Tuesday, April 6, 2010

தென்னையப் பெத்தா இளநீரு.. பிள்ளையப் பெத்தா கண்ணீரு



தென்னையப் பெத்தா இளநீரு.. பிள்ளையப் பெத்தா கண்ணீரு...
இந்தப் பாடலை கருணாநிதி பாடி வருவதாகவும், யாரிடம் புலம்புவது என்று கூட தெரியாமல் தனக்குத் தானே புலம்பும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதிக்கு மிக நெருக்கமாக அறியப்படும், பத்திரிக்கையாளர் “நக்கீரன் காமராஜிடம்“ கருணாநிதி தனக்கு குடும்பத்தினரால் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை பற்றி அங்கலாய்ப்பதாகவும் அறியப் படுகிறது.


தனது மகள் செல்வி வீட்டில் ஒரு வாரம் ஓய்வு எடுப்பதற்காக பெங்களூருக்கு நேற்று இரவு கருணாநிதி புறப்பட்டுச் சென்றுள்ளார். கருணாநிதியுடன், அவரது இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், அவரின் நிழல் சண்முகநாதன், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெகு சிலர் மட்டும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் பெங்களூர் பயணம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளை பெங்களூரில் இருந்தபடியே மேற்பார்வை இடுவதற்கும், தனது அடுத்த இரண்டு திரைப்படங்கள் “பொன்னர் சங்கர்“ மற்றும் “பெண் சிங்கம்“ ஆகிய படங்களுக்கான திரைக்கதையையும் வசனங்களையும் எழுதி முடிக்கத் தான் இந்த ஒரு வார ஓய்வு என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஒரு பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் அலுவலகப் பணிகளையும், மக்கள் பணியையும் பார்க்காமல், இப்படி பெங்களூர் சென்று அமர்ந்து கொண்டு, திரைக்கதை வசனம் எழுதுவது சரியா ? என்ற கேள்விகளை நீங்கள் எழுப்பினால், உங்களை பதர்கள், புல்லுருவிகள், என்று வசைபாடுவார் கருணாநிதி. ஆகையால், இந்தக் கேள்விகளை மனதுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளுங்கள்.


அப்படி திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படங்கள் என்ன வசூலை வாரிக்குவிக்க போகின்றதா, இல்லை இந்தியாவுக்கு ஆஸ்கார் விருதை பெற்றுத் தரப்போகிறதா என்பது போன்ற அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகள் தடை செய்யப் பட்டுள்ளதால், இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்.


கருணாநிதி பெங்களூர் செல்வதற்கு சொல்லப் படும் காரணங்களில் உண்மை இல்லை என்றும், பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன என்றும் சவுக்குக்கு தகவல்கள் வந்துள்ளன.


அரசியலை விட்டும், பதவியை விட்டும் ஓய்வு பெற்று மக்களோடு மக்களாக இணையப் போகிறேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டாலும் கருணாநிதிக்கு, பதவி ஆசையும், அதிகார போதையும், சற்றும் தணியவில்லை என்பதை தொடர்ந்து கருணாநிதிக்கு எடுக்கப் பட்டு வரும் பாராட்டு விழாக்களும், அதில் கருணாநிதியின் பேச்சும் உணர்த்தும்.


திடீர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்ட பிறகு நடந்த ஒரு விழாவில் பேசிய கருணாநிதி “சில பேர் ஓய்வு பற்றி வெளியிட்ட அறிவிப்பு என்ன ஆனது என்று கேட்கக் கூடும், அந்த அறிவிப்பு அப்படியேதான் இருக்கிறது“ என்று பேசியுள்ளார். புதிய தலைமைச் செயலக கட்டிடம் திறந்த பிறகும், அண்ணா நினைவு நூலகக் கட்டிடம் திறந்த பிறகும் செம்மொழி மாநாடு முடிந்த பிறகும் அரசியலை விட்டு ஓய்வு, என்று அறிவித்துள்ளார் கருணாநிதி.

அரசியலை விட்டு ஓய்வு பெற்ற பின், தலைமைச் செயலக திறப்பு விழாவுக்கோ, செம்மொழி மாநாட்டுக்கோ கருணாநிதியை அழைக்க மாட்டார்களா என்ன ? கண்டிப்பாக அழைப்பார்கள். பிறகு ஏன் 6 மாதம் கழித்து ஓய்வு, ஒரு வருடம் கழித்து ஓய்வு என்று "அல்வா" கொடுத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி ?


ஆனால், கருணாநிதி வரலாறு படித்தவர். வரலாற்றுப் புதினங்களை எழுதியவர். மொகலாய வரலாறு அறியாதவரா என்ன ?


ஜனவரி 9 1628ல் ஜகாங்கீரின் மறைவுக்குப் பிறகு மொகாலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக ஷாஜஹான் பதவியேற்றார் ஷாஜஹான்.


மன்னர் ஷாஜஹான்


1658ல் ஷாஜஹான் நோய்வாய்ப் பட்டபின் அவரின் நான்கு மகன்களான தாரா ஷிகோ, மூரத், அவுரங்கசீப் மற்றும் ஷுஜா ஆகியோருக்கிடையே கடும் பதவிப் போட்டி தொடங்கியது. நான்கு மகன்களில் மிதவாதியாகிய தாரா ஷிகோ பதவிக்கு வர வேண்டும் என்று ஷாஜஹான் விரும்பினார்.



மன்னர் அவுரங்கசீப்


இதை அறிந்த அவுரங்கசீப், தனது மூன்று சகோதரர்களையும், நயவஞ்சகமாக கொன்றார். 1658 ஜுன் 8ல் அவுரங்கசீப் தனது தந்தை ஷாஜஹானை கைது செய்து, சிறையிலடைத்தார்.

ஷாஜஹான் கட்டிய தாஜ்மகாலை ஜன்னல் வழியே பார்க்கும் வசதியோடு ஒரு சிறையைக் கட்டி, அதில் ஷாஜஹானை சிறை வைத்த அவுரங்கசீப், மன்னராக பதவியேற்றுக் கொண்டார்.

ஷாஜஹான் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.


இந்த வரலாறு அறிந்த கருணாநிதி, மன்னர் ஷாஜஹானுக்கு ஏற்பட்ட அதே நிலை தனக்கும் ஏற்படும் என்பதை அறிந்துள்ளார். அதனால்தான், இன்னும் பதவியை விடாமல் உடும்புப் பிடி பிடித்துள்ளார் கருணாநிதி.


கருணாநிதி பதவியை விட்டுத் தரமாட்டார் என்பதை அவரது மகன்கள் ஸ்டாலினும் அழகிரியும் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான் ஸ்டாலின் உடனடியாக முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கருணாநிதிக்கு கடும் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல், இடைத் தேர்தல்களில் திமுகவுக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்த அழகிரி கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்ற கருணாநிதிக்கு நெருக்கடி தந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்த திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்களில் கூட, முந்தைய தேர்தல்களில் காட்டிய உற்சாகத்தை காட்டாமல் ஆரம்பத்தில் சுணக்கம் காட்டியதாகவும், பிறகு, இத்தேர்தல்களில் பெரும் வெற்றியை ஈட்டி இதன் மூலம் கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்ற கருணாநிதிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டதாகவும் அத்திட்டத்தின் படியே திருச்செந்தூர் மற்றும் பெரும் வெற்றியை பெற்றுக் காட்டியுள்ளார் அழகிரி.


இடைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிக்குள் அழகிரியின் செல்வாக்கு பெரும் அளவில் வளர்ந்திருப்பதாகவும், கட்சியில் மூத்த தலைவர்களே அரண்டு போயுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், கட்சியில் மூத்த தலைவர்களின் செல்வாக்கு ஏறக்குறைய அற்றுப் போய்விட்ட நிலையில், குடும்பத்தினரின் செல்வாக்கால் அதிகாரப் போட்டி உச்ச நிலையை அடைந்து விட்டதாகவும் இதை சமாளிக்க முடியாமல் கருணாநிதி திணறுவதாகவும் சொல்லப் படுகிறது.


இந்த நிலையில் தான் கருணாநிதி, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு தீர்வு காணவே பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், அங்கே தனது மகள் செல்வி வீட்டில் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சமாதானப் படுத்த முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, எகிப்து நாட்டில் இன்பச் சுற்றுலா சென்றுள்ள, இந்தியாவின் “பரம ஏழைகளான“ மாறன் குடும்பத்தினரையும், உடனடியாக பெங்களூர் வரச் சொல்லி கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.


கருணாநிதி எதிர்ப்பார்ப்பது போல, பெங்களூரில் சமாதானம் ஏற்படுமா, சக்கரவர்த்தியின் தீர்ப்பை இளவரசர்களும், இளவரசிகளும் ஏற்றுக் கொள்வார்களா, “திருக்குவளை சாம்ராஜ்யம்“ ஆக உருவெடுத்துள்ள தமிழ்நாட்டை அனைவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் பங்கீடு செய்யப் படுமா என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்று கூறலாம் என்றால், மஞ்சல் துண்டு மடாதிபதிக்கு ஆள்வதற்குத் தான் பிடிக்கும், ஆண்டவனை பிடிக்காது என்பதால், காலம் பதில் சொல்லும் என்று முடிக்கப் படுகிறது.


அது வரை கருணாநிதி தினம் பாட வேண்டிய பாடல்

“தென்னையப் பெத்தா இளநீரு….
பிள்ளையப் பெத்தா கண்ணீரு….

1 comment:

anbu said...

nalla than ezhuthareenga