Wednesday, January 12, 2011
ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்! சென்னையில் மன்றாடிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா
ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்னாண்டோ.
இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.
இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன். இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும்.
பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் படுகொலையில் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில், பெண்களுக்கு ஏற்பட்டதைத்தான் மோசமான கதியாகக் கருதுகிறேன்.
எந்த இனத்தைச் சேர்ந்தவளாகவும் நான் இங்கு வரவில்லை. இலங்கைத் தீவில் இருந்து ஒரு பெண்ணாகவே நான் இங்கு நின்று பேசுகிறேன். அண்மையில் மாங்குளம், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வந்தேன். அடுத்த கட்டம் என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன? யாரிடமும் போய்க் கேட்க வாய்ப்பு இல்லாமல்...
சிதிலமடைந்த வீடுகளைக் கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களும் என்னிடம், 'எங்கே என் கணவர்? எங்கே என் பிள்ளைகள்?’ என்றே கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை...'' என்றவர், ''அங்கே, 'பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா?
அதிலும் முடமாக்கப்பட்ட பெண் பிள்ளைகளைத் தனியாகவிட்டு நான் வேலைக்குப் போக முடியுமா? ஆனால், குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சுவதற்கான ஊதியம் பெறுவதற்காவது நான் போக வேண்டுமே... எப்படி?’ என்று கதறுகிறார்கள் அந்தப் பெண்கள். மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப் பல நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந்தது? சில வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் இராணுவ நிலைகளை வலுவாக அமைத்து இருக்கிறார்கள். மக்கள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ளக்கூட முடியவில்லை. நான் என்னுடைய மக்களுடன் பேசினால், மூன்றாவது நபரால் கண்காணிக்கப்படுகிறேன். தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை..
இங்கே கூட்டம் போட்டுப் பேசுவதுபோல இலங்கையின் வடக்கில், கிழக்கில் யாரும் பேசிவிட முடியாது. அரசியல்வாதிகள் பேசினால், கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவார்கள், பின்னர் காணாமல் போவார்கள்.
போர், தமிழ் மக்களின் சுயமரியாதை,, தன்மானத்தின் நாடிநரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிச்சைக் காரர்களாக இதுவரை இருந்தது இல்லை. போரால் வாழ்வு இழந்தவர்கள் எல்லோரும், மீனவர்களாகவும் விவசாயிகளாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டும் இருந்தவர்கள்.
அரசனாகவோ அரசியாகவோ வாழாவிட்டாலும், உங்களைவிட என்னைவிட வசதியாக வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று கையேந்தி நிற்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும் மக்கள் வேலையின்றி, வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள்.
உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரம்பல் விகிதத்தை மாற்றிவிடுகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உருவாகிறது. அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் நடக்கிறது.
தமிழ் மக்கள், சிங்கள ஊடகங்கள், பொதுஜன நியாயத்துக்கான குரலை இலங்கை அரசு கடுமையாக ஒடுக்குகிறது. நடந்ததை மறந்துவிடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. போரினால் அழிக்கப்பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.
இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, வெளிநாட்டில் இருந்து நாங்கள் ஆதரவைப் பெறப்போவதில்லை. தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்களின் கூட்டு முயற்சியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்த ராஜபக்ஷ வெளியேறும் காலம் வரும்.
அந்த நாளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று நிமல்கா முடித்தபோது, அரங்கம் அதிரக் கைதட்டல்கள். இனவெறி தலைக்கேறி, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் குடித்த சிங்களத்தில் பிறந்தாலும், நியாயத்துக்காக நிற்கும் நிமல்கா போன்றவர்கள்தான், நிஜமான 'தகத்தகாயக் கதிரவன்’கள்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஈழப்போர் அழிவைவிடத் தமிழக அரசியல் நிலை அவலமாக உள்ளதே!தமிழகம் இப்படி இருக்கிறதே!
-இறையரசன்
Post a Comment