Saturday, December 11, 2010
தேசிய தலைவரை பெற்றெடுத்த அய்யா திருவேங்கடம் வேலுப்பிள்ளை பற்றி ஒரு வரலாற்று சிறப்புப்பார்வை
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே.
வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது.
தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத்தை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
சீர் மிகு செந்தமிழனை தமிழினம் தலைவனாக கொண்டதற்காக அத்தகைய வீரப்புதல்வனின் தாய் தந்தையர் எனும் ஒரே ஒரு காரணத்திற்காக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவருடைய துணைவியார் பார்வதி அம்மையாரும் தம் தள்ளாத வயதினிலே சிறிலங்கா அரசின் அரக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் சொல்லொணாத் துன்பங்களுக்கெல்லாம் ஆளாகி சிறைப்படுத்தப்பட்ட நிலையில் காலமாகினார் எனும் செய்தி தமிழினத்தின் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றது. தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் பேரழிவுப் படுகொலைக் காலங்களில் இறுதி வரை மக்களோடு மக்களாக வாழ்ந்து கைதாகி உறவினர்களைக் கூட பார்க்கமுடியாத வகையில் தடுத்து சிறை வைக்கப்பட்டு உரிய மருத்துவ பராமரி;ப்புகளின்றி சாவடைந்த இப்பெருமகனின் மரணம் இயற்கையானது என ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
தமிழினத்தின் மீதும் தமிழர் தலைவன் மீதும் சிங்கள வெறியர் கொண்டுள்ள வெறித்தனமான கோபத்தின் அடையாளமாகவே இந்த மென்போக்காளரின் அநியாயமான அநீதியான மரணம் சுட்டி நிற்கிறது. தமிழினத்தின் விடுதலைக்காக தன் குடும்பத்தையே துறந்து போராடிய தமிழீழ தேசியத்தலைவர் மீது சிங்கள வெறிகொண்ட அரசு காட்டிய அரக்கத்தனத்தின் வெளிப்பாடே தள்ளாத வயதினரான இவ்விணையர்க்கு நேர்ந்திட்ட உச்சக்கட்ட இன்னல்கள் எனலாம். இதனை மனிதம் பேசும் சர்வதேச சமூகங்கள் எவையுமே வழமைபோல் இனியும் தட்டிக்கேட்கப் போவதில்லை என்பதும் நாம் அறிந்ததே.
இப்பெருமகனார் பற்றிய சில எனக்குக் கிடைத்த வாழ்வாதாரத் தகவல்கள் சிலவற்றை இக்கட்டுரையூடாக தர விளைகின்றேன்:
1800 களில் வல்வட்டித்துறை கடலில் சுமார் 87 கப்பல்களோடு வணிக சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவி இந்தியா, பேர்மா ஆகிய நாடுகளோடு வணிகம் நடாத்திய கப்பலோட்டிய தமிழர் பரம்பரையில் உதித்தவரே திருவேங்கடம் வேலுப்பிள்ளை என்பது ஊரவர் போற்றும் சிறப்பாக இன்றும் உள்ளது. பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களும் சிங்கள ஆக்கிரமிப்பாளரும் சட்டவிரோதம் என கட்டிப்போட முயன்ற போதும் அடங்காத் தமிழர்களாய் அடக்குமுறைகளுக்கும் தடைகளுக்கும் தளராமல் சுதந்திரமாக கடலில் வணிகம் செய்து கடலோடு மோதி விளையாடும் வீரத்தின் பிறப்பிடமாக வாழ்ந்தவர்கள் இவரது முன்னோராவார். சிக்கல்களை எதிர்கொண்டு வெல்லும் ஆளுமையும் வீரமும் மிக்க பரம்பரையில் பிறந்தவர் திரு வேலுப்பிள்ளை அவர்கள் என்பதற்கு உச்சக்கட்ட சான்றாகத் திகழ்பவர்கள்; அவரது மகனான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அவரது வழித்தோன்றல்களும் என்பதை உலக வரலாறு நன்கறியும். தரைப்படை கடற்படை வான்படையும் மட்டுமன்றி; புலம்பெயர் தமிழர் படையையும் கட்டி எழுப்பிய முதற் தமிழ்த்தலைவனைத்தந்த பெரியார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் என்றால் மிகையில்லை.
வல்வட்டித்துறையில் ‘இராமநாதபுரம் ஜமீன் பரம்பரையினர் வழித்தோன்றல்கள்’ எனக் கருதப்படும்; ‘எசமான் பரம்பரையில்’ கோவில் கட்டிய நற்குடி பெருமகனான வேலாயுதத்தின் மகன் திருமேனியார் அவர்களாவார். அவரது மகனான கோவில் கட்டிய பெருமை பெற்ற வெங்கடாசலம் என்னும் பெருமகனார் 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்த அதே ஆண்டில் பிறந்து 1892 இல் மறைந்தவர். அவரது மகன் வேலுப்பிள்ளையின் மகன் தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கும் பெயரான திருவேங்கடம் என்னும் பெயர் கொண்டவர். இவர் மலேசியா சென்று தொடர்வண்டித் திணைக்களத்திள் பணியாற்றிய காலத்தில் பல தமிழீழ தமிழர்களை மலேசியாவுக்கழைத்து வேலை வாய்ப்புகள் எடுத்துக் கொடுத்து உதவினார.; இவர் தனது மகனுக்கு தன் தந்தையின் பெயரான வேலுப்பிள்ளை என்னும் நற்பெயரைச் சூட்டினார்.
மலேசியாவில் திருவேங்கடம் தம்பதியினருக்கு 1924 சனவரி 10 அன்று அருந்தவ மகனாக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பிறந்தார். சிறுவயதிலேயே தன் தாயை இழந்திட்ட இவர் தன் தந்தையாருடன் சிறுவயதிலேயே (சுமார் 5 வயதில்) வல்வட்டித்துறைக்கு தாயகம் திரும்பினார்.
இவரது முன்னையோர் கட்டிய வல்வை வைத்தீஸ்வரன் என்னும் சிவன் கோவில் சூழலில் தனது பிள்ளைப் பிராயத்தைக் கழித்த இவர் சிதம்பரா வித்தியாலயத்தில் தனது இளமைக்கல்வியைக் கற்றார்.
மென்மையுள்ளத்தோடும் நேர்மைப் போக்கோடும் வாழ்ந்த இவர் இலங்கை அரசியலில் ஈடுபாடு இல்லாதவராகவே வாழ்ந்தார். பொய் பேசாத சட்டவிதி முறைகளுக்கு கட்டுப்பட்ட நேர்த்தியான வாழ்வை கட்டுப்பாட்டோடு கடைப்பிடித்தார். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அலுவலராக (DLO- District Land Officer) முல்லைத்தீவு, மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் அரச கடமையாற்றினார். தமிழ்ப்பாண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்த இவர் நேர்மையின் சிகரம் எனப் போற்றப்பட்டார்.
மரபுவழிச்சிந்தனையோடு அரசபணி பொறுப்பேற்று அரசிற்கு விசுவாசமான அரச ஊழியராகவே காலம் முழுவதும் வாழ்ந்த இவருக்கு சிங்கள அரசு புகட்டிய பாடம் என்ன? நேர்மையும் உண்மையும் அகிம்சையும் போற்றினாலும் தமிழர்க்கு இலங்கைத்தீவில் நிம்மதியான நீதியான வாழ்வு என்றுமே இல்லை என்பதே இலங்கை அரசு இவர் போன்ற அப்பாவித் தமிழர்களுக்கு புகட்டுகின்ற பாடமாகும்.
இவரது தன்னடக்கமான சுபாவத்திற்கு சான்றாக இவரது முன்னோர் கட்டிய ஆலயத்தில் அறங்காவலர் குழுவில் தலைமைப் பொறுப்பேற்க இவரை கோரியபோது மறுத்த நிகழ்வைக் கூறமுடியும். பின்னாளில் ஓய்வு பெற்றபின் சிலகாலம் ஆலயநிர்வாகப்பணியை ஏற்று நடாத்தினார்.
1946 ஆம் ஆண்டு பார்வதி அம்மையாரை கைப்பிடித்த இப்பெருமகனார் அம்மையாருடன் ஈருடல் ஓருயிர் என மனமொத்து இல்லறவாழ்வின் இலக்கணமாக இறுதிவரை வாழந்தவர் என்பது உலகறிந்த உண்மை.
இவ்விணையர் ஆற்றிய இனிய இல்லறத்தின் அரும்பயனாக 1948 இல் இவர்களுக்கு மனோகரன் என்னும் அருமை மகனும் அவரைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரி, வினோதினி, என்னும் அருமை மகள்களும் நான்காவதாக பிரபாகரன் என்னும் செல்ல மகனும் மகவுகளாக வந்துதித்தனர்.
வேலுப்பிள்ளை ஜயா அவர்கள் தன் செல்ல மகனாம் பிரபாகரன் மீது கொண்டிருந்த பாசத்தின் அடையாளமாக அவர் மதிக்கும் தமிழின உணர்வாளர் திரு. வை.கோ. அவர்களின் பேரனுக்கு ‘பிரபாகரன்’ என்னும் பெயரைச் சூட்டி மகிழ்ந்ததிலிருந்து காணலாம்.
இப் பெருமகனார் அரசியல் வாடையையே விரும்பாதவர். எத்தகைய வாக்களிப்புகளிலும் வாக்களிக்கச் செல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இயல்பாகவே வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட இப்பெருமகனார் தன் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களோடு சரித்திரம் பற்றி அளவளாவ விருப்புடையவராக திகழ்ந்தார். எனினும் அரச விதிகளை மீறுவதை அவர் சரியெனக் கொள்ளவில்லை.
ஆனால் அவரது செல்வப் புதல்வனான தமிழீழ தேசியத் தலைவரோ தமிழினம் சிங்கள ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டு அல்லல்பட்டு மடிவதை விரும்பவில்லை. கடந்த கால வரலாற்றில் அகிம்சை வழி கற்றுத்தந்த கசப்பான பாடங்களில் பயனேதும் இல்லை என்பதைக் கண்ட பெருந்தலைவர் அநீதியைத் தடுத்து நிறுத்த ஆயுதப் போராட்டமே ஒரே வழியென உணர்ந்து குடும்பத்தைப் பிரிந்து நீதிக்கான போராட்டப் பாதையை தனதாக்கிப் புறப்பட்டார். சமூகத்தலைவர்கள் வம்சத்தில் உதித்திட்டதனால் அவருள் மிகுந்திருந்த ஆளுமையானது அவரை ஒரு இனத்தின் தேசியத் தலைவராக்கியது. வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வனார் ஈழத்தமிழினத்தினது மட்டுமன்றி உலகத்தமிழினத்தினதும் அருந்தவச்சேயாக காலங்காலமாக தாயவர் நோற்றிட்ட தவப்பயனாக வந்துதித்த அவதாரத் தெய்வவடிவாக பல்லாயிரம் வரலாறுகள் படைத்திட்ட சரிதங்கள் தனியானவை. அவற்றை விரிக்கின் பெருகும் என அஞ்சுகிறேன்.
தமிழினத்தினைக் காக்க தலைவர் புறப்பட்டதைக் காரணமாக்கி, காரணமின்றி அவரது பெற்றோர்கள் பலதரப்பட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். குறிப்பாக துரையப்பா மறைவின் பின் தன் மகனைத் தேடி வரும் சிறிலங்கா காவலரிடம் தந்தையார் சொல்லும் பதில் “நானும் என் மகனைத் தேடிக் கொண்டுதானிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடித்தால் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்பதாகும்.;
அரச படையின் சித்திரவதை தாங்காமலும் அயலவர்களுக்கு தம்;மால் சிக்கலிருக்கக் கூடாது எனக் கருதியும் 1983 காலப்பகுதியில் பொலிகண்டியில் ‘கந்தவனக் கடவை’ கோவில் மண்டபத்தில் சிலகாலம் வாழ்ந்த வேலுப்பிள்ளை அவர்களும் பார்வதி அம்மையார் அவர்களும் பின் அங்கும் வாழ முடியாத சூழலில் இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்தனர். அக்காலத்தில் எம். ஜி. ஆர். உட்பட்ட பல தமிழின உணர்வாளர்களுடன் உறவு கொண்டு அவர்கள் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று மகிழ்ந்திருந்தனர். அக்காலத்தில் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் சிறிது சுகயீனமுற்ற போதும் விரைவில் அவர் தேறினார். ஆனால் பார்வதி அம்மையார் பாரிச வாதத்தால் தாக்குண்டு ஒரு காலும் ஒரு கையும் செயலிழந்து அவதியுற்ற நிலையில் அவரை தாய்க்குத் தாயாக உற்ற துணையாக அரவணைத்து பராமரித்த பெருமை திருவாளர் வேலுப்பிள்ளை அவர்களைச் சாரும். அத்தோடு தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒரு குடும்ப மருத்துவர் அவர்களை தன் பெற்ற தாய் தந்தையருக்கு ஒப்பாக மதித்து பேணிக்காத்தமையை நாம் நன்றியுணர்வோடு நவில விரும்புகின்றோம்.
இலங்கையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின் 2002 இன் பின் "இனியேனும் தாயகத்தில் அமைதியாக வாழ முடியும்" என்ற நம்பிக்கையோடு தமிழீழம் திரும்பிய இவ்விணையர்கள் வன்னியில் தமது இறுதிக்காலத்தை கழித்தனர். சில காலமேனும் சுதந்திரத் தமிழீழத்தில் இனிதாக வாழ்ந்த பெருமை இவர்களுக்கு உண்டு.
பெருந்தலைவரின் தந்தையார் என்ற எந்த சலுகைகளும் இன்றி மக்களோடு மக்களாக எளிமையாக கிளிநொச்சியில் தனிக்குடித்தனம் ஆற்றிய இப்பெருமகனார் கொள்கைப்பற்றாளராக இறுதிவரை வாழ்ந்தார என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். பார்வதி அம்மையாரும் இவரும் கூடி வாழ்ந்த அழகான வாழ்வு அழகான கவிதைக்கு ஒப்பானது. இணைபிரியாத அன்றில்கள் போல் வாழ்ந்த இவர்களுக்கு சொந்த மண் கொடுத்த சுகம் தனியானது. பிரிந்து வாழ்ந்த மகவோடு இணைந்து உறவாடும் இன்பம் தந்தது.
அந்த இனிய காலம் நீடிக்கவில்லை. இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து மாபெரும் தமிழின அழிப்பை கோரத்தனமாக செய்து முடித்த கொலை பாதக சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றது.
மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவரது துணைவியாரும் கடந்த 18-05-2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து வெளியேறி பொது மக்களுடன் சேர்ந்து ஓமந்தைப் பகுதிக்குச் சென்றபோது ஸ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டு பனாகொடை தலைமை முகாமில் கடந்த 8 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கனடாவில் வசிக்கும் அவர்களது புதல்விஇ தாம் வசிக்கும் கனடா நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என சிங்கள அரசைக் கேட்டுஇ எவ்வளவோ முயற்சித்தும்இ சிங்கள அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
இந் நிலையில் 6-01-2010 அன்று தனது 86வது அகவையில்; வேலுப்பிள்ளை அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசலையில் இறந்துவிட்டதாக அரசாங்கம் காலம் தாழ்த்தி அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் மக்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவ வசதிகள் இன்றியும் உணவு இன்றியும் முகாம்களுக்குள் சாகடிக்கப்பட்டார்கள் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
திரு வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மையாரும் போராளிகளல்ல. முதுமையிலும் இயலாமையிலும் தள்ளாடும் இவர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தியது எவ்விதத்தில் நியாயம்?. பக்கவாத நோயால் பாதிப்புற்ற துணைவியாரைப் பராமரிக்க ஏற்ற வசதிகளின்றி மருந்து வசதிகளின்றி தம்; உறவுகளோடோ பிள்ளைகளோடோ தொடர்பு கொள்ளவிடாமல் 8 மாதங்கள் சிறை வைத்து உடலாலும் உள்ளத்தாலும் சொல்லொணாச் சித்திரவதைகளை சிங்கள அரசு இம்முதியவர்களுக்குக் கொடுத்து ஈற்றில் இப்பெருமகனைக் கொன்றும் விட்டது. இதற்கு நிச்சயம் அவர்கள் பதில் சொல்லியேயாக வேண்டும். உச்சக்கட்ட மனித உரிமை மீறல்களை தடைகளேதுமின்றி சிங்கள அரசு செய்து கொண்டிருக்கையில் இனியும் தட்டிக் கேட்காது போகுமா அனைத்துலக நாடுகள்? உலகை உலுப்பிக் கேட்க உலகத்தமிழினம் கிளர்ந்தெழ வேண்டும்.
இரக்கம் இல்லா அரக்கராக சிங்கள அரசு வெறியாட்டம் ஆடுவதற்கு மற்றுமொரு சாட்சியமாக மண்டியிடா வீரராகவே வீரச்சாவெய்திவிட்டார் எம் தலைவனை தரணிக்குத் தந்த இந்த மாதந்தை. அவரைப்பிரிந்து அரக்கர்கள் மத்தியில் எங்ஙனம் தன் உயிரைக் காப்பரோ பார்வதி அம்மையார் என எண்ணுகையில் நெஞ்சம் நடுங்கிக் கலங்குகின்றது. அருகிருந்து ஆறுதல் கூற கோடானு கோடி தமிழுறவுகள் உலகெங்கும் காத்திருக்க எங்கள் அன்னை அநாதரவாக எத்தகைய துன்பங்களுக்கெல்லாம் அரக்கர் குகைக்குள் உள்ளாகி துடி துடிக்கின்றாரோ என எண்ணும் எண்ணத்திலேயே செத்துக் கொண்டிருக்கிறது தமிழினம். அடிப்படை மனித உரிமை விதிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு மனிதநேயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே இம்மாதந்தையின் உயிர் பிரிந்துள்ளது. சிங்கள அரசின் இக்கொடும் பாதகச் செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்க மாட்டாது.
ஈழத்தமிழினத்தின் சொல்லொணாச் சோக சரிதங்களுள் ஒன்றாக இப்பெருமகனின் சாவும் அமைந்து விட்டது. எனினும் அவரது நித்திய உறக்கம் நீதிக்காக எழுந்து போராட உலகத் தமிழினத்தை தட்டி எழுப்பியுள்ளது என்பது உறுதி. உலகத்தமிழினத்தின் அன்புத் தந்தை இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் வரலாற்றில் “மாதந்தையாக” நிரந்தரமாக நிலைத்து வாழ்வார். அவரது துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்லும் உலகத்தமிழினமாகிய நாம் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற மீண்டு எழுவோமாக.
நீதி செத்துவிட்டதாக கொட்டமடிக்கும் கயவர் கொட்டமடக்கி நீதி வெல்ல உழைத்திடுவோம். தமிழினத்தின் சோகம் துடைத்து தமிழீழம் வென்றெடுக்கும் பணி தொடர்வோமாக.
நன்றி: ஈழநேஷன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment