மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (குறள் 969)
இந்தக் குறளுக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய உரை "உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்."
தனக்குச் சிறப்பாகக் கருதும் மயிர்த்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை யொத்த மானியர்; தமக்குச் சிறப்பாகக் கருதும் மானம் என்னும் உயிர்நாடிப் பண்பு கெடும் நிலைவரின் அப்பண்பைக் காத்தற் பொருட்டு வேறொன்றுங் கருதாது உடனே தம் உயிரை விட்டு விடுவர். இது பரிமேலழகர் உரை.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்வித்ததால் தன் செங்கோல் கோடியபோது தன் உயிர் துறந்து அதை நேராக்கியது போல்வதாம்.
நியாயமில்லாத கோரிக்கைகளைக் காங்கிரஸ் முன் வைப்பதால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் இனி எந்தக் காரணத்துக்காகவும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை எனவும் தங்களது ஆறு அமைச்சர்களையும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ளப் போவதாகவும் நான்கு நாள்களுக்கு முன் அறிக்கை விட்ட திமுக தலைவர் இப்போது மானத்தை காற்றில் விட்டு காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் சேதாரமின்றிக் கொடுத்துள்ளார்.
திங்கட்கிழமை காலை திமுக அமைச்சர்கள் ஆறு பேரும் தங்கள் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு தமிழ்நாடு திரும்புவார்கள் என்றுதான் பலரும் எண்ணி இருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு.
பதவி விலகல் மிரட்டலைக் கண்டு விட்டு காங்கிரஸ் படி இறங்கி 60 இடங்கள் போதும் என்று சொல்லும் என்று பார்த்தால் அப்படியொன்றும் நடக்கவில்லை. திமுக தான் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மிரட்டலுக்குப் பயந்து கேட்ட 63 தொகுதிகளையும் கொடுத்துள்ளது.
சோனியா வேட்டியோடு போன திமுக அமைச்சர்களது கோவணத்தையும் உருவி அனுப்பியிருக்கிறார்! அவரோடான சந்திப்பு திமுகவுக்கு தலைக் குனிவை ஏற்படுத்துவதாகவே அமைந்தது. சோனியா கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தயாநிதி மாறனும் மு.க. அழகிரியும் ஆடிப் போனதாகக் கூறப்படுகிறது.
இதைவிட மானக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது! திருக்குறளுக்கு உரை எழுதுவது வேறு திருக்குறள் சொல்வதைக் கடைப்பிடிப்பது என்பது வேறு என்பதை கருணாநிதி எண்பித்துக் காட்டியுள்ளார்.
முதல்வர் கருணாநிதிக்கு மானம் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது திமுக அமைச்சர்களைப் பதவி விலகச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மனிதசங்கிலிப் போராட்டம், தந்தி, உண்ணா நோன்பு என பல நாடகங்களை முதல்வர் கருணாநிதி மேடையேற்றினார்.
அன்று பதவி தோளில் போடும் துண்டு கொள்கை இடுப்பில் கட்டும் வேட்டி என்றெல்லாம் என்னமாய் சொற்சிலம்பம் ஆடினார்கள்? அவையெல்லாம் கனவாய் பழந்கதையாய் போய்விட்டது! இன்று கொள்கை தோளில் போடும் துண்டு பதவி இடுப்பில் கட்டும் வேட்டி என்று தலைகீழாக மாறிவிட்டது!
இந்தக் மானக்கேடு கருணாநிதிக்கு மட்டுமல்ல. முழுத் தமிழினத்துக்குமே தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இதனை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை மனக் கண்ணால் பார்க்க முடிகிறது. அதே சமயம் திமுக தொண்டர்கள்தான் பாபப் பிறப்புக்கள். இனிப்புக் கொடுத்து கொண்டாடிய கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.
விலகல் கடிதத்தை உடனடியாகத் தொலைப் படி மூலம் அனுப்பாமல் மூன்று நாள் கழித்து கொடுப்பது என்று திமுக முடிவெடுத்த போதே விலகல் என்பது வெறும் வெருட்டு புலுடா என்பது தெரிந்து போயிற்று. இப்படியா வெருட்டு முந்திய காலங்களில் பலித்திருக்கிறது. ஆனால் இம்முறை பிழைத்துவிட்டது.
திராவிட கழகத் தலைவர் மானமிகு வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர் சுப வீரபாண்டியன் ஆகியோர்தான் பாவப்பட்ட பிறப்புக்கள். அவர்கள் விட்ட அறிக்கையில் காணப்பட்ட மை காயுமுன்னரே முதல்வர் கருணாநிதி அவர்கள் முகத்தில் கரி பூசிவிட்டார்.
கி.வீரமணி விட்ட அறிக்கை: குட்டக் குட்ட தி.மு.க., குனியக்கூடாது. காங்., இல்லாமல் போட்டியிட தி.மு.க., தயாராக வேண்டும். தமிழ் மானம், தன்மானம் இவற்றை காப்பதுதான் தி.மு.க.,வின் அடிப்படை லட்சியம். பதவிகளை விட கொள்கைகளும் அவற்றைபரப்பும் இயக்கமும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுநடந்தால் அனைவருக்கும்நல்லது. கட்சித் தோழர்கள், இன உணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க.,வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும்.
திருமாவளவன் நேர்காணல்: தி.மு.க.,வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவின் முடிவு, கூட்டணியை எந்த வகையிலும் வலுவிழக்கச் செய்யவில்லை. இந்த முடிவால் கூட்டணி பலவீனமாகாது. தி.மு.க., அரசு தனிப் பெரும்பான்மையோடும், வலுவோடும், தமிழகத்தில் அமையும். தி.மு.க.,வின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன் அறிக்கை: மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்து விலகுவது என்றும், பிரச்னைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதும் என்றும், தி.மு.க.,வின் உயர் மட்ட செயற்குழு முடிவை இப்பேரவை வரவேற்கிறது. தான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்பதை நம்முடைய முதல்வர் கருணாநிதியும், தி.முக சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியே என்பதையும் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் மறுபடியும் மெய்ப்பித்துள்ளனர்.
சும்மா வாயை வைத்துக் கொண்டிருக்காமல் மானம், தன்மானம், முதல்வர் மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்றெல்லாம் தோள்தட்டி ஆர்ப்பரித்தவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக முடங்கிப் போனார்கள்.
இந்த மூவரது முகத்தை மனக்கண்ணால்ப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பரப்புரை செய்யப் போகிறார்கள்?
காங்கிரஸ் - திமுக ஊடலுக்கு 63 தொகுதிகள் மட்டும் காரணமா அல்லது மேலும் ஏதாவது காரணங்கள் உண்டா?
"கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதற்குத் தொகுதிப் பிரச்னைதான் காரணமா?'' என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டதற்க, "அதுவும் ஒரு காரணம்' என்று அவர் பதிலளித்தது முதலே காங்கிரஸ் - திமுக உறவில் விரிசல் விழுந்ததற்கான உண்மைக் காரணம், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் அல்ல என்பதும், முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விசாரணைதான் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகவே பேசப்பட்டது.
ஏனைய காரணங்கள் என்ன? ஜி2 அலைக்கற்றை ஊழல் ஒன்று. இரண்டு கலைஞர் தொலைக்காட்சிக்க வந்த 216 கோடி பணம். இந்த இரண்டையும் காட்டித்தான் சோனியாவும் பிரணாப் முகர்ஜியும் அழகிரியையும் தயாநிதி மாறனையும் மிரட்டி இருக்க வேண்டும்.
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திமுக அல்லது அதிமுக 118 இடங்கள் வென்றாக வேண்டும். 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுக 118 தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. ஒருவேளை, ஏதோ காரணங்களால் திமுக அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமேயானால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.
பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதற்கு திமுக அருமையான எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தத் தேர்தல் உடன்பாட்டின் மூலம் தமிழ்நாட்டுத் தமிழர்களது மானம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தின் மானம் காற்றில் பறந்துள்ளது.
வருகிற தோர்தலில் இந்த சந்தர்ப்பவாத திமுக - காங்கிரஸ் கூட்டணியை தேர்தலில் தோற்கடித்தால் மட்டுமே காற்றில் பறந்த மானத்தில் கொஞ்சமாவது திரும்பி வரும்.
நக்கீரன்
Thursday, March 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment