Saturday, April 24, 2010

சுயமரியாதை சுடர் பட்டுக்கோட்டை அழகிரி
சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்காய், ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை தன் புரட்சி பேச்சால் புரட்டி எடுத்த புரட்சியாளன் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தந்தை பெரியாரின் சுயமரியாதை பயணத்தில் தளபதியாக பயணித்தவர்.

ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு தன் மேடைப் பேச்சால் அறை கொடுத்தவர் அழகிரி. தன் பேச்சால் பல்வேறு வழிகளில் பயணித்தவர்களையும். பயணிக்க நினைத்தவர்களையும் சுயமரியாதை இயக்கம் நோக்கி இழுத்து வந்தவர். அப்படி வந்தவர்களில் முதல்வர் கலைஞரும் உண்டு. எதிரிகளின் கல்லடி, சொல்லடி, செருப்படி என்று எதைக் கண்டும் அஞ்சாமல் கடைசிவரை சுயமரியாதைக்காக, சுயமரியாதையாக வாழ்ந்தவர்.

இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், வாலடை மருதூர் கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆறு ஆண்டுகள் ராணுவ பணி செய்தார். ராணுவப் பணியின் போது மெசபடோமியாவில் இவர் உள்ளிட்ட இந்திய ராணுவ வீரர்களை கடும்; பனிகாரணமாக இங்கிலாந்து படை விட்டு விட்டு திரும்பிவிட்டது. கவலைப்படாமல் கடல்வழியாக கொல்கத்தா வந்து சேர்ந்து அத்துடன் ராணுவ பணிக்கு முழுக்கு போட்டார். ஊர் திரும்பியவருக்கு பட்டுக்கோட்டை சுயமரியாதை பயணவழிகள் செய்து கொடுத்துது.

கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராக சேர்ந்தார். அந்த சமயம் சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் நடத்திய குருகுலத்தில் பிராமண மாணவர்கள், பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தனித்தனி குடிதண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்தது.

பிராமணரல்லாத மாணவர் பிராமணர்களுக்கான பானைத் தண்ணீரை குடித்து விட அந்த மாணவரை அடித்து தண்டித்தது குருகுலம். அப்படிப்பட்ட குருகுலத்துக்கு அன்றைய காங்கிரஸ் ரூ.ஒரு லட்சம் நிதி கொடுத்தது. குருகுலத்தின் தீண்டாமை போக்கை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை என்று பெரியாரும், சீர்த்திருத்த கருத்து கொண்ட காங்கிரஸில்; பலரும் கொதித்தெழுந்தனர். ஆனால் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு நாளிதழில் காரசாரமாக எழுதி பிராமணர்களின் போக்கை கண்டித்தார்.

ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.

அந்த வழக்கு நீதிமன்றம் போனது. ஆதில் அழகிரிக்காக வழக்கறிஞராக ம.சிங்காரவேலர் ஆஜரானார்.

ஆழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.


இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக்கட்டத்தில் மீண்டும் அழகிரிக்கு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் ரீஜினல் லெக்சரர் பதவி கிடைத்தது. பசுமலையில் தங்கி போர் ஆதரவு பிரச்சாரக் கூட்டங்களில் போர் பற்றி பேசாமல் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்தார்.

ஏதிரானவர்கள் சென்னை கவர்னருக்கு புகார் அனுப்பினார்கள். கவர்னர் விசாரனை வந்தது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்காமல் சுயமரியாதை பிரச்சாரம் செய்வதாக புகார் வருகிறதே ? என்று கேட்க. என் பிரச்சாரத்தால் பட்டாளத்துக்கு ஆள் சேருகிறார்களா என்று மட்டும் பாருங்கள். பேச்சை பார்க்காதீர்கள் என்றார் அழகிரி. உங்களை எச்சரித்து அனுப்புகிறேன் என்றார் கவர்னர். நான் தவறு செய்யவில்லை உங்கள் மன்னிப்போ. எச்சரிக்கையோ வேண்டாம். இந்த வேலையும் வேண்டாம் என்று ராஜினாமா கடிதம் கொடுத்து வெளியேறிவிட்டார்.

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போனபோது மாப்பிள்ளை ஊர்வலத்தில் ராஜரெத்தினம் பிள்ளையின் நாதஸ்வர நிகழ்ச்சி வந்தது. கூடியிருந்த கூட்டம் ராஜரெத்தினம் பிள்ளையின் தோல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வாசிக்கச் சொன்னது. தனியாக வந்த கனீர் குரலொன்று ராஜரெத்தினம் பிள்ளை தோல் துண்டை எடுக்காதீர்கள் என்று கேட்டது. ஓட்டுமொத்த கூட்டமும் அந்த திசை நோக்கியது அந்த குரல் அழகிரியிடமிருந்து வந்து கொண்டிருந்தது. யாரும் சுயமரியாதை இழக்க கூடாது என்பதில் அக்கரையுடன் செயல்பட்டார்.

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னைவரை நடைபயண இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார். சென்னையில் பெரியார் வரவேற்று விழா நடத்தினார்.

அவர் எத்தனை சமூகப் பணி புரட்சி செய்தாலும் அவரை காசநோய் பிடித்துக் கொண்டது. திருவாரூரில் சுயமரியாதை கூட்டத்தில் கனல் பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சை கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்த சிறுவன் காசநோயாளியான நீங்க ஆவேசமாக பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதை சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கினார் அந்த சிறுவன். அந்த சிறுவன்தான் இன்றைய முதல்வர் கலைஞர்.

தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவும் பிரிந்து விட்ட காலம் அழகிரிக்கு காசநோய் அதிகமானது. சென்னையில் டாக்டர் சந்தோசம் சிகிச்சை அளித்தார். அண்ணாவுக்கு தெரிந்து மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அழகிரி இல்லை ஊருக்கு கிளம்பி விட்டதாக தகவல் தெரிந்தது. ரயிலில் ஏறியிருந்த அழகிரியை சந்தித்து ரூ.400 பணம் கொடுத்தார். நெகிழ்ந்து போன அழகிரி அண்ணாவின் கைகளை பற்றிக்கொண்டார். அதன் பிறகு அண்ணாவை எந்த கூட்டத்திற்கு அழைத்தாலும் அழகிரிபெயரில் ரூ.100 மணியார்டர் செய்து அதன் ரசீது அனுப்பினால் தான் கூட்டத்துக்கு வருவேன் என்று அறிக்கை கொடுத்துவிட்டார். அதன்படி பலரும் பணம் அனுப்பினார்கள்.

இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சந்தித்;த புரட்சியாளர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி காசநோயின் கொடிய தாக்கத்தால் 28.03.1949 அன்று மரணமடைந்து விட்டார். மரணமடைந்தாலும் அவரது பெயரும், புரட்சி புகழும் என்றும் மங்காமல் இன்றுவரை நீடித்து நிற்கிறது. இவரது கடன்களை கலைவாணர் என்.எஸ்.கே அடைத்தார்.

அஞ்சாநெஞ்சன் அழகிரியின்பால் தான் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்ற கலைஞர் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். மேலும் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்ற காலத்தில் தான் முதல்வாரன போது தன் சொந்த செலவில் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அழகிரியின் சிலையை பட்டுக்கோட்டையில் நிறுவினார். அதன் பிறகு கடந்த 2007ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் அவர் வாழ்ந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட நிதியும் ஒதுக்கி உள்ளார்.

எம்.ஜி.ஆர் முதல்வராக வந்த போது அவரும் அழகிரிக்கு மரியாதை செய்யும் விதமாக ’பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகம்’ தொடங்கினார்.

ஆழகிரி இறந்தபோது தந்தை பெரியார் வெளியிட்ட விடுதலை அறிக்கையில் நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். 30 ஆண்டு கால நண்பரும் மனப்ப+ர்வமாக நிபந்தனை இன்றி பின்பற்றிவருகிற ஒரு கூட்டுபணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து தொண்டாற்றியவர்.

அவரது முழு வாழ்க்கையிலும் இயக்க தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. போதிய பணம் இல்லை. விளையாட்டுக்கு கூட கொள்கையை விலைபேசி இருக்கமாட்டார் என்று கூறி இருந்தார்.


-இரா.பகத்சிங்

No comments: