Monday, April 19, 2010

நாம் ஆடுகள் அல்ல, புலிகள் -கண்மணிஎல்லோரும் வந்து தங்கிவிட்டுப்போக இந்தியா தர்ம சத்திரம் அல்ல என வாய்துடுக்கு சுப்பிரமணியசுவாமி சொல்லியிருக்கிறார். இந்த கோமாளி எப்போதெல்லாம் வாய் திறக்கிறாரோ அப்போதெல்லாம் ஏதோ ஒரு இடத்தில் கலவரம் வெடிக்கிறது. எமது தாய் மண்ணுக்கு, எமது தாய் வருவதற்கு இந்த சுப்பிரமணிய சுவாமிக்கு எங்கு வலிக்கிறது என்று புரியவில்லை. நாங்கள் இந்தியாவை நம்பி, எமது தாய் இங்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைக்கவில்லை. எங்கள் தமிழ்நாட்டை நம்பித்தான் இந்த சிகிச்சைக்காய் அவரும் இங்கு வந்தார். ஆனால் எங்கள் தாயைப் பார்த்து, எல்லோரும் தங்கிவிட்டுப்போக இந்த மண் தர்ம சத்திரம் அல்ல என்று சொன்னால், நாங்கள் சொல்கிறோம், நீ எங்கள் மண்ணில் வருவதற்கு எங்கள் தமிழ் மண் ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.

வந்தாரை வாழ வைத்த எமது தமிழினம் வக்கற்றுப் போனதால் சுப்பிரமணிய சுவாமி போன்றோருக்கு வாய்துடுக்கு வான்வரை நீள்கிறது. தமிழனுக்கு சுரணை இருக்காது என்கின்ற தைரியம் இப்படியெல்லாம் பேச வைக்கிறது. ஆனாலும்கூட, அதையும் கேட்டுக் கொண்டு எமது இனம் அமைதி காக்கிறது என்றால், எமது இனத்தில் இருந்த மானம் எங்கே போனது? கவரிமான் போன்று மானத்தோடு வாழ்ந்த மாவீரர்கள் அல்லவா நாம். தமிழர்களின் முகவரியை உலகிற்கு சொன்ன ஆற்றல் வாய்ந்த தமிழ் குல முதல்வன் எமதுதேசிய தலைவன் இந்த மண்ணிற்கு வர காரணமான அந்த மகத்துவம் மிக்க தாயை, கண்டவர்கள் எல்லாம் என்று சொல்வதற்கு சுவாமிக்கு எங்கிருந்து தைரியம் புறப்பட்டு வந்தது. இதற்கு, நமக்குள் இருக்கும் ஒரே காரணம், நாம் இந்தியர் என்கின்ற தேசிய அடையாளத்தை சிலுவையை சுமப்பதுபோல் சுமந்து கொண்டிருப்பதுதான்.

தேசிய இனம், தமிழினம் என்கின்ற அடையாளத்தை நாம் பெற்றுக் கொள்ளும்போது, நாம் தமிழர்களுக்கு விரோதமாக எதைப் பேசினாலும் தமிழர்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்கின்ற இயல்பான அச்ச உணர்வு சுவாமி போன்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கும். நாம் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதால்தான், கண்ட நாய்கள் எல்லாம் நமது இனத்தை இவ்வளவு தவறாக விமர்சிப்பதற்கு உள்ளாக்கப்படுகிறோம். ராஜீவ்காந்தி என்று இறந்தாரோ, அன்றிலிருந்து உடை மாற்றாமல், உணவு உண்ணாமல், குளிக்காமல், மூலையில் உட்கார்ந்து முனங்கிக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரியவராக சுப்பிரமணியசுவாமி இருக்கிறார்.

அதனால் ஈனசுவரத்தில் அடிக்கடி முனகுகிறார், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது தேசிய பயங்கரவாதம் என. இதன் அடுத்தக்கட்ட நிகழ்வுதான் கண்டவர்கள் எல்லாம் இந்த மண்ணில் கால் மிதிக்கக்கூடாது என்கின்ற சொற்கள். தமிழ் தேசியத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறோம். இது ஆரம்ப நிலைதான். ஒருவேளை இப்படிப்பட்ட சொற்கள் தொடருமேயானால், அவையே ஒருகாலத்தில் நம்மை அடிமைகளாக ஒடுக்குவதற்கு அடித்தளமாக அமையலாம். இந்த நிலையிலிருந்து நம்மை மீண்டெழுவதற்கு தயாராக ஒவ்வொரு அசைவும் அமைய வேண்டும். அதற்கு முதலில் நாம், நமக்குள் நமது இன அடையாளத்தை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்கின்ற அடிப்படை கட்டமைப்பை உளரீதியாக உணரவேண்டும். நமக்குள் இருக்கும் சாதிய அடையாளங்களை தகர்த்தெறிய வேண்டும்.

அப்படி சாதிய அடையாளங்கள் நம்மேல் சுமையாக இல்லாதபோது, நாம் தமிழர் என்கின்ற உணர்வு நமது எண்ணங்களில் மேலோங்க தொடங்கிவிடும். நமக்குள் சாதிய சீரழிவு சிந்தனை ஒழிக்கப்படும்போது, நாம் தமிழர் என்ற ஓர்மை பண்புக்குள் நிலைநிறுத்தப்படுவோம். இந்த நிலையைத்தான் தமிழீழத்திலே நமது தேசிய தலைவர் மேற்கொண்டார். சாதியத்தை வேரறுப்பதிலே தான் நமது தமிழர் இனப்பண்பு ஓங்கி வளரும் என்பதை அவர் தெள்ளத்தெளிவாக உணர்ந்த காரணத்தினால், தமிழீழ மண்ணில் சாதியம் எரித்தழிக்கப்பட்டது. அங்கே தமிழர் பண்பு நலன் போற்றி பாதுகாக்கப்பட்டது. சாதியம் இல்லாத தமிழர் நலன் தமிழ் தேசிய அடையாளத்தை உலகிற்கே பெரும் கதிராய் பறைசாற்றியது.

ஆகவே தான் தமிழ்நாட்டில் நமக்குள் இருக்கும் சாதிய அடையாளத்தை தகர்த்து, தமிழர்கள் என்கின்ற ஒரே குடையின்கீழ் வரும்போது, இங்கே நமக்கெதிரான ஆணவ சக்திகள் அடியோடு அடித்து நொறுக்கப்படும். அடக்குமுறை ஆற்றல்கள் கொடும் தீயில் எரிக்கப்படும். நாம் பிரிந்திருப்பதுதான் மற்றவர்களுக்கு பெரும் துணை புரிகிறது. எந்த நிலையிலும் தமிழன் ஒன்றிணைய மாட்டான் என்கின்ற தைரியம் மற்ற இனத்தவர்களுக்கு இருக்கின்ற காரணத்தால், வந்தேறிகள் நம்மைப் பார்த்து வரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு துணிவு வந்திருக்கிறது. இந்த நிலையை மாற்றி அமைக்கப்போவது நீ, நான் என சுட்டிக்காட்டாமல் நாம் இணைந்து பணியாற்றுவோம்.

தமிழர்களுக்கான ஒரு நாடு இருந்திருக்குமேயானால், இப்படி ஒரு தமிழ் தாய், மருத்துவத்திற்குக்கூட வரமுடியாத அளவிற்கு மறுதலிக்க முடியுமா? எப்படி இது சாத்தியம். இதற்கு ஒரே காரணம், நாம் இந்தியாவின் அடிமைகளாக இருப்பதுதான். நமக்கான உரிமையை நாம் கையேந்தி யாசிப்பதால்தான். நான் தமிழன் என்ற மனப்போக்கு நமக்குள் உயர்ந்தோங்கட்டும். நாம் தமிழர்கள் என்கின்ற பக்குவம் நமக்குள் செழித்தோங்கட்டும். நமக்கான ஒரு நாடு என்கின்ற உறுதி நமக்குள் எப்போதும் நிலைத்திருக்கட்டும். உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தாலும், அவன் நம் இனத்தை சார்ந்தவன் என்கின்ற உணர்வு நமக்குள் அடிப்படையாய் இருக்கும்போது, எங்கே யாருக்கு என்ன தீங்கு என்றாலும், அங்கே நமது கரம் நீளும்.

நமது மொழி பேசும் அடையாளத்தை நாம் புரிந்து கொள்வோம். நமது மொழிக்கு சாதி இல்லை என்று துணிந்து சொல்வோம். காரணம் சாதி என்ற சனியன்தான் நம்மை தடுமாற வைக்கிறான். சாதியத்திற்கெதிரான சமர் தமிழர்களின் முதல் சமராக இருக்கட்டும். இதைத்தான் நமது தேசிய தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்தார் என்று சொல்வதைவிட, தமிழீழ மண்ணில் அவர் செய்து முடித்தார். தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு சாதியமே குறுக்கே இருப்பதால், சாதியத்தை உடைத்தெறிய வேண்டும் என்கின்ற உறுதி தேசிய தலைவரின் மனங்களிலே ஆழமாக இருந்த காரணத்தால், அங்கே அசைக்க முடியாத பேராற்றலை, உலகையே அசைத்துப் பார்க்கும் பேரோசையை அவரால் எழுப்ப முடிந்தது.

அந்த நிலை தமிழ் மண்ணிற்கு வராதா? என்றால் வரவைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ், தமிழர் என்கின்ற உணர்வு கொண்ட இளைஞர்களின் கரங்களிலே அது ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. விமான நிலையத்திலே அன்னையர் தடுக்கப்பட்டதை அந்த நிமிடமே நாம் உறுதியோடு எதிர்த்து, உலகிற்கே சொல்லி இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கலாம். அடுத்த நிமிடமே உலக ஊடகங்களில் அதை தெளிவுப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஊடகங்கள் அடுத்தவன் மனைவியை அபகரித்த செய்தியைத்தான் எட்டுக் காலங்களில் போட்டு மகிழ்கிறது. நடிகைக்கு நடந்த திருமணத்தை வண்ணத்தில் அச்சிட்டு, வாசல்தோறும் வீசுகிறது.

கள்ளக்காதலை கடைகளில் தோரணமாய் தொங்கப்போட்டு விற்கிறது. அடித்துக் கொலை செய்வதை அடுக்கடுக்காய் வர்ணித்து எழுதுகிறது. சாமியார்களின் லீலைகளை பலநாட்கள் பிடித்துக் கொண்டு தொங்குகிறது. எங்கெல்லாம் சாமியார்களின் இருட்டறை இருக்கிறதோ, அங்கெல்லாம் தம் கரங்களை பாய விடுகிறது. தம் கண்களை மேய விடுகிறது. இதுதான் ஊடகம். பார்வதி அம்மையார் தடுக்கப்பட்டார் என்கின்ற செய்தியை, ஒருவேளை தமிழ் ஊடகங்கள் நினைத்திருந்தால், தமிழகத்திலே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உறுதுணை புரிந்திருக்கலாம். ஆனால், அது ஐபிஎல் விளையாட்டை பார்த்து, அங்கலாய்த்து, மகிழ்ந்து களிகூர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இங்கே ஒரு மனிதநேயம் செத்துக் கொண்டிருப்பதை, செத்துக் கொண்டிருப்பது என்ற வார்த்தைக்கூட சரியானதல்ல, மாந்தநேயம் கொல்லப்பட்டதை குறித்து அக்கரை செலுத்தாத ஊடக தர்மம் இங்கே ஊஞ்சலாடுகிறது. தமிழனுக்கென்று ஊடகம் இல்லை. தமிழனுக்கான ஊடகம் இல்லை. ஆகவேதான் ஊடகங்களும் அவை வர்த்தகத்திற்கு துணைபோய் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் எழுச்சியை அடக்கச் செய்ய, தமிழர்களின் மனசாட்சியை உலுக்கி எழுப்புவதை தவிர்க்க செய்ய, அவை நடிகைகளின் அறைகுறை ஆடைகள் புகைப்படங்களை அட்டவணைப்போட்டு தருகிறது. சாமியார்களின் லீலைகளை வரலாறு என வாசித்துக் காட்டுகிறது. இதெல்லாம் நாம் பிரிந்திருப்பதால் மட்டும்தான் தொடர்ந்து நிகழ்கிறது.

இப்படிப்பட்ட தமிழர் விரோத போக்குகளை துடைத்தெறிய, அழித்தொழிக்க நமக்குள் எழ வேண்டிய ஒரே நிகழ்வு, நாம் தமிழர்களாக ஒன்றிணைவதுதான். தமிழர்களாக ஒன்றிணைவதிலேதான் நமது நலன் காக்கப்படும். ஒருவேளை நாம் இப்போது இணைவது நமக்கு பயன்தராமல் போகலாம். ஆனால் நம்முடைய சந்ததி பெரும் சிறப்புடன் வாழ அது பேருதவி புரியும் என்பதை புரிந்து கொள்வதற்கான காலங்களைத்தான் வரலாறு நமக்கு சொல்லித்தருகிறது. தொடர்ந்து போராட வேண்டிய தருணம் பக்கத்தில் வந்திருக்கிறது. எப்படிப் போராட வேண்டும் என்பதை சொல்லித்தரும் அற்புதம் தமிழ் மண்ணிலே நிகழ்ந்திருக்கிறது. நாம் தொடர்ந்து அடக்கப்படுவதற்கு ஆடு மாடுகள் அல்ல. பாபாசாகேப் அம்பேத்கர் சொல்வதைப் போன்று, அவர்கள் சிங்கங்களை பலிகொடுக்க மாட்டார்கள், ஆடுகளை தான் பலிகொடுப்பார்கள்.

நாம் ஆடுகள் அல்ல. புலிகள் என்பதை நமது எதிரிகள் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை புலிகள் என அழைக்க நமக்குள் துணிவு வர வேண்டும். அது நமது இனத்தை, நமது மொழியை, நமக்கான உரிமையை, நமது அடையாளத்தை, நமது மகிழ்வை, நமது வாழ்வை உறுதி செய்யும். அந்த உறுதி நிறைந்த செயலுக்காக உழைக்கும் களத்திற்கு நாம் வந்திருக்கின்றோம். அதை செய்வதற்கு தவறக்கூடாது. இப்போது ஒருவேளை நாம் தவறிழைத்தால், எப்போதுமே நம்முடைய எதிர்கால வாழ்வு இருளாகக்கூடிய வாய்ப்பு வந்துவிடும். நமது துணிவு, நமக்குள் புதைந்துள்ள பேராற்றல், இந்த சமூகத்திமீது நம் தமிழ் இனத்தின்மீது நமக்குள் உள்ள அக்கரை, நமக்குள் உள்ள அன்பு வெளிப்படுவதற்கான நிகழ்வுகளாகத்தான் காலம் நமக்கு சில நிகழ்வுகளை நடத்திக் காட்டுகிறது. இதன்மூலம் பாடம் கற்போம். நாம் தமிழர்கள் என்பதை உயர்த்திப் பிடிப்போம்.

No comments: