Wednesday, December 15, 2010
ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தை சுட்டிருந்தால்.
எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்! என கூட்டத்தில் உரையாற்றியிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையானார். அவர் சிறையிலிருந்தபோது எழுதிய அதிரடி அனல் கனல் தொடர்.
தொடரின் முதலாவது பாகம்:
''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''
- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகள் என் நித்திரையைக் கிழிக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறேன். கொசுக்கடி இல்லை. குளிர் இல்லை. அட்டைப்பூச்சியோ... அரிப்புத் தொல்லையோ இல்லை. ஆனாலும், நித்திரை வரவில்லை. 'தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சுகிற அளவுக்கு அப்படி என்ன செய்தோம்?’ என்கிற கேள்வி மனதுக்குள் குறுகுறுக்கிறது. என் மீனவனின் தொண்டையில் விழுந்த தூண்டிலின் வலியைச் சொன்னது தவறா? அதற்கா தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பாய்ச்சல் காட்டினார்கள்?
என்னை ஒருவன் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என்றேன். மீண்டும் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ எனத் துடித்தேன். மறுபடியும் சக்தி திரட்டி அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என அலறினேன். அடுத்தும் அடித்தான். இனிமேல் அடித்தால், ஓங்கித் திருப்பி அடிப்பேன். 'ஐயோ வலிக்கிறது’ என அலறுவான். 'வலிக்கிறதா அய்யா, அப்படித்தான் எனக்கும் வலித்தது அய்யா, இனிமேல் என்னை அடிக்காதே!’ என்பேன்.
இதைத் தவிர உலக மகா குற்றத்தை ஏதும் இந்த சீமான் செய்துவிடவில்லை. 60 ஆண்டுகளாக ஈழத்திலும், 20 ஆண்டுகளாக இங்கேயும் தமிழக மீனவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கிறான் சிங்களவன். 'இனியும் அடித்தால்...’ என வலி பொறுக்காமல் அலறியது, இந்த அரசாங்கத்தை ஆத்திரப் படுத்திவிட்டதாம். வலையோடு போனவர்கள் ரணமாகவும் பிணமாகவும் ஒதுங்கியபோது, தமிழினத் தலைவராக இருக்கும் மனிதருக்கு வராத கோபம்... 'எம் இனத்தை ஏனடா அடிக்கிறாய்?’ எனக் கேட்டபோது கிளர்ந்துவிட்டதாம்!
சிங்கள மாணவனை அடிப்பேன் என எப்படிச் சொல்லலாம்? இரு இனங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வாதம் அல்லவா இது?'' - ஆத்திரத்தில் அலறியது அரசுத் தரப்பு. எங்களவனை அடிக்கும்போது பாயாத சட்டம், சிங்களவனை அடிப்பேன் எனச் சொல்லும்போதே பாய்கிறது.
சட்டம் - ஒழுங்கு குலைந்துவிட்டதாக, பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக, போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டதாக, ரயில்கள் தடம் புரளவைக்கப்பட்டதாக எங்கெங்கு இருந்து தகவல் வந்ததோ... 'இனியும் சீமானை வெளியேவிட்டு வைத் திருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்!’ எனப் பதறி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சினார்கள்!
அதன் பிறகுதான் தமிழகம் அமைதியானதாம். சட்டம் - ஒழுங்கு சீரானதாம். பொது மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமைதியாக நடமாடினார்களாம். இந்த தனிப்பட்ட சீமானால் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைக் கெடுக்க முடியுமானால், இந்த நாட்டைவிட பலம் வாய்ந்தவனா நான்? சிரிப்பாகத்தான் இருக்கிறது!
ஓர் அறையைவிட்டு வெளியே வருவதைப்போலத்தான், சிறையைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். கம்பிக்குள் தள்ளிக் களி தின்னவைத்தால், 'தம்பி’க்காகப் பேசும் பேச்சைத் தடுத்துவிடலாம் என எண்ணினார்களோ என்னவோ... வேலூர் சிறையில் அடைத்தார்கள். என் குரல்வளையை உடைக்கிற சக்தி அந்தக் கொட்டடிக்கு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. நஞ்சுக் குப்பி கடிக்கவும் தயங்காதவன், அட்டைப் பூச்சிக் கடிக்கு அரண்டுவிடுவான் என நினைத்ததே கேவலம். அவர்கள் பெரியாரின் கொள்கை வழி வந்தார்களோ இல்லையோ... நான் அந்தப் பழுத்த தாத்தாவின் பழுக்கக் காய்ச்சிய தத்துவங்களின் தடம் வந்தவன். 'சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்!’ என 90 வயதில் சொன்ன அந்தப் போராளியின் பேரனை ஒரு அறைக்குள் அடைத்துவைத்து அடக்கி விட முடியுமா?
ஐந்து தடவை சிறைவாசம்... அதில் இரண்டு முறை தேசியப் பாதுகாப்பு சட்டம். சரமாரியாக வழக்குகள்... ஏன் இவை எல்லாம்? அரசாங்கத்தையும் அதன் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, இந்தத் தேசத்தின் வளத்தை சுரண்டித் தின்றேனா... உறவுக் கூட்டத்தை ஊரெல்லாம் வளர்த்து, அகப்பட்ட இடம் எல்லாம் அள்ளி, உலகம் எங்கும் ஓடி ஓடிப் போய்ப் பதுக்கும் அளவு சொத்து குவித்தேனா? எத்தனை சுழியன் என எண்ண முடியாத அளவுக்கு லட்சம் கோடிகளைப் பதுக்கிவிட்டேனா?
ஈசல் இறந்தால்கூட இழவு கொண்டாடும் இனத்தில் பிறந்துவிட்டு, இனமே இறந்து கிடக்கையில் கை கட்டி, வாய் மூடி, கதறல் அடக்க இந்த மூர்க்கக்காரனால் முடியவில்லை. ஒப்பாரி வைத்ததைத் தவிர, ஒரு தவறும் செய்யாதவனை பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களே... இந்த சீமான் சென்னைக்கு எதற்காக வந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
150 ரூபாய்க்கு மிளகாய் மூட்டையைப் போட்டு விட்டு சென்னைக்கு என்னை பேருந்து ஏற்றி அனுப்பினான் என் அப்பன். வறுமையை ஜெயிக்கவும் - வாழ்ந்து காட்டவும் சென்னைக்கு வந்து, மாதத்துக்கு ஒரு முறை 100 ரூபாயைக்கூட அப்பனுக்கு அனுப்ப முடியாமல், எத்தனையோ வருடங்களை இயலாமையிலேயே கழித்தவன். இன்றைக்கும் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட முடியவில்லையே என்கிற ஏக்கம் நீங்காதவன். என்னையா பயங்கரவாதி எனச் சொல்லி பயம் காட்டுகிறீர்கள்?
அறிவாற்றலும், வீரமும் செறிந்துகிடக்கும் இந்த இனத்துக்கு அரசியல் வலிமை சேர்க்கும் பற்றாளர்கள் பற்றாக்குறையாகி விட்டதுதானே எங்கள் பதற்றத்துக்குக் காரணம். கண் முன்னே சொந்த இனம் கருவறுக்கப்பட்டபோது, பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுத் துடிக்கிற தலைவன் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டானே... இனத்துக்காகக் குடும்பத்தையே வாரிக் கொடுத்த தலைவன் பிரபாகரன் அங்கே களமாடி நிற்க... குடும்பத்துக்காக இனத்தையே காவு கொடுத்து வேடிக்கை பார்த்த கருணாநிதியை எப்படி எங்களின் தலைவனாய் ஏற்க முடியும்?
ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தைச் சுட்டிருந்தால்... வல்லூறுகளின் கொடூரங்கள் அவருடைய வாயைத் திறந்திருந்தால்... நாங்கள் ஏனய்யா நரம்பு முறுக்கி சிறைக்குக் கிளம்பப்போகிறோம்? இனத்தைக் காக்க நீங்கள் இருப்பதாக எண்ணி சினத்தை அடக்கி இருப்போமே... 'இனப் பாசம் கிலோ என்ன விலை?’ எனக் கேட்கிற ஆளாக, மொத்தக் கொடூரத்தையும் சத்தமின்றிப் பார்த்துக்கொண்டு இருந்தீர்களே... இப்படிப்பட்ட இதயத்தோடு வாழும் உங்கள் ஊரில் ஒப்பாரிவைப்பதும் உலக மகாக் குற்றம்தான்! கேள்வி கேட்பதும், கேவி அழுவதும் தேசியப் பாதுகாப்பு மீறல்தான்!
கொடூரப் போரில் ஈழமே எரிந்து காடாகிக் கிடந்த வேளையில், எங்களின் கோபம் தமிழகத்தில் வசிக்கும் ஒரு சிங்களவனையாவது சீண்டியதா? ஒரு புத்த துறவியாவது எங்களால் துரத்தப்பட்டாரா? சிங்கள இராணுவத்தின் வெறித் தாண்டவத்துக்கு டெல்லி ஆயுதம் கொடுக்க... அதை சென்னை கை கட்டி வேடிக்கைப் பார்க்க... துடித்துப்போன நாங்கள் எங்கள் உயிர்களைத் தானே தீக்குச்சிக்குத் தின்னக் கொடுத்தோம். எங்களின் இயலாமையும் கோபமும் ஒரு சிங்களவனின் மீதாவது திரும்பியதா? அப்போதும் சிங்கள மாணவர்கள் இங்கே படித்துக்கொண்டு தானே இருந்தார்கள்? சிங்கள வியாபாரிகள் எங்கள் தெருக்களில் திரிந்துகொண்டுதானே இருந்தார்கள்? மாற்று இனத்துக்கு மதிப்புக் கொடுக்கும் எங்களின் மாண்பு அப்போது புரிய வில்லையா இந்த அரசாங்கத்துக்கு? என் இனமே எரிந்து சாய்ந்தபோது... எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்கள், சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதும் சீறுகிறார்களே... இது எந்த ஊர் நியாயமய்யா?
சிறையில் தள்ளி என் குரல்வளையைச் சிதைத்து விடலாம் எனத் திட்டமிட்ட கருணாநிதிக்குச் சொல்கிறேன்... எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களின் பயங்கர சட்டங்களைப் பாய்ச்சுங்கள். உங்களைப்போல், 'ஐயோ... கொலை பண்றாங்கப்பா... காப்பாத்துங்கப்பா...’ என அலறித் துடிக்கும் ஆள் நான் இல்லை! என் நாடி நரம்பின் கடைசித் துடிப்பையும் நீங்கள் துண்டித்துப் போட்டாலும், உங்களிடம் மண்டியிட நான் தயார் இல்லை.
எந்த வார்த்தைகளுக்காக என்னை வளைத்தீர்களோ... அதே வார்த்தைகளை கொஞ்சமும் பயமின்றி உரக்கச் சொல்கிறேன்...
''எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்!''
ஓயாது அலை..........
நன்றி: ஜூனியர் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment