Sunday, April 18, 2010

அன்னை பூபதி நினைவு நாள்...

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 – ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர்.

கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, சிங்களப் பெயர் வைத்து, “திகாடுமல்லை’ என்ற நாடாளுமன்றத் தொகுதியாக உருப்பெற்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழப் பகுதியின் நெற்களஞ்சியமாகும்.

இம்மாவட்டத்தில் அமைதிப்படை 1988 ஜனவரி 2-இல் பெரியதொரு அளவில் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் புலிகள் என்று கூறி 2500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துப் போகப்பட்டார்கள். இவர்களில் 800 பேர் காங்கேயன்துறை முகாமில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோர் விவரம் அறியக் கிடைக்கவில்லை.

இவர்களில் விடுதலையானவர்கள் வெகு சிலரே. பெரும்பாலோர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேடுதல் வேட்டையில் இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் வயது வித்தியாசமே இல்லையென்பது வேதனை தரும் விஷயமாகும்.

இதன் ஆரம்பம், “மட்டக்களப்பு நகரின் வெள்ளைப்பாலத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த இரு இளம்பெண்களை விரட்டிப் பிடித்து, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதுதான். இதுவே முதல் சம்பவம்’ என்று பழ.நெடுமாறன் தனது நூலில் கூறியுள்ளார்.

இந்தப் பாலியல் பலாத்காரத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று “முறிந்தபனை’ நூல் விரிவாக விளக்கியிருக்கிறது. அதாவது பக்.365-லிருந்து 370 வரையும், 377-லிருந்து 412 வரையும் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என வயதுக்கு வராத மற்றும் பேரிளம் பெண்கள் பேட்டியளித்திருக்கிறார்கள். ரத்தமும், நிணமும், கண்ணீரும், கம்பலையும், கதறலும், பைத்தியமும் பிடித்த நிலையுமான சம்பவங்களின் பதிவுகள் இப்பக்கங்களில் பதியப்பட்டுள்ளன.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் நிலை என்ன?

“நமது சமூகத்தில் தன்னுடைய சுய விருப்பத்துக்கு எதிராக ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டு விடுமானால், அவள் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அப்பெண் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. ஆகையால், பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் தங்கள் துன்பங்களையும், மனக்காயங்களையும் மெற்னமாகத் தமக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு, குறித்த சம்பவங்களைப் பற்றிப் புகார் செய்ய முன் வருவதில்லை.

“பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் சமூகக் களங்கத்தையும் ராணுவ அச்சுறுத்தலையும் மீறி, புகார் செய்தபோது அவர்கள் போராளிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்ததால்தான் இவ்வாறு புகார் செய்வதற்கு தைரியம் வந்திருக்கிறது.. என்று கூறி அவர்கள் மேலும் காவலுக்குட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்” – என்று “முறிந்தபனை’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, கடுமையான வார்த்தைகள் சி.புஷ்பராஜாவின், “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் காணப்படுகின்றன. (நாம் மென்மையான விமர்சனத்தை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளோம்.) பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது பெண் புலிகள் என்று சொல்லப்பட்டும், ஆயுதம் தேடுகிறோம் என்று பெண்களைத் தீண்டுகிற செயலும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது (பக்.459 – 460).

இச்செயல்கள் மட்டக்களப்பில் அதிகரித்த நிலையில், தாய்மார்கள் கொதித்து எழுந்தனர். இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:

“திலீபன் வழியைப் பின்பற்றி அன்னையர் முன்னணி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக “உடனடியாகப் போர் நிறுத்தம் மற்றும் புலிகளுடன் பேச்சு வார்த்தை’ மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இக் கோரிக்கை பயனளிக்காது போகவே, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் எதிரே அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெண்களும் மாணவிகளும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்’.

அந்தக் கூட்டம் அதிகரிக்கவே, சிங்களக் காவல்படை, சந்தையில் திரண்டிருந்த பெண்களைச் சுற்றிவளைத்துத் தாக்கத் தொடங்கியது. பெண்களும் குழந்தைகளும் பலத்த காயத்துக்கு ஆளானார்கள். கலைந்தோடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அமைதிப் படையினர் இந்த அடக்குமுறையை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய கட்டுப்படுத்தவில்லை.

இதன் எதிரொலியாக, அன்னையர் முன்னணி – அடையாள உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது. இதன் எழுச்சி கண்டதும், பிரதமர் ராஜீவ் காந்தி “அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை; புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது’ என்றார்.

அன்னையர் முன்னணியினரைப் பேச்சு வார்த்தைக்கு அமைதிப்படை அழைத்தது. பிரிகேடியர் சந்தேஷ் கலந்துகொண்டு, “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் – அதன்பின்னரே பேச்சுவார்த்தை’ என்றார்.

அன்னையர் முன்னணியினரோ, “”எங்கள் நகைகளைக் கொடுத்து, எங்களைக் காக்க, எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்” என்று கேட்டனர்.

பேச்சுவார்த்தை முறிந்தது; பலனில்லை. பிப்ரவரி 10-ஆம் தேதியன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜே.என்.தீட்சித் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.

மாறாக, அந்தப் பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. ராணுவ முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12,13,14 நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள் பயப்படவில்லை. எழுந்தும் செல்லவில்லை. மேலும் மேலும் கூடினர்.’

அன்னையர் முன்னணியின் ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தையொட்டி, அன்னையர் முன்னணி முன்னிலும் கடுமையான முடிவுகளை எடுத்தது. சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற முடிவுக்கு வந்தது. யார் முதலில் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து கடும்போட்டி நிலவியது. இரு பிள்ளைகளை சிங்கள அடக்குமுறைக் கொடுமைக்கு பறிகொடுத்த அன்னை பூபதி முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும் உரிமை கோரினார். சீட்டுக்குலுக்கிப்போட்டதில், அன்னமா டேவிட் தேர்வானார்.

1988-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் அன்னம்மா மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்பாக சாகும்வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அன்னம்மா டேவிட் இறந்தால், அமைப்பாளர்கள் மீது வழக்குப் போடப்படும் என அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் அரசியல் ஆதாயம் தேட, பலவந்தமாகத் தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தி உள்ளார்கள் என்று எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி அன்னம்மா டேவிட் தூக்கிச் செல்லப்பட்டார்.

இதன் பின்னர், அன்னை பூபதி களத்தில் குதித்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் முன்பாக, தனது சுயவிருப்பம் காரணமாக உண்ணாவிரதம் இருப்பதாகவும், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சுயநினைவு இழந்தால் என் குடும்பத்தார் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், முக்கியமாகத் தூக்கிச் செல்லக்கூடாது என்றும் மரணசாசனம் எழுதிக்கொடுத்தார்.

13-10-1988 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். மாமாங்கத் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அமைதிப்படையைக் குறித்து எங்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மற்ற இயக்கங்கள் துணைகொண்டு பூபதி அம்மாளைத் தூக்கிச்செல்லும் முயற்சியும், துப்பாக்கியால் சுட்டும், பதற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

மட்டக்களப்பை நோக்கி உலகப் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். பூபதி அம்மாளின் உண்ணாவிரதத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்பட்டு, இலங்கைத் தமிழாசிரியர் வணசிங்கா, கிறிஸ்தவ பாதிரியார் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ ஆகியோருடன் ஏற்கெனவே கைதாதி விடுதலைபெற்ற கிங்ஸ்லி இராசநாயகாவும் கைது செய்யப்பட்டனர்.

அன்னை பூபதியின் கணவர் கணபதிப் பிள்ளையை அழைத்து மிரட்டிப் பார்த்தார்கள். அவர் பணியவில்லை. லட்சியம் ஒன்றுக்காக அவர் விருப்பப்பட்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று பதிலளித்தார். பூபதி அம்மாள் 13-10-1988 அன்று, உண்ணாவிரதத்தின் 31-ஆம் நாளில் மரணமுற்றார்.

அவரது இறுதி ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. அவரது உடலை எடுத்துச்செல்ல அமைதிப்படை, சிங்களக் காவல்படை இரண்டும் முயன்றன. பூபதி அம்மாளின் உடல், அன்னையர் முன்னணியால் மறைத்து வைக்கப்பட்டு, திடீரென ஊர்வலம் தொடங்கியது. நாவலடி கடற்கரை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது. ஒரு பக்கம் கடல்; மறுபக்கம் மக்கள் கடல்!

“தமிழீழப் பெண்டிரின் எழுச்சியின் வடிவமாக பூபதி அம்மாள் என்றும் திகழ்வார்’ என்று பழ.நெடுமாறன் அந்தக் கட்டுரையை முடித்துள்ளார்.

– பாவை சந்திரன்

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி.

திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.

தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும்இ தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.

ஆனால் அன்னை பூபதி என்பவர் வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும்இ தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர். அவ்வாறு நோக்குவோரே அவரின் போராட்டத்தில் இருந்து தெறித்த அக்கினிப் பொறிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.

ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல ! அன்னைப் பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கெதிராக போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர். ஆகவேதான் அவரை போர்க்கோலம் பூண்ட அன்னை என்று நோக்குவதே சாலப் பொருத்தமானதாகத் தெரிகிறது.

நமக்கு போரில் வெற்றி வேண்டுமானால் வெற்றிக்கு வாய்ப்பான இடத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்க வேண்டும் என்பார் வள்ளுவர். யானையை முதலை வெல்ல வேண்டுமானால் அது நீருக்கு வரும்வரை முதலை காத்திருக்க வேண்டும். அதுபோல முதலையை யானை வெல்ல வேண்டுமானால் முதலை தரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது குறள் தரும் விளக்கம்.

இப்படி தன் பலத்தையும்இ மாற்றான் பலத்தையும் சீர் து}க்கி இறுதியாக இந்திய இராணுவத்திற்கு எதிராக சத்தியப் போரொன்றைப் புரிவதே சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார் அன்னை பூபதி.

சத்தியம் நெருப்புப் போன்றது. அது உள்ளத்தில் மட்டும் இருப்பது ! நிராயுதபாணியாக நின்று நடாத்தப்படும் ஒரு போர். சத்தியத்தை ஓர் ஒப்பனைக்கான போர்வையாகப் போர்த்தியிருப்போர் நிஜமான சத்தியத்துடன் மோதினால் போலியான சத்தியப் போர்வை எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும்.

இந்த உண்மையை நன்கு கண்டு கொண்டு 1988ம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை என்ற இந்த வீரத்தாய் ! அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஒன்று யுத்தத்தை நிறுத்த வேண்டும்இ இரண்டு இந்திய சிறிலங்கா அரசுகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் ! இதற்காகவே அவர் உயிர் கொடுத்துப் போராட முன்வந்தார்.

இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை ! அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது ! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.

அவரது மரணம் பொறி தட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதி யாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது !

அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது ! ஆன்மாPதியான போராட்டத்தின் அதிர்வலைகள் கண்ணுக்குத் தெரியாமல் பரவிச் செல்பவை ! அவற்றின் சக்தி எந்தப் பலமுள்ள அரசையும் வேரோடு பிடுங்கி வீசிவிடும் சக்தி வாய்ந்தது. ரஸ்யர்களின் பட்டினி நெருப்பு உலகத்தை வெல்லத் துடித்த ஜேர்மனிய நாசிகளையே து}க்கி வீசியது ! காந்தியத்தின் பட்டினி நெருப்பு பிரித்தானிய அரசை இந்திய மண்ணிலிருந்து அகற்றியது ! இவைகள் ரஸ்யாவிலும்இ இந்தியாவிலும் மட்டுமே நடக்கும் அது தமிழீழத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

பஞ்ச பூதங்களில் அழுக்கில்லாதது நெருப்பென்று கூறுவார்கள். ஆனால் அந்த நெருப்பிடமும் ஒரு குறை இருக்கிறது. மற்றவைகளை எரிப்பதன் மூலம் தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டது நெருப்பு. எரிந்து போகும் அப்பாவிகள் இல்லாத இடத்தில் நெருப்புக்கும் இடமில்லை.

இந்த நெருப்புப் போலத்தான் இன்று உலகில் உள்ள அரசுகளின் இயல்பும். தம்மிடம் அழுக்கில்லை என்று புனிதம் பேசுவதில் அவற்றிற்கு இணையான புனித நெருப்புக்கள் இந்த உலகிலேயே கிடையாது. ஆனால் மற்றவர்களை எரித்து தாம் மட்டும் வாழ்வதில் அவை கொண்டுள்ள சுயநலம் இருக்கிறதே அதுவும் இந்த நெருப்பைப் போன்றதுதான்.

ஈழத் தமிழினத்தை ஏமாற்றி அவர்களை எரிந்து போகும் விறகுகளாக்கி அதில் தான் நிலைபெற ஆசை கொண்ட சிறிலங்காவின் சுயநலம் நெருப்பு போன்றதுதான். அந்த நெருப்பு அணைந்து போகாமலிருக்க அடிக்கடி காற்றாக வீசி உதவிக் கொண்டிருக்கிறது இந்திய இராஜதந்திரமும் அதே வகையான நெருப்புத்தான்.

இந்த இரு நெருப்புக்களுடனும் தனியாக நின்று போராடியதுதான் அன்னை பூபதி என்னும் சத்திய நெருப்பு ! இந்த நெருப்பு மற்றவர்களை எரித்து தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டதல்ல ! அது தன்னைத்தானே அழித்து மற்றவர்களுக்கு ஆத்ம ஒளி கொடுப்பது. மற்றவர்களை அழிக்க வந்திருக்கும் ஆதிக்க நெருப்பை அடையாளம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்டது. அந்த வல்லமைதான் இந்திய இராணுவமே கட்டம் கட்டமாக தழிழீழ மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.

எப்போதுமே தேசங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியும் தேசம்! மற்றது கண்ணுக்குத் தெரியாத தேசம்! கண்ணுக்குத் தெரியும் தேசத்தை பகைவர்கள் ஆக்கிரமிக்கலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத தேசத்தை எந்தப் பகைவரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத தேசம் மக்களின் இதயங்களில் உருவாவது ! உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே முதலில் உருவானது மக்கள் இதயங்களில்தான். அதன்பின்புதான் அவை கண்ணுக்குத் தெரியும் தேசங்களாக உருவெடுத்தன.

அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும்இ அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் து}க்கிப் போட்டது.

அன்னை பூபதி கண்களை மூடஇ தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.

சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !

நன்றி-மீனகம்

No comments: