Saturday, December 18, 2010

தொடர்ந்து கொலைவெறியில் நடைவண்டி கருணாநிதியும்




இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டின் அரசியல் தவிர்க்க முடியாமல் ஈழத்தமிழர்களுடன் பிணைந்த ஒன்றாகவே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு எந்த லாபமில்லாவிட்டாலும் தமிழகத்து அரசியல் கட்சிகள் ஈழத்துப்பிரச்சினையை தேர்தல்களை சந்திக்கும் காலங்களில் தமது தோளில் தூக்கி வைத்துக்கொள்ளுவதுண்டு.



எப்பொழுதும் தமது உள்நாட்டுப்பிரச்சினை மற்றும் ஊழல்களை மூடிமறைப்பதற்கான வடிகாலாக ஈழத்தமிழர் பிரச்சினை அவர்களுக்கு பேருதவியாக இருந்துவருகிறது. சுயநலத்திற்காக ஈழப்பிரச்சினையை கையிலெடுத்து தாம் தான் ஈழத்தமிழர்களின் மேய்ப்பர்களென்று ஆளாளுக்கு பேரணி உண்ணாவிரதம் போன்றவற்றை போட்டிபோட்டு தம்பாட்டுக்கு நடத்தி தம்பட்டமடிப்பது தமிழகத்து அரசியலில் வாடிக்கையான வேடிக்கை ஒன்று.

ஆனால் இன்றுவரை தமிழக அரசியல்வாதிகளால் ஏற்பட்ட நன்மைகளைவிட ஈழமக்களுக்கு அழிவுகளும் அவலங்களும் உபத்திரவங்களுமே அதிகம். வாழ வழியத்து கடல்வழியாக சென்று அகதியாக தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் கூட, தமிழ்த் தலைவன் தான் என கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சிசெய்யும் தமிழ்நாட்டில் கைதிகள் போலவும், எஞ்சியவர்கள் தற்கொலை செய்து கொள்ளுபவர்களாகவும், தீக்குளித்து உயிரைப் போக்கிக்கொள்ளுபவர்களாகவும், பெண்கள் தமிழக பொலிஸாரால் கற்பழிக்கப்படுபவர்களாகவும், மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு அனுமதியற்றவர்களாகவும், சொந்தமாக ஒரு பொருளும் வாங்கி அனுபவிக்க அருகதையற்றவர்களாகவும் நாயிற்கடையராக அலைந்துதிரிகின்றனர்.

2009 ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைவன் கருணாநிதியின் முழு உடன்பாட்டுடன் வஞ்சகமாக ஈழத்தில் இன அழிப்புசெய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் முடிந்துவிட்டன, அங்கு யுத்தம் தொடருவதற்கான எந்த ஒரு அடையாளமும் இதுவரை காணப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், அமைச்சின் செயலரும் மற்றும் கருணாநிதியின் அரசியல்க்கட்சி பிரதிநிதிகளும், சினிமா நடிக நடிகைகளும், இலங்கைக்கு சென்று விருந்துண்டு மகிழ்ச்சியாக கொண்டாட்டங்கள் நடத்தி சொந்தமாக சொத்துக்கள் வாங்கி, தொழில் தொடங்கிவிட்டு திரும்பியிருக்கின்றனர்.

மறுபக்கம் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்காவின் தமிழ் சிங்கள கட்சியினரும் பரசுபரம் பயணங்கள் தொடருகின்றன. தமிழர்களின் மறுவாழ்வுக்கான ஒப்பந்தங்களும் ஏதேதோ செய்வதாக கூறப்படுகிறது. செயல்முறையில் மீள் குடியேற்ற்வாசிகளுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் ஒன்று நாட்டியது தவிர எதையும் காணமுடியவில்லை.

இந்தநிலையில் புதிய புரளி ஒன்று இந்தியாவால் கிளப்பப்பட்டிருக்கிறது. நகைப்புக்கிடமான இந்தப்புரளி சுயநலன் சார்ந்து இந்தியாவால் புலிகளின் மீது வலிந்து சுமத்தப்படுவது புலிகள் இயக்கமும் ஈழத்தமிழரும் கணக்கில் கொள்ளாவிட்டாலும், சில வேண்டத்தகாத நிகழ்வுகளை இந்தப்பிரச்சாரம் தோற்றுவிக்கக்கூடும் என்ற கவலையும் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் அந்நாட்டு அரசியல்வாதிகளும் தமது அரசியலின் குறை நிவர்த்தி செய்வதற்காகவும், மாபெரும் ஊழல்க்குற்றச்சாட்டுக்களை கழுவுவதற்காகவும் தேவையற்ற ஒரு பொய்யை மீண்டும் அழிக்கப்பட்ட ஈழத்தமிழர் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதும் வலிந்து சுமத்தியிருக்கின்றனர்.

இன்னும் ஒருசிலவருடங்களில் இயற்கையெய்திவிடக்கூடிய வயதிலிருக்கும், கடும் முதியவர்களான பிரதமர் மன்மோகன்சிங், ,மற்றும் எழுந்து நிற்கமுடியாத சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடும் கருணாநிதி, உட்பட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்யும் திட்டமொன்று விடுதலைப் புலிகளால் வகுக்கப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின், புலிகளில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் மூலமே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட்ட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்யும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, இந்தியப் புலனாய்வுத்துறை புதிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளதாக அந்தச்செய்தி தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, ஆகியோரை இலக்கு வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதாக ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை தெரிவிக்கின்றது.

"ஈழத்தமிழர்களின் உச்ச வெறுப்புக்குள்ளானவர்கள் இந்த நான்குபேரும் என்பது ஈழத்தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த பால்குடிக்கும் குழந்தைக்கும் தெரியும்". ஆனால் இன்று போராட்டம் தற்காலிகமாக ஈழத்தில்வாழும் தமிழ் மகனின்கையில் இல்லை .புலம்பெயர் தேசங்களில்த்தான் சட்டத்துக்குட்பட்ட வகையில் நீதிகேட்டு இனப்படுகொலைக் குற்றவாளிகளை இனங்காட்டும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அத்துடன் எவரையும் கொலைசெய்யும் தேவை புலிகளுக்கிருப்பதாகவும் நம்பமுடியாது.

இந்தியா என்ற நாடு அறிந்திருக்காத மனுதர்மத்துடன் ஜனநாயக வழியில் சர்வதேச அரங்குக்கு போராட்டத்தை கொண்டுசென்று புலம்பெயர் தமிழர்கள் நியாயம் கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த எழுச்சி இந்தியாவை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கலாம். இந்த நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, கருணாநிதி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் படியும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக பொலிஸ் டி.ஜி.பி லத்திகா சரண் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

லத்திகா சரண் சர்ச்சைக்குரிய ஒரு பொலிஸ் அதிகாரி. அவர் டிஜிபி யாக பதவி வகிக்க தகுதியில்லாதவரென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தகுதியானவர் பதவியில் அமரும்வரை லத்திகாவை தற்காலிகமாக தொடரும்படி பணித்திருக்கிறது. கருணாநிதி தனது வசதிக்காக லத்திகாவை விட சிரேஸ்ட்ட அதிகாரியை இருட்டடிப்புச்செய்து தனது சுயலாபம் கருதி லத்திகாவை பணியில் அமர்த்தியிருக்கிறார். நன்றிக்கடனைத்தீர்க்க லத்திகா எதுவேண்டுமானாலும் செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்.

2011 ஆண்டு மே தமிழ் நாட்டுக்கான சட்டசபைத்தேர்தல் வரவிருக்கிறது. இந்தநேரத்தில் தொலைதொடர்புத்துறை 2G ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டு ஊழல் பூதாகரமாக 176,000,00,00,000, லட்சம் கோடி குற்றச்சாட்டு திமுக மீதும். கூட்டாளி காங்கிரஸின் மீதும் வீழ்ந்திருக்கிறது. இச்செய்தி உலகப்பிரசித்தி பெற்றதென்பதால் அதுபற்றி விபரிக்கத்தேவையில்லை. ஆனாலும் முதல்க்குற்றவாளிகள் (திருடர்கள்) 1, ஆண்டிமுத்து ராசா.திமுக மத்திய மந்திரி தொலைத்தொடர்புத்துறை, 2, கருணாநிதியின் மூன்றாம் தாரத்து மனைவி ராசாத்தியம்மாளின் மகள் கனிமொழி. 3, திமுக ஆதரவு புலனாய்வுப்பத்திரிகை நக்கீரனின் இணை ஆசிரியர் அ. காமராஜ். 4, சென்னையில் கனிமொழியுடன் இணைந்து தொண்டு அமைப்பு என்கிறபேரில் தமிழ் மையம், என்கிற அமைப்பை நடத்திவரும் முன்னாள் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றி புலிகள் இயக்கத்தையும் தேசியத்தலைவரையும் ஏமாற்றிய போலிப்பாதிரி ஜெகத் கஸ்பர்ராஜ், இன்னும் நிறைய கருணாநிதியின் பினாமிகள் மாட்டியிருக்கின்றனர். இவைகளிலிருந்து மீளவேண்டுமானால் ஏதாவது பலமான திசைதிருப்பல் திமுக, காங்கிரஸுக்கு உடனடித்தேவை.

அதற்கு பலியிட்டிருக்கும் ஒரு வீண் பழிதான், மேற்சொன்ன முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளால் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதையை உலகமும் இந்தியாவிலுள்ள மக்களும் நம்புகிறார்களோ இல்லையோ அரசியல் மட்டத்தில் சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டு ஸ்பெக்ரம் பிரச்சினையை திசைதிருப்பி காலதாமதப்படுத்தி வரப்போகும் தேர்தலுக்கு பங்கமில்லாமல் தப்பிக்கவேண்டும் என்பது கருணாநிதி மற்றும் காங்கிரசின் நோக்கமாகும்.

ஸ்பெக்ரம் ஊழலின்பின் காங்கிரஸுக்கு திமுக மீது அதிக கோபமும் வெறுப்பும் உண்டாகியிருக்கிறது. ஆனால் அவற்றை வெளிக்காட்டமுடியாத சங்கடமும் காங்கிரஸுக்கு உண்டு. பிரதமரின் மந்தமான நடைமுறைதான் ஊழலுக்கு வித்திட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றன. ஊழலில் அதிக இலாபம் பெற்றவர்கள் திமுகவினர் என்பதும் உண்மை. ஆனால் அவைகளை முன்னிறுத்தி ஊழலை ஒப்புக்கொண்டுவிட முடியாத சிக்கல் காங்கிரசுக்கு உண்டு, ஊழல் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் ஆட்சி கலைக்கப்பட்டுவிடும் அபாயம் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட பூச்சாண்டிதான் மேற்சொன்ன படுகொலை என்கிற கட்டுக்கதைத்திட்டம்.

இரண்டாவது:, ஈழத்தின் போர்க்குற்றங்களை பிரித்தானிய சனல் 4, கொல்லப்பட்டவர்களை இனங்கண்டு ஒளிப்படங்களாகவும் வீடியோவாகவும் சர்வதேச அரங்கத்திற்கும் அம்பலப்படுத்திவிட்டது. ராஜபக்க்ஷ உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்படுகிறாரோ இல்லையோ சில இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகளாக அறியப்பட்டுவிட்டனர். போர்க்குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களை விசாரணைக்குட்படுத்தும் பட்சத்தில் ஈழப்படுகொலையில் இந்தியா எந்த அளவுக்கு ஈடுபட்டது என்ற உண்மை வெளிவருவதற்கு நிறைய சந்தற்பங்களுண்டு.

பிற ஆதாரங்களாக விக்கிலீக்ஸ்ஸின் ஆவணங்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் சவுக்கு இணையத்தளம் மற்றும் அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ், அவர்கள் வெளியிட்டதாகக்கூறப்படும் சந்தேகம். மலேசிய பினாங்க் துணை முதல்வர் பி ராமசாமி அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் ஐநாவுக்கும் அனுப்பிய போர்க்குற்றச்சாட்டு. இவை அனைத்தும் சேர்ந்து இந்திய அரசுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எதிராக பல சங்கடங்களை தோற்றுவிக்கும்,

இதை அறிந்த இந்தியத்தரப்பு, புலிகள் தமக்கு எப்போதும் எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர், இப்போதும் இந்தியத் தலைவர்களை குறி வைத்து கொலைசெய்யும் சதியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் அதனால்த்தான் இறுதி யுத்தத்தின் போதும் நாங்கள் சிங்கள அரசுடன் இணைந்து எம்மை காப்பதற்காக புலிகளை கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு உதவினோம், என்று தப்பிப்பதற்கான முற்கூட்டிய தயாரிப்புத்தான் புதிதாக கிளப்பி விடப்பட்டிருக்கும் புலிகளின் படுகொலை திட்டம் என்கிற கதை. இதனுடன் 1991ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூரில் வைத்து முன்னை நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ததும் புலிகள் அமைப்பினர் தான் என்பதால், புலிகள் பற்றிய புலனாய்வில் தாம் தொடர் கண்காணிப்பில் இருப்பதால் தற்போதய இரகசியம் தமக்கு உடனடியாக கிடைக்கப்பெற்றதாக பரப்புகின்றனர்.

சமீபத்தில் இந்திய அரசின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இரண்டு ஆண்டுகள் நீ‌ட்டித்து உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது. மத்திய அரசு பிறப்பித்த அந்த உத்தரவை உறுதி செய்வதற்காக, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையின் போது, இலங்கையில் இருந்து தப்பிவரும் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் ஒன்றிணைய முயன்று வருகிறார்கள். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாகும்” என்று அரசின் சார்பாக கூறப்பட்டது.

அங்கு கூறப்பட்ட நியாயம் நீதிபதியை திருப்திப்படுத்தவில்லை. அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று அவர் கேள்வியெழுப்பினார். இது உளவுத் தகவல் என்று அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, இப்படி யார் வேண்டுமானாலும் கூறலாம், என்று தனது சந்தேகத்தை எழுப்பினார். அதற்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்காக இப்படியொரு கட்டுக்கதை புனையப்பட்டிருக்கிறது என்றே நம்பலாம்.

தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார், அது விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதை குழப்புவதற்கான சூழ்ச்சியாகவும் இந்த திட்டம் அரசு உதவியுடன் புலனாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முதலில் பயங்கரவாத இயக்கம் என்றது இந்திய அரசு. ஆனால் அதனை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த பிறகு, சட்டத்திற்குப் புறம்பான இயக்கம் என்று கூறியே தொடர்ந்து தடையை நீ‌டித்து வருகிறது. அதற்கான காரணம் எதுவும் கிடைக்காத நிலையில்தான், இப்படி ‘தமிழ்நாட்டில் ஒன்றிணைகிறார்கள்’, ‘இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்’, ‘தலைவர்களின் உயிருக்கு ஆபத்து’ என்றெல்லாம் தொடர்ந்து கதைகட்டுகின்றனர். இது இன்னுமொருவகையில் சிங்கள ராஜபக்க்ஷவை தூக்கிவிட்டு தமிழர்களை இல்லாமல் அழிக்கும் திட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கலாம். இந்தியா தொடர்ந்து இப்படியான கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதற்கு கருணாநிதியின் கொள்கைவகுப்பே காரணமாகித் தொடர்கின்றது.

எவ்வளவு தமிழர்களை கடலில் வைத்து சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றாலும் காங்கிரஸை எதிர்த்து பதவியை பறிகொடுக்க விரும்பாத கருணாநிதி புலிகளை காரணங்காட்டி ராஜபக்க்ஷவை நியாயப்படுத்தும் எச்செயலையும் செய்யத்தயங்கமாட்டார் என்பது பல இடங்களில் உறுதியாகியிருக்கிறது.

கருணாநிதியை எதிர்க்கும் பெரும் சக்தியாக தமிழக மீனவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் அமைப்பு உரக்க குரல்கொடுத்து வளர்ந்துவருவதும் கருணாநிதிக்கு வயிற்றை கலக்கும் செயல்ப்பாடாகியிருக்கிறது. புலிகளுக்கு இந்தியாவில் தடை நீக்கப்பட்டுவிட்டால் சீமானின் புலிகளின் ஆதரவு கொள்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்றுவிடும், என்பதால் கருணாநிதி சாகும்வரை புலி உருவத்திலான பொம்மைக்குக்கூட இந்தியாவில் தடைநீக்கம் செய்யக்கூடாது என்பதற்காக புலிப்பூச்சாண்டி கருணாநிதியைப் பொறுத்தவரை தொடர்ந்து உயிர் வாழ்ந்துகொண்டேயிருக்கும்.

ஆரம்பத்தில் சீமானின் பிரவேசம் இவ்வளவு பூதாகரமாக தன்னை எதிர்க்குமென கருணாநிதி நம்பவில்லை சீமானின் ஈழ ஆதரவுக்கொள்கை கருணாநிதிக்கு பயத்தை அதிகரித்து அடுத்தடுத்து சீமானை தேசியப்பாதுகாப்பு சட்டத்திலும் தூக்கி உள்ளேபோட்டார். ஆனால் உயர்நீதிமன்றமே அது செல்லாது என்றுகூறி சீமானை விடுவித்திருக்கிறது. கருணாநிதியின் இப்பேற்பட்ட கீழ்த்தரமான அடக்குமுறைகள் மக்களை இன்னும் சீமான் தலைமையில் அணிதிரள வைத்திருப்பதும் கருணாநிதிக்கு விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்யவேண்டிய கட்டாயத்தையும் உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தடை நீக்கப்பட்டால் வைகோ நெடுமாறன் போன்றோருடன் பெரும் சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் சீமான் தலைமையில் தமிழ்நாட்டை பறிகொடுக்கவேண்டுமென்ற பயம் அவரை ஒரு நடைவண்டி ஹிட்லராக மாற்றியிருக்கிறது.

ஈழதேசம் இணையத்திற்காக,,
கனகதரன்

No comments: