இந்த மூடப்பட்ட மண்டபத்தில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
சரியான வழி எங்கேயும் சொல்லப்படவில்லை, சித்தன்னவாசல் என்ற நேம் போர்ட்டை நாங்கள் பார்த்த இடங்களில் அந்த போர்ட்கள் நிச்சயம் தேவையில்லை என்றே கூட சொல்லலாம். பாழடைந்த மண்டபம் ஏதோ ஒன்றிற்குச் செல்லும் வழி போல் இருந்தது, அங்கே ஒரு பூங்கா வேறு கேட்கணுமா லவ்வர்ஸ் ஸ்பாட் ஆகிவிட்டது, கல்லணை முக்கொம்பு புளியஞ்சோலை என்று கெடுத்துவிட்டு இப்பொழுது கல்லூரி இளசுகளும் வகையறா ஆட்களுக்கும் புகலிடமாக இப்பொழுது சித்தன்னவாசல் இருக்கிறது.
நிறைய எதிர்பார்த்துப் போனேன் என்பது உண்மைதான், ஆனால் மண்டபத்தைப் பார்த்த பொழுது அத்தனை பிரமிப்பு வரவில்லை பின்னர் அங்கிருந்த தொல்பொருள்த்துறை ஊழியர் சொல்லப்போய் தான் விவரம் புரிந்தது. பின்னர் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு – ராஜா முகமதுவில் படித்து இன்னும் விவரங்கள் தெரிந்து கொண்டேன். வெகு சமீபத்தில் தான் அந்த ஓவியங்களைப் பாதுகாக்க அரசாங்கம் முயற்சித்திருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.
கையில் 500 ரூபாயைத் திணித்தாவது அன்றைக்கு புகைப்படம் எடுத்துவிடும் மனநிலையில் தான் நான் இருந்தேன் ஏனென்றால் தனியாக கார் வைத்துக் கொண்டு சித்தன்னவாசலைப் பார்க்க வந்த பொழுது குடுமியான்மலை திட்டத்தில் இல்லை. காசு செலவு செய்து வந்துவிட்டு புகைப்படம் எடுக்காமல் போக மனம்வரவில்லை, ஆனால் தொல்பொருள்த்துறை ஊழியர் நிச்சயமாக அனுமதிக்க மறுத்துவிட்டார். நான் வற்புறுத்தவில்லை எனக்கு வருத்தத்தை விடவும் சந்தோஷமே அதிகம் இருந்தது. அதனால் என்வசம் சித்திரங்களின் புகைப்படம் இல்லை.
மேலே சமணர் படுக்கைக்கு சென்று பார்த்ததும் ஏன் கம்பிவேலி போட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது, சமணர் படுக்கையை காதலர்கள் தங்கள் வேலைகளை செய்யும் இடமாக மாற்றியதை வேதனையுடன் சொன்ன அவர் இதனாலெல்லாம் வேலி போடுவேண்டியதாகிவிட்டது என்று வருத்தப்பட்டார்.
சமணர்படுக்கையின் தற்போதைய நிலை – பலங்காலத்துக் கல்வெட்டுக்களைக் காட்டிலும் நம் காலத்து ஹார்டின்களும் இன்ன பிற பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
நாங்கள் சென்றிந்த பொழுதும் நாலைந்து கப்புள் பூங்காவிலும் மேலே சமணர் படுக்கை அருகில் மூன்று கப்புள்களும் இருந்தனர். லால் பாஹ், கப்பன் பார்க் அளவிற்கு இறங்கி வேலை பார்ப்பதாக தொல்பொருள் துறை ஊழியர் புலம்பினார். இதில் தண்ணியடித்துவிட்டு அவரிடம் வேறு கரைச்சல் செய்வார்களாம், வெட்கக்கேடு. சரி நல்ல விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்து அப்படியே நகர்ந்துவிட்டது.
எனக்குத் தெரிந்து மாமல்லன் என்ற பெயர் வரும் பொழுதெல்லாம் நீங்கள் பல புத்தகங்களில் ஒரு அரசனுடைய சித்திரம் காண்பிக்கப்படும், ஆனால் அது அவர் இல்லை என்றும் ஒரு பாண்டிய மன்னனுடைய படம் தான் அது என்றும் கண்டுபிடித்திருப்பதாக தொல்பொருள் துறை நண்பரும் சொன்னார் பின்னர் புத்தகமும் அதையே சொன்னது. 1000 வருடங்களுக்கு முன் வரைந்திருக்கிறார்கள் இந்த ஓவியங்களை எனும் பொழுது ஆச்சர்யம் வருகிறது, மண்டபத்தின் விதானத்தில் எப்படி வரைந்திருப்பார்கள், அதிலும் அளவுப் பொருத்தம் எல்லாம் அவ்வளவு அருமையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து எல்லோருமே ஒரு முறை சித்தன்னவாசலுக்குச் சென்று அந்த ஓவியங்களைப் பார்த்துவரவேண்டும் என்று நினைக்கிறேன்.
கீழிருப்பது சித்தன்னவாசல் என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு எழுதிய ராஜா முகமது அவர்கள் வானொலியில் வாசித்த கட்டுரையின் வடிவம் கீழே, சொல்லப்போனால் சித்தன்னவாசலைப் பற்றி விரிவாகவே அலசுகிறது கட்டுரை.
சித்தன்ன வாசல்
புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் வழித்தடத்தில் 15 கிமீ தூரம் சென்றதும் உயரமான ஒரு குன்று நம் கவனத்தை கவருகிறது. இதுதான் சித்தன்னவாசல். இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகளும் முதுமக்கள் தாழிகள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு உலகப் புகழ்வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக்கோயில் ஆகியன இந்த சிறிய கிராமத்தின் தொன்மைச் சிறப்பை நமக்கு விளக்குகின்றன. இவ்வூர் அண்ணல் வாயிலுக்கு(அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும் இங்கு சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னவாயில் என்று வழங்கப்பட்டு பின்னர் சித்தன்னவாயில், சித்தன்னவாசல் என மருவி வழங்குவதாகக் கொள்ளலாம். இங்குள்ள பிராமிக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சிறுபாவில் என்பது சித்துப்போசில் என்பதன் திரிபு என்று அறிஞர்கள் கருதுகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளும் இவ்வூரைச் சேர்ந்த பழமையான சமணச் சின்னங்களும் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் காஞ்சி மாநகர் புத்தமத மையமாக விளங்கியது போல சித்தன்னவாசல் சமண மத மையமாகத் திகழ்ந்ததாக அறிகிறோம்.
பேருந்து தடத்திலிருந்து குகைக்கோயிலுக்குச் செல்லும் பிரிவுச் சாலையின் கிழக்குப் பகுதியில், அக்காலத்தில், இறந்தவர்களைப் புதைப்பதற்குப் பயன்படுத்திய கல்லறைகளும் முதுமக்கள் தாழிகளும் காணப்படுகின்றன. இவைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை கருங்கல் பலகையினால் ஆன நீள் சதுரக் கல்லறைகள், பல, தரையில் புதைந்திருப்பதையும் அவற்றைச் சுற்றி செம்புறைக் கற்கள் வட்டமாக அமைந்திருப்பதையும் காண்கிறோம். இன்னும் சில கல்வட்டங்களுள் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவை இவ்விடத்தின் காலத்தால் முற்பட்ட வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன.
குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர் தான் ஏழடிப்பட்டம். ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கியிருந்த இடம்.
இந்த குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியிலிருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள ஏழு படிக்கட்டுகளைக் குடைந்து குகையினுள் நுழைகிறோம். எனவே தான் இவ்விடம் ஏழப்பட்டம் எனப் பலராலும் அழைக்கப்படுகிறது. ஆனால் உலக வாழ்க்கை விடுத்து ஏழுவிதமான ஆன்மீக உறுதிகளை மேற்கொண்டு, உண்ணாநோன்பு இருந்து உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனப் பெயர் பெற்றது எனக் கொள்ளுதல் பொருந்தும். எனினும் இப்பெயர் மிகவும் பிற்காலத்திலேயே வழக்கிற்கு வந்ததாகத் தெரிகிறது.
குகையில் நுழைந்ததும் ஒரு ஏர்கண்டிஷண் தியேட்டருக்குள் நுழைந்தது போன்ற உணர்வு, அவ்வளவு குளிர்ச்சி குகையின் தரையில் 17 படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை வழவழப்பாகவும் ஆக்கப்பட்டுள்ளன. படுக்கையின் ஒரு பகுதி தலையணையாக பயன்படுத்தும் வண்ணம் உயர்ந்துள்ளது. இந்த படுக்கை ஒன்றின் விளிம்பில் தான் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு சமண முனிவரைப் பற்றீய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. இது இந்தக் குகையின் தொன்மையைக் காட்டுகிறது. கி.பி. 10ம் நூற்றாண்டுவரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருந்திருக்க வேண்டுமென்பதற்கு இங்குள்ள இன்னும் சில கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.
குன்றின் மேற்கு முகப்பில் எளிதாகச் சென்றடையக்கூடிய பகுதியில் அறிவர் கோயில் என்னும் சமண குகைக்கோயில் அமைந்துள்ளது. கருங்கல் மலையைக் குடைந்து இந்தக் குகைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குகைக்கோயிலில்தான் நமது சிந்தையைக் கவரும் ஓவியங்கள் உள்ளன. மரம் போன்ற அழியும் பொருட்களில் கோயில் கட்டுவதை விடுத்து இதுபோன்ற குகைக்கோயில் எடுக்கும் பழக்கத்தை கி.பி.ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் தமிழகத்தில் அறிமுகம் செய்தான். அந்த குகைகளில் ஓவியம் தீட்டி வைக்கும் பழக்கமும் ஏற்பட்டது. கி.பி 7ம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே பல்லவர்கள் ஆட்சியும் தெற்கே பாண்டிய மன்னர்களின் ஆட்சியும் நிலவியது. பல்லவர் கலைப் பாணி பாண்டிய நாட்டிலும் பரவத் தொடங்கியது. இக்காலத்தில் சித்தன்னவாசல் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்தப் பகுதியாகும்.
மகேந்திரவர்ம பல்லவன், மண்டகப்பட்டு, வல்லம், திருச்சி ஆகிய இடங்களில் குகைக்கோயில்கள் எடுப்பித்தப் பாணியைப் பின்பற்றி சித்தன்னவாசலிலும் பாண்டிய மன்னர்களால் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டிருக்க வேண்டும். சித்தன்னவாசல் குகைக் கோயிலும் ஓவியங்களும் மகேந்திரவர்ம பல்லவனின் கலைப்பாணியை ஒத்திருப்பதால் இது பல்லவர் கலைப்படைப்பு எனவும் மகேந்திரவர்மன், அப்பரின் முயற்சியால் சைவனாக மாறுவதற்கு முன்பு சமண மதத்தைப் பின்பற்றியபோது இந்த சமண குகையை எடுப்பித்திருக்கலாம் என்றும் கருத்தப்பட்டு வந்தது.
ஆனால் குகைக்கோயிலின் வெளிப்பக்கம் தென்புறச் சுவற்றில் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இது பாண்டிய மன்னர்களது கலைப்படைப்பு என்பது தெரியவந்தது. கி.பி 9ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட, ஸ்ரீமார ஸ்ரீ வல்லப பாண்டியன் காலத்தில்(815 – 862) மதுரை ஆசிரியன் இளங்கௌதமன் என்னும் சமண முனிவர் குகைக்கோயில் முன் மண்டபத்தைப் புதுப்பித்து தற்போது நாம் காணும் ஓவியங்களையும் வரைந்து வைத்ததாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
"திருத்திய பெரும்புகழ் தேவதரிசனத்து
அருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
அறன்கிளர் நிலைமை இளம்கௌதமன் எனும்
வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
அவனிபசேகர சீர்கெழு செங்கோல் சீரீவல்லபன்"
இந்தக் கல்வெட்டுச் செய்தியாகக் கொண்டும் காவிரிக்குத் தெற்கே மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சி ஏற்பட்டிருக்கவில்லை என்பதைக் கொண்டும் சித்தன்னவாசல் ஓவியம் பல்லவ மகேந்திரவர்மன் காலத்தது அல்ல என்பது தெரியவருகிறது.
குகைக்கோயில் 160 சதுர அடி, அளவுள்ள ஒரு முக மண்டபத்தையும் அதையடுத்த 100 சதுர அடி அளவுள்ள சிறிய ஒரு கருவறையும் கொண்டது. முன் மண்டபத்தின் முகப்பில் இரண்டு தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவர் மாடத்தில் ஒரு சமண ஆசிரியரின் (திருவாசிரியன்) சிற்பமும், தெற்கு மாடத்தில் ஐந்து தலை பாம்பு குடைவிரித்திருக்க வீற்றிருக்கும் 23வது சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் சிற்பமும் உள்ளன. இடது பக்கமும் நடுவிலும் உள்ள சிற்பங்கள் முக்கடையின் கீழ் உள்ளதால் தீர்த்தங்கரர்கள் என்றும் வலது பக்கம் உள்ளது ஒரு குடையின் கீழ் உள்ளதால் இது ஒரு சக்கரவர்த்தியின் சிற்பம் என்று சொல்லலாம். குகையின் முகப்பிலுள்ள சிறிய மண்டபம், அலக்சாண்டர் டாட்டன்ஹாம் சமஸ்தான ஆட்சியாளராக இருந்த போது குடுமியான்மலை, பனங்குடி ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகத் தெரியவருகிறது.
சிற்பங்களை விட இங்குள்ள ஓவியங்களே நம் மனதைக் கவர்ந்திழுக்கின்றன. குகைக்கோயிலின் தரை நீங்கலாக மற்ற பகுதிகள் அனைத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. அழிந்தவை போக எஞ்சியுள்ள ஓவியங்களை முன் மண்டபத்தின் விதானத்திலும் கருவறையின் விதானத்திலும் காணலாம். இந்த ஓவியங்கள் Fresco-Secco என்னும் முறையில் தீட்டப்பட்டுள்ளன. கருங்கல் பரப்பை பொளிந்து சமப்படுத்தி சுண்ணாம்பு சாந்து பூசி அதன்மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழப்பாகத் தேய்ந்து அப்பரப்பில் ரேகைகளும் வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளிலெல்லாம் சமீப காலத்தில் தோன்றிய இவ்வகைப்பாணி ஓவியக்கலை வெகுகாலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வழக்கத்திலிருந்தது. இதற்கு சங்க இலக்கியங்கள் பல சான்று பகர்கின்றன. மனித உணர்வுகளையும் அங்க அசைவுகளையும் ஓவியங்களில் வெளிக்கொணரும் பாங்கு ஓவியர்கள் கையாண்ட உத்திகள், சங்ககால அரண்மனை சித்திர கூடங்களின் சிறப்பு ஆகியன பற்றியெல்லாம் பரிபாடல், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சங்க நூல்கள் நிறைய செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஓவியச் செந்நூல் என்றொரு நூல் இருந்ததை மணிமேகலைக் குறிப்பிடுகிறது. சங்ககால ஓவியங்களை காணும் வாய்ப்பினை நாம் பெறவில்லையாயினும் இலக்கியங்கள் கூறும் இலக்கணத்தோடு தமிழக சித்திரக்காரர்கள் சித்தன்னவாசல் ஓவியங்களைத் தீட்டி நமது கண்ணூக்கும் விருந்தாக்கியிருக்கின்றனர்.
கருவறையின்(உள் மண்டபம்) விதானத்தில் ஓவியம் வரையப்பட்ட பட்டுத்துகில் ஒன்று விரிந்துள்ளது போன்ற காட்சியினைக் காண்கிறோம். இதில் பல வட்டங்களும் சதுரங்களும் இணைப்பின்னி ஒரு தொகுதியாக விளங்குகின்றன. சதுரங்களில் தாமரைப் பூக்கோலமும் வட்டங்கள் ஸ்வஸ்திக் வடிவத்தில் நான்கு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மேல் இரண்டு பிரிவில் இரண்டு மனித உருவங்களும் கீழ் இரண்டு பிரிவில் இரண்டு சிங்கங்களும் மிகத் துல்லியமாக வரையப்பட்டுள்ளன.
முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்தரிக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் நம் சிந்தையைக் கவருகிறது. சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்த தாமரைத் தடாகம்தான். மணிமேகலைக் கூறும், வித்தகரியற்றிய கண்கவர் ஓவியங்கள் இவைதானோ என எண்ணத் தோன்றுகிறது. பசுமையான இலைகளுடன் தாமரையும் அல்லியும் இந்த தடாகத்தில் பூத்துக் குலுங்குகின்றன. பலவிதமான மீன்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடுகின்ற்ன. யானைகள் நீரக் கலக்கி களித்திருக்கின்றன சுற்றுச் சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றம் இயல்பாகவே உள்ளது. துள்ளிக்குதிக்கும் மீன்கள் மீனலோசினி மீனாட்சியின் கண்களுடன் போட்டியிடுகின்றன. அன்னம், சிறகி, வாத்து போன்ற பறவைகள் தங்கள் பெடைகளுடன் குஞ்சுகளுடன் குலாவிக் கொண்டிருக்கின்றன. மருட்சியுடன் விழித்துக் கொண்டு "யார் எனது குஞ்சுகளை மிரட்டுவது" என்று கேட்கும் பாவனையில் தனது குஞ்சுகளுக்கு அடைக்கலமளிக்கப் பறந்தோடி செல்லும் ஒரு சிறகியின் ஓவியத்தோற்றம் தாயன்பு எவ்வுயிர்க்கும் பொதுவானது என்பதனை உணர்த்துகிறது.
தாமரையும் அல்லியும் கூட மொட்டாகவும் இதழ் விரித்தும் இயற்கையின் விதியை நம் கண்முன் கொண்டு வருகின்றன. பவ்யர்கள் என்னும் கந்தர்வ புருஷர்கள் நீராடி வழிபாட்டிற்கு பூக்களை பறித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக தடாகம் முழுவதும் எங்கு நோக்கினும் உயிரோட்டம் நிறைந்த கண்கொள்ளாக் காட்சி. இங்கு காணப்படும் அனைத்துமே சுறுசுறுப்புடன் இயங்குவதுபோல நமக்குத் தோற்றமளிக்கின்றன. மனதிற்கினிய இந்த ஓவியங்களை எப்படித்தான் வரைந்திருப்பார்களோ என்று எண்ணும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. சமண புராணங்கள் கூறும் சுவர்க்கங்களுள் ஒன்றாகிய கடிக பூமியிலுள்ள சமசரண மண்டபத்திற்குச் செல்லும் வழியில் உள்ள தாமரைத் தடாகத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது இந்தக் காட்சி, எனக் கூறப்படுகிறது.
தூண்களின் முகப்பில் நாட்டியக் கணிகையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இருப்பினும் இந்த கன்னியரின் ஓவியங்கள் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், நாட்டிய சக்கரவர்த்தி நடராசரின் தாண்டவத்தை நினைவுபடுத்துகின்றன. நாட்டியக் கச்சையணிந்து பலவித அணிகலன்களையும் அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவ்விரு கன்னியரும் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்து இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.
இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த நாட்டிய பாவனைகளையும் நாட்டியக்கலை விதிகளையும் தெரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் நல்ல சான்று பகிர்கின்றன. அஜந்தா ஓவியங்களில் கூட இது போன்ற நாட்டிய சாத்திர விதிகள் பின்பற்றப்படவில்லை. ஆகவே சித்தன்னவாசல் நடன கன்னியரின் ஓவியங்கள் இந்திய நாட்டியக்கலைக்கே சிறப்பு செய்கின்றன.
தென்புறத்தூணின் வடக்கு முகத்தில் மணிமுடியுடனும் கம்பீரத் தோற்றத்துடன் காணப்படும் ஓவியம் இந்த கோவிலுக்கு திருப்பணி செய்வித்த ஸ்ரீமார ஸ்ரீ வல்லப பாண்டியன் என்றும் அவனுக்குப் பின்னால் மிடுக்கான தோற்றத்துடன் உள்ள ஓவியம் அவனது தேவி என்றும் கருதப்படுகிறது. இதுவரை சொன்ன ஓவியங்களைத் தவிர தூண்களுக்கு மேலே உள்ள விட்டத்திலும் அதிலிருந்து நீண்டிருக்கும் கொடுங்கையிலும் தாமரை மலர்களும் அன்னப்பறவைகளும் வரையப்பட்டுள்ளன.
உயிரோட்டம், இயற்கையின் இலக்கணம் அங்க அளவுப் பொருத்தம் லாவண்யம் ஆகிய பண்புகளனைத்தும் அமைந்தவையே உயர்கலை ஆகுமென்றால் இக்குணங்க்கள் அனைத்தும் பொருத்தப் பல உயிரனங்களையும் மலர்களையும் உயிரோட்டத்துடன் இங்கு படைத்திருக்கும் சித்திரக்காரர்கள் மணிமேகலை கூறும் வரந்தரவெழுதிய லோவிய மாக்களே ஆவார்கள்.
சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய உபயோகப்படுத்திய வண்ணங்கள் யாவும் இயற்கை கனிப்பொருள்களே ஆகும் கருப்புக்கு கரிப்பொடியும், சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்கு இவ்வண்ண காவிக்கற்களும் நீல நிறத்திற்கு நீலக்கல்லும் பிறவண்ணங்களுக்கு இந்த வண்ணங்களின் கலப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும் அமைதியையும் பண்பட்ட கலைத்திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காணமுடிகிறது.இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை சித்தன்னவாசல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
காலத்தின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும், இன்று நாம்காணும் எஞ்சியுள்ள ஓவியங்கள் அக்கால தமிழகத்தில் ஓவியக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள காலத்தால் முற்பட்ட சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது சிந்தைக்கு விருந்தளிக்க சித்தன்னவாசல் ஓவியக்கூடம் அன்புடன் உங்களை அழைக்கின்றது.
1 comment:
படிக்க மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் சொன்ன செய்தி மற்றும் சமணப்படுகை படங்கள் அழகு. இந்த இடங்களின் தற்கால நிலை வேதனை அளித்தாலும், அதனை மீறி நிறைய பேர் இந்த இடங்களைக் காணும் ஆர்வத்தை அளித்தது. நன்றி.
Post a Comment