Thursday, May 27, 2010

மே 28 அழைக்கிறது! அறப்போருக்கு வாரீர்! வைகோ



அறப்போர் களம் காணும் நாளான மே 28 இதோ நெருங்கி விட்டது! இந்த அறப்போராட்டம் நியாயமானது; மிகவும் தேவையானது -- செந்தமிழ் நாட்டின் நலன்களைக் காக்க, வருங்காலத் தலைமுறையினரின் உரிமைக்கு அரண் அமைக்க!

முல்லைப்பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல், ஆகிய நதிநீர்ப் பிரச்சினைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கிறது கேரளம். சட்டத்தை உடைக்கிறது, நீதியைக் குப்பையில் வீசுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே காலில் போட்டு மிதித்து விட்டதே?

அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் நயவஞ்சகத்தைத்தானே மத்திய அரசு செய்கிறது? அப்படியானால், நம்மைக் காக்க என்ன வழி? போராட்டம்தானே ஒரே வழி?

அதுவும், அறப்போராட்டம்!

வன்முறை துளியும் தலைகாட்டாத போராட்டம்.

இந்தப் போராட்டத்தை, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நடத்தவில்லை நாம்.

நாடு சுற்றி வந்து, இலட்சோ பலட்சம் மக்களைச் சந்தித்து, மாதக்கணக்கில், வருடக்கணக்கில், பிரச்சினையை எடுத்து விளக்கி, மே 28 இல் நடக்கும் அறப்போரையும், ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள நகரங்களிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சென்று, பிரச்சாரம் செய்து, மக்களை ஆயத்தப்படுத்தி உள்ளோம்.

அறப்போருக்கு எதிர்பார்த்ததைவிடப் பலத்த ஆதரவு,தமிழகம் எங்கும், குறிப்பாக, பாதிக்கப்படும் பகுதிகளிலும் வலுவாக ஏற்பட்டு இருப்பது, தெம்பைத் தருகிறது.

போராட்டத் திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. அதன்படி, கலந்து கொண்டு தலைமை தாங்குவோர் வைகோ, டாக்டர் ஆர்.மாசிலாமணி, மல்லை சத்யா, திருப்பூர் சு.துரைசாமி (ம.தி.மு.க.) கந்தேகவுண்டன் சாவடி (கோவை தெற்கு) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் மதுக்கரை, தொண்டாமுத்தூர், பேரூர் ஒன்றியங்கள், குனியமுத்தூர், குறிச்சி நகரங்கள், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம்

பழ.நெடுமாறன் (முல்லைப் பெரியாறு உரிமை மீட்புக் குழு), கம்பம் கே.எம்.அப்பாஸ், (ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம்), சேக் தாவூத், தலைவர், தமிழ் மாநில முÞலிம் லீக் - குமுளி ரோடு லோயர் கேம்ப் (தேனி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் தேனி, திண்டுக்கல், மதுரை மாநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்

நாசரேத் துரை, எஸ்.இரத்தினராஜ், ஆர்.ஞானதாஸ் (ம.தி.மு.க.) - களியக்காவிளை (கன்னியாகுமரி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்

துரை.பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க.) - கம்பம் மெட்டு (தேனி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் மதுரை புறநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்

அ.கணேசமூர்த்தி எம்.பி., (ம.தி.மு.க.) செ.நல்லுசாமி எம்.ஏ.பி.எல்., (தமிழ்நாடு கள் இயக்கம்), என்.எஸ்.பழனிசாமி (கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்), ஆடிட்டர் மு.பாலசுப்பிரமணியம் (விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொருளாளர்), மு.செந்திலதிபன் (ம.தி.மு.க.) - 9/6 சோதனைச்சாவடி (கோவை மாவட்டம், உடுமலை) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் உடுமலை கிழக்கு, உடுமலை மேற்கு, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்கள் மற்றும் உடுமலை நகரம், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், மூலனூர், வெள்ளக்கோவில், குண்டடம், காங்கேயம் ஒன்றியங்கள், தாராபுரம், வெள்ளக்கோவில் நகரங்கள் மற்றும் கரூர் மாவட்டம்

நாஞ்சில் சம்பத், டாக்டர் தி.சதன்திருமலைக்குமார், ஆர்.வரதராசன் (ம.தி.மு.க.) - செங்கோட்டை எல்லை (நெல்லை மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் திருநெல்வேலி, திருநெல்வேலி மாநகர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்

கொளத்தூர் மணி - தலைவர், பெரியார் திராவிடர் கழகம், கோவை கு.இராமகிருஷ்ணன் பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம் - ஆனைகட்டி சோதனைச்சாவடி (கோவை வடக்கு) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன் பாளையம் வடக்கு, பெரியநாயக்கன்பாளையம் தெற்கு, எஸ்.எஸ்.குளம், அன்னூர், காரமடை கிழக்கு, காரமடை மேற்கு ஒன்றியங்கள் மற்றும் கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் நகரங்கள்

தியாகு- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் - வளந்தாயமரம் சோதனைச்சாவடி (கோவை மாவட்டம், பொள்ளாச்சி) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் திருப்பூர் ஒன்றியங்கள், பொள்ளாச்சி தெற்கு கிழக்கு, பொள்ளாச்சி தெற்கு மேற்கு, வால்பாறை, அவினாசி, ஆனைமலை கிழக்கு, ஆனைமலை மேற்கு ஒன்றியங்கள், திருப்பூர், 15. வேலாம்பாளையம், நல்லூர் நகரங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டம்.

பெ. மணியரசன் -தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - நடுப்புணி சோதனைச்சாவடி (கோவை மாவட்டம், பொள்ளாச்சி) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வடக்கு கிழக்கு, சூலூர் வடக்கு, சூலூர் தெற்கு, சுல்தான்பேட்டை ஒன்றியங்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்திலிருந்து 9/6 சோதனைச் சாவடியில் பங்கேற்கும் பகுதியினர் தவிர்த்து இதரப் பகுதியினர்

உ.தனியரசு- மாநில அமைப்பாளர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை - கோபாலபுரம் சோதனைச் சாவடி (கோவை மாவட்டம், பொள்ளாச்சி) கோவை மாவட்டத்தின் பல்லடம், பொங்கலூர், பொள்ளாச்சி வடக்கு மேற்கு ஒன்றியங்கள் மற்றும் பல்லடம், பொள்ளாச்சி நகரங்கள்

அர்ஜூன் சம்பத் -இந்து மக்கள் கட்சி - வேலந்தாவளம் சோதனைச் சாவடி (கோவை தெற்கு) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாநகர், நீலகிரி மற்றும் சேலம் மாவட்டங்கள்

பி.வி.கதிரவன் -தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் - போடி மெட்டு (தேனி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் சிவகங்கை, திருச்சி, திருச்சி மாநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்

இந்தப் போராட்டத்தில், நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது, ஒழுங்கும், கட்டுப்பாடும் ஆகும். எள் முனை அளவு வன்முறையும் தலைகாட்ட நாம் அனுமதிக்கக் கூடாது. கேரள மக்களிடம் நம்மைத் தவறாகச் சித்தரிக்கவே அது பயன்படும்.

முல்லைப்பெரியாறு பிரச்சினையில், 2,17,000 ஏக்கர் பாசன உரிமையை இழக்கும் அபாயம்; 65 இலட்சம் மக்கள் குடிநீரை இழக்க நேரும் துயரம்;

பாம்பாறு பிரச்சினையால், 78, 000 ஏக்கர் பாசனத்தை இழக்க நேரும் அவலம்;

செண்பகவல்லி தடுப்பு அணையால், 30 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழக்கும் இன்னல், நெய்யாறு இடதுகரைச் சானலில், 9,200 ஏக்கர் பாசனத்தை இழந்து நிற்கும் துயரம்.

இது மட்டும் அன்றி, நிலத்தடி நீரும் எதிர்காலத்தில் வறண்டு, ஒன்றரைக் கோடி மக்கள் குடிதண்ணீரை இழக்கின்ற விபரீதம். இவற்றையெல்லாம், கவலையோடு கவனத்தில் கொண்டே, அறப்போரை நடத்துகிறோம்.

முல்லைப்பெரியாறு அணை உடைவதைப் போலவும், இலட்சக்கணக்கான கேரள மக்கள் மடிவதைப் போலவும், மாயாஜால கிராஃபிக்Þ காட்சிகளைக் குறுந்தகடுகளாகத் தயாரித்து, கேரள மாநிலம் முழுவதும் ஐந்து இலட்சம் சி.டி.க்களை வழங்கி, மக்களிடம், பதற்றத்தை பீதியை ஏற்படுத்தி வரும் அச்சுதானந்தன் அரசு, உச்சநீதிமன்றத்திலும் இதை ஆவணமாக ஆக்கி உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையை உடைக்கவும் கேரள அரசு திட்டமிட்டுகிறது.

புதிய அணை கட்டுவது அவர்களது உண்மையான நோக்கம் அல்ல. அப்படியே கட்டினாலும், வருங்காலத்தின் கேரள அரசே முயன்றாலும்,தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது. ஏனெனில், அணை பள்ளத்தில் அமைய இருக்கிறது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், தென்பாண்டி மண்டலம், பேரிழப்புக்கு ஆளாகும். பஞ்சமும், பசியும், பட்டினியும்தான் பின்னர் வாட்டும். பாலைவனமாகும் அப்பகுதி.

எனவே, இப்பிரச்சினையில், தமிழகம் கொந்தளிக்கிறது;தமிழர் மனம் எரிமலை ஆகிறது என்பதை, உச்சநீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் உணர்த்துவது காலத்தின் கட்டாயம் ஆகும். நாம் நடத்திட இருக்கும் அறப்போரையே, தமிழக அரசு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம், கேடயமாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஏனெனில் 2006 நவம்பரில், அரசு ஆளும் தி.மு.கழகமே, முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல், திடீரென்று, கேரளச் சாலைகளிலும், புகைவண்டிப் பாதைகளிலும், திடீர் மறியலை நடத்தியது. நவம்பர் 23 ஆம் தேதி நண்பகலில், திடீரென்று, நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில், தி.மு.க.வினர் மறியல் செய்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இங்கு மட்டும், தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அன்றும், மறுநாள், நவம்பர் 24 இலும், கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி பாதைகளில் மட்டும் அன்றி, அந்தச் சாலைகளை நோக்கிச் செல்லுகின்ற, தேனி மாவட்டத்தின் உட்புறச் சாலைகளிலும், தி.மு.க.வினர் திடீர் மறியல் நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் வாழையார் பகுதியிலும், கந்தேகவுண்டன்சாவடி, ஆனைகட்டி, வேலந்தா வளம், வளந்தராயபுரம், நடுப்புணி, உடுமலைக்கு அருகே உள்ள, 9/6 சோதனைச் சாவடியிலும், கோபாலபுரம் சோதனைச் சாவடியிலும், தி.மு.க.வினர் திடீர் மறியல் நடத்தினர்.

மதுரை-பாலக்காடு பாசஞ்சர் ரயிலை, 23 மாலையில் இருந்து, 24 பகல் வரையிலும் தடுத்து நிறுத்தினர். பல இடங்களில், கல்வீச்சு நடந்ததாகவும், கேரள அரசுப்போக்குவரத்துக் கழக வாகனங்கள் உடைக்கப்பட்டது என்றும், இதனால், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானார்கள் என்றும், ‘இந்து’ பத்திரிகை, நவம்பர் 28 இல் எழுதியது. ஆளுங்கட்சியினர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் எழுதியது.

முன் அறிவிப்பே செய்யாமல், தி.மு.க. சாலைகளை மறித்தபோது எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில், அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும், கே.எம்.அப்பாஸ் அவர்களும், 20 நாள்களுக்கு முன்னரே அறிவித்து, டிசம்பர் 4 ஆம் தேதி, கம்பத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக மறியல் செய்தனர். மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்களும் அதில் பங்கு ஏற்றனர். அண்ணன் நெடுமாறன், கே.எம்.அப்பாஸ் மற்றும் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த அறப்போர், கேரள மக்களுக்கு, உண்மையை உணர்த்தட்டும். நியாயத்தின் கதவுகள் திறப்பதற்கு வழி அமைக்கட்டும்.

28 ஆம் தேதியோடு போராட்டம் நின்றுவிடாது. உரிமை காக்கும் அறப்போர்ப் பயணத்தில், இதுவும் ஒரு மைல் கல் ஆகும்.

‘கேரள முற்றுகை-சாலை மறியல்’ என்று, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு உள்ளோம்.

அறப்போரில் 12 சாலைகளிலும் பங்கு ஏற்கும் தலைவர்களோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்வார்கள். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த இடங்களில் கலந்து கொள்வார்கள் என்பது முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க நடைபெறும் இந்த அறப்போரில் விவசாயப் பெருமக்களும், அனைத்துத் தரப்பினரும் அரசியல் எல்லைகளைக் கடந்து பெருமளவில் பங்கேற்க வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

No comments: