ஈழப் போரில் படுகாயமடைந்த சங்கர் என்கிற சத்தியநாதன் படகு மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டு மதுரைக்கு எடுத்து வரப்படுகிறார். அப்போது பிரபாகரனும் மதுரையில்தான் இருக்கிறார்.
தீவிர சிகிச்சை கொடுத்தும் சங்கரைக் காப்பாற்ற முடியவில்லை. சாகும்போது கூட தன்னைப் பெற்றவர்கள் பெயரை உச்சரிக்காமல்... ‘தம்பீ.. தம்பீ...’ என்று பிரபாகரன் பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டு பிரபாகரனின் மடியிலேயே உயிர் துறந்தார் சங்கர்.
28 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் அதுவும் தன் மடியில் நடந்த இந்தத் துயர சம்பவத்தின் நினைவாக, அந்த தினத்தைத்தான் மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். அன்று மதுரையில் முகிழ்த்த மாவீரர் தினம் இன்று பூமிப்பந்தெங்கும் பல்கிப் பரவியிருக்கிறது.
நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது மாவீரர் தின நிகழ்வுகள். அதோடு, நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக, ‘தமிழ் முழக்கம் வெல்லும்’ என்ற திங்களிருமுறை இதழையும் வெளியிட்டனர். ‘‘தற்போது தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றுத் தேக்கத்தில் வந்து நிற்கின்றது. இலங்கையின் உள்நாட்டு பிரச்னையாகவே அறியப்பட்டு வந்த தமிழர் பிரச்னை, இன்று உலக வீதிகளில் எதிரொலிக்கிறது.
இப்போது நம் முன் உள்ள கடமை... தமிழின மக்களைக் கொன்றொழித்தவர்களுக்கு, இந்தியாவில் துணை நின்ற சக்திகளை விரைவில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த அணி வகுப்போம் என்ற சபதம் ஏற்கவேண்டும்’’ என்று வேலூர் சிறையிலிருந்து சீமான் அனுப்பிய மாவீரர் தினச் செய்தியை வாசித்தார் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ‘பொடா’ சாகுல் ஹமீது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிவண்ணன், ‘‘தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் பாண்டிபஜாரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்... தமிழர்களுக்குக் கடை வாடகைக்கு விடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதுதான் இந்திய இறையாண்மையா?’’ என்று சீறினார்.
இதே வேளையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த மாவீரர் தினக் கூட்டத்தில் பேசிய தமிழ்தேச பொதுவுடைமை இயக்கத்தின் மாநில நிர்வாகி வைகறை...
‘‘தமிழ் மொழிக்காக போராடி உயிர் நீத்த தியாகி சின்னச்சாமியின் கல்லறை இன்றும் உய்யகொண்டான் ஆற்றங்கரையில் திறந்த வெளிக் கழிப்பிடமாக இருக்கிறது. ஆனால், தமிழுக்காகப் போராடிய சின்னச்சாமி போன்றவர்களை, வேட்டையாடிய அன்றைய முதல்வர் பக்தவச்சலத்துக்கு எவ்வளவு பெரிய நிலப்பரப்பில் நினைவு இல்லம்?
தமிழினப் போராளி முத்துக்குமாரின் சிலையைத் திறக்கத் தடை போட்டது இன்றைய அரசு. ஆனால், உயர் நீதிமன்றம் அரசின் முகத்தில் அறைவது போல முத்துக்குமார் சிலைக்கு அனுமதி அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. ஈழத்தமிழர்களை முற்றிலுமாக அழித்தொழித்துவிட்டு... இன்று எஸ்.எம்.கிருஷ்ணா மீண்டும் இலங்கைக்குச் சென்று, சம்பூர் மின்திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார். அந்த மின்திட்டத்துக்கு முதல் கட்டமாக நெய்வேலியிலிருந்து மின்சாரம் அனுப்பப் போகிறார்களாம். ஆயுதம் கொடுத்து தமிழர்களை அழித்துவிட்டு, அடுத்து தமிழ்நாட்டிலிருந்து மின்சாரம் கொடுக்கப் போகிறார்கள் சிங்களனுக்கு. இந்திய அரசு தமிழினத்தின் பகையரசு என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும்’’ என்றார் ஆவேசத்தைக் கொட்டி.
அடுத்து பேசிய பழ.நெடுமாறன்... ‘‘எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக ‘இந்தியா டுடே’ ஆங்கிலப் பத்திரிகை புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டது. அதற்கு எம்.ஜி.ஆர்., ‘அவை பயிற்சி முகாம்கள் அல்ல... அகதி முகாம்கள்’ என்று விளக்கமளித்தார். அந்த மாமனிதர் செய்த உதவியில் கோடியில் ஓர் அளவு, அணு அளவேனும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், தமிழினத்துக்குத் துரோகம் செய்தீர்களே கலைஞர் அவர்களே...
இலங்கையின் 2010 பட்ஜெட்டில் ராணுவத்துக்காக 13 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. புலிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாகச் சொல்லும் சிங்களன் ஏன் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறான்? ஏன் ராணுவத்தில் ஒரு லட்சம் பேரைப் புதிதாக சேர்க்கிறான். ஏனென்றால், மீண்டும் பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப் போர் துவங்கும் என்ற அச்சம் கொழும்புக்கு மட்டுமல்ல... டெல்லிக்கும் இருக்கிறது’’ என்றார்.
புலிகளின் சீருடையில் தொண்டர் படை அணிவகுக்க கம்பீரமாய் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ, ‘‘நான் குற்றம் சாட்டுகிறேன்... தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவான உணர்வுகளை அடக்குவதற்காக தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கொடுத்த கூலிதான், கமிஷன்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம். அங்கே தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது கோபாலபுரத்தில் இவர்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே, சீமான் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீதிமன்றம் நிராகரித்தபோதும்... மீண்டும் அதே காரணத்துக்காக அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போட்டு தன் காங்கிரஸ் பாசத்தைக் காட்டியிருக்கிறார் திருவாளர் தேசியம்பிள்ளை கருணாநிதி. கருணாக்களும், கருணாநிதிகளும் எல்லா காலத்திலும் பரிபாலனம் செய்துகொண்டிருக்க முடியாது. ‘நிறைவாகும் வரை மறைவாக இரு’ என்பார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். அதைத்தான் இப்போது பிரபாகரன் செய்துகொண்டிருக்கிறார்’’ என்று திரண்டிருந்த மக்கள் கடல் மீது நம்பிக்கை அலைகளை ஏற்படுத்தினார் வைகோ.
ஈழத்தில் உள்ள இளைஞர், இளைஞிகளுக்கு பிரபாகரனின் ஆலோசனைப்படி தமிழ் கற்றுக் கொடுத்துவிட்டு வந்தவர் திருநெல்வேலியைச் சேர்ந்த பேராசிரியர் அறிவழகன். புதுக்கோட்டையில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் தின நிகழ்வில் பேசிய அறிவழகன், ‘‘தலைவரின் ஆணைப்படி இங்கே வந்திருக்கிறேன்’’ என ஆரம்பித்தவர், ‘‘சீமானை நான் சிறையில் சந்தித்தபோது ‘அய்யா எனது பெயர் தமிழ்ப் பெயர் இல்லையாமே?’ எனக் கேட்டார். சீமான் தமிழ்ப் பெயர்தான் என்று நான் விளக்கியும் சிறையில் இருந்து வெளிவந்ததும் தன் பெயரைத் தூய தமிழாக்கப் போவதாக சொன்னார். அப்போதே... நானும் அவரும் நாலைந்து தமிழ்ப் பெயர்களை ஆலோசித்தோம். அவர் ‘என் பெயரை ‘தமிழரசன்’ என்று மாற்றலாம் என நினைக்கிறேன்’ என்றார். சிறையிலிருந்து வெளிவந்ததும் சீமான் தமிழரசன் ஆகலாம்’’ என்று புதுத்தகவல் ஒன்றையும் சொன்னார்.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2099&rid=95
Friday, December 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment