து கிடந்தாலும், அப்படிக் காலில் விழுந்து கிடப்பவன் மீது காறித்துப்பி, அதற்கு அவனுடைய எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்வதில் அம்மாவுக்கு எப்பவுமே ஒரு பேரார்வம்.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராத நிலையில், கூட்டணிக் கட்சிகள் கேட்டிருந்த தொகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி அடாவடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது போயஸ் தோட்டம். இதனைக் கண்டிக்கின்ற சொரணையோ, ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்கும் தைரியமோ கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் இல்லை. தா.பா போன்றோருக்குக் கூடவா சுயமரியாதை இல்லை என்று அவசரப்பட்டு யாரும் எண்ணிவிடக் கூடாது.

கோயிலுக்குப் போகும் பக்தர்கள் வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு செல்கிறார்கள். கேரளத்தில் சட்டையையே கழற்றுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லை என்று சொல்லிவிட முடியுமா? போயஸ் ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன், காலணிகளுடன் வெட்கம், மானம், சூடு, சொரணை, சுயமரியாதை போன்ற அனைத்தையும் கேட்டிலேயே கழட்டிக் கொடுத்து டோக்கன் வாங்கிக் கொண்டு நுழைவதுதான் கூட்டணிக் கட்சிகளின் மரபு. “இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு கூட்டணி தருமத்தையும் மரபையும் அம்மா மீறிவிட்டார் என்புது உண்மையே என்றாலும், அதற்காக நாமும் நம்முடைய மரபையும் சம்பிரதாயத்தையும் மீறி திடீரென்று இருமுடியை இறக்கிவிட முடியாது” என்று “குருசாமி” தா.பா கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவுருத்தியிருப்பார்.

ஏன் துப்பினார்கள், என்ன மாதிரி சூழ்நிலையில் காறித்துப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன், அவசரப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிக்கை விடுவதோ, உறவை முறித்துக் கொள்வதோ, மூன்றாவது அணி தொடங்குவதோ அறிவுக்கு உகந்ததல்ல என்பதை மார்க்சிஸ்டுகள் மற்றவர்களுக்கு அறிவுருத்தியிருப்பார்கள்.

இதெல்லாம் தெரியாமல், “மூன்றாவது அணி என்று ஒன்று தொடங்கினால், அதற்கு வைகோ தான் தலைவர்” என்று முன்கூட்டியே துண்டு போட்டு ரிசர்வ் செய்தார் நாஞ்சில் சம்பத். மூன்றாவது அணியின் தலைமைப் பதவிக்கு தா.பா வோ, ராமகிருஷ்ணனோ, கேப்டனோ போட்டிக்கு வரவில்லை. “வடக்கிருந்து சாவதுதான் முடிவு என்ற நிலைமை ஏற்பட்டு விட்டால், அதற்கு வைகோ தலைமை தாங்குவதே பொருத்தமாக இருக்கும்” என்று அவர்கள் கருதியிருக்கக்கூடும்.

“இன்று 21 தொகுதிக்கு குறைவான எதையும் ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கும் வைகோவிடம், தேர்தல் புறக்கணிப்பை கைவிடுமாறும் அதிமுக அணியில் பங்கேற்குமாறும் மார்க்சிஸ்டுகள் கூறுகிறார்களே, இதன் பொருளை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? “12 தொகுதியை வாங்கிக் கொண்டு பொழைக்கிற வழியப் பாருய்யா” என்பதுதான் இதன் பொருள்.

“அம்மாவோடு கூட்டணி வைத்து பத்து இடத்தில் நின்று 2 இடத்திலாவது ஜெயிப்பதா, அல்லது மூன்றாவது அணி அமைத்து முப்பது இடத்தில் நின்று முப்பது இடத்திலும் டெபாசிட் இழப்பதா? எது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது?” என்பதுதான் அன்று வலது இடதுகளின் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதமாக இருந்திருக்கும்.

ஒருவேளை வலதுக்கு 3, இடதுக்கு 4 – இதுதான் முடிவு. என்று அம்மா சொல்லியிருந்தால்? தா.பா வும் மார்க்சிஸ்டுகளும் என்ன செய்திருப்பார்கள்? பதவியை விட சுயமரியாதையே பெரியது என்று கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பார்களா? ஒருக்காலும் இல்லை. சுயமரியாதை இல்லாமல் கட்சி உயிர்வாழ முடியும், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல், கட்சி உயிர் வாழ முடியுமா? உயிரே இல்லாத பிணத்துக்கு சுயமரியாதை இருக்க முடியுமா? ஆகவே, வலதுக்கு ஒண்ணு, இடதுக்கு ஒண்ணரை என்று அம்மா தொகுதி ஒதுக்கியிருந்தாலும் ஒப்புக் கொண்டிருப்பார்கள். பூச்சியத்தை விட ஒண்ணு பெரியது என்ற உண்மையை தா.பா தனது தோழர்களுக்கு புரியவைத்திருப்பார்.

“திமுகவின் குடும்ப ஆட்சியை அகற்றுவது, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்பது” என்ற கொள்கைகளுக்காக கூட்டணி அமைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள், அந்தக் கொள்கை வெற்றி பெறுவதற்காக சொந்த தொகுதிகளையும், சுயமரியாதையையும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று விளக்கமும் சொல்வார்.

பதவிக்காக சுயமரியாதையை தியாகம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார் வைகோ. இரண்டையும் தியாகம் செய்யலாம் என்பது வலது இடதுகளின் நிலை. யார் பெரிய தியாகி வைகோ வா, தாபா வா? எது பெரிது – ஒண்ணா ரெண்டா?
http://www.vinavu.com/2011/03/21/vaiko-vs-pseudo-communists/

No comments: