உயிர் தயங்க உனை பிரிந்து
இருதிப் பிரிதலின்
இம்சை மிகு கணங்களை
எண்ணி பார்க்கிறேன்...
இருதி தரிசனம் அது
செங்கோடுகள் இழையோடச்
சிவந்து போயிருந்த
உன் விழி இரண்டை
நெஞ்சின் ஆழம் வரை
நினைவிருத்த முயன்றேன்...
அன்று மாத்திரம்
அந்தியின் இருள்
நாம் அவகாசம் பெற்றிருந்த
நேரத்தின் இடைவெளியை
சுருக்கி கொண்டேயிருந்தது...
எனது ஆறுதலுக்காக வேனும்
எந்த நம்பிக்கையும்
உன்னால் தர முடியவில்லை
பிரிவு உறுதியாய்ப் போயிருந்த
உன்னுள்ளே
மீண்டும் நாம் சேர்வதை பற்றிய
சொப்பணங்களல்லாம்
அழிந்து கொண்டேயிருந்தது...
உன்னெதிரே
நான் கண்ணீரைச் சிந்தவில்லை
கடைசிச் சந்திப்பின்
சம்பிரதாயமெனக்கூறி
சத்தியங்கள் வாங்கவில்லை...
உன் அழைப்புக்காக
யுகங்கள் முழுவதும்
காத்திருப்பதாய் கூறினேன்...
அதுவரை
அன்பின் நிழலற்ற
பாலைவனமொன்றில்
சரண்புகுவதாய் கூறினேன்...
சாவு என் உடலை
சடலமாக்கும் வரை
என்னுயிரில் நீயே
நிறைந்திருப்பதாய் கூறினேன்...
கரம் பற்றலோ,தழுவலோ
காதலின் அடையாளமெனக்
கருதாததால்
உன் உருவத்தை இனி
உள்வாங்கும் வரமில்லையென
தயங்கி தயங்கி
இமை மூடிய விழிகளோடு
நான் அன்று விடைபெற்றேன்...
No comments:
Post a Comment