சோகத்தின் சொந்தக்காரனே
கவலைகளின் கைதியே
ஏமாற்றங்களின் விலாசமே
இடிந்து கிடக்கும் இதயமே...
முனுமுனுப்புகளில்
மூச்சை கரைத்தது போதும்
என் சிந்தனை தேரில் வந்தமர்...
ஓர் ஞான யாத்திரை நடத்தி பார்ப்போம்!
உன் உயிர்
உன்னை கேட்டுக உண்டானதில்லை
உன் உடல்
உன் உடன்பாட்டோடு உருவானதில்லை..
உன்
அழகோ அழகின்மையோ
ஏழ்மையோ செல்வமோ
எதுவாயினும்
அவை பிறப்பால் திணிக்கப்பட்ட
இயற்கை பிடிவாதங்கள்!
வாழ்க்கை என்பது
செலவளித்தே தீர்க்க வேண்டிய செல்வம்
நொடி நொடியாக
பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி
நகரும் பயணம்!
இதில் எல்லாமுள்ளவனும்
ஏதுமில்லாதவனும்
என்றுமே இருந்ததில்லை...
நீ
ஆட்டக்காய் என்கிறது இறையுணர்வு
ஆட்டக்காரன் என்கிறது பகுத்தறிவு.
இதுவோ அதுவோ
இங்கே
கேட்டதெல்லாம் கிடைப்பதில்லை
கிடைத்ததெல்லாம் கேட்டதில்லை.
எதிர்பார்ப்பு காற்றில்
இலவசமாய் பறந்து
ஏமாந்து கணங்களில்
இரும்பாகி போக
எது காரணம்?
மனம்
மனம்
மனம்!!!
இங்கே
மனமிருக்கும் வரை
நினைவிருக்கும்
நினைவிருக்கும் வரை
கனவிருக்கும்
கனவிருக்கும் வரை
துயரிருக்கும்....
இப்போதெல்லாம் மனதை
ஒதுக்கி வைத்து ஓடமுடியாது!
சட்டையில்லா உடம்பின் மேல்
சாட்டையால் அடித்து கொண்டு
பிச்சை கேட்பவர் போல்
ஆசை என்னும் சாட்டையால்
ஆனமாவை வதைத்து கொள்ளும்
அவலத்தை கொல்...
உள்ளத்தில் நினைத்த ஒருத்தி
உடன்பட்டு விட்டால்
இன்னொன்று ஈர்க்காமல் விட்டுவிடுமா?
கூடை கூடையாய்
ஆடைகள் குவிந்தாலும்
போதும் என்ற நிறைவு பூத்துவிடுமா?
வகை வகையாய்
வடித்து தின்றாலும்
சுவையுணர்ச்சி சுருங்கி விடுமா?
வீடு கிடைத்தால் ஊரின் மேலும்
ஊர் கிடைத்தால் நகரின் மேலும்
நகர் கிடைத்தால் நாட்டின் மேலும்
பெருகி கொண்டே போகும்...
ஆசைக்கு அளவென்பதில்லை!
தாய் பூச்சியை கொல்லும் வரை
கரையான் புற்று மறையாது
ஆசை பூச்சியை கொல்லும் வரை
சோக சுமைகள் குறியாது...
உடம்பை களைப்பாற்ற
உறங்குகின்ற மனிதனே
மனதை இளப்பாற்ற
மறந்து விட்டதேன்?
பசுமையும் வரட்சியும்
மழையை சார்ந்தது
இன்பமும் துன்பமும்
மனதை சார்ந்தது!
அலைகின்ற மனது
தீப்புன்னாய் எரியும்
அசையாத மனமோ
இன்ப தேன் சொரியும்
நீ
நியாயமான இலக்குகளை
நியாயமாக தேடு
பேராசை வித்துக்களை
விவேகத்தால் சாடு.
ஏனெனில்
ஆர்ப்பாட்ட அனுபவங்களை விட
அமைதி அளிக்கும் ஆனந்தம்
அதிகமானது!
என் பாட்டோடு பயணித்த
தோழனே,
பொருப்பின்றி ஒடுக்குவது
புத்தியின் சுருக்கம்
வெறி கொண்டு திரிவது
துன்பத்தை பெருக்கும்.
இருப்பதில் மகிழ்வது தான்
ஞானத்தின் துவக்கம்!
சுகங்களை அடைவது நிம்மதியா
நிம்மதியை அடைவது சுகமா
நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!!!
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment