Thursday, April 15, 2010
வேலுப்பிள்ளை மனோகரனின் பேட்டி
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு…
தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் டென்மார்க்கில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவர் வழங்கிய நீண்ட அனுபவங்கள் கேள்வி பதிலாக அமைந்துள்ளன.
டென்மார்க்கில் வாழ்ந்து வரும் திரு. வேலுப்பிள்ளை மனோகரனை அலைகள் காரியாலயத்தில் சந்தித்துப் பேசினோம். அவர் தந்திருக்கும் நீண்ட அனுபவங்களை அலைகள் வாசகர்களுக்கு சுவைபட தருவதில் பெருமையடைகிறோம்.
புதுமாத்தளன் போருக்குப் பிறகு பிரபாகரன் குடும்பத்தில் இருந்து ஒருவர் மேடைக்கு வருகிறார். அந்த விழா அலைகளின் பத்தாண்டு வெற்றி விழாவாகவும், இளம்புயல் 100 வது நாள் விழாவாகவும் அமைகிறது. அதன் பொருட்டு இந்த சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது..
கேள்வி: நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?
மனோகரன்: நானும் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறோம். வேலையும் வாழ்வுமாக நாட்கள் நகருகின்றன.. மற்றப்படி சொல்வதற்கு எதுவும் இல்லை. எல்லோரையும் போலவே எனது வாழ்வு நகர்கிறது.
கேள்வி: நீங்கள் பிரபாகரனின் சொந்த அண்ணன். உங்களுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதிகாரத்தில் சகோதரன் இருந்தால் அண்ணனுக்கு இயல்பாகவே அதிகாரம் வந்துவிடும். அதோ பாருங்கள் சிங்கள ஆட்சியை… கோத்தபாய ராஜபக்ஷ, பசில்ராஜபக்ஷ போன்றவர்களுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது.. அதுபோல நீங்களும் ஏன் அதிகாரத்தை பெற முயற்சிக்கவில்லை..?
மனோகரன்: எனது தம்பி பிரபாகரன் போராட்டத்தை தமிழ் மக்களின் தேசிய சொத்தாக கருதினார். அங்கு குடும்பம், தாய், தந்தை, அண்ணன் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்தவித அதிகார துஷ்பிரயோகங்களும் செய்யாமலே என் தந்தை போலவே தம்பியும் நேர்மையின் வடிவாக வாழ்ந்து காட்டியுள்ளார். அவருக்கு அண்ணனாக வாழ்வது மிகவும் கடுமையான ஒரு யாகம் என்றே கூறுவேன். தம்பியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாத ஓர் அண்ணனாக வாழ்வதுதான் சிறந்த வாழ்வென்று கருதி வாழ்ந்தேன். தம்பி என்பதற்காக தேசத்திற்கு சொந்தமான வாகனத்தில் நாம் ஏறி பயணிக்க முடியாது. தம்பியின் அதிகாரத்தை பயன்படுத்தாது நாம் நமது சொந்தக் கால்களிலேயே நடந்தோம். தம்பி போராட்டத்தில் இருந்த ஆரம்ப காலங்களில் எங்களோடு உறவு கொள்ளவே அயலவர்கள் பயந்தார்கள். எனது தாயும் தந்தையும் பொலிகண்டி கந்தவன ஆலய மடத்தில் படுத்து வாழ்ந்த காலங்கள் உண்டு. தங்கள் வீட்டைத் தாண்டிப் போனால் ஆமியால் ஆபத்தென்று கூறி போகக் கூடாது என்று கூறியவர் பலர் உண்டு. ஆனால் தம்பியின் ஆட்சி வந்தபோது அவர்கள் வரவேற்றனர். அப்போதும் நாங்கள் பழையதை மறவாது வாழ்ந்தோம். பிரபாகரனின் ஒழுக்கத்திற்கு உரிய தியாக வாழ்வை என் தந்தையும் தாயும் வாழ்ந்தார்கள். நானும் அவ்வழிதான் நடந்தேன், என் தம்பி குடும்பம் என்று தனியாக எங்களை கவனித்ததே கிடையாது.
கேள்வி: குடும்பம் – போராட்டம் இரண்டும் வேறுவேறான சங்கதிகள் இவைகளுக்குள் பிரபாகரனின் பணி எப்படி நகர்ந்தது என்பதைக் கூற முடியுமா ?
மனோகரன்: ஓர் சிறிய உதாரணத்தைக் கூறுகிறேன். ஒரு தடவை என் தம்பியின் மகன் சாள்ஸ் தனக்கு ஒரு விளையாட்டு பொருள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதில் கொடுத்த பிரபாகரன், நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி தனக்கு இதுவரை வாழ்க்கைக்கு ஆதாரமான மாதச் சம்பளத்தை வழங்கவில்லை, அதனால் விளையாட்டு பொருளை வேண்ட முடியவில்லை என்று பிள்ளையை சமாதானம் செய்தார். தனது பிள்ளைக்கு ஒரு விளையாட்டுச் சாமானை வாங்கக் கூட அவர் போராட்டத்தில் தனக்கிருந்த அதிகாரத்தையோ பாவித்தது கிடையாது, என் தம்பியும் தந்தை போலவே எளிமையான வாழ்வையே வாழ்ந்தார்.
கேள்வி: அவர் அவ்வளவு நேர்மையாக இருந்தாலும், வெளிநாடுகளில் அவர் பெயரில் இங்குள்ளோர் நடாத்திய நிர்வாகங்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும் இவை குறித்து உங்கள் தம்பிக்கு ஏன் அறிவிக்கவில்லை?
மனோகரன்: உண்மைதான், நான் வாழ்ந்த டென்மார்க்கில் நடந்த சம்பவங்கள் பலதை ஆதாரத்துடன் எழுதி வன்னியில் வாழ்ந்த என் தந்தையிடம் அனுப்பி, தம்பியிடம் கொடுக்கும்படி கூறினேன். நான் அனுப்பிய கடிதம் கிடைத்ததும் என் தந்தை வேலுப்பிள்ளை ஒரு வேலை செய்தார். அந்த முறைப்பாட்டுக் கடிதத்தை திறந்து பார்க்காமலே எனக்கு திருப்பி அனுப்பினார். உடைக்கப்படாத அக்கடிதத்தின் மேல் உறையில் ஒரு குறிப்புரை எழுதி இருந்தார். நான் அவருடைய தந்தை, நீ அவருடைய அண்ணன். நாம் இருவரும் குடும்பத்தவர், தியாகமே வடிவான ஒரு போராட்டத்தில் உறவு முறை என்ற காரணத்தை பயன்படுத்தி யாதொரு தாக்கத்தையும் செய்தல் கூடாது என்று சுட்டிக் காட்டியிருந்தார். அதே கடிதம் என் தந்தையாரிடம் இருந்து பிரபாகரனுக்கு போயிருந்தால் அவர் அதைவிட நீண்ட குறிப்புரையுடன் உடைத்துப் பார்க்காமலே எனக்கு திருப்பி அனுப்பியிருப்பார். இதுதான் அண்ணன் – தம்பி – தந்தை என்ற எங்கள் முக்கோண உறவுப் போராட்டத்தின் பரிமாணம். இந்த நேர்மையும், ஒழுக்கமும் என் தந்தையின் பாரம்பரியத்தால் வந்தது.
கேள்வி: சமீபத்தில் உங்கள் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை மரணமடைந்தார். அவருடைய மரணத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மனோகரன்: எனது தந்தையார் மரணம் மர்மமாக உள்ளது. புதுமாத்தளனில் இறுதி நேரம் நடந்தது என்னவென்ற உண்மைகள் பல அவருக்கு தெரிந்திருக்கும். தான் அறிந்த உண்மைகளை யாருக்கும் மறைக்கும் பழக்கம் உடையவர் அல்ல அவர். எத்தனையோ உண்மைகளை எடுத்துச் சொல்லக்கூடிய போரின் சாட்சியமாக அந்த மண்ணிலேயே வாழ்ந்தவர். அவருடைய குரல் உலகின் முன் வெளிவர முடியாதபடி அமுக்கப்பட்டுவிட்டது. அவர் இறந்த காரணத்தால்தான் அவர் எங்கே வைக்கப்பட்டிருந்தார் என்ற உண்மை தெரியவந்தது. இல்லாவிட்டால் அவர் இறக்கும்வரை எங்கிருக்கிறார் என்பது பற்றிய மர்மம் மேலும் பல காலம் நீடித்திருக்கும். மேலும் அவர் எங்கு சென்றாலும் தனது முக்கிய ஆவணங்களையும், குறிப்புக்களையும் சிறிய பையில் வைத்து கையோடு கொண்டு செல்வார். புதுமாத்தளனில் கூட அவர் அதை எடுத்தபடியே வந்திருக்கிறார் ஆனால் இன்றுவரை அவருடைய முக்கியமான ஆவணங்களைக் கூட நாம் பெற முடியவில்லை.
கேள்வி: இங்கிருந்து உங்கள் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனுபவங்கள் உண்டா?
மனோகரன்: வன்னியில் இருந்து அடிக்கடி என்னுடன் பேசுவார். கடந்த ஆண்டு தை மாதம் நிலமை மோசமடைந்தது. அதற்கு முன்னர் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டார். அப்போது நிலமை மிகவும் மோசமடைந்துவிட்டதாக தெரிவித்தார். ஓரளவு நிலமை சீருக்கு வர தொடர்பு கொள்வதாகக் கூறியிருந்தார். பின்னர் அவருடைய மரணச் செய்திதான் இணையத்தில் வெளியாகியிருக்கக் கண்டோம். அவர் உயிருடன் இருந்திருந்தால் உலகத்தின் எத்தனையோ பதிலற்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் கிடைத்திருக்கும்.
கேள்வி: உங்கள் தந்தையார் தன் கருத்துக்களை சுதந்திரமாக சொல்லும் ஒருவராகவே இருந்தார். பிரபாகரன் வன்னியில் நடாத்திய ஆட்சி பற்றிய அவருடைய கருத்து என்னவாக இருந்தது?
மனோகரன்: அதை அறிவதற்கு சிறிது காலம் முன்னர் செல்வது அவசியமாகும். எனது தந்தை டி.எல்.ஓ ( மாவட்டக் காணி அதிகாரி ) வாக பணி புரிந்த காலத்தில் முத்தையன்கட்டு குடியேற்றத் திட்டம், வன்னி படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம் போன்றவற்றை ஆரம்பித்தவரில் அவரும் ஒருவராக இருந்தார். அப்போது காணிகளை வழங்குவது அவர்தான். படித்த தமிழ் வாலிபர்களை அங்கு குடியேற்றுவதற்கு அவர் இரவு பகலாக போராடினார். அங்கு தமிழ் வாலிபர்கள் குடியேறாவிட்டால் அந்த இதய பூமியை சிங்களக் குடியேற்றமாக மாற்ற விரும்புவதாக அரசு அவரிடம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து எனது தந்தை பழைய வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான வவுனியா செல்லத்தம்பு, உடுப்பிட்டி இராஜலிங்கம் போன்றோருக்கு விடயத்தை விளங்கப்படுத்தி படித்த தமிழ் வாலிபர் குடியேற்றங்களை வன்னி நோக்கி நகர்த்தும்படி வலியுறுத்தினார். ஈழத்தை மீட்பதென்பது ஈழ மண்ணில் தமிழன் பரந்து வாழ்வதால்தான் தீர்மானமாகும் என்றும் கருதினார். ஆனால் அன்று அவர் நினைத்தது போல பெருந்தொகையாக வன்னியின் வெற்றிடங்களை நோக்கி மக்களை நகர்த்த முடியாது போன கவலை அவருக்கு இருந்தது. பின் என் தம்பி பிரபாகரன் அதை ஒரு குறுங்காலத்தில் செய்து, வன்னியில் ஒரு அழகான தமிழீழ அரசையே சகல படைபலங்களோடும் உருவாக்கியபோது என் தந்தை பெரு மகிழ்ச்சி கொண்டார். வன்னியில் நடைபெற்ற நிர்வாகம் அவருக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. கிளிநொச்சியின் சிறப்பைக் கண்டு அவர் பெருமகிழ்வடைந்தார். அன்று தான் பார்த்த கிளிநொச்சிக்கும், பிரபாகரன் காலத்து கிளிநொச்சிக்கும் பெரிய வேறுபாடு இருந்ததாக போற்றினார். தன்னால் முடியாத விடயத்தை பிரபாகரன் சிறப்பாக செய்ததாக போற்றினார்.
கேள்வி: அனுராதபுரத்தில் உங்கள் தந்தை வாழ்ந்த காலம், எல்லாளன் சமாதி , உங்கள் தம்பியின் பிறப்பு இவைகள் பற்றி ஒரு தை உள்ளது. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?
மனோகரன்: அனுராதபுரத்தில் எல்லாளன் சமாதி இருந்த இடம், பாழடைந்த கோயில் இவற்றுக்கு அருகால் போகும் வீதியில்தான் எங்கள் வீடு இருந்தது. அந்த இடம் அன்று முற்றிலும் அமைதி நிறைந்த பகுதியாக இருந்தது. இனம்புரியாத ஓர் அமைதி அங்கு நிலவும். சுமார் இரண்டாயிரம் வருடங்களாக சிங்கள மக்கள் எல்லாளன் சமாதிக்கு விளக்கேற்றி வருகிறார்கள். அந்த விளக்கு ஈட்டி போல எரியும். அதைப் பார்க்கும்போது மாமன்னன் மறத்தமிழன் எல்லாளனே அங்கு அருவமாக வாழ்வது போன்ற பிரமையும், மதிப்பும் ஏற்படும். அத்தகைய உணர்வுகளை என் தந்தையும், தாயும் மனதில் தாங்கி வாழ்ந்த காலத்தில் அதே எல்லாளன் சமாதி இருந்த இடத்தில் கருவுற்றார் பிரபாகரன். என் தம்பியின் வாழ்வைச் சீர்தூக்கிப் பாருங்கள், எல்லாளன் போலவே அவர் தமிழ் மீது காதல் கொண்ட ஒருவராக வாழ்ந்த வாழ்வு புரியும்.
கேள்வி: இந்த விடயம் சிங்கள ஆட்சியாளருக்கு தெரியுமா?
மனோகரன்: எமக்கு முன்னரே இதை சரியாக மோப்பம் பிடித்தவர்கள் சிங்கள ஆட்சியாளர்தான். தம்பி போராடப் புறப்பட்ட காரணத்தால் இராணுவத்தால் அடிக்கடி கைது செய்யப்படுபவர்கள் நானும் என் தந்தையும்தான். எண்ணற்ற தடவைகள் கைது செய்யப்பட்டு யாழ். கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது. அதுபோல ஒரு தடவை எனது தந்தையை பிடித்து குருநகர் இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றார்கள். ஓர் இராணுவச்சிப்பாய் அவரை கொதிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்திருந்தான். அந்த நேரம் அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை உள்ளே அழைத்துச் சென்று உரையாடினார். அப்போதுதான் பிரபாகரன் சாதாரணமான பிறப்பல்ல என்று தாம் நினைப்பதாக சொன்னார். ஏதோ ஒரு தாக்கம் இல்லாமல் பிரபாகரன் இவ்வளவு உறுதி கொண்ட ஒருவராக, தமிழீழப் பற்றுக் கொண்டவராக இருக்க முடியாது என்றும் கருதுவதாகக் கூறினார். அப்போதுதான் எனது தம்பி அனுராதபுரத்தில் கருவுற்ற ஒரு தமிழன் என்பதை சிங்களம் அறிந்து அதிர்ச்சியடைந்தது.
கேள்வி: எல்லாளன் என்று சொன்னீர்கள்… அலைகள் விழாவில் எல்லாளன் அரங்கிற்கு நீங்கள் தலைமை தாங்குவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
மனோகரன்: முதலில் அலைகள் இணையப்பத்திரிகை ஆற்றிவரும் சேவையை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அலைகள் ஆரம்பிக்கப்பட்டது எனக்கு தெரியும் ஆனால் பத்து வருடங்கள் இவ்வளவு விரைவாக ஓடிவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. அலைகளை ஆதரிப்பதும் கலைகளை ஆதரிப்பதும் வேறு வேறல்ல, ஆகவே அனைவரும் அலைகள் பத்தாண்டு விழாவை ஆதரிப்பது நல்லது. எந்தவித இலாப நோக்கும் இல்லாமல் அலைகள் இந்த சமுதாய பெரு வெள்ளத்தில் அயராது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னர் ஊடகங்கள் இல்லாத காரணத்தால் செய்திகளை உடனுக்குடன் அறிவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது இணையம் வந்த காரணத்தால் உடனுக்குடன் செய்திகளை அறிய முடிகிறது.. புதுமாத்தளனில் நடைபெற்ற நிகழ்வுகளை இணையம் உடனுக்குடன் தந்தது. மக்களின் அழிவுகளை உயிரைக் கொடுத்து எத்தனையோ ஊடகவியலாளர் பதிவுகளாக்கி இணைய வழி அனுப்பினார்கள். ஆனால் ஒரு கேள்வி இவ்வளவு தூரம் இணையம் வளர்ந்தும், உண்மைகளை உண்மையான ஒளிப்படங்களாக வழங்கியும் உலக நாடுகள் அந்த வளர்ச்சியை மதித்து நடந்தனவா என்று கேட்க வேண்டும். இணையத்தோடு உண்மையின் வெற்றியும் இணைந்து நடக்க வேண்டும். ஊடகத்தின் உன்னதம் உண்மையின் வெற்றியாக அமைய வேண்டும். சகல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஒளிப்படம் உலகத்திற்கு சொன்னதென்ன.. இணையத்தை மட்டும் ஒளியில் பார்த்துக் கொண்டு, உண்மையை இருளில் வைத்திருப்பது சரியல்ல.. இதை உலக வல்லரசுகள் புரிய வேண்டும். அதேவேளை புலம் பெயர் தமிழ் மக்கள் நல் வாழ்விற்காகவும் சிந்தனை மேம்பாட்டிற்காகவும் தளராத மனதுடன், தள்ளாடாத செயலுடன் பத்தாண்டுகளை இணையத்தால் எழுதிக் கடப்பது மிகப்பெரிய சாதனை அதை அலைகள் செய்தது, செய்கிறது அதை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
கேள்வி: தங்கள் தாயார் எங்கே?
மனோகரன்: அவர் தற்போது மலேசியாவில் இருக்கிறார். அவரை கனடா அழைத்துச் செல்ல எனது சகோதரியார் முயற்சி செய்கிறார்.
கேள்வி : உங்கள் தம்பி வே.பிரபாகரனை எங்கே தேடுவது ?
மனோகரன் : பிரபாகரனை இரண்டு வழிகளில் தேடுகிறார்கள். ஒரு சிலர் அவரை விண்ணில் தேடுகிறார்கள், இன்னும் சிலர் மண்ணில் தேடுகிறார்கள். ஆனால் பிரபாகரன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உடல்களில் வீசும் விடுதலைப் பேரொளியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. அந்தக் தேடலுக்கான பதிலை தருவதற்கு தகுதியுள்ள ஒருவரை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அவர் இதுவரை அடையாளம் காட்டவில்லை என்பதை இனியாவது மக்கள் அறிவால் கண்டு பிடிக்க வேண்டும்.
கேள்வி : விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளுக்கான பணிகளை தானே செய்வதாகக் கூறிய கே.பத்மநாதன் அத்தருணம் உங்களிடம் என்ன கூறினார் ?
மனோகரன் : கே.பி ஊடகங்களில் தோன்றி ஒரு தடவை இறந்துவிட்டதாகவும், இன்னொரு தடவை உயிருடன் இருப்பதாகவும் கூறினார். அவர் மற்றவரில் இருந்து சற்று வித்தியாசமாக விண்ணிலும் மண்ணிலுமாக இரண்டு இடங்களிலும் தேடியிருந்தார்.. இப்படி இரண்டுங்கெட்டான் பதிலை பிரபாகரன் தனது வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது. கே.பியின் கடமை என்ன.. பிரபாகரனின் உடன் பிறந்த அண்ணன் நான் இருக்கிறேன்.. என்னிடம் ஒரு தடவை கூட அவர் இது குறித்து பேசியது கிடையாது.
கேள்வி : வேறு யாராவது தொடர்பு கொண்டார்களா ?
மனோகரன் : தமிழகத்தில் இருந்து பழ.நெடுமாறன் ஒருவர் மட்டும் தொடர்பு கொண்டு பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தியை அறிவிப்பதாகக் கூறினார். மற்றப்படி யாருமே இது குறித்து என்னுடன் இன்றுவரை பேசியது கிடையாது. ஒருவரிடமும் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.
கேள்வி : அப்படியானால் இந்தக் கேள்விக்கான பதிலை எங்கிருந்து தேடுவது ?
மனோகரன் : பிரபாகரன் வாழ்வில் இருந்துதான் தேடிக் கொள்ள வேண்டும். நான் உங்களிடம் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் என் தம்பி எல்லாள மன்னன் சமாதி இருந்த இடத்தில் கருவுற்றவர் என்று. அதுபோலவே மானமுள்ள தமிழுக்காகவும், உயர் தமிழ் வீர ஒழுக்கத்திற்காகவும் அவர் வாழ்ந்தார். சங்ககால பாடல்களில் கண்ட உயர்ந்த அப்பழுக்கில்லாத வீரத்தை எல்லாள மன்னன் போற்றினான். தள்ளாத வயதிலும் உயிரச்சமின்றி தனிச்சமருக்குப் போன வீரன் எல்லாளன். அதுபோல பிரபாகரன் உருவாக்கிய விடுதலை வீரர்கள் அனைவருமே இருபதாம் இருபத்தியோராம் நூற்றாண்டுகளில் சங்ககால வீர வாழ்வை வாழ்ந்தார்கள். புறநானூற்றில் கண்ட வீரத்தை நிஜ வாழ்வியல் ஓவியங்களாக மாவீரர்களை வைத்தே வரைந்தும் காட்டினார். இயற்கையாகவே பிரபாகரன் ஓர் ஓவியர் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனவேதான் அவர் வாழ்வும் புறநானூற்று தமிழ் வீர வாழ்வும் ஒன்றுதான் என்பதைப் புரிய வேண்டும்.
கேள்வி : இது அவர் வாழ்வின் முற்பகுதிவரை நகர்ந்து போகும் நிகழ்வு. எதிரிகளின் நீரைக் குடித்து உயிர் வாழாத சேரன் செங்குட்டுவனின் வீரம் திலீபனிடம், திருமணமான அன்றே போருக்கு போன புறநானூற்று வீரம் குமரப்பாவிடம் என்று சுத்தமான தமிழ் வீரத்தை அவர் படைத்தார். கரிகாலன் என்ற பெயருடன் அவர் வாழ்ந்த வாழ்வு எங்களுக்கும் தெரியும், இருப்பினும் அவருடைய வாழ்வின் பிற்பகுதி புறநானூற்றின் இறுதிப்புள்ளியின் தாக்கம் தெரிகிறதே..
மனோகரன் : கடைசியில் நடைபெற்ற புதுமாத்தளன் போர்க்களமும் மாங்குடி மருதனார் பாடிய சங்க காலப் போர்க்களமும் வேறு வேறல்ல. வெட்டி எடுக்கப்பட்ட முடித்தலைகள் அடுப்பாக.. பிளக்கப்பட்ட கபாலங்கள் பாத்திரமாக.. அதற்குள் இரத்தமும் சதையும் நிணமும் இட்டு, வெட்டிய கைகளை அகப்பையாக.. துளாவி ஒரு போர் யாகம் நடந்தினான் பாண்டிய மன்னன் என்று பாடியுள்ளார்கள். அதைத்தான் புதுமாத்தளனில் கண் முன் கண்டு துடிதுடித்தோம். உண்மையில் அது புறநானூற்றுப் போர்க்களம்தான்.
கேள்வி : இருக்கலாம் இருந்தாலும் இப்போது உருவாகியுள்ள நிலை புறநானுற்றில் இருந்து சிறிது வேறுபடுகிறதே.. ? வெற்றிடத்தால் ஒரு போர் என்ற புதிய கோட்பாடு தெரிகிறது… உங்களுக்கு அது தெரிகிறதா ?
மனோகரன் : உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது.. வெற்றிடத்தால் ஒரு போர்… அதற்கான பதில் அவர் படித்த நூலில் இருக்கிறது. ஒரு மனிதனின் நல்ல நண்பன் அவன் படிக்கும் நல்ல நூல்தான் என்று கூறுவார்கள். பைபிள் படித்தவர்கள் பைபிள் போலவே வாழ முயற்சிப்பதும், மார்க்சியம் படித்தோர் மார்க்சிய வாதிகளாக வாழ்வதும் ஏன்.. அவர்கள் படித்த நூலின்படி வாழ முயற்சிக்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும். அதுபோலத்தான் பிரபாகரனும் வாழ்வின் வேதமாக நேதாஜி சுபாஸ்சந்திரபோஸின் வாழ்க்கையை கடைப்பிடித்தார். நேதாஜியின் கடமை உணர்வு மிக்க, ஒழுக்கம் குறையாத ஓர் இராணுவத் தொண்டர்களை அவர் வடிவமைத்தார். நேதாஜியின் இறுதிக்காலத்தில் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லமல் போனது.. இப்போது பிரபாகரன் விரும்பிப் படித்த நேதாஜியின் வாழ்வியல் தத்துவம் அவரை வழி நடாத்தியிருப்பது தெரிகிறது.. இது புறநானூற்றில் இருந்து வேறுபட்ட இடமாகும்… நேதாஜி கதை படித்து, அவர் வாழ்வின் பிற்பகுதி போன்ற தோற்றத்தை கடந்த ஓராண்டு காலமாக வைத்திருக்கிறார்…பிரபாகரன். அதிலும் ஒரு போராட்டம் மறைந்திருக்கிறது.. அதுதான் புதிய புறநானூற்றின் அதிசயமான பக்கம் அதற்குப் பிறகு வருகிறேன்.. தாயின் மணிவயிற்றில் கருவாக இருக்கும்போது பாரதக்கதை கேட்டு போர் வீரனானான் அபிமன்யு, அதுபோல எல்லாளன் கதையை தாயின் வயிற்றில் இருக்கும்போதே கேட்டு அவர்போல தமிழ் வீரரானார் பிரபாகரன். என்று முன்னர் கூறியிருந்தேன். பின்னர் மறுபகுதியை கூறுகிறேன்..
கேள்வி : சரி நம்மை விடுங்கள்.. மத நம்பிக்கை உள்ளவர்கள் நம்மில் பலர் உள்ளார்கள்.. அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஏதாவது சாஸ்திரங்கள் கேட்டுள்ளீர்களா..அதுவும் வாழ்வில் ஒரு கடமையல்லவா ?
மனோகரன் : சாஸ்த்திரங்கள் என்பவை தனிப்பட்டவரின் நம்பிக்கைகளால் எல்லைப் படுத்தப்படுவது. ஆனால் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபாகரனின் பிற்கால வாழ்வு மர்மம் நிறைந்தாக இருக்கும், யாரும் அவரைக் காண இயலாது என்றும்.. அவர் எங்கே என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். நாம் அப்போது அதை பெரிதாக கருதவில்லை, ஆனால் இப்போது அதையும் எண்ணிப்பார்க்கிறேன்.. அதற்குமேல் பிரவேசிக்கவில்லை.
கேள்வி : போரின் பின் பிரபாகரன் உடலம் போன்ற ஒன்று காண்பிக்கப்பட்டது, அதை ஏன் நீங்கள் பொறுப்பெடுக்கவில்லை.. ?
மனோகரன் : அது உண்மையாகவே பிரபாகரன் உடலம் என்று எரிக் சோல்கெயம் ஆவது உறுதி செய்தாரா இல்லையே.. சரி அதைவிடுங்கள் அது பிரபாகரனன் உடலம்தான் என்றால் அதை ஏன் சில நாட்களாவது பாதுகாத்து வைத்திருக்கவில்லை. ஏன் உடனடியாக எரியூட்டினார்கள்; ? இப்படியான குழப்பகரமான நிலையில் நாம் மட்டும் ஓடிச் சென்று பொறுப்பேற்றால் என்ன நடக்கும் ? தவறான ஓர் உடலத்தைக் காட்டி நாமே அதை உறுதி செய்துவிட்டதாக அரசு பிரச்சாரம் செய்யும்.. அத்தகைய பொறிக்குள் சிக்குண்டால் அது பெரிய முட்டாள்தனமான செயலாக அல்லவா முடியும் ? அதைத்தான் விடுங்கள்… எனது தந்தை இருக்குமிடத்தை அவர் இறக்கும்வரை ஏன் சிறீலங்கா அரசு இரகசியமாக வைத்திருந்தது.. இப்படிப்பட்ட சிறீலங்கா அரசு நம்பிக்கைக்குரியது என்று கருதுகிறீர்களா ? சிறீலங்காவின் கதை கேட்டு, இந்தியாவிலேயே ப.சிதம்பரம் ஒருவிதமாகவும் சி.பி.ஐ இன்னொரு விதமாகவும் அறிக்கை விட்டதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.. இதை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் அன்று நாம் ஏன் உரிமைகோரத் தயங்கினோம் என்ற கேள்விக்கான நீதியுடைய பதில் உங்கள் உள்ளத்தில் உருவாகும்.
கேள்வி : சரி அதற்குப் பிறகு வருகிறோம்… உங்கள் சகோதரன் பிரபாகரன் உங்களுடன் தொடர்பு கொள்வதுண்டா.. ?
மனோகரன் : ஆம் அவர் போர் இறுக்கமடைவதற்கு முன்னர்வரை என்னுடன் தொடர்பில் இருந்தார். குறித்துக்கொள்ளுங்கள்… குடும்ப விவகாரங்களை மட்டும் என்னுடன் பேசிக் கொள்வார். சாள்ஸ் சிறந்த முறையில் படித்து எட்டுப்பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்று, கட்டுப்பெத்தை தொழில் நுட்பக்கல்லூரிக்கும் தேர்வானபோது அந்த மகிழ்வை சொல்ல எடுத்தார். இப்படி குடும்பத்தின் ஒவ்வொரு நல்ல நிகழ்வையும் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.. வாழ்வு – தாழ்வு – இன்பம் துன்பம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார்..
கேள்வி : புதுமாத்தளன் சம்பவங்கள் நடைபெற்றபோது அவர் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லையா..
மனோகரன் : தொடர்பு கொள்ளவில்லை.. குடும்பத்தின் நன்மை தீமைகளை பேசியவர்.. சாள்ஸ் இறந்தாக காண்பிக்கப்பட்டபோது மட்டும் ஏன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதுவும் குடும்ப நன்மை தீமைகளுக்குள் வரும்தானே.. மேலும் அப்போது நடேசன் பலருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.. அவர் மூலமாகவேனும்; அந்தச் செய்தியை ஏன் என்னிடம் கூறவில்லை. ஆம்.. அப்படியான நிகழ்வுகள் நடந்திருந்தால் குறைந்தபட்சம் நடேசன் மூலமாவது எனக்கு சொல்லியிருப்பார். மேலும் அப்போது எனது தந்தை அங்கே இருந்தார்.. அவராவது அந்தச் செய்தியை கண்டிப்பாக எனக்குச் சொல்லியிருப்பார். யாருமே என்னிடம் எதுவும் கூறவில்லை, எல்லோரின் கைகளிலும் தொலைபேசி இருந்தது, அது செயற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. பிரபாகரனின் மனைவி எம்முடன் தொடர்பில் இருந்தவர்.. அவர் கூட போன் செய்யவில்லை… ஏன் .. நன்றாக யோசித்துப் பாருங்கள்.. எல்லாவற்றையும் யோசித்தால் எங்கோ ஓர் இனம்புரியாத இருள் விளக்கமின்றி இருப்பது தெரிகிறதல்லவா?
கேள்வி : உண்மைதன்… சரி .. உங்கள் தம்பி பிரபாகரன் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்.. நீச்சல் தொட்டியில் குளிக்கிறார் என்று படங்கள் வெளியாகின அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்.. ?
மனோகரன் : உங்களிடம் முன்னரே சொல்லியிருக்கிறேன்.. அவர் தமிழழேந்தியிடமிருந்து மாதச் சம்பளம் வரவில்லை என்பதால் மகனுக்கு சிறிய விளையாட்டு சாமானையே வாங்கிக் கொடுக்க முடியாது யோசித்தவர். எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். பொதுமக்களின் சொத்தை சுய தேவைக்காக பாவிக்கும் பழக்கம் தெரியாதவர். இரத்தம் சிந்திய மாவீரருக்காக தேடிய பணத்தை தொடுமளவிற்கு இதயமற்றவர்கள் உலகில் இருப்பார்கள் என்று கருதும் தகவல் அவர் மூளையில் இல்லவே இல்லை. எனவே பொதுப்பணத்தில் ஆடம்பர வாழ்வு என்ற பேச்சுக்கே அவர் வாழ்வில் இடமில்லை. ஆனால் பேச்சு வார்த்தை நடைபெற்ற காலத்தில் அவரைப் பார்க்க குடும்பத்தினர் இங்கிருந்து சென்றார்கள். அவர்கள் டென்மார்க்கில் பிளாஸ்டிக் பையில் செய்யப்பட்ட மிகமிக விலை குறைந்த 100 குறோணர் விலையுள்ள ஒரு தண்ணீர் தொட்டியை கொண்டு சென்று கொடுத்தார்கள். அதுதான் சிறீலங்கா அரசு பிரச்சாரம் செய்த ஆடம்பர வாழ்வு. அதைத் தான் நம் தமிழ் உறவுகளும் இணையங்களில் போட்டு பிரச்சாரம் செய்தார்கள். ஒரு தூய போராளியின் வாழ்விற்கும் தனது வாழ்விற்கும் இடையில் யாதொரு வேறுபாட்டையும் அவர் வைக்கவில்லை. அந்தப் பிரச்சாரங்களை எல்லாம் இன்று பிரபாகரன் முறியடித்துவிட்டார்.
கேள்வி : சரி.. பிரபாகரன் இருக்கிறார்.. அவர் தற்போது வெளிப்படவில்லை.. என்று வைத்துக் கொள்வோம்.. இந்த நிலையில் யார் பேச்சைக் கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தேன்றிவிட்டார்களே ?
மனோகரன் : பிரபாகரன் தனக்குப் பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள். அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்றும் கூறியிருக்க மாட்டார்கள். இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.. ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்களே என்பது தெளிவு. பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.
கேள்வி : வட்டுக்கோட்டைத் தீர்மானம் வாக்கெடுப்பில் உள்ளதே..
மனோகரன் : வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது அன்றைய தமிழர் கூட்டணியினரால் எழுதப்பட்ட ஒரு காகிதத் தீர்மானம். அதனடிப்படையில் தாயகத்தில் ஒரு தேர்தலும் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்ததைவிட சிறந்த தமிழீழ அரசை பிரபாகரன் உருவாக்கி முடித்திருந்தார். கடற்படை, ஆகாயப்படை, போலீஸ்பிரிவு, வங்கித்துறை, தரைப்படை, தமிழீழ நிர்வாகம் என்று சட்டம் – நீதி- நிர்வாகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சட்டவாட்சியை வள்ளுவர் காட்டிய நெறியோடு வரையறை செய்து வழங்கிவிட்டார். உலகிற்கே ஒரு முன்மாதிரியான தேசத்தை உருவாக்கி சாதனையும் படைத்துவிட்டார். அதைத்தான் நீங்கள் எல்லோரும் வன்னியில் கண்கூடாக பார்த்துவிட்டீர்கள். தென்னை மரத்தில் ஏறி வட்டுவரை சென்றுவிட்ட ஒருவன் அதிலிருந்து கீழே இறங்கி என்னால் தென்னையின் வட்டுக்கொள்ள முடியுமா என்று கேட்டு வாக்கெடுப்பு வைத்தால் எப்படியிருக்கும் ? இப்படியொரு கேள்விக்கு பதில் ஒன்று தேவையா? இதற்கு பதில் கூறத்தேவையில்லை. சில கேள்விகளுக்கு மேல் வைக்கப்படும் கேள்விகளே அதற்குரிய பதில்களாக அமையும் இதுவும் அந்தவகை சார்ந்ததே.
கேள்வி : அப்படியானால் இப்போது நாடுகடந்த தமழீழஅரசு என்ற இன்னொன்று வருகிறது.. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள் ?
மனோகரன் : நமது நாட்டில் இப்போது உங்கள் வீட்டை நீங்களே போய் பார்க்க வேண்டுமானால் உங்கள் வீட்டுக்கான உறுதியைக் கொண்டு போக வேண்டும். ஆளில்லாமல் கிடக்கும் உங்கள் வீட்டை நீங்களே பார்க்க உறுதி வேண்டும்.. மறந்துவிடாதீர்கள் வாழ்வதற்கல்ல ஒரு தடவை பார்ப்பதற்கு.. உறுதி இல்லாவிட்டால் உங்களை உங்கள் வீட்டிற்கே இராணுவம் அனுமதிக்க முடியாத நிலை இருக்கிறது. பிரபாகரன் வாழ்ந்த வீட்டை சிங்கள மக்கள் பார்ப்பதால் அது இடிக்கப்படுகிறது.. அதற்கும் உறுதி வேண்டுமோ என்னவோ.. ( சிரிப்பு ) நமக்கு உரிமை எங்கே இருக்க வேண்டும் எம் தாயகத்தில்.. வெளிநாடுகளில் வாழ்வோருக்கு சட்டரீதியான வாழ்வியல் உரிமை இருக்கிறது.. ஆனால் நமது தாயகத்தில் சொந்த வீட்டுக்கே போக உரிமையற்று மக்கள் முகாமில் இருக்கிறார்கள். இப்படியான யதார்த்த நிலை இருக்கிறது.. இந்நிலையில் நாடுகடந்த அரசால் சொந்த வீடு கடந்து போவதற்காவது ஓர் உரிமையை பெற்றுத்தர முடியுமா? பிரபாகரன் வெளிநாட்டில் ஓர் அரசை அமைக்கவா போராடினார்.. நாடுகடந்த அரசுபற்றிய கேள்விக்கும் பதிலாக கேள்விகளையே வைக்க முடியும் என்பதை நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள்.. இவைகள் இரண்டும் பிரபாகரன் சொன்ன பாதைகளா என்பதை பிரபாகரன் நேசித்த மக்கள் தீர்மானிப்பார்கள். நாம் பதில் கூற வேண்டிய தேவை இல்லை.
கேள்வி : அப்படியானால் இன்றைய நிலையில் என்னதான் செய்வது ?
மனோகரன் : எனது தம்பி பிரபாகரன் தமிழர் சமுதாயம் பிளவுபடக்கூடாது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தார். புதுமாத்தளனுக்குப் பின்னர் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தை பிளவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகள் பற்றி கருத்துக் கூறுவதைவிட அவற்றின் விளைவுகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். வடக்குக் கிழக்கில் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை, வெளிநாடுகளில் ஆளுக்காள் உருவாக்கியுள்ள தமீழழம் தொடர்பான பணிகள். இவை அனைத்தும் தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றனவா இல்லை கூறுபோட்டுள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும். ஒரு செயல் தமிழினத்தை கூறுபோடுமாயின் அது பிரபாகரனின் விருப்பமாக அமைய மாட்டாது. பிரபாகரன் யாரையும், எந்தத் தளபதியையும் முக்கியமாக முன்னிலைப்படுத்தியது கிடையாது. காரணம் அவருடைய முதன்மைத் தளபதிகள் தமிழீழ மக்களே.. மக்களுக்கு தெரியும் பிரபாகரன் யார் என்பது.. பிரபாகரன் உருவாக்கிய மக்கள் சக்தி மாவீரர்களின் மகத்தான கனவுகளுக்கே சொந்தம், மற்றவருக்கல்ல.. இத்தனை காலம் போராடி, ஒவ்வொரு நொடியும் மரணத்தோடு விளையாடி, வாழ்வுக்காலத்தின் பெரும்பகுதியை தலைமறைவு வாழ்விலேயே கழித்த பிரபாகரன் தனக்காக எதையுமே கேட்கவில்லை. எத்தனையோ பதவிகள் வந்தன, எதையுமே ஏற்கவில்லை.. இன்று மாபெரும் துறவறம் போன்ற வாழ்வை எழுதியுள்ளார்.. அப்படிப்பட்டவர் இப்படியான காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்..
கேள்வி : சரி இப்படியான குழப்ப நிலை வருமென்று கருதி பிரபாகரன் தனது பிள்ளைகளில் ஒருவரையாவது உங்களுடன் அனுப்பியிருக்கலாமே ?
மனோகரன் : நான்தன் சொல்லிவிட்டேனே.. அவர் பற்றற்ற வாழ்வு வாழ்ந்தவரென்று.. மற்றவர்களின் பிள்ளைகள் போராடும்போது தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் பிரபாகரன் என்று திட்டினார்கள். பிரபாகரனிடம் நான் இதுபற்றி பேசியுள்ளேன். என் வாழ்வு இருக்கும்வரை, நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்.. தன் வாழ்வு முடிந்தால் தன் பிள்ளைகளின் வாழ்வும் அதுவாகவே முடியும்.. ஒவ்வொரு போராளியும் பிரபாகரனின் பிள்ளைகள்தான், ஒவ்வொரு தமிழீழ குடிமகனும் அவருடைய உறவுதான். தன் பிள்ளை மாற்றார் பிள்ளை என்ற பேதம் பார்த்து வாழும் ஒருவரா பிரபாகரன் இல்லையே.. தன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி பேதம் காட்டுமளவிற்கு அவர் உள்ளம் ஒளி குன்றியதல்ல. இதுதான் எனது உள்ளம் என்று எந்தத் தளபதியை வைத்தாவது உங்களுக்கு அவர் சொன்னாரா அல்லது அன்ரன் பாலசிங்கத்தை வைத்தாவது சொன்னாரா இல்லையே.. அவர் தனது கொள்கையை சொற்களால் சொல்லாது வாழ்ந்து காட்டிய செயல் வீரர்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகளையும், போராளிகளையும் பிரித்து பேசியோர் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகள் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்களில் யாரை அவர் வெளிநாடு அனுப்புவது சொல்லுங்கள் பார்க்கலாம்..
கேள்வி : புரிகிறது.. இந்த உண்மையை இதுவரை யாருமே சுட்டிக்காட்டவில்லை.. இவைகளைக் கேட்கும்போது இந்த இனத்திற்கு மறுபடியும் பிரபாகரன்தான் வர வேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது.. அவர் வருவாரா ?
மனோகரன் : புதுமாத்தளனுக்குப் பின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன ? எம்மை நம்பிய தமிழீழ மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில் என்ன ? ஆகிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல் பிரபாகரன் தன் வாழ்வை ஒரு போதும் வெற்றிடமாக்கியிருக்க மாட்டார். புதுமாத்தளன் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக நடேசனிடம் ஒரு செய்தியை தெரிவித்தார்… அது புலிகளுக்கு பிறகு வெற்றிடம் என்பது இல்லை என்ற செய்திதான்… அதற்குப் பிறகு பிரபாகரனின் கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.. எனவே அன்று வெற்றிடமில்லை என்று கூறியவர் அதற்கான பதிலைத் தராமல் தன் பணியை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார். ஒன்றுமில்லாத வாய்ப்பேச்சு வீரரின் வெற்றிடத்தில் விடுதலைப் புலிகளை உருவாக்கியவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற முடிவுரையை எழுதிவிட்டே போராட்டம் என்ற முதல் அத்தியாயத்திற்குள் போனவர் பிரபாகரன்.. இப்போது அவர் நேதாஜிபோல ஒரு வெற்றிடத்தை தன் வாழ்வில் எழுதியுள்ளார் என்று முன்னர் கூறியிருந்தேன். இப்போது மறுபடியும் அந்த இடத்திற்கே திரும்பி வருகிறேன்.. அன்று நேதாஜி ஒரு வெற்றிட நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்திய சுதந்திரத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் நேதாஜி கதையின் வெற்றிடத்தில் நிற்கும் மர்மமான உண்மை. பிரபாகரனும் அதே முடிவுரையைத்தான் எழுதியுள்ளார். தமிழ் மக்களின் கனவுகளை நினைவாக்க அவர் இருந்தும் போராடுவார் இல்லாமலும் போராடுவார்.. மறுபடியும் வெற்றிடம்.. வெற்றிடத்தில் யார் வருவார்… மேலும் வசனங்களில் வேண்டுமா இல்லை போதுமா ?
கேள்வி : நன்றி, வணக்கம். உங்கள் பேட்டி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. உங்களை மறுபடியும் அவ்வப்போது சந்திக்க இருக்கிறோம் ..
மனோகரன் : வாருங்கள்.. என் தம்பிபற்றி சொல்ல என் இதயத்தில் மேலும் ஏராளம் செய்திகள் உண்டு.
வெல்வோம் வணக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment