Saturday, January 8, 2011

இந்திய இளைஞர் லெனினின் பேச்சைக் கேட்டு கோபப்பட்ட நாமல் ராஜபக்ஷ

ஈழத்தில் மனச்சாட்சியே இல்லாமல் மனிதம் கொன்ற ராஜபக்ஷவையும், துணைபோன காங்கிரஸ் அரசையும் தென் ஆபிரிக்க மாநாட்டில் வெளுத்துத் துவைத்து இருக்கிறார்கள் இரண்டு தமிழக இளைஞர்கள்!

சர்வதேச அளவில் ஏகாதிபத்தியம் மற்றும் நசுக்கப்படும் மனித உரிமைகளுக்கு எதிராக, கடந்த 65 ஆண்டு காலமாக போராடி வருகிறது, 'உலக ஜனநாயக இளைஞர் அமைப்பு’ (W.F.D.Y). ஹிரோஷிமா, பாலஸ்தீனம், வியட்நாம் பிரச்னைகளில் மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்து, இந்த அமைப்பு எழுப்பிய கடுமையான கோபக் குரல் ஐ.நா-வையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாட்டில், உலக அளவில் பல்வேறு கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்வார்கள். அதன்படி, கடந்த டிசம்பர் 13 முதல் 21 வரை தென் ஆபிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரில் நடந்தது 17-வது உலக மாநாடு.

இதில்தான், 'இலங்கை அரசு நடத்தியது போர் அல்ல... அது ஒரு இரத்த வேட்டை’ என முழங்கினர் தமிழக இளைஞர்களான லெனின், திருமலை.

தென்னாபிரிக்காவில் இருந்து திரும்பி இருக்கும் 'அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற’த்தின் முன்னாள் செயலாளர் லெனினிடம் மாநாட்டு அனுபவம் குறித்துப் பேசினோம்.

இந்த மாநாட்டில் 15 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற அமைப்புகளில் இருந்து மொத்தம் 25 பேர் சென்றிருந்தோம்.

நெல்சன் மண்டேலாவுக்கும், பிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்த மாநாடு அர்ப்பணம் செய்யப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்த உலக ஜனநாயக இளைஞர் அமைப்பும் ஓர் அங்கம்தான். போர்த்துக்கல் நாட்டின் தியாகி வீரா என்ற தோழர்தான் அந்த அமைப்பின் இப்போதைய தலைவர்.

மாநாட்டின் ஐந்தாம் நாள் ஜனநாயக உரிமை, சுதந்திரம் மற்றும் மனித உரிமை பற்றிய கருத்தரங்கில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'இலங்கையில் சிங்களவர்கள் தோன்றிய காலம்தொட்டே தமிழ் இனமும் வாழ்ந்து வருகிறது.

ஆட்சியைப் பிடிக்கும் சிங்கள அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் கல்வி, வேலை, அன்றாட வாழ்க்கை என சகல வழிகளிலும் எம் மக்களுக்கான உரிமைகளை மறுத்து வந்தனர்.

எம் மக்கள் போராட்டத்தில் இறங்கியபோது, உரிமைகளுக்கு உரிய பதில் சொல்லத் திராணியற்ற சிங்கள அரசு, ஆயுதங்கள் மூலம் பதில் சொல்ல ஆரம்பித்தது.

அதனால்தான், வேறு வழியில்லாமல் ஆயுதம் ஏந்தும் சூழலுக்கு ஈழத் தமிழனும் தள்ளப்பட்டான்.

கடந்த 25 ஆண்டு காலமாக தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள் அந்த இனவெறியர்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்துமுடிந்த போரே சாட்சி.

பெற்றோர்களை இழந்து லட்சக் கணக்கான குழந்தைகள் முகாம்களில் நடைப்பிணங்களாகத் திரிவதை இரக்கம் உள்ள எந்த மனிதனும் சகிக்க மாட்டான்.

'சனல் 4’ தொலைக் காட்சியாளர்களே திகைக்கும் அளவுக்கு, தமிழர்கள் கொடூரமாகக் கொன்று அழிக்கப்பட்டார்கள்.

இப்படி அப்பட்டமான போர் குற்றம் நிகழ்த்திய ராஜபக்ஷவுக்கு யார் தண்டனை கொடுப்பது? அமைதியை எதிர்பார்க்கும் ஒவ்வொருவரும் ராஜபக்ஷவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்’ என்று பேசினேன்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த உண்மைகளைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். என்னுடைய மானசீக குருவான சேகுவேராவின் மகள் அலைடா குவேரா என்னைத் தேடி வந்து பாராட்டியதுடன், 'இலங்கையில் நடக்கும் இன்னல்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!’ என்று உறுதி கொடுத்தார்.

இதில் வேடிக்கை... ஈழத்தை இடுகாடாக்கிய ராஜபக்ஷ, மனித உரிமை குறித்த மாநாட்டுக்குத் தன் மகனை அனுப்பிவைத்து, தன்னை மனிதநேயக் காவலனாகக் காட்ட முயன்றதுதான்!

மூன்று நாட்கள் கழித்து அந்த மாநாட்டுக்கு வந்த நமல் ராஜபக்ஷவுடன், இலங்கையில் இருந்து திரளான சிங்களவர்களும், தமிழர்களும் வந்திருந்தனர்.

எனது பேச்சைக் கேள்விப்பட்டு நமல் ராஜபக்ஷே கோபப்பட்டாராம்.

ஆனால், முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்களவர்கள் எங்களை சந்தித்து, 'சக மனிதனின் துன்பத்தை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத அளவுக்கு நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம்’ என்று வருந்தி என் பேச்சில் இருந்த உண்மையை ஏற்றுக் கொண்டனர்.

இந்த மாநாட்டில் இலங்கை மீது பெரிய குற்றச்சாட்டு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தனி விமானத்தில் தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார் ராஜபக்ஷ.

ஆனால், இலங்கையில் நடந்த படுகொலைகளை உலகத்தின் கண்களில் இருந்து இனிமேலும் அவரால் மறைக்க முடியாது....'' என்று விவரித்தார் லெனின் உணர்ச்சி வசப்பட்டவராக!

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த திருமலை, ''போபால் விஷ வாயுக் கசிவால் நேர்ந்த மரணம் குறித்தும், அக்கொலைக்கு காரணமான ஆண்டர்சனை காங்கிரஸ் அரசு தப்பவிட்டது குறித்தும் நான் பேசினேன். உடனே அங்கு வந்திருந்த காங்கிரஸ்காரர்கள் கூச்சலிட்டனர். 'இது உங்கள் நாட்டு நாடாளுமன்றம் கிடையாது, யாருக்கும்... எந்தக் கருத்து சொல்லவும் இங்கே உரிமை உண்டு. அமைதியாக உட்காருங்கள்...’ என்று நிர்வாகிகள் எச்சரித்த பிறகே, அமைதி ஆனார்கள்!'' என்றார்.

இலங்கையில் ஈழத்தமிழர்களின் அவலம் குறித்து உலக அளவிலான மனித உரிமையாளர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். இனியாவது நம் மக்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!

நன்றி: விகடன்

No comments: