ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் எந்தவிதமான விதிமுறை மீறல்களும் இல்லை என்று திரும்பத் திரும்பத் தமிழக அரசு விளக்கம் அளித்தபோதிலும், கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இப்போது திட்டம் தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுவரும் நேரத்தில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது கர்நாடக அரசு.
கர்நாடக மாநிலத்தின் நீர்த் தகராறு வழக்குகளைக் கவனித்துவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் எப்.எஸ். நாரிமன், ஒகேனக்கல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று ஆலோசனை வழங்கியிருப்பதாகவும், அதே கருத்தை மாநில அரசு நிறுவியுள்ள சட்ட வல்லுநர் குழு கூறியிருப்பதாகவும், அதனால் கர்நாடக அரசு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு, எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடுப்பது உறுதி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்செய்திகள் வெளியான அதே நாளில், தமிழகத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இக் குடிநீர் திட்டப் பணிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, எந்தவித விதிமுறை மீறலும் இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் காவிரியிலிருந்து பெறப்படும் நீரின் அளவு 1.4 டிஎம்சி மட்டுமே. கர்நாடக அரசு கூறுவதைப்போல, 2.5 டிஎம்சி தண்ணீர் எடுக்கும் திட்டம் ஏதுமில்லை. மேலும், இந்த 1.4 டிஎம்சி அளவு என்பது, தமிழகத்துக்கான நீர்ப் பங்கீட்டிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் என்று இத்தனை தெளிவாகப் பதில் அளித்த பிறகும், கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகினால், அது நீர்த்துப்போன அரசியலைக் காட்டுவதாகவே அமையும்.
1998-ல் ஜே.எச். பாட்டீல் முதல்வராக இருந்தபோது கர்நாடக அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழகம் தனது நீர்ப் பங்கீட்டில் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் கர்நாடகத்துக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்த கருத்தை, இப்போது கர்நாடகமே மறந்துவிட்டு, அரசியலாக்கப் பார்க்கிறது.
கர்நாடக அரசின் இத்தகைய ஒப்புதல், 1998-ம் ஆண்டு கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் இடம்பெற்றுள்ளதால், தற்போது கர்நாடக அரசு தெரிவிக்கும் எதிர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் அதிக முக்கியத்துவம் தராது என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தாலும், கர்நாடக அரசு இப்பிரச்னையுடன் இன்னொரு பிரச்னையையும் முடிச்சுப் போட்டுத்தான் நீதிமன்றத்தில் வழக்காடப் போகிறது. அதாவது, தற்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக கிணறுகள் அமைக்கப்படும் இடம் கர்நாடக எல்லைக்குள் அமைந்துள்ளது. எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் கிணறுகள் அமைத்தல் கூடாது என்பதுதான் கர்நாடக அரசின் முக்கிய வாதமாக இருக்கும் என்று தெரிகிறது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளால் கர்நாடக அரசுக்கும், கர்நாடக வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கச் செய்வதற்காக ஆண்டுதோறும் எழுப்பப்படும் எல்லைப் பிரச்னை நாடகம், இப்போது தேவையில்லாமல் குடிநீர்த் திட்டத்துக்கு எதிராக நடத்தப்படவிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாலே வேதனையாக இருக்கிறது.
கர்நாடகத்தின் உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சாரியா ஒரு பேட்டியில் இப்பிரச்னை குறித்துப் பேசுகையில், ""ஒகேனக்கல்லில் கர்நாடகம் புனல் மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு சம்மதிக்குமேயானால், நாங்களும் இந்தக் குடிநீர்த் திட்டத்துக்குச் சம்மதிப்போம்'' என்று கூறியுள்ளார். இவர்கள் நோக்கம் என்னவென்று இப்போது தெரிந்துகொள்ளலாம். எந்தப் பிரச்னையை எதனுடன் தொடர்புபடுத்துவது!
காவிரியிலிருந்து எடுக்கப்படும் 1.4 டிஎம்சி தண்ணீர் விவசாயத்துக்காக அல்ல, குடிநீருக்காக. அந்தத் தண்ணீரைக் கொண்டு மேலும் பல லட்சம் ஆயக்கட்டுதாரர்கள் சாகுபடிப் பரப்பை அதிகரித்துவிடுவார்களோ என்ற ஐயத்துக்கு அவசியமே இல்லை. இந்தத் தண்ணீரும் தமிழகத்தின் நீர்ப் பங்கீட்டுக்குள் அடங்குவது. இந்தப் புள்ளிவிவரங்களை விட்டுத் தள்ளுவோம். இந்தத் தண்ணீர் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக. இந்த மாவட்ட மக்கள் நல்ல குடிநீர் இல்லாத ஒரே காரணத்தால் நிலத்தடி நீரைக் குடித்துக்குடித்து ஃபுளோரஸிஸ் என்கிற நோய்க்கு ஆளாகி, பற்சிதைவுகளுக்கு ஆட்பட்டு வாடுகிறார்கள் என்பதைக் கருதியாவது, குறைந்தபட்ச மனிதாபிமானத்துக்காகவாகிலும் கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் நெஞ்சில் ஈரத்துடன் செயல்படலாமே.
தமிழ்நாட்டில் ஃபுளோரஸிஸ் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் 10 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி, தருமபுரி இரு மாவட்டங்களும் உள்ளன. இந்த மக்களுக்கு நல்ல குடிநீர் அவசியத் தேவை. அதைக் கருத்தில்கொண்டுதான், ஃபுளோரஸிஸ் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கையாகத்தான், ஐப்பான் வங்கி இத்திட்டத்துக்கு ரூ.1,334 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி அளிக்கிறது.
தவிக்கிற வாய்க்குத் தண்ணீர் கொடுக்க இத்தனை பாடா?
அயல்நாட்டான் நெஞ்சில் கசியும் ஈரம்கூட அண்டை மாநிலத்தானுக்கு இல்லை என்றால், அதனை என்னவென்று சொல்லலாம்?
இந்தமுறை கூடுதல் இடங்களில் திமுக
1 hour ago
No comments:
Post a Comment