Friday, April 2, 2010

பழிவாங்கும் நாள் வரும்… – கண்மணி



பனியும் குளிர்காற்றும் இல்லையென்றால் வசந்தத்தின் வெம்மையும், மனமும் எப்படி இருக்க முடியும்? துன்பங்கள் என்னை பக்குவப்படுத்தி எஃகு ஆக்கின. அவை மேலும் என் இதயத்துக்கு வலுவூட்டின. விலங்குகள் எனது கை, கால்களை இறுக பிணைக்கின்றன.
மலைகளில் பறவைகள்
பாடுகின்றன.
பூக்கள் மலர்கின்றன.
அவற்றின் மனத்தையும்
ஒலிகளையும் நான்
அனுபவித்து மகிழ்வதை
யாரால் தடுக்க இயலும்?

உலக வரலாற்றில் ஜூலியஸ் பூசிக்கு பிறகு இப்படி தமது வாழ்வை வரலாறாக்கிய மாபெரும் போராளி, மாந்த நேய சிந்தனையாளன், அமெரிக்காவின் ஆதிக்க வெறியை அடித்து நொருக்கியவன், பிரெஞ்ச் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்மறையாய் நின்றவன், வியட்நாமிய போராளி ஹோசிமின் படைத்தளித்த கவிதைவரிகள்தான் நாம் மேலே வாசித்தது. இன்று, இது தமிழீழ வரலாற்றிற்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கும்போது, உள்ளபடியே மனம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. துயரங்கள்தான் வசந்தத்தின் தொடக்கம் என்பதை கவிஞனும் போராளியுமான ஹோசிமின் உணர்ந்திருந்தார்.

இத்தனை வரிகளையும் உள்ளடக்கி ஒரே வரியில் எமது தேசிய தலைவர் சொன்னார், இயற்கை எனது நண்பன் என. எத்தனைக் கவித்துவம். இதில் அடங்கியுள்ள தத்துவம்தான் எவ்வளவு உயரியது. ஹோசிமின் பலவரிகளில் படைத்தளித்த கவிதை வரிகளை ஹைக்கூ போன்று ஒரே வரியில் பாடி முடித்த பெருங்கவி எமது தேசிய தலைவன். கவிதை எழுதுவதற்கு கனிந்த உணர்வு தேவை. அது எமது தேசிய தலைவனிடம் குவிந்து கிடந்தது. எந்த நிலையிலும், எப்போதும் தம்மை ஒரு போராளி என்று நினைக்கும் அதேவேளையில், 30 ஆயிரத்திற்கும் மேலான எமது மாவீரர்கள் மடிந்தபோது, அவர்களை மடியில்போட்டு தாலாட்டவில்லையே தவிர, மனதால் ஒப்பாரி வைத்த தாய்மைக்குச் சொந்தக்காரன் எமது தேசிய தலைவன்.

இன்று தமிழீழத்தின் வீர விடுதலைக்காக, விலைமதிப்பில்லாத தமது இன்னுயிரை ஈந்த புலிகளின், புலிகள் என்று சொல்வதைவிட, உலகத் தமிழர்களின் தேசிய ராணுவ வீரர்கள் நமது வரலாற்று நாயகர்களாக நம்மிடையே வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு நிலையிலும் அசந்துபோகாத, இந்த மண்ணிற்காக, இந்த மண்ணின் மானத்திற்காக தம்மை கொடை அளிக்கும் அளவிற்கு பயிற்சி அளித்த படைப்பாளி எமது தேசியத் தலைவர். அவர், வெறும் போராளி மட்டுமல்ல, அந்த போராளிகளின் தாய். அந்த மண்ணின் தாய். அந்த மண்ணின் மொழியை காக்கும் தாய். அவன் தாயாக இருந்ததால் தான், தமது உறவுகளை இழக்க விரும்பவில்லை. உயிரைவிட மானம் பெரிதென இந்த உலகிற்கு அறிவித்த மாபெரும் ஆற்றலானவன் எமது தேசிய தலைவன்.

ஹோசிமின் தமது படையினருக்கு பாடல் வரிகளால் உற்சாகமூட்டுகிறார். கீழ்க்கண்ட வரிகள் எமது தேசிய தலைவன் அருகிலிருந்து பாடியதைப் போன்ற ஒரு உணர்ச்சியை நமக்குள் உற்சாகமாய் ஊட்டுகிறது.

எனது பாடலில்
இரும்பின் ஒலி முழங்கட்டும்.
நெருப்பின் பொறி தெறிக்கட்டும்.
கவிஞன் ஒரு போராளி.
போராளிகளுக்கு
தலைமைத் தாங்குபவன் அவனே.

இந்த குறிப்பு எமது தேசிய தலைவர் குறித்து ஹோசிமின் எழுதிய குறிப்பைப் போன்று இன்றும் இருக்கிறது. வாசிக்கும்போதெல்லாம் இந்த வரிகள் நம்மை தேசிய தலைவரின் பக்கம் நமது நினைவை திருப்புகிறது. எமது தேசிய தலைவர் ஆற்றிய மாவீரர் தின உரைகள் ஒரு நெருப்பு பாடலாய் ஒலித்ததை நாம் மறுதலிக்க முடியாது. அந்த ஒலி புதிய புதிய படை அணியை இந்த மண்ணிற்கு பெற்றுத் தந்தது. அந்த ஒலி தான், உலகலாவிய ஒரு மாபெரும் மாற்றத்தை, தமிழனுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது. எந்த நிலையிலும் சோரம் போகாத வீரத்தை தாய் பாலோடு ஊட்டுவதைப் போன்று எமது தேசியத் தலைவர் அவர் உரையோடு ஊட்டி வளர்த்தார். மாபெரும் வீரனாய் இருந்தும்கூட, போராளிகள் இறந்தபோது அவர் அழுதார்.

அவரைப் பார்த்துதான் மகிந்தா சொன்னான், பயங்கரவாதி என. அவரை தான் உலகிற்கு அறிமுகப்படுத்தினான், பயங்கரவாதி என. அவரா பயங்கரவாதி? அவரின் மெல்லிய உணர்ச்சிகள் அவரை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அவரின் வார்த்தைகளின் வாடைகளை சுவாசித்தவர்கள், அவருக்குள் புதைந்துள்ள தாய்மையை பகுத்தறிவார்கள். அந்த தலைவனுக்குள் புதைந்த அன்பை எடுத்தருந்துவார்கள். அவன் மண்ணை மட்டும் நேசிக்கவில்லை. தம் மக்களை மண்ணைவிட மேலாக நேசித்தான். தமது மக்களுக்காகத்தான் அந்த மண்ணை காக்க விரும்பினானே தவிர, மண்ணுக்காக மக்களை அல்ல. எமது மக்கள் விடுதலையோடும், அடக்குமுறை இல்லாத தெளிவோடும், மகிழ்வோடும், நிறைவோடும் வாழவேண்டும் என்பதற்காக தமது வாழ்நாளின் மொத்த பாகத்தையும் களத்திலேயே கழித்தான்.

எத்தனையோ இழப்புகள் வந்தபோதும் கூட, அந்த இழப்புகளை சிரித்து வரவேற்றார். அந்த இழப்புகள் அவருக்கு புதிய தத்துவங்களை போதித்தது. அந்த இழப்புகளிலிருந்து புதிதாக கற்றறிந்தவர்களை தமது போராளிகளுக்கு அவர் கற்று கொடுத்தார். இறுதிவரை அவரின் வாழ்வு இந்த மக்களோடு பிண்ணி பிணைந்திருக்கும் என்பதிலே இருவேறு கருத்துக்கு இடமிருக்காது. தாம் வாழும் காலத்திலேயே தமது மக்களுக்கான ஒரு மண்ணை இந்த பூமியில் படைத்தளிக்காமல் அந்த மாமனிதனின் விழி மூடாது. அந்த மாமனிதனின் மூச்சுக் காற்று அடங்காது. அந்த மாமனிதனின் மூச்சுக் காற்று தமிழர்களின் நுரையீரல்களில் தங்கி வெளிவருபவை. தமிழர்களின் ரத்த நாளங்களில் அணுக்களாய் அணி வகுப்பவை.

அந்த தலைவனின் தலைமைதான், தமிழனுக்கான ஒரு நாட்டை சிந்தித்தது. தமிழன் வாழும் ஒரு புதிய பூமியை படைத்தளிக்க விரும்பியது. ஒருமுறை தோழர் ஹோசிமின் கீழ்க்கண்டவாறு சொன்னார். ”அழகற்ற பெண்ணொருத்தி தன்னை அழகுள்ளவளாக காண்பித்துக் கொள்ள முயல்வது, அல்லது ஒன்றும் அறியாத மூடன் ஒருவன் தன்னை அறிவாளி என காட்டிக் கொள்ள முயற்சிப்பதைப் போன்றது. தாய் மொழி இருக்க, பிறமொழி கலந்து பேசுபவர்கள்” என கடுமையாக சாடினார். மாமனிதன் காரல்மார்க்ஸ் கூட தமது எழுத்துக்களில் ஜெர்மன் மொழியை தவிர்த்து பிற மொழி கலக்காமல் எழுதுவதை தமது ஆற்றலாக வெளிப்படுத்தினார். அந்த அணியிலே எமது தேசியத் தலைவர் தமிழை தவிர்த்து வேறொரு மொழி பேசுவதை, தமிழோடு கலந்து பிற மொழி சொற்கள் ஆளுவதை அறவே வெறுத்தார்.

உலக நாயகர்களின் அணியிலே எமது தேசிய தலைவரின் பெயரும் நீங்கா இடம்பெரும் என்பதற்கு பல்வேறு சான்றுகளில் இதுவும் ஒன்று. வியட்நாமிய மக்களால் போற்றப்பட்ட மக்கள் கவிஞன் குயென் டிராய்ன் தமது கவிதை வரிகளை இவ்வாறு பதிவு செய்கிறார்.

தீயில் எரிக்கப்பட்டார்கள்,
கல்லறைகளில் புதைக்கப்பட்டார்கள்,
கடவுளை ஏமாற்றவும்
மனிதனை ஏமாற்றவும்
ஆக்கிரமிப்பாளர்கள்
மக்களை கொன்றுகுவித்தார்கள்,
அடக்கி ஒடுக்கினார்கள்.
மானுடமும் நீதியும்
மிதித்து நசுக்கப்பட்டன.

இது இன்று தமிழீழத்திலே எமது மக்கள்மீது அறையப்பட்ட அடக்குமுறைக்கு அடையாளமாய் வரையப்பட்ட கவிதையாக தெரிகிறது. ஆனாலும்கூட, ஒருநாள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதை நாம் ஒருநாளும் மறுதலிக்க முடியாது. வியட்நாமிய கவிஞன் குயென் தின் எழுதிய கவிதை வரிகளை நாம் மகிந்தாவுக்கு மறுபடியும் வாசித்துக் காட்டுவோம். இந்த கவிதை வரிகள் அடிமைப்பட்ட எமது மக்களின் வாழ்வை மறுசீரமைப்பு செய்யும். எமது தேசிய தலைவரின் தலைமையில் நாம் மீண்டுமாய் ஆட்சி அமைப்போம். இதை மாற்ற யாராலும் முடியாது.

வாழ்பவர்களும்
போராடிக்கொண்டிருக்கிறார்கள்,
இறந்தவர்களும்
போராடிக்கொண்டிருக்கிறார்கள்,
கொல்லப்பட்டவர்களின்
ஆன்மாக்கள் களத்தில்
அணிவகுத்து நிற்கின்றன.
இல்லை, மக்கள் என்றும்
சரணடையப்போவதில்லை.
பழிவாங்கும் நாள்வரும்…

No comments: