Tuesday, January 4, 2011

பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!

பங்குச் சந்தையின் புள்ளிகளைப் பதற்றத்துடன் அண்ணாந்து உற்று நோக்கும் பங்குதாரர்கள் போல, பங்குச்சதையின் திருப்பலியைக் கேட்க மண்டியிட்டு அண்ணாந்து பரிதாபமாக இறைஞ்சும் அப்பாவி ஏசுவின் குழந்தைகள்.

‘பங்குத்தந்தை’ – குழப்பம் வேண்டாம். ஊரை அடிச்சிப் பங்குப் போட்டுக் கொள்வது, அவ்வளவுதான். ஆடு, மாடு திருடு போயிட்டால் ஊர் நாட்டில் சொல்வார்கள்… ‘எவனோ பங்கு போட்டுத் தின்னுட்டான் பாவி’ என்று. பாவம், மந்தைகளைக் காப்பாற்ற மீண்டும் ஒருமுறை மீட்பர் உயிர்த்தெழுவாரா?!

பங்குகளை பிரித்துக்கொள்வதில் சாதிகளைப் போலவே படிநிலைகள் உண்டு. அதாவது பெரிய பங்கு, சிறிய பங்கு, மீடியம் பங்கு என்று. திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரையில் இது ஒரு பெரிய மறை மாவட்டம். எழுபது, எண்பது பங்குகள் இருப்பதாக கிருத்துவ வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன. இருக்கட்டும், பரவாயில்லை. இதற்கெல்லாம் பாஸ் யார்ர்ர்…ரான்னா ‘சேசு சபை’ என்கிற ‘அந்தப்புற’ குருக்கள் சபைதான். அந்த அந்தப்புறத்திலொரு மகராஜன்தான் நம்மூரு சாமி யாரு? ராஜரத்தினம்.

இவரை Father என்றும் அழைப்பார்கள். ‘சாமியாரா? Father ? ரெண்டுல எதாவது ஒண்ணு சொல்லுங்க’ என்று கேட்காதீர்கள். ரெண்டுமே ஒண்ணுதான் பிரதர்…! அதாவது Father ரா குடித்தனம் பண்ணி, பிறகு சாமியாரா ஆனவங்க பலபேர். ஆனா சாமியாரே Father ஆகி புதுக்குடித்தனம் நடத்துறது இப்பவெல்லாம் ஃபேஷன்.

ஸ்தோத்திரம் ஆண்டவரே!

இதை பிளாரன்ஸ் மேரியிடம் கேட்டால்… ‘பாஸ்டேட்’ என்கிறார் ஆத்திரத்துடன். சரி அத்த விடுங்க சார்… பங்குக்கு வருவோம். ரொம்ப கொழப்பம் வேண்டாம்…. சிறிய பங்கு எம்.எல்.ஏ மாதிரி, பெரிய பங்கு எம்.பி மாதிரி. ஏதோ தன்னால முடிஞ்ச அளவு கர்த்தரிடம் மன்றாடிப் பங்குப் பெறுபவர் சிறிய பங்குத்தந்தை. முழங்கை வரையிலும் கையை விட்டு, கர்த்தரிடம் முழங்காலிட்டு அள்ளிக் கொள்பவர்தான் பெரிய பங்குத் தந்தை; அவ்வளவுதான் மேட்டர்.

அதாவது ஏசு அப்பத்தைப் பங்கிட்ட மாதிரி இப்படித்தான் சிறுசும், பெருசும் சுமார் ‘ச்சேர்’ பண்ணிக்கிறாங்க. பங்குன்னா… ஏதோ நம்மூர் திருவிழாவுல ஊருக்கே ரெண்டு கெடா வெட்டி, வீட்டுக்கு பிடி கறிய எடுத்துக்கிட்டுப்போற சாதாரண விவகாரமில்ல இந்தப் பங்கு. உண்டியல் காசு, கண்ணுக்கெட்டாத தூரம் நெல்வயல், நூறு, இருநூறு ஏக்கர்ல தென்னந்தோப்பு, வாழத்தோப்பு, மாந்தோப்பு, அதன்பிறகு வரி வசூலிக்க கல்யாணம், கருமாதி, ஞானஸ்ஞானம், ஈஸ்டர், கிருஸ்துமஸ், இதுபோதாம ‘புது நன்மை’னின்று புடுங்கிறதெல்லாம் பங்குத் தந்தையின் நன்மைக்கே.

இப்படியாக குவிகிறது தந்தையின் பங்கு. இந்தப் பங்குச் சந்தையில் மட்டும் புள்ளிகள் எப்பவும் ஏறுமுகத்திலேதான் இருக்கும். இதுல இன்னொன்னு என்னான்னா… மகாஜன சங்கம், தேவர் பேரவை மாதிரி ‘பங்குப்பேரவை’யின்னு ஒன்று உண்டு. அதாவது ஃபாதர் சங்கம், மதர் சங்கம், பிரதர் சங்கமெல்லாம் போதாதாம். மாதர் சங்கம், இளைஞர் சங்கம், பாலர் சங்கம், சிறுவர் மன்றம், சிறுவர் பாராளுமன்றம்… இப்படியாக பட்டியல் நீள்கிறது. கிருத்துவ வட்டாரங்களை தன் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளவே இந்தச் சங்கங்கள். சொல்லப்போனால் வெள்ளைக்காரன் காலத்து ஏயத் வாரி, பகல் வாரி மாதிரிதான் இவைகள்.

இந்த கலைகளுக்கு ஒரே ஒரு கண்டிஷன். ஒரு கன்னத்தில் அடித்தால்… மறு கன்னத்தைக் காட்டாமல், எவனாவது ரோசப்பட்டு திருப்பி அடித்தவன் கன்னத்தில் அடித்தால், அவன் பேரவைகளில் அங்கம் வகிக்க முடியாது.

மேற்கண்ட நிர்வாக முறைகளைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல ஒரு தலைமை அலுவலகம் வேண்டுமல்லவா…? அதுதான் மாயத்தீவு தூய வளனார் கல்லூரி, திருச்சி – 02. அந்த சாம்ராஜ்ஜிய ராஜாதான் ஸாட்சாத் Father ராஜரத்தினம், நிற்க.

”தனக்கு சவக்குழியைத் தோண்ட தானே அதற்கு ஆட்களையும் தயார் செய்கிறது முதலாளித்துவம்” – என்று ஆசான் கார்ல் மார்க்ஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது. அது இந்த பாதிரிக்கு எப்படியோ கச்சிதமாக பொருந்துது பாருங்க…!

சில பல வருஷங்களாக கட்டாயப்படுத்தி ஒரு கன்னியாஸ்திரிய கெடுத்திருக்கிறாரு இந்த ராஜரத்தினம். பிளாரன்ஸ் மேரி கேட்காத போதே முன் வந்து பல பரிசு பொருட்களை காஸ்ட்லியாக வாங்கித் தந்திருக்காரு இந்த ராஜரத்தினம். ‘எதையோ வாங்கித் தந்து விட்டுப் போகட்டும் எழவ எடுக்க. அந்த செல்ஃபோன் எதுக்கு? நம்ம Father வாங்கித் தரணும்? இப்ப பாத்தீங்களா, குதிர குப்புற தள்ளினதுமில்லாம, குழியும் பறிக்குதில்ல’ என்று சக குருக்கள் கொழப்புறாங்க.

எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு. ‘கிணத்த சுத்தி விளையாடுகிற புள்ளைக்கு கிணத்துலதான் சாவு’ என்று. இப்போது பிளாரன்ஸ் மேரி கொடுத்த டைரிய நம்ம ஏட்டம்மாவே படிச்சிட்டு முகஞ்சுழிக்குது. ‘இது ராஜரத்தினத்திற்கு தேவைதானா? சரி! அத்த உடுங்க பிரதர், எதஎத பங்கு போடறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா?’ என்று சாதாரண ஏழைக் கிருத்துவன் கேட்பது நியாயம்தான். என்ன பண்றது?! பங்குத் தகராறுன்னா… கொஞ்சம் அப்பிடி, இப்பிடி இருக்கத்தான் செய்யும். தெரியாமலா ‘சர்ச்ல இதெல்லாம் சகஜமப்பா…ன்னு’ மதுரை சேசு சபை தலைவர் தேவதாசு சொன்னாரு. அவருக்கு இருக்கிற ‘வெத்தலப்பெட்டி’ அனுபவம் நமக்கெல்லாம் வருமா?

வேளைக்கு மூணு வகை கறிய வறுத்துப்போட்டு, சாம்பல் மாறாத சிம்லா ஆப்பிளையும், ஊட்டி ஆரஞ்சையும் வயிறுமுட்ட திங்க வச்சு, பூசைக்கு பூசை ஒயின்ன ஊத்திவுட்டு, கரந்த பாலுல துளி தண்ணி கலக்காம சுரண்ட காய்ச்சி எடுத்து, அதுல பிஸ்தா பருப்பைக் கொட்டி மெதக்கவுட்டு, அதை இதமான சூட்டுல கழுத்து வரைக்கும் முங்க வச்சு, மினிஸ்டர் காட்டன்ல அங்கி தச்சி போட்டுவுட்டு, அதுக்கு நாடாவையும் கோத்துக்குடுத்து, இலவம்பஞ்சு மெத்தையும் போட்டுவுட்டு, படுக்கப்போற நேரம் பாத்து… நீ தனியாகத்தான் படுக்கணுமின்னா… எந்த மழுமட்டையாவது கேக்குமா?! கொஞ்சமாவது இந்த சேசு சபைக்கு ‘புத்தி வேண்டாமா?! இல்ல… சேசு சபையில இருக்கிற முக்கால்வாசி குருக்கள் அப்படியா வளர்ந்தவங்க?

சினிமாவுல புது மாப்பிள்ளைய First Nightக்கு ‘ஏற்பாடு’ பண்ணி அனுப்புறத நாம பார்த்திருக்கிறோம். அதுவும் அஞ்சு நிமிசத்துல அந்த காட்சி முடிஞ்சிறும். ஆனால் வருசம் முச்சூடும் பல Fatherகள் மந்தைகளின் வரிப்பணத்தில் தங்களை இப்படித்தானே ‘தயார்’ செய்துக்கொள்கிறார்கள். அப்புறமென்ன… கன்னிமேரிக்கு தொண்டூழியம் செய்யப்போயி… கன்னித்தன்மை இழந்தது தானே மிச்சம் பிளாரன்ஸ் மேரிகளுக்கு.

தான் கற்பம் அடைந்ததைப் பற்றி ராஜரத்தினத்திடம் பிளாரன்ஸ் மேரி சொன்னபோது… ‘வெரி சிம்பிள் கருவ கலைச்சிடு’ என்று தமிழ் சினிமா வில்லன் மாதிரி சொல்லிவிட்டு புனித லூர்து அன்னை ஆலயத்தின் உச்சியில் இருக்கிற சிலுவை அதிர்ந்த மாதிரி எகத்தாளமாக சிரித்திருக்கிறார் Father Mr. ராஜரத்தினம். என்ன செய்வது Fatherரச் சொல்லி குத்தமில்ல. மந்தைகளைச் சொல்லணும். ‘Father ஸ்தோத்திரம்… Father ஸ்தோத்திரம்’னு நீயே ‘அப்பா’ ஸ்தானத்தைக் குடுத்துட்டு, அப்புறம் Motherஐ வச்சிக்கிறது தப்புன்னா… எந்த ரத்தினம் கேக்கும். இல்ல சேசு சபைதான் இதை காதிலே போட்டுக்குமா?! கேட்காது.

ஏனென்றால் அந்தப் புள்ளியில்தான் தூயவளனார் நிறுவன சாம்ராஜ்ஜியத்தின் ஒளிவட்டம் பாதுகாக்கப்படுகிறது.

ஓ… மந்தைகளே! அப்பத்தை ஏசுவின் சதையென்றும், ஒயினை ஏசுவின் ரத்தமென்னும் பாதிரிகள் உங்களுக்கு தந்துவிட்டு, ஆனால் அவர்களோ நீங்களெல்லாம் தாயாக மதிக்கின்ற கன்னியாஸ்திரிகள் சதையையும், ரத்தத்தையும், கற்பையுமல்லவா உறிஞ்சுகிறார்கள். ‘நம்ம சாமியார்’ என்று நீங்கள் இன்று மௌனம் சாதிக்கலாம். பிளாரன்ஸ் மேரி இடத்தில் நம்முடைய அக்கா, தங்கை இருந்திருந்தால்… என்ன செய்திருப்பீர்கள்?! மறு கன்னத்தைக் காட்டியிருப்பீர்களா?! சொல்லுங்கள்.

ஒரு துறவிக்கு மிதமிஞ்சி பூர்த்தி செய்யப்பட்ட மற்ற எல்லா சுகபோகங்களும் சேர்ந்துதான் பாலியல் என்கிற காமத்தைக் கோருகின்றன. துறவி என்று நம்பி சாந்தமாக நீங்கள் ஜெபிக்கும் போதெல்லாம் பாதிரியின் எண்ணம் விஸ்வாமித்திரன் ரூபத்தில் வந்து எள்ளி நகையாடுகிறது. துறவு என்கிற அந்த போலியான உண்ணாவிரத முறையிலேயே ‘பழச்சாரு’ என்கிற அந்த முடிவும் அடங்கியுள்ளதை நீங்கள் பார்க்க மறுப்பதன் விளைவுதான் ராஜரத்தினங்கள்.

குடும்பம் இருப்பவனுக்கு ஒரு சாப்பாடு. சத்திரத்தில் இருப்பவனுக்கு ‘பல’ சாப்பாடு. – இந்த இரண்டாவது வகையறாதானே பாதிரிகளும், சாமியார்களும். ஒரு மனிதனாக பிறந்தவனுக்கு பாலியல் தேவையென்பது ஒரு சாதாரண எதார்த்தத் தேவைதான். இதில் ஆச்சரியத்திற்கோ, அதிசயத்திற்கோ ஒன்றும் இடமில்லை. ஆனால் அதைமூடி மறைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி, மடமையில் ஆழ்த்தி, நம்பவைத்து கருவறுக்கின்ற காரியத்திற்கு ‘துறவு’ என்று ஒளிவட்டத்திற்குள் சல்லாபம் புரியும் இந்த கேடுகெட்ட கிரிமினல் கும்பலை, கும்மாளம் போடவிட்டு இன்னும் எத்தனை காலம் வேடிக்கைப் பார்ப்பீர்?!

இல்லை. இதற்கெல்லாம் எந்த சேசு சபை வந்து பதில் சொல்லப்போகிறது. 16வது அல்ல 100வது பெனடிக்ட் வந்தாலும் உங்களுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை. மாறாக கர்த்தர்மேல் பாரத்தைப் போடச் சொன்னார்கள். இருந்தே இருக்கிறது தவறாமல் எல்லாருக்கும் மறுகன்னம்.

இப்படியே தான் நாட்டின் ஒரு பெருங்கூட்டத்தை பக்தி என்கிற ஒரு கஞ்சா போதையில் வைத்திருக்கின்றன மதங்கள். ‘மதம் என்பது அபினி போன்றது’ என்று இந்த அவலத்தைத்தான் கார்ல் மார்க்ஸ் விளக்கினார்.

இனி கன்னியாஸ்திரிகளை கற்பழிக்க எங்கோ வெளியிலிருந்து சோத்து மூட்டை கட்டிக்கொண்டு ஒரு காமுகன் வரத்தேவையில்லை. அத்தகைய காமுகர்கள் அங்கிக்குள்ளேயே உலாவுகிறார்கள். சங்கராச்சாரி, பிரேமானந்தா, நித்தியானந்த வரிசையில் மற்றவர்களை தள்ளிவிட்டு நிற்கிறார்கள் பாதிரிகள். காமத்திற்கேது மத பேதங்கள்.

”இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். தேவனே! இவர்களை மன்னியும்” என்று தன்னை சிலுவையில் அறைந்தவர்களை, தான் சாகும் தருவாயில் கூட, ஏசுவின் மன்னிக்கின்ற பெருந்தன்மையை குறிக்கின்ற புகழ்பெற்ற விவிலியத்தின் வசனம் இது. இதை அப்படியே ராஜரத்தினத்திற்குப் பொருந்தினால், அவர் ஒருமுறை அல்ல, நூறு முறை மன்னிக்கப்படுவார். இந்தப் பாவ மன்னிப்புத்தான் அடுத்தடுத்த பொறுக்கித்தனத்திற்கு அடியெடுத்துக் கொடுக்கிறது. எனவே பாவ மன்னிப்புகள் இருக்கும்வரை பாவத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் ‘கர்த்தர் ஆயிரம்முறை பாவமன்னிப்பு வழங்கினாலும், நான் விடப்போவதில்லை’ சொல்லுகிறார் பிளாரன்ஸ்மேரி. வாழ்த்துக்கள், அப்படியே செய்யக் கடவதாக…!

பாதிரிகளின் இந்த ஆபாசத்தையும், ஆணாதிக்கத்தையும் விரும்பாதவர்கள் ஒன்று தங்களின் கைகளில் கனக்கும் ‘புதிய, பழைய ஏற்பாடுகளை’ வீசியெறிய வேண்டும். அல்லது எல்லாம் கர்த்தருடைய கிருபை’ என்று சிலுவையைப் போட்டுக் கொண்டு மழுங்கிக் கிடக்க வேண்டும். ஒரு பாதிரியார் ‘ஒரு தேடப்படும் கிரிமினல் குற்றவாளி’ என்று ஆனப்பிறகும், ‘தினமும் போலீஸ் ஸ்டேசனில் காலையும், மாலையும் கையெழுத்திடவேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டபின்பும், நமக்கு ரோசம் வருவதில்லை. பதிலாக உடனிருந்த பெண்ணின்மீது பழி சுமத்த மட்டும் உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்க முடியும். ஆண்களாக பிறந்த ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டிய விசயமில்லையா இது.

கருவை சுமந்த கன்னியாஸ்திரியின் சீருடையை உருவி எரியும் இந்த சேசு சபைக்கு, அதற்கு காரணமான ராஜரத்தினத்தின் அங்கியை கழட்ட, ஏன் துப்பில்லை? ஏனென்றால் அப்படி ஒன்று நடந்து விட்டால், அந்த சேசு சபையே அம்மணமாக நிற்க வேண்டி வரும் என்று அந்த சபைக்கே தெரியும். ‘இது மேல் சாதி சாமியார்களின் சதி’ என்று ராஜரத்தினம் சொல்வது உண்மையானால் அந்த சாமியார்களின் பெயர் பட்டியலை வெளியிட முடியுமா?! முடியாது. ஏனென்றால் எல்லா சாதி தில்லுமுல்லுகளும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு தின்னுகிறார்கள். மாட்டிக்கொண்ட பிறகு ‘நானில்லை, அவனில்லை’ என்று லாவணிப்பாடுகிறார்கள்.

திருடியதில் சமமான பங்கும், சரியான எடையும் இருக்கின்றவரை இவர்களுக்குள் பிரச்சனை வராது, என்பதுதான் திருடர்களின் பெருந்தன்மையின் எல்லை. எனவேதான் முறை தவறி திருடும் இவர்கள் முறையான பங்கை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பில் மண்விழும்போதுதான் ஆளுக்காளு போட்டுக்கொடுப்பதும் அடியாள் சேர்ப்பதும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட பிளாரன்ஸ் மேரி பக்கம் நிற்க ஒரே ஒரு சேசு சபை குருவுக்கும் ஆண்மை கிடையாது. மன்னிக்கவும்… யோக்கியதை கிடையாது.

முதலாளிகளால் ஓசோன் படலம் ஓட்டை

பாதிரிகளால் தூயவளனார் சாம்ராஜ்ஜிய குடையில்

சல்லடைகண் ஓட்டை

ஸ்தோத்திரம் ஆண்டவரே!

கர்த்தராகிய ஏசுகிருத்து ராஜரத்தினத்துடன்

இருப்பாராக…!

கா…ம…ன்

____________________________________________________________________

- சா.செல்வராசு, ம.க.இ.க மையக் கலைக்குழு

No comments: