Saturday, December 25, 2010

புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியாகடந்த முப்பதாண்டு கால ஆயுதப்போரில் ஈழத்தமிழர் பட்ட இன்னல்களை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சிங்கள இராணுவத்திடம் மட்டுமா ஈழத்தமிழர்கள் போரிட்டார்கள்...ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் ஈழத்தில் மூன்றாண்டுகளாக செய்த கொடுமைகளைத்தான் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா...
தமிழர்களை அழிக்க உலக நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளை சிங்கள காடையர்களுக்கு அள்ளிக்கொடுத்தது. ஏதோ ஜனநாயக வழிமுறையில் தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கலாம் என்றுதானோ என்னவோ புலிகள் தமது ஆயுதங்களை மே 17, 2009-ல் மௌனிப்பதாக அறிவித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தோட்டாவாவது சிறிலங்காவில் வெடித்ததுண்டா? அப்படியாக ஒரு தோட்டாவும் வெடிக்கவில்லை. பகைவர்கள் துணிச்சலுடன் உயிருடன் வலம்வருவதுடன், தமிழர்களை ஏளனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது இப்படியிருக்க கடந்த சில மாதங்களாக இந்திய ஆட்சியாளர்கள் புலனாய்வுத்துறையூடாக புலி நாட்டுக்குள் வந்துவிட்டதாக புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

ருசிகண்ட பூனை சும்மா இருக்காது என்கிற பழமொழிக்கேற்ப, இந்திய அரசியல்வாதிகளும் இதுவரை காலமும் புலியைச்சாட்டி அரசியல் செய்துவந்தார்கள். மே 2009-லிருந்து புலியின் வரவே இல்லாததையறிந்து இந்தியா கவலை கொண்டுள்ளதைத்தான் புலிகளைப் பற்றிய எச்சரிக்கை அறிக்கைகள் எடுத்துக்காட்டுகிறது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில்தான் மத்திய புலனாய்வுத்துறையின் அறிக்கைகள் வருகிறது என்பது மட்டும் உண்மை. புலிகளைக் காரணம்காட்டி 2011-ல் இடம்பெற இருக்கும் தமிழக சட்டசபைக்கான தேர்தலை சந்திப்பது உட்பட கருணாநிதியின் அரசு மீது சுமத்தப்பட்டிருக்கும் பல ஊழல் புகார்களிலிருந்தும் எப்படியேனும் தப்பித்துவிடலாமென்று மனப்பால் குடிக்கின்றார் கலைஞர் போலும்.

கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீட்டில் கலைஞர் செய்த ஊழல், தி.மு.கவின் ராசா உட்பட பல மந்திரிகள் செய்த ஊழல்களென பல நூறு ஊழல் சம்பவங்கள் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. மன்னிக்கவும்...இந்தியா என்கிற இறைமையுள்ள நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்களைப்பற்றியோ அல்லது அந்த நாட்டின் அரசியல்வாதிகளைப் பற்றியோ நாம் விமர்சிப்பது அரசியல் நாகரிகமில்லை. இருப்பினும் அவர்கள் இன்னொரு நாட்டில் வாழும் மக்களைப்பற்றி பொய்யான செய்திகளை பரப்பி அவப்பெயரை உண்டுபண்ண விளையும்போது அவற்றை எதிர்கொள்ள நாமும் எமது நியாயத்தை எடுத்துச் சொல்வதில் தப்பில்லையென்றே கருதுகிறோம்.

இந்தியாவின் உள்நாட்டு அரசியல் வெற்றி தோல்விகளில் கடந்த முப்பதாண்டுகாலமாக ஈழத்தமிழரின் போராட்டம் இடம்பிடித்திருந்தது என்பது உண்மை. ராஜீவ் படுகொலைக்கு முன்னர் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் ஈழத்தமிழ் போராளிக்குழுக்களை தமது பக்கம் வைத்துக்கொண்டு அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். புலிகளின் முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சார வண்டிகளில் ஏற்றப்பட்டு பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். போராளிக்குழுக்களுக்கென போட்டி போட்டு பணத்தை வசூலித்தார்கள்;. ராஜீவ் மரணத்திற்கு பின்னர் புலிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வாக்குகளை தமதாக்கும்வண்ணம் பிரதான கட்சிகள் பிரச்சாரங்களை செய்தன. இன்றும் இதே கதை தொடர்கதையாகவே இருக்கிறது.

தமிழகத்தின் மற்றக்கட்சிகள் புலிகளைப்பற்றியோ அல்லது ஈழத்தமிழர் பற்றியோ தமது கொள்கைகளை அறிவிக்குமுன்னரே, எப்படியேனும் முந்திவிட வேண்டும் என எண்ணியே கருணாநிதியின் திராவிட முன்னேற்ற கழக அரசு மத்திய உளவுத்துறையின் மூலமாக புலிகள் பற்றிய புதுக்கதைகளை கட்டவிழ்த்தி விட்டிருக்கிறது. தொடர்ந்து துன்பங்களை அனுபவிப்பவனே மீண்டும் மீண்டும் வரும் சோதனைகளை சந்திப்பான் என்பதற்கிணங்க, ஈழத்தமிழரும் மென்மேலும் பல நெருக்கடிகளை சந்திக்க இப்படியான அறிக்கைகள் வளி அமைத்துக்கொடுக்கும்.
தமிழர்கள் ஒருபோதும் விடியலைக் காணக்கூடாது என்று கருதும் தமிழின விரோதிகளின் சூழ்ச்சி தொடர்கதையாகவே உள்ளது. தமிழர்கள் இருட்டறைக்குள் இருக்கும்வரை அவர்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று கங்கணம்கட்டி ஆட்சி செய்யும் நயவஞ்சகர்களின் தலைமையில் தமிழ்நாடு இருப்பதுவே தமிழர்களின் சாபக்கேடு.

எதிரியுடன் கைகோர்க்கும் நாட்டுடன் தோழமை

ராஜீவ் மரணத்திற்குப் பின்னர் சிறிலங்கா அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக இந்தியா கூறிவந்தாலும் அதன் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்தும் திரைமறைவு செயற்பாடுகளில் ஈடுபட்டே வந்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியாவின் ஆளுகையை நிலை நிறுத்துவதற்காகவும் இந்திய அதிகார வர்க்கம் அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு வந்த சதி நடவடிக்கைகள் ஏராளமானவை. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் குறிப்பாக ஜே.என்.டிக்ஸிட், எம்.கே.நாராயணன் மற்றும் மேனன் போன்ற தமிழின விரோதிகளின் தவறுதலான வழிகாட்டுதலில் இந்திய மத்திய அரசுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டே வந்தது. ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் கொள்கையில் சிறிதளவேனும் மாற்றத்தை இதுநாள் வரை காணக்கூடியதாக இல்லை.

அரசியல் மற்றும் ராஜதந்திரிகளின் கூற்றுப்படி ஏதோ இந்தியா சிறிலங்கா விடயத்தில் சில கொள்கை மாற்றங்களை செய்யும் என்று கூறினார்கள். இவர்களின் கூற்று பொய்த்துப் போய்விட்டது. இந்தியாவின் பரம எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சிறிலங்கா நல்லுறவைப் பேணிவருவதுடன் பல உடன்பாடுகளையும் செய்கிறது. இந்த நாடுகளின் செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகவே கருத வேண்டியிருந்தும், இந்தியா தொடர்ந்தும் சிறிலங்காவுடன் நட்புறவை பேணிவருகிறது.

சிறிலங்காவுடன் பரஸ்பர நட்புறவை பேணிவருவதுடன் ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளது. இந்தியாவின் இச்செயல்கள் இன்று நேற்று நடப்பவையல்ல. ஏறத்தாழ இரு தசாப்தங்களாக இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மீண்டும் விடுதலைப்புலிகளின் தளமாகிவிட்டதைப் போல் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டுத் தமிழர்களை அச்சுறுத்தி அவர்களை ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல்கொடுத்து விடாமல் வாயடைக்கச் செய்யவே இப்படியான சதி நாடகங்கள் அரங்கேற்றப்படுகிறது.

பல புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஆராட்சி நிறுவனங்கள் சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்தில் பெருகிவருவது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று கூறிய பின்னரும் இந்தியா அதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினைகளை வளரவிட்ட பின்னர் தீர்வு காண்பதென்பது சிக்கலானதொன்று என்பதை இந்தியா இன்னும் உணராமலுள்ளதா என வினாவுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்தியாவின் மக்கள் தொகையைவிட அதிக மக்கள் தொகையைக் கொண்ட அதன் பரம எதிரியான சீனா என்கிற மாபெரும் வல்லரசுடன் உறவைப்பேணும் சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து நிற்கும் இந்தியாவுக்கு, நாற்பது லட்சமுள்ள ஈழத்தமிழர்களுக்காக போராடும் புலிகள் மட்டும் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக தெரிகிறதா?

உண்மையான குற்றவாளிகள் யாரென்று தெரிவதற்கு முன்னரே புலிகளின் மீது குற்றத்தைப் போட்டுவிட்டு குற்றவாளிகளை காப்பாற்றும் இந்திய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களாக நடைபெறுகிறது. இந்தியா மற்றும் சிறிலங்காவில் ஏதாவதொரு அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டால் புலிகள் மீது பழியைப்போட்டுவிடுவதே தொடர்கதையாகவுள்ளது. புலி மௌனித்தாலும் இந்தியாவும் சிறிலங்காவும் விட்டுவைப்பதாற்போல் இல்லை.

மத்திய புலனாய்வுத்துறையின் பொய்ப்பிரச்சாரங்கள்

ஈழத்தில் சண்டை ஓய்ந்து சரியாக ஒரு வருடத்தில் அதாவது மே 2010-இல் இந்தியாவின் உளவுப்பிரிவு ஒரு அறிக்கையை விட்டது. புலம்பெயர் நாடுகளில் வதியும் ஈழத்தமிழர் சிலர் இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதுடன், இந்தியாவின் இறையாண்மைக்கெதிராக செயற்படுகிறார்கள் என்றும் இப்புலம்பெயர் தமிழர்கள் இணையத்தளங்களினூடாக இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என ஒரு குண்டையே போட்டது இந்திய மத்திய புலனாய்வுத்துறை. சிறிலங்காவை எதிரி நாடாகவும், இந்தியாவை துரோக நாடாகவுமே இப்புலம்பெயர் தமிழர்கள் பார்க்கிறார்கள் என கூறியது இப்புலனாய்வுத்துறையின் அறிக்கை. விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையை மேலும் இரண்டாண்டுகள் நீடிக்க தேவைப்பட்ட காரணத்திற்காகவேதான் இவ்வறிக்கையை புலனாய்வுத்துறை வெளியிட்டதென பின்னர் அறியப்பட்டது.

திடீரென இன்னுமொரு அறிக்கையை கடந்த வாரம் மத்திய புலனாய்வுத்துறை வெளியிட்டது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் சில தமிழ்நாட்டின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களை சென்னையில் ஜனவரி 3, 2011 அன்று இடம்பெற இருக்கும் நிகழ்ச்சியில் வைத்து கொலைசெய்ய விடுதலைப்புலிகள் திட்டம் தீட்டியுள்ளதாக ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்காவினால் போடப்பட்ட அணுகுண்டைவிட பலமான அணுகுண்டையே போட்டது இந்திய மத்திய உளவுத்துறை. மே 2009-ல் முடிவுற்ற ஈழப்போரில் தப்பி இந்தியாவிற்குள் நுழைந்துள்ள விடுதலைப்புலி போராளிகளினால் குறிப்பிட்ட இத்தலைவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என புலனாய்வுத்துறை அறிக்கை தெரிவித்தது. இதனைச் சாட்டாக வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியும் தமிழக காவல்துறையினரை உசார்ப்படுத்தியுள்ளாராம்.

சிறிலங்காவின் கொடிய இனவெறி அரசு தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளைக் கண்டித்து மனிதநேயமுள்ள நாடுகளும் அமைப்புக்களும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ள இக்காலப்பகுதியில் ஈழத்தமிழரின் போராட்டத்தின் நியாயத்தை மழுங்கடிக்க நடாத்தப்படும் நாடகமாகவேத்தான் இவ்வறிக்கையை பார்க்க வேண்டியுள்ளது. ஜனனாயக வழியிலான தமிழீழ மக்களின் எழுச்சியின் பலனாக ஈழப்போராட்டத்துக்கு அனைத்துலக ரீதியில் எழுந்துவரும் ஆதரவையும் தமிழ் மக்களது அரசியல் – இராஜதந்திர நகர்வுகளையும் தகர்த்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் மட்டுமே நாட்டங்கொண்டது என்பதைக் காட்டுவதற்கு சிறிலங்கா அரசு பல சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

பல்லாயிரம் தமிழர்கள் ஒன்றுகூடி மகிந்தா மற்றும் அவரின் 40-பேர் அடங்கிய தூதுக்குழுவையே இங்கிலாந்திலிருந்து துரத்தியடித்த சம்பவம் சிறிலங்காவின் அரச தலைவர்களை ஆத்திரமூட்டியது. இச்செயல் இந்தியாவையும் கவலையடையச் செய்துள்ளது போலும். தீய எண்ணங்கொண்ட சிங்கள அரசின் அணுகுமுறைக்குத் துணைபோகிறார்கள் இந்தியாவின் நடுவண் மற்றும் தமிழக அரசுகள்.

இன்னுமொரு பலமான குண்டையே இந்த வாரம் மத்திய புலனாய்வுத்துறை போட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் நவீன ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்கள் என கூறுகிறது இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் அறிக்கை. தாவூத் இப்ராஹிம் என்கிற கொடிய பயங்கரவாதிகள்தான் விடுதலைப்புலிகளுக்கு நான்காம் ஈழப்போரின் இறுதிக்காலம் வரையில் ஆயுத விநியோகத்தை மேற்கொண்டார்கள் எனவும் கூறுகிறது இவ்வறிக்கை. தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க்கிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்தே மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன கூறுகிறது இப்புலனாய்வு அறிக்கை.

யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் பிடிபட்ட இப்பயங்கரவாத முக்கிய புள்ளியுனூடாக உறிதிப்படுத்தப்பட்டுள்ளதாக இப்புலனாய்வுத்துறை அறிக்கை கூறுகிறது. மிர்சா பெய்க்கிடமிருந்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என இவ்வறிக்கை மேலும் கூறுகிறது. விடுதலைப்புலிகளின் வலையமைப்பு தொடர்பாக பிடிபட்ட குறித்த நபர் பல விடயங்கள் கூறியிருந்தாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவற்றை வெளியிட முடியாதுள்ளதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறுகிறது மத்திய புலனாய்வுத்துறை.

யாரை திருப்திப்படுத்த முனைகிறது இந்தியா?

ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அவர்களுக்கு உலகளவில் கிடைக்கும் ஆதரவை இந்தியா மூலமாக செய்ய முயற்சிக்கிறது சிறிலங்கா அரசு. இந்தியாவும் புலிகளைப் பற்றிய செய்திகளை பரப்புவதனூடாக, தமிழ்நாட்டில் உருவாகும் ஈழத்தமிழ் மீதான அனுதாப அலையை எப்படியேனும் நசுக்கி விடலாமென்று நினைக்கிறது. கலைஞர் கருணாநிதிக்கும் இப்படியான செய்தி தேவைப்பட்டதொன்றே. இவரின் கட்சிக்கெதிராக வந்துகொண்டிருக்கும் ஊழல் புகார்களை மறைப்பதற்காகவும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இப்படியான அறிக்கைகள் உதவுமென்று கருதுகிறார் கலைஞர்.

கலைஞரிடத்திலோ அல்லது கலைஞரின் பிள்ளைகளிடத்திலோ சில நூறு கோடி ரூபாய்களை அள்ளிக்கொடுத்தால் போதும் மத்திய மந்திரிப்பதவி பெற என்கிற பேச்சு அடிபடுகிறது தமிழகத்தில். இப்படியாக பல நூறு கோடி ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், தனது நிர்வாக சாணக்கியத்தால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் என்கிற நினைப்பில் இருப்பவர்தான் கலைஞர். பாவம் கலைஞருக்கு இப்போது அறளை பிறந்துவிட்டது. அதன் காரணமாகத்தானோ என்னவோ பல லட்சம் கோடி ஊழல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒரு படத்தை எடுத்து பணக்காரனானதாக சொல்லிவரும் கலைஞர், இன்று தனது குடும்பமே பல சினிமா படங்களை எடுக்கிறது. இது போதாதா கலைஞருக்கு பல லட்சம் கோடி ஊழல் புகார்களை மறைக்க? 86-வயது நிரம்பிய கலைஞரினால் சிந்தித்து செயலாற்றும் திறன் இப்போ மங்கிப்போய்விட்டது போலும்.

ஆயிரம் நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற பழமொழி கலைஞருக்கு பொருந்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒன்று மட்டும் உண்மை. புலி என்கிற ஆயுதத்தை எடுத்தால் போதும் இந்திய மக்களை ஏமாற்ற. நடந்த அனைத்துச் சம்பவங்களையும் அவர்கள் மறந்துவிடுவார்கள். இப்படியான ஆயுதத்தை பாவிப்பதனாலேயோ என்னவோ அடிமட்ட தொண்டர்களாக, பணப்பலமற்றவர்களாக இருப்பவர்கள் இன்று இந்தியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் இருந்தால் போதும் இந்தியா நூறு வருடம் கடந்தாலும் மக்களின் முக்கிய தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இருக்கும் பசி மற்றும் நோய் தீர்க்கப்படாமல் நீடிக்க.

இந்திய அரசியல்வாதிகளின் கணிப்பின்படி மக்களை ஓன்றும் தெரியாதவர்களாக, இருட்டறைக்குள் வைத்திருக்கும் வரையில்தான் தாம் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் என நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். வெளிச்சத்தில் இருக்கும் மக்களையும் ஏமாற்றவே மௌனித்துள்ள புலியை வம்புக்கு இழுப்பது.

வெள்ளைக்காரர்களிடமிருந்து அமைதிவளியில் சுதந்திரம் பெற்ற இந்திய பெருநாடு, சிறிலங்காவில் மூன்று தசாப்தங்களாக அமைதிவழியிலும், பின்னர் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாரிய உயிர் அர்ப்பணிப்புடனும் விடுதலைக்காக போராடிவரும் ஈழத்தமிழர்களை அழித்தொழிப்பதற்காக பேரினவாத சிறிலங்கா அரசிற்கு அனைத்துவகையிலான உதவிகளையும் வழங்குவதுடன், புலம்பெயந்து வாழும் ஈழத்தமிழரையும் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து இந்தியாவும் விட்டு வைப்பதாக தெரியவில்லை. இந்தியாவின் இப்படியான தமிழர் விரோதப் போக்கு எந்தவகையில் நியாயமென்பதை இந்தியா ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களினால் வழங்கப்படும் ஆலோசனையை கேட்பதைத் தவிர்த்து, தமிழர்களின் உண்மையான அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தி நீதியை இந்தியா பெற்றுத்தர வேண்டுமென்பதே தமிழர்களின் அவா. அதைச் செய்யத்தவறினாலும் பரவாயில்லை ஈழத் தமிழரின் நலன்களுக்கெதிராக எந்தவொரு நாசகார வேலையையும் செய்யாமலாவது இந்தியா இருந்தால் போதும்.

சிங்களவர்களை சாந்தப்படுத்தவும், இந்திய மக்களை திசைதிருப்பி வர இருக்கும் தேர்தல்களில் வெற்றிவாகை சூடி மென்மேலும் நாட்டை குட்டிச்சுவராக்க எண்ணும் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளுக்காக நாட்டையே பாதுகாக்கும் உன்னத அமைப்பான புலனாய்வுத்துறையினரால் விடப்படும் புலிக்கெதிரான அறிக்கைகள் இந்திய நாட்டுக்கே அவப்பெயரைத் தேடித்தரும். மகாத்மா காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்திய அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்து தூக்கு போட்டு மரணித்திருப்பார். விடுதலைக்காக போராடும் மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல்வாதிகளை யார்தான் திருத்துவார்களோ?

அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com

--

No comments: