புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. குறிக்கோளை அடைவதற்கு அவை சில வேளைகளில் வெறும் வழிகளாக அமைவதுண்டு. நான் பயங்கரவாதி இல்லை. என் பலம் முழுவதையும் ஒன்றுக்கூட்டி உறக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி இல்லை. இங்கு விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நீண்ட போராட்டம் பற்றிய உறுதியான கருத்துக்களைக் கொண்டிருக்கும் புரட்சியாளன் நான். தோழர் பகத்சிங்க தம்மைக் குறித்த ஒரு சுயவிமர்சனமாக மேற்கண்ட அடையாளங்களை தருகிறார். இது இந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.
பகத்சிங் என்கின்ற ஒரு தனிமனிதன் குறித்த எவ்வித அக்கறையும் நமக்கும் இல்லை. ஆனால் அவன் இந்திய விடுதலையின் உயிர் மூச்சாய் தமது வாழ்வை, தமது உயிரை விடுதலைக் காற்றிலே வலம்வரச் செய்தவனாய் தம்மின் அனைத்து ஆற்றல்களையும் விடுதலை என்கின்ற ஒற்றைச் சொல்லுக்காக அர்ப்பணித்தவனாக இருந்தான். பகத்சிங்கின் புகழை அவன் அணிந்திருந்த விடுதலை அடையாளத்தை அழிக்க காந்தி செய்த முயற்சிகள் தோல்வி கண்டது. பகத்சிங்கின் புகழ் மேலோங்கி விடக்கூடாது என்பதற்காக பகத்சிங் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டான்.
நாடாளுமன்றத்தில் குண்டுவீசிய பகத்சிங் எந்தநிலையிலும் தாம் மக்களின் எதிரி அல்ல; ரத்த வெறி பிடித்த பயங்கரவாதி அல்ல; என்பதை உயிர் சேதம் இல்லாத பரப்புரையாக தமது வெடிகுண்டு எரிப்பை ஒரு கவிதையாகப் படைத்தான். தாம் கைது செய்யப்பட்டால் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவோம் என்று தெரிந்திருந்தும்கூட அந்த அவையிலிருந்து தப்பித்துச் செல்லாமல் தாம் திட்டமிட்டப்படி நீதிமன்ற வளாகங்களை பரப்புரைக் களமாக்க முடிவுசெய்து, தம்மீது திணிக்கப்பட்ட கொடும் சித்ரவதைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டான். இன்றுவரை பகத்சிங் இளையத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக, விடுதலை உணர்வாளர்களுக்கு பாதையாக, அடக்குமுறையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்து வருகிறான். அவனை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.
ஆனால் அவன் இந்த நாட்டின் கோடிக்கணக்கான விடுதலை வேட்கைக் கொண்ட இளைஞர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறான். ஒரு பகத்சிங்கை கொல்ல முடிந்த அரச பயங்கரவாதிகளால், இன்று கோடிக்கணக்கில் இருக்கும் பகத்சிங்கை விளைவிக்க முடிந்ததே தவிர, பகத்சிங் என்ற பெயரையோ அவனின் ஆளுமையையோ இதுவரை யாராலும் அழிக்க முடியவில்லை. இயேசுவை சிலுவையில் அறைந்துவிட்டு பின்னர் இருகரம் கூப்பி வணங்கும் மக்களைப் போல, பகத்சிங்கை கொன்றுவிட்டு, இன்று தேச பக்தன் என்ற பட்டத்தை அவனுக்கு வழங்கி கௌரவிக்கிறார்கள், காங்கிரஸ்காரர்கள். யாரை பயங்கரவாதி என்றார்களோ, அவன் தேச பக்தனாக்கப்பட்டான். எப்போதுமே லட்சியவாதிகள் தமது எதிர்காலம் குறித்த எந்த வேட்கையும் அவர்களிடம் நிலைப்பதில்லை. அவர்களுக்கான ஒரே வேட்கை இருந்தது. அது விடுதலை என்கின்ற உணர்வாக, உயிராக, அவர்களின் குருதி அணுக்களில் இறுகிப் போய் இருந்தது. ஆகவேதான் தேச பக்தர்கள் அரச பயங்கரவாதிகளால் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
காரணம், எந்த பயங்கரவாதம் ஒழிய வேண்டும் என்பதற்காக இவர்கள் குருதி சிந்தி களமாட முனைப்புக் காட்டுகிறார்களோ, அந்த முனைப்பை மழுங்கடிக்கவே இந்த அவப்பெயரை சுமக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கித் தருகிறது. ஆனாலும்கூட காற்று ஒரே திசையில் வீசுவதில்லை. அவை மாறி வீசும்போது இந்த மடையர்கள் அடித்துச் செல்லப்படுவார்கள். அதை குறித்தெல்லாம் இவர்களுக்கு பெரும் அக்கறை இல்லை. ஆனாலும்கூட வரலாற்றில் இவர்கள் பேசப்படுவார்கள். ஒவ்வொரு முறையும் கதாநாயகனைப் பற்றி பேசும்போது வில்லனைக் குறித்த தகவல் வருவதைப் போலவே, நமது தேச பக்தி இளைஞர்களைக் குறித்த செய்திகள் மக்கள் மனங்களில் சம்மனமிட்டு அமர்ந்திருக்கும் காலங்களிலெல்லாம் இந்த அயோக்கியர்களின் பெயரும் அதோடு ஒட்டியிருக்கும், கால்தூசுக்கு சமமாக. வரலாறு என்பது ஆளுமை வாய்ந்தது. அது மாந்த வாழ்வை நேர்த்தியாக வடிவமைக்கிறது. அடங்க மறுக்கும் அடலேறுகளை உருவாக்குகிறது. காரணம், வரலாறு எப்போதும் அடிமையை விரும்புவது கிடையாது.
அடிமைகளாக வாழ்வது வாழ்க்கை இல்லை என்பதை காலத்திற்கேற்றவாறு பல்வேறு தத்துவங்களால் நமக்கு படைத்தளித்த மாந்தகுல படைப்பாளிகளின் வரிசையில் நாம் வாழும் காலத்தில் வந்துதித்து அவரோடு இணைந்து நாம் வாழ்கிறோம் என்கின்ற பெருமையை நமக்கு வழங்கிய மேதகு தேசிய தலைவர் அவர்களை நாம் நன்றியோடு திரும்பிப் பார்க்கிறோம். சற்றேறக்குறைய மேற்கூறிய பகத்சிங் கூற்றுகளுக்கு இடைவெளி இல்லா வாழ்வையும், வரலாற்றையும் உள்வாங்கியவராக நமது தேசிய தலைவர் வாழ்வு தொடர்கிறது என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது. பகத்சிங்கிடம் காணப்பட்ட சாவிற்கு அஞ்சாமை என்கின்ற உயரிய விடுதலைக் கோட்பாடு, நமது தேசியத் தலைவரிடம் முழுதுமாய் மண்டியிட்டுக் கிடந்தது. ஆக, தேசிய தலைவருக்கும், தோழர் பகத்சிங்கிற்கும் பெரும் இடைவெளி இல்லை. மாசினி என்ற மாபெரும் தத்துவ ஞானி கீழ்க்கண்டவாறு கூறினான். விடுதலை என்பது வெறும் கருவிதான். அதுவே நம் இலட்சியமாகிவிட முடியாது என்று. இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள், விடுதலை என்கின்ற இலட்சியத்தோடு தமது போராட்டத்தை நிறைவு செய்து கொண்டார்கள்.
ஆனால் நமது தேசிய தலைவர் அதைத்தாண்டி, புதிய அரசியலை உருவாக்க திட்டமிட்டார். சாதி, வர்க்கம், பெண்ணடிமைத்தனம் இல்லாத சமத்துவம் கொண்ட புதிய அரசியலை அவர் தமிழீழத்திலே படைத்தளித்தார். இந்த ஏற்றத்தாழ்வற்ற சமூகமே, விடுதலையின் அடுத்த நகர்வாக இருக்க வேண்டும் என்கின்ற ஒரு தொலைநோக்கை நமது தேசியத் தலைவர் உள்வாங்கிக் கொண்டிருந்த காரணத்தினால், அதற்கான கட்டமைப்புகளை திறம்பட நிகழ்த்திக் காட்டினார். தமிழீழ தேசிய அரசு, தமது அசைவுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தும் என்பதை அவர் சொல்லாமல் செய்தார். அதுதான் சிங்கள பேரினவாத அரசிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. இந்த அச்சுறுத்தலே உலகம் முழுக்க இவர்கள் பயங்கரவாதிகள் என்கின்ற பரப்புரையை செய்யும் அளவிற்கு இவர்களை உந்தித் தள்ளியது. ஆனால் விரைவில் அமைய இருக்கும் தமிழீழ தேசிய அரசை இப்போது எந்த நாடுகள் எல்லாம் எதிர்த்ததோ, அவர்கள் எல்லாம் இணைந்தே வாழ்த்தும் காலம் விரைவில் வரும். அப்போது பயங்கரவாதம் என்ற வார்த்தை எங்கிருந்து உருபெற்றது என்பதை உலக மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அது, நமது விடுதலையின் தேவைகளை முன்னிருத்தியதாக இருக்கும்.
கடந்த சில நாட்களாக ஒரு போராளி சிறுக சிறுக வெட்டிக் கொல்லப்படும் நிழற்படங்கள் நமது நெஞ்சங்களை சிலிர்த்தெழச் செய்கின்றன. இதற்கெதிராக என்ன செய்வது என்று புரியாமல் பலர் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தைப் பார்த்த நாள் முதல் என்னால் உறங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை என்று உலகெங்கும் பலர் தெரிவிக்கிறார்கள். நாமறிந்தவரை, விடுதலை என்பது குருதி கொட்டப்பட்டுத்தான் விளையும். வீணாக விளையும் விடுதலை என்பது வீணாகத்தான் போகும். ஆக, குருதி அடையாளத்தின் குறிப்பாக அந்த வீர இளைஞனின் முகம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாளைய வரலாறு தமிழீழ விடுதலையைக் குறித்து பேசும்போது எங்கள் விடுதலையின் வேர்களில் நீருக்கு பதிலாக செந்நீர் கொட்டினோம். உரத்திற்கு பதிலாக எமது சதையை கொட்டினோம் என்று அடையாளப்படுத்துவதற்காக சிங்கள பேரினவாத அரசின் பயங்கரவாதத்தின் செயல்பாடாக இந்த படம் நம்மை பார்த்து பேசுகிறது.
அந்த இளைஞனின் கண்களில் இருந்து புறப்பட்ட ஒளியில் அச்ச உணர்வு அற்றுப் போயிருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது. நம்மால் தீர்மானமாக சொல்ல முடியும், எமது போராளிகள் எமது தேச விடுதலைக்காக எதையும் அளிக்க தயாராக இருந்தார்கள். தயக்கம் இல்லாமல் உயிரை கொடுக்க அவர்கள் உறுதியாய் இருந்தார்கள். அதுதான் தமிழீழத்தின் அடிக்கல்லாக அமைந்தது. தமிழீழம் அமையும்போது இந்த மாவீரர்களின் உடல்கள்தான் அஸ்திவாரமாக இருக்கும். அவர்களின் உயிர்காற்றுத்தான் தமிழீழ மண்ணின் தேசிய கீதமாக ஒலிக்கும் என்பதை நாம் எந்த நிலையிலும் மறந்துவிட வேண்டாம். முன்னர் நாம் குறிப்பிட்டத்தைப் போன்று பகத்சிங்கின் தீரச் செயல்கள் இன்று காங்கிரசாரால் போற்றப்படுவது போல, நமது தேசிய தலைவரின் விடுதலை உணர்வுகள் நாளை சிங்கள அடக்குமுறையாளர்களால் போற்றப்படும். அந்த போற்றுதலுக்குரிய தலைவனின் தலைமை தமிழீழத்தை கட்டியமைக்கும்.
ஒப்புமைப்படி நாம் பகத்சிங்கை பார்க்கவில்லை, பகத்சிங்கின் களமாடிய திறனை வாசித்துத்தான் இருக்கிறோம். ஆனால் தேசிய தலைவரை விழிகளால் பார்க்க முடிந்தது. உணர்வோடு கலக்க முடிந்தது. நமது உயிராதரமான விடுதலையை தேசியத் தலைவரால் மட்டும்தான் பெற்றுத் தர முடியும் என்கின்ற உள்ளப்பாங்கை பெற முடிந்தது. நாம் தேசிய தலைவரின் காலத்தில் வாழ்கிறோம். அவர் காலத்திலேயே தமிழீழததை அடைவோம். பகத்சிங்சின் போராட்டம் இன்று வாழ்த்துக்குள்ளானதைப் போன்று நாளை தேசியத் தலைவரின் போராட்டம் வாழ்த்துக்குள்ளாக்கப்படும். இதை வரலாறு செய்துமுடிக்கும். ஏனெனில் தேசிய தலைவர் சொல்கிறார், நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல; புரட்சியாளர்கள் என்று. புரட்சி ஒருபோதும் அணையாது. புரட்சியை இந்த சாதாரண மகிந்தாவின் குடும்பம் அணைத்துவிட முடியாது. சோனியாவின் கருவிகள் வீழ்த்திவிட முடியாது. சீனத்தின் தோட்டாக்கள் துடைத்துவிட முடியாது. காரணம், அனைத்து கருவிகளையும் தாண்டி அவை மனங்களாக மாறி நிற்கின்றன. அந்த மனங்களில் புதைந்துள்ள விடுதலை என்கின்ற தீ, அடக்க அடக்க கொழுந்துவிட்டு எரியும். அதன் அனலில் ஆதிக்கத்தின் சுவடுகள் அழியும் என்பதை மறந்துவிட வேண்டாம். தமிழீழம் பெறும்வரை தளராமல் களம் அமைப்போம்..
No comments:
Post a Comment