Wednesday, January 26, 2011
குழந்தைகள் நெற்றியில் விபூதியாகும் பிரபாகரன் வீட்டு மண்
முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள்.
ஒருவர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. ஈழ விடுதலைப் போரின் தலைவர்களான பிரபாகரனும், முகுந்தனும் மிக நெருக்கமாகப் பழகிய தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மகள் வயிற்றுப் பேத்தி. மற்றொருவர் திருமலை... இவர் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர்.
இவர்கள் இருவரையும் கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதிவரை நான்கு நாட்கள் இலங்கையில் சித்ரவதைக் கொடுமை நடக்கும் தீவிரவாதத் தடுப்புப் புலனாய்வு அமைப்பு இயங்கும் கட்டிடத்தின் நான்காவது மாடியில் வைத்து விசாரித்துள்ளார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், தமிழ் ஈழ ஆதரவுத் தலைவர்கள், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டதனால் உயிர் பிழைத்த அவர்களிடம் "இந்தப் பயணம் ஏன்?' என கேட்டோம்.
""எனக்கு நினைவு தெரிந்து 95-ம் ஆண்டு தொடங்கி ஈழப் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரை பார்த்ததும், தமிழ்ப் பெண்ணான எனக்குள் ஒரு இயலாமை மேலோங்கிய குற்ற உணர்ச்சி குடிகொண்டுவிட்டது. தமிழகத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் ஒரு வழக்கறிஞராக நின்று எதிர்த்துப் போராடும் எனக்கு போருக்குப் பிந்தைய ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உண்டாகியது. அந்தப் போரினால் அனாதைகளான பல்லா யிரம் குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்கிற எனது ஆசையை, எனது குடும்ப நண்பரான திருமலையிடம் தெரிவித்தேன். அவரும் மணந்தால் போரினால் நிர்க்கதியான தமிழ் ஈழ குடும்பத்துப் பெண்ணைத்தான் மணப்பேன் என கடந்த வருடமே பெண் தேடி ஈழப் பகுதிகளுக்குச் சென்று வந்தார். அவரிடம் அங்குள்ள பல ஈழத் தமிழ்க் குடும்பங்களின் முகவரிகளும் இருந்தன.
பொங்கல் திருநாளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க எங்களது ஊதியத்திலிருந்து ஒரு சொற்பத் தொகையை அம்மக்களுக்கு ஆறுதலாக கொடுக்கலாம் என நாங்கள் திட்டமிட்டோம். ஏற்கனவே திருமலைக்கு நன்கு அறிமுகமான இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உதவ முன் வந்தார். ஈழத்தின் இன்றைய சமூகவியல், எதிர்கால அரசியல், போராளிகளின் இன்றைய நிலை... என பல கேள்விகளுக்கும் விடை காணலாம் என 13-ந் தேதி ஜெட் ஏர்வேஸில் பயணமானோம்.
14-ந் தேதி முதல் எம்.பி.யின் சொந்தத் தொகுதி யான வவுனியா மற்றும் மட்டக்களப்பு, கிளி நொச்சி ஆகிய பகுதிகளை 16-ந் தேதி வரை சுற்றி வந்தோம். பிறகு ஓமந்தை ராணுவ செக்போஸ்ட் முதல் யாழ்ப்பாணம் வரை செல்ல ராணுவ அமைச்சகத்தின் அனுமதியை எம்.பி. அவர்கள் பெற்றுத் தந்தார்.
16-ந் தேதி நள்ளிரவு 12:45 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து 3 மணி நேர பேருந்து, ஆட்டோ பயணம் மூலம் யாழ்ப்பாணத்தை அடைய நாவாலி, நாவலூர் வழியாக பயணித்தோம்.
வல்வெட்டித்துறை போனதும் எங்கள் மனசு கொந்தளித்தது. தமிழீழ தலைவர் மேதகு பிரபாகரன் வீடு இடிந்து சின்னாபின்னமாகக் கிடந்தது. அந்த வீட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிலிருந்த மண்ணை நெற்றியில் விபூதிபோல் குழந்தைகளுக்குப் பூசிக் கொண்டிருந்தார்கள். நேராக தலைவரின் தாயார் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைக்குப் போனோம். அங்கிருந்த தமிழ் நர்ஸிடம் ""அம்மாவைப் பார்க்கணும்'' என்றோம். சத்தம் போடாமல் வாருங்கள் என அழைத்துச் சென்றார். பத்து படுக்கைகள் கொண்ட அந்த வார்டில் உள்ள ஒரு சிறிய படுக்கையில் ஒரு கொசுவலைக்கு அடியில் அம்மா படுத்திருந்தார்.
கை, கால்கள் இரண்டும் பக்கவாதத்தில் முடங்கிக் கிடந்திருந்தது. நெற்றியில் ஒரு ஆபரேஷன் செய்த பிளாஸ்திரி. மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் ட்யூப்கள் சொருகியிருந் தது. "தினமும் காலையில் ஒரு டம்ளர் கறுப்புத் தேயிலை. மாலையில் கொஞ்சம் சத்தான திரவ உணவு. அதையும் தலைவரின் அக்காள் மகள் ஒருவர் கொண்டு வந்து தருவார்' என சொன்னார் அந்த நர்ஸ்.
நான் அவரது பக்கத்தில் அமர்ந்து முகத்தை கைகளால் ஏந்தி "அம்மா நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கேன் அம்மா' என உரக்கக் கத்தினேன். அம்மா கண் விழித்துப் பார்த்தார். அவர்களது கண்களில் கண்ணீர். "ம்...ம்...ம்...' என மூன்று முறை இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு கேவலை வெளிப் படுத்தினார். மாபெரும் புரட்சி வீரனின் தாயாரது இயலாமை நிறைந்த கேவலை கேட்ட நான்... கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தேன். உடனே நர்ஸ்கள் எங்களை வெளியேறச் சொன்னார்கள்.
மனதை கல்லாக்கிக்கொண்டு 18-ந் தேதியன்று கொழும்பு நோக்கி திரும்பியபோது ஓமந்தை ராணுவ செக்போஸ்ட்டில் மதியம் 3 மணிக்கு "உங்களை நாங்கள் விசாரிக்க வேண்டும்' என ராணுவ உளவுப் பிரிவு போலீசார் அழைத்துக்கொண்டு போய் ஓமந்தை போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்தபோதுதான்... இலங்கை அரசின் மற்றொரு முகம் எங்களுக்குத் தெரிய வந்தது.
நாங்கள் சுற்றிப் பார்த்த பல பகுதிகளில் ராணுவ வீரர்கள் இல்லாத இடமே இல்லை எனச் சொல்லலாம். ஆனால் அகதிகள் முகாம்களில் தமிழர்கள் தண்ணீர், உணவு, மருந்துகள் இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார்கள். கல்வி என்பது இளைய தலைமுறைக்கு மறுக்கப்பட்டிருந்தது. மேற்கூரைகள் இல்லாத பல வீடுகளில் கை, கால்களை இழந்த பல தமிழ்க் குழந்தைகள் அடுத்தவேளை உணவுக்காக யாசித்துக்கொண்டிருந்தார்கள். இதுபோன்ற குடும்பங் களின் இளைஞர்களையோ, குடும்பத்தலைவனையோ பார்க்க முடியவில்லை. அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருந்தார்கள் அல்லது புலிகள் என்ற பெயரில் வேறுசில முகாம்களில் கொடுமைகளுக்குள்ளாகிக் கிடந்தார்கள்.
நாங்கள் கொழும்பு ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் எங்களது அனைத்து அசைவுகளையும் அவர்கள் கண்காணித்துப் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.
ஓமந்தையில் சிறிதுநேர விசாரணைக்குப் பிறகு 2 பேஜேரோ கார்களில் 6 மணி நேர பயணமாக பாது காப்புடன் எங்களை கொழும்பு நகரிலுள்ள தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் கட்டிடத்திற்குள் 19-ந் தேதி அழைத்துச் சென்றார்கள். இருவரையும் தனித்தனியாக 4-வது மாடியிலும் ஆறாவது மாடியிலும் வைத்து விசாரணை செய்தார்கள். தேசிய பாதுகாப்புப் பிரிவு, தீவிரவாதிகள் நடவடிக்கையை கண்காணிக்கும் உளவுப் பிரிவு, சாதாரண சி.ஐ.டி. பிரிவு மற்றும் ராணுவ போலீஸார் மற்றும் லோக்கல் போலீஸார் என மொத்தம் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த 50 பேர் மணிக்கணக்கில் விசாரித்தனர். நாங்கள் கொண்டு போயிருந்த கேமரா, மொபைல், எங்களது ஈ-மெயில்கள் அனைத்தும் பிரித்துப் பார்க்கப்பட்டது.
அங்கயற்கண்ணி என்ற பெயர் கொண்ட முதல் தற்கொலைப்படைப் பெண்புலி கடலில் தாக்குதல் நடத்திய படகு ஒன்று கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந் தது. அழியாமல் இருந்த அந்த நினைவுச் சின்னத்தின் முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். "அது ஏன்?' எனக் கேட்டார்கள்.
விடுதலைப்புலியாக இருந்த பெண்ணுக்கு இயக்கத்தில் இருக்கும்போதே திருமணம் நடந்தது. அதற்கு அடையாளமாக ஒரு புதுவிதமான மாட்டுக் கொம்பு போன்ற ஒரு தாலியை விடுதலைப்புலிகள் பரிசளித்திருந்தார்கள். அதை புகைப்படம் எடுத்திருந்தேன். அது ஏன் என விளக்கச் சொன்னார்கள்.
திருமலை தனது ஈ-மெயிலில் மாவீரர் தின நாளுக்கான கொண்டாட்டங்களைத் தனது நண்பர் களோடு பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்ததும் டென்ஷனான அவர்கள் அவரைத் தாக்க முற்பட்டார்கள்.
தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் 4-வது மாடி அறைகளில் நாங்கள் மட்டும் இல்லை. வேறு சில விசாரணைக் கைதிகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் 70 வயது முதியவர். பல மாதங்களாக அங்கேயே கிடக்கும் அவர் செய்த குற்றம்... வெளிநாட்டிலிருந்து அவரது செல்போனுக்கு யாரோ, பிரபாகரன் படத்தை அனுப்பியதுதான்.
"நீங்கள் யார்? என்ன திட்டத்தை நிறைவேற்ற இங்கு வந்தீர்கள்? ஏன் பிரபாகரனின் தாயாரை சந்தித்தீர்கள்?' என்கிற கேள்விகளோடு அரசிய லும் பேசினார்கள். "தமிழீழ அரசியலை ப் பற்றி பேசி வைகோ, ராமதாஸ் எல்லாம் என்ன கிழிச்சாங்க. சீமானால தமிழ்நாட்டுல ஒரு சீட்டாவது ஜெயிக்க முடியுமா? பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?' என 21-ந் தேதிவரை கேள்வி களால் மிரட்டிக்கொண்டேயிருந்தார்கள்.
நாங்கள் உயிருடன் தமிழகம் வருவோம் என்கிற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. 21-ந் தேதி மதியம் இரண்டரை மணிக்கு எங்களை ஒரு கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்பொழுதுதான் எங்களை விடுதலை செய்ய ஒரு பெரிய போராட்டமே நடந்தது என தெரிந்துகொண்டோம்.
விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகுதான் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.
தமிழீழ போக்குவரத்துக் கழகம், தமிழீழ பாடசாலை, தமிழீழ குடிநீர் வாரியம் என ஈழப் பகுதிகளில் வாழ்ந்த ஈழ மக்களில் பலர் கடைசி முள்ளிவாய்க்கால் வரை தலைவர் பிரபாகரனுடன் வீரமுடன் பயணித்திருக் கிறார்கள்.
அந்தப் போரில் காயப்பட்டுக் கிடக்கும் அந்த மக்களுக்கு இன்றைய தேவை தமிழ் ஈழம் அல்ல. நல்ல சோறும், குடிநீரும்தான். அதைப் பெற்றுத் தர நாம் என்ன செய்யப் போகிறோம்? என்கிற கேள்வியே எனக்குள் எழுந்தது. இலங்கை ராணுவத்தினருக்கு போர் முடிந்த பிறகும் இருக்கும் புலிகள் மீதான பயமும், தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஈழம் மலரும் என்கிற நம்பிக்கையும் ஒரு பெரிய ஆச்சரியத்தை என் மனதில் ஏற்படுத்தியது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47431
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment