Sunday, May 16, 2010

வித்தாகிய எம் பிள்ளைகளை மறந்தோம்; மடிந்த எம் மக்களை மறந்தோம்; மொத்த ஈழத்தையுமே மறந்தோம்; இருப்பவரின் எதிர்காலம் கருதியாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா?




ஆயுதப் போராட்டம் ஓய்ந்து ஆண்டொன்றை எட்டி நிற்கிறது. எத்தனையோ துன்பங்கள், துயரங்களை கடந்தும் எந்தக் குறிக்கோளையும் எட்டாமலே இறுதி முடிவை எட்டிவிட்டது ஆயுதப் போராட்டம். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வன்னி மண்ணில் அரங்கேறிய கொலை வெறியாட்டம், நம் இனத்தின் வாழ்வாதார ஆணி வேர்களையே அடியோடு சாய்த்துவிட்டது.


மூன்று லட்சம் மக்களின் உயிர்களோடு விளையாடியது இந்த உலகம். மனித குலத்தின் பண்புகளுக்குள் அடங்காத அரக்கத்தனத்தை இலங்கை அரசும், அதன் படைகளும் தமிழ் இனத்தின் மேல் கட்டவிழ்த்து விட்டபோது இந்த உலகமே கைகட்டிப் பார்த்து நின்றது. ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக எடைபோட்டு, எப்படியும் அடக்க வேண்டும் என்ற ஒரு கோணத்திலேயே சிந்தித்தது இந்த உலகம். ஆண்டாண்டு காலமாக ஒரு கொடிய அரசின் அடக்கு முறையால் அல்லலுறும் மக்களைப் பற்றி அவர்கள் அக்கறைப்படவே இல்லை. அரசுக்கு அரசு என்ற ஆதரவுத் தளத்திலேயே அவர்கள் நின்றிருந்தார்கள்.

உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டங்கள் தோற்றுவிட்ட நிலையிலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதும், ஆயுத சமபலத்தின் வாயிலாகத்தான் பேரம் பேசல் மூலம் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற யதார்த்த நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டதும், அதற்கான கட்டமைப்புகள் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதும் வரலாறாகிவிட்டன. ஒரு நாட்டுக்குத் தேவையான அத்தனை கட்டமைப்புகளையும் குறிப்பிட்ட காலம்வரை தம்மிடம் வைத்திருந்தவர்கள் புலிகள். பொலிஸ் நிர்வாகம், நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாகம், தரைப்படை, கடற்படை, விமானப்படை என்று அத்தனையும் கொண்ட ஒரு அரச நிர்வாகம் இறுதிக் காலம் வரை இயங்கி வந்ததை எவரும் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒரு தனித்துவத்தை எட்டுவது அவ்வளவு இலகுவான விசயம் அல்ல என்பதை இந்த உலகமே அறிந்திருந்தது. ஆனாலும், அந்த வலிமையை பெற்றுக் கொண்டதனால் ஏற்பட்ட அதீத நம்பிக்கைதான் புலிகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டதோ! என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

புலிகளை அழித்தது சர்வதேச பயங்கரவாதம்!

புலிகளின் வளர்ச்சியை மேற்குலகமும், இந்தியாவும் விரும்பவில்லை என்பதன் விளைவே புலிகளின் வீழ்ச்சியாகும். தமிழ் மக்களின் போராட்ட நியாயங்களை புரிந்து கொண்டாலும் கூட புலிகள் போன்ற ஒரு கட்டுக்கோப்பான, அதிசக்தி வாய்ந்த, வசதி படைத்த ஒரு இயக்கத்தை ஆதரிக்க அவர்கள் மட்டுமல்ல இந்தியாகூட தயாராக இருக்கவில்லை. அதனால்தான் ஆயிரக் கணக்கான மக்களை இலங்கை அரசு கொன்றொழித்த போதும், இறுதிநேரத்தில் புலிகள் முற்றாக சிதைவடையும்வரை இவர்கள் பார்த்து நின்றார்கள். மகிந்த அரசின் அலட்சியப் போக்கையும், அதிகார வெறியையும் இப்போது உணர்ந்துகொண்டு, போர் குற்றம்பற்றி ஓலமிடும் மேற்குலகம், அன்று தன் நெற்றிக் கண்ணை திறந்திருந்தால், எத்தனையோ உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். வெளிநாடுகளில் வாழும் எம்மைப் பொறுத்தவரை, பத்து லட்சம் தமிழரை வாழ வைப்பவர்கள் என்ற நன்றிக் கடனுக்காக இவர்கள் செய்த துரோகத்தை மறக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கொடூரத்தின் உச்சம்!

கடந்த வருடம் இதே காலப் பகுதியில் தமிழனுக்கு நடந்ததை போன்ற கொடுமைகள் வேறு எந்த ஒரு இனத்துக்குமே இந்த நூற்றாண்டில் நடக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு அராஜகத்தின் உச்சம் இலங்கையில் அரங்கேறியது. மூன்று லட்சம் மக்களை ஒரு மூலைக்குள் ஒதுங்க வைத்து பட்டினி போட்டு, குண்டுகளை வீசி மரணிக்கவும், உடல் அவயவங்களை இழக்கவும், கர்ப்பிணி தாய்மாரும், சிறுகுழந்தைகளும், வயோதிபர்களும் உடல் சிதறி மாண்டு போகும்படியான கொடூரத்தை இலங்கைப் படைகள் செய்வது தெரிந்தும் பார்த்து நின்றது இந்த உலகம். ஆயிரக் கணக்கில் மண்ணோடு மண்ணாக உயிரோடு மாண்டுபோன எமது மக்களை நினைக்கையில் உள்ளம் பதறுகிறது. என்ன பாவம் செய்தார்கள் நம் மக்கள்? உரிமையைத் தாருங்கள் என்று கேட்டுப் போராடியதற்கா இந்தத் தண்டனை. புலிகளை வென்றதாக வீரம் பேசுகிறது சிங்கள அரசு. அது உண்மை தான், மறுப்பதற்கில்லை. ஆனால் தனித்து நின்றா வென்றீர்கள்? பயங்கரவாதம் என்ற உங்கள் பொய்யான வார்த்தைகளை நம்பி உலக வல்லரசுகளே உங்கள் பின்னால் நின்றனவே. ஒரு சிறிய இயக்கத்தை அழிப்பதற்கு இத்தனை நாடுகளின் உதவி உங்களுக்கு தேவைப்பட்டதே! நேரடியாகவே உங்களோடு அயல்நாட்டு இராணுவம் களத்தில் நின்றதே! தனித்து நின்று வென்றீர்கள்? அன்னியப் படைகளின் உதவியோடும், ஆள் கொல்லி ஆயதங்களோடும், ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்துத்தானே இறுதி வெற்றியை நீங்கள் பெற்றீர்கள். அதிஉச்ச அழிவுகளை செய்தாவது வெற்றி பெறவேண்டும் என்ற அசுரத்தனமான உங்கள் இனவாதச் சிந்தனைதான் உங்களை வெல்ல வைத்திருக்கிறது. நீங்கள் தமிழ் மக்களை கொன்றதிலும் பார்க்க, அதிக அளவு சிங்களப் பொதுமக்கள் இறக்கும் நிலை இறுதி நேரத்தில் உருவாக்கப்பட்டிருந்தால், போரின் திசை மாறியிருக்கும் என்பதை மார்தட்டுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

வன்னிப் பெருநிலம் சிறுபான்மை நிலமாகிறது!

எது எப்படியோ, போர் முடிந்துவிட்டது! புலிகள் இலங்கையில் இல்லை என்றாகிவிட்டது. அப்படியிருந்தும் தமிழ் மக்களுக்கு நிம்மதி கிடைத்துவிட்டதா? இன்னமும் வலியை சுமந்து கொண்டுதானே தமிழன் வாழ்கிறான். தமிழினம் சிதைவைக் கண்டு பன்னிரண்டு மாதங்கள் ஆகின்றன. இவ்வளவு தூரம் தமிழனுக்கு அழிவைத் தந்த சிங்களவர் மனதில் சிறுதுளி இரக்கமாவது பிறந்திருக்கிறதா? ஒருவருட இடைவெளியில் மூன்று நான்கு தேர்தல்களை வைத்து மக்களை பிரித்தாள நினைத்ததோடு, வெளியுலகின் பார்வையை திசை திருப்பச் செய்தார்கள். இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களில் அனேகரை அவரவர் சொந்தங்களையே நம்பி வாழ வெறுங்கையோடு அனுப்பி வைத்தார்கள். வன்னியில் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் வாழ வழியின்றி, நிவாரணம் கூட கிடைக்காமல் தவிக்கின்றதான தகவல்கள் இப்போது வந்தவண்ணம் உள்ளன. தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் ஆயுதப்படைகளை நிறுத்தியிருப்பதின் மூலம் அந்த மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு போவதானால்கூட கரையெங்கும் காவல்படை. மண்சுமந்த மேனியராய் வாழ்ந்த வன்னித் தமிழினம் விதைத்து வாழ்வதற்கு கூட வழியில்லாமல் தவிக்கிறது. சிதைந்துவிட்ட வீடுகளை திருத்த வழியில்லாமல் மரத்தின் கீழ் வாழும் நிலை அவர்களுக்கு. ஆயுதப் படைகளின் இரவு நேர நடமாட்டத்தால் வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் பெண்ணினம். இதுவே வன்னிப் பெருநிலத்து நிலமை. தமிழ் இனத்தின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அடியோடு அழித்துவிடும் முனைப்போடு வன்னி நிலப்பரப்பெங்கும் புத்தர் சிலையும், இராணுவ நினைவுச் சின்னங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

நம் இனம் எங்கே போகிறது?

ஓராண்டு போர் வெற்றியை புதைக்கப்பட்ட தமிழ் மக்களின் புதை குழியின் மேல் நின்று கொண்டாடத் துடிக்கிறது இலங்கை அரசு. இவ்வளவுக்குப் பின்னும் இப்போது கூட தமிழ் மக்களின் வேதனைகளையும், இழப்புக்களையும் பொருட்படுத்தாது தங்கள் வக்கிரபுத்தியை வெளிக்காட்ட நினைக்கும் இலங்கை அரசு எமக்கு ஏதாவது தீர்வைத் தரும் என்று நம்பி இருக்க முடியுமா? அவர்கள் செய்யும் கொடுமைகளையும் கொலைகளையும் மறந்து மறக்கத்தான் முடியுமா? கடந்துபோனவை எல்லாம் முடிந்து போனவையாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டு இணங்கிப் போக நினைத்தால் கூட, அவர்கள் எங்களை மேலும் மேலும் துன்புறுத்துவதிலும், எங்கள் இனத்தை சிதைப்பதிலும், சமூக சீரழிவுகளை ஏற்படுத்துவதிலும், தாயகத்தின் தமிழின அடையாளத்தையும், தனித்துவத்தையும் அழித்து சின்னாபின்னமாக்கி தனிச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதையே குறிக்கோளாக கொண்டு காரியம் ஆற்றிவருகிறார்களே! இந்தக் கொடுமைகளிலிருந்து எப்படி விடுபடுவோம்? விடுபடத்தான் முடியுமா? வலிமை இல்லாமல் போய்விட்டோமே! அடிமைப்பட்ட இனமாக, சீரழிவுகள் மலிந்த ஒரு இனமாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோமே என்ற ஏக்கம்தான் மிஞ்சி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திலேயே பிளவுபட்ட இனமாக மாறிவிட்டோம். வலிசுமந்த மக்களைப் பற்றிய சிந்தனையே அற்றவர்களாக போட்டி, பொறாமை, காட்டிக் கொடுப்பு, சொத்துச் சண்டை, பதவிப் போட்டி என்று சீரழிந்த வாழ்வுக்குள் நுழைந்துவிட்டோம் என்பதே வேதனையான விடயம்.

சிங்களவனின் திட்டமிட்ட சதி வலைக்குள் தமிழினம் விழுந்துவிட்டதற்கான அறிகுறிகளே தாயகத்தில் தெரிகிறது. அவனுக்கு உடந்தையாக இருந்து தங்கள் வயிறை வளர்க்க நினைக்கும் எட்டப்பர் கூட்டத்தின் கடத்தல், கப்பம், கொலை இன்று உச்சத்தை எட்டி, இன்று நம் இனத்தையே வதைத்து வருகிறது. இந்த நிலை உருவாவதற்கா முள்ளிவாய்க்காலில் நாம் இத்தனை உயிர்களை இழந்தோம். வலி சுமந்த இந்த மாதத்தில் உயிர் துடிதுடிக்க மடிந்தார்களே நம் மக்கள்! அவர்களை நினைத்தாவது எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டாமா? பட்டினியால் மாண்டவர்களும், எறிகணையால் மடிந்தவர்களுமாக ஆயிரம் ஆயிரம் உறவுகளை இழந்தோமே, அவர்களின் ஆன்மாக்கள் துடித்து மாண்டதை நாம் மனமார நினைக்கின்றோமா? மாண்ட மாவீரரின் கல்லறைகளே இடிக்கப்படும்போது புதையுண்ட நம் மக்களின் புதைகுழிகள் எங்கே இருக்கப் போகின்றன? அவர்களது எச்சங்கள் சாட்சிகள் ஆகிவிடும் என்று பயந்தே தோண்டி அழித்திருப்பார்களே அந்த அரக்கர்கள்! தங்கள் உறவுகளை இழந்து இன்னமும் தவித்துக்கொண்டிருக்கும் எமது இனத்தின் சொந்தங்கள் கரைசேர முடியாமல் தவிக்கின்றனவே! அவர்களின் எதிர்காலம் கருதியாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா?

- க. ரவீந்திரநாதன்

No comments: