Wednesday, December 8, 2010
பாடலாசிரியர் தாமரையை சுவிஸில் குறிவைத்த கருணா கும்பல்?
லண்டனில் ராஜபக்ஷ திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்திருக்கிறது! அடுத்த கட்டமாக ராஜபக்ஷ மீதான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் நாளுக்காக தமிழினத்தின் அத்தனை முனைப்புகளும் தீவிரமாகி உள்ளன.
இந்த நிலையில் தமிழினத்தின் ஒருங்கிணைப்பைச் சிதைக்கும் விதமாக வழக்கமான குள்ளநரித்தனங்களை சிங்கள அரசு மீண்டும் செய்யத் தொடங்கி இருக்கிறது. மாவீரர் திருநாளை அனுசரிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் போன பாடலாசிரியர் தாமரை, கருணாவின் ஆட்களால் கண்காணிக்கப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களையே அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது.
கடந்த 26-ம் தேதி சுவிட்சர்லாந்து போன தாமரை, மூன்று நாட்களாக புலம்பெயர் மக்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மூன்றாவது நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு கும்பலை, சுவிட்சர்லாந்து பொலிஸ் சந்தேகத்தின் பேரில் வளைக்க... கத்தி, நச்சு வாயுவைப் பாய்ச்சக்கூடிய ஸ்ப்ரே போன்றவை இருந்திருக்கின்றன. அடுத்த கணமே அவர்களை கஸ்டடிக்கு எடுத்தது பொலிஸ்.
இதற்கிடையில் தாமரைக்கு திடீரென இரண்டு மெய்க்காப்பாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவிஸ் பொலிஸ் செய்ய... அவருக்கு ஏதும் விளங்கவில்லை. 'நான் ஒரு பாடலாசிரியர். எனக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு? தமிழ்க் குடும்பங்களைச் சந்திப்பதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். உங்களின் பாதுகாப்பே எனக்கு இடைஞ்சலாக இருக்கிறதே...’ எனப் பாதுகாப்பு பொலிஸாரிடம் அவர் முறையிட... அதன் பிறகுதான் மர்ம கும்பல் குறித்த பின்னணியைச் சொல்லி இருக்கிறார்கள் சுவிஸ் பொலிஸார். இதற்கிடையில் கருணாவின் கும்பல் தாமரையை டார்கெட் வைத்தே அந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகச் செய்தி கசிய... நாம் அவரை போனில் தொடர்புகொண்டு பேசினோம்.
கடந்த வருட மாவீரர் தின நிகழ்வைக் காட்டிலும், இந்த முறை தமிழர்களின் ஒருங்கிணைப்பும் முன்னெடுப்பும் அபரிமிதமாக இருக்கிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் தென் ஆபிரிக்காவை எப்படிப் புறக்கணித்தனவோ... அதேபோல் ஸ்ரீலங்கா அரசையும் புறக்கணிக்க வேண்டும் என்கிற முன்னெடுப்பு உலகம் முழுக்கக் கிளம்பி இருக்கிறது. அதன் ஆரம்பமாகத்தான் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் ஒருங்கிணைந்து லண்டனில் ராஜபக்ஷவைத் துரத்தி அடித்து இருக்கிறார்கள்.
மேலும் இத்தகைய ஒருங்கிணைவு உண்டாகிவிடக் கூடாது என எண்ணி சிங்கள உளவாளிகள் உலகம் முழுக்க அலைகிறார்கள். சுவிஸில் பிடிபட்டவர்கள் அந்த நிகழ்ச்சியைக் குலைக்கும் நோக்கிலோ, இல்லை... தனிப்பட்ட யாரையாவது குறிவைத்தோதான் வந்திருக்க வேண்டும்.
மாவீரர் நாளுக்காக தமிழகத்தில் இருந்து யார் யார் எங்கெங்கு போகிறார்கள்... அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்ன என்கிற விவரங்களை எல்லாம் கருணாவின் ஆட்கள் முன்கூட்டியே அறிந்துவைத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து வருகிற யாரையாவது ஒருவரைத் தாக்குவதன் மூலமாக, தமிழக உணர்வாளர்களை அச்சுறுத்தி அடங்கவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். பிடிபட்டவர்கள் கருணாவின் ஆட்கள்தான் என்பது அவர்களிடம் இருக்கும் டி கார்டு மூலமாகவே உறுதியாகி இருக்கின்றன.
அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்கப்படுவதைப்போல, சுவிஸில் ஏழு வருடங்கள் வாழ்பவர்களுக்கு டி கார்டு வழங்கப்படும். ஆனால், பொலிஸில் பிடிபட்ட கும்பல் சில மாதங்களுக்கு முன்புதான் சுவிட்சர்லாந்துக்கு வந்திருக்கின்றன. பெரிய அளவில் பணத்தை இறைத்து கருணா தரப்பு அந்தக் கும்பலுக்கு டி கார்டு வாங்கிக் கொடுத்து இருக்கிறது...'' எனச் சொன்னவர் சுவிஸில் நடந்த சந்திப்புகள் குறித்தும் சொல்லத் தொடங்கினார்.
ஜேர்மனியில் நடந்த மாவீரர் நிகழ்ச்சிக்குப் போய் இருந்தபோது அங்கே போரில் இறந்த கரும் புலிகளுக்காக நினைவு கோபுரங்களை எழுப்பி இருந்தார்கள். 'கரும் புலிகள்தான் எங்களின் கடவுள்கள்!’ என அவர்கள் சொன்னபோது சிலிர்த்துப் போனேன். 'இலங்கைக்கு எதிரான போரில் ஈழம் தோற்று இருக்கலாம்; ஆனால், போரில் மடிந்த வீரர்களுக்காக நீங்கள் நினைவு கோபுரங்கள் எழுப்பி இருக்கிறீர்கள்.
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், அந்தப் போரில் மடிந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட வீட்டைக்கூட இந்திய அரசால் முறையாகக் கொடுக்க முடியவில்லை. வீழ்ந்தாலும் ஈழத்தின் சிறப்பு ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், வல்லரசுக்கு நிகராக உயர்ந்தாலும் இந்தியாவின் சிறப்பு நாறிக்கொண்டுதான் இருக்கிறது!’ என என் மனக் கருத்தை கொஞ்சமும் தயங்காமல் உடைத்துப் பேசினேன். ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த மக்களின் உணர்ச்சிப் பேரொலி அடங்க வெகு நேரம் ஆனது.
அங்கே செல்லும் யாரும், ஈழ விடிவுக்கும் சிங்கள அரசைப் போர்க்குற்ற வழக்கில் சிக்கவைக்கும் முடிவுக்கும் ஒருமித்துப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள். முன்பெல்லாம் புலம்பெயர் தமிழர்கள் வெளியே வந்து போராடத் தயங்குவார்கள். ஏனென்றால், அப்படிப் போராடுபவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் சிங்கள அரசு சம்பந்தப்பட்டவர்களை மறுபடியும் இலங்கைக்குள் நுழையவிடாது. ஆனால், இப்போது அத்தகைய மிரட்டல் உருட்டல்களை எல்லாம் சட்டை செய்யும் நிலையில் தமிழர்கள் இல்லை.
உலகத் தமிழர்களே ஒன்று திரண்டு நிற்கும் இந்த வேளையிலும் தமிழக முதல்வர் கருணாநிதி, 'ராஜபக்ஷ, ஐ.நா-வின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட முன்வரவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டுத் தமிழ்ப் பெண் என்று சொல்லிக்கொள்ளவே கூசுகிறது! என்றார் சலிப்பும் வெறுப்புமாக!
நன்றி: ஜூனியர் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment