Tuesday, January 18, 2011

துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!



இந்தியாவில் வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கிறது என்றால் மற்ற பொருட்களின் விலையை விளக்க வேண்டியதில்லை. உழைக்கும் மக்களில் பெரும்பான்மையோர் தற்போது ஓரிரு வேளை உணவை ரத்து செய்திருக்கின்றனர். ஆனாலும் இத்தகைய காந்திய வழி உண்ணாவிரதம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடர முடியும்?

ஏகாதிபத்தியங்களின் சுரண்டலால் உலக பொருளாதாரம் தோற்றுவித்த ‘நெருக்கடி’ அமெரிக்காவில் துவங்கி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று எந்த கண்டத்தையும் விட்டுவைக்கவில்லை. முதலாளித்துவத்தின் சூதாட்டத்தால் வந்த நட்டத்தை இப்போது ஏழை நாடுகளின் மேல், உலக மக்களின் மேல் ஏற்றி வருகிறார்கள். விளைவு எங்கும் வேலை இழப்பு, விலைவாசி உயர்வு, அரசு மானியம் ரத்து…. ஆயினும் இந்த அநீதிகளை மக்கள் தொடர்ந்து சகிக்க மாட்டார்கள் என்பதற்கு கிரீசீல் எழுந்த தெருப்போராட்டம் ஒரு துவக்கம் என்றால் அந்த போராட்டத்தையே புரட்சியாக சாதித்திருக்கிறது துனீசிய மக்களின் எழுச்சி. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த மக்கள் புரட்சியை தோழர் கலையரசன் விளக்குகிறார்.

- வினவு

________________________________________________

26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பட்டப் படிப்பு முடித்தும் வேலை வாய்ப்பு இல்லை. ஜீவனத்திற்காக நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்தவன். போலிஸ் லைசன்ஸ் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான். ஊர், பேர் தெரியாத இளைஞனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

விரைவிலேயே அவர்களது சீற்றம் அதிகார வர்க்கம் மீது திரும்பியது. அரசு நிறுவனங்கள் தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்த பிரெஞ்சு தூதரகம் கூட சுற்றி வளைக்கப்பட்டது. வேலையற்ற இளைஞர்களின் கலகமாக ஆரம்பித்தாலும், வழக்கறிஞர்களும், தொழிற்சங்கமும் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர். உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

அரபுலகில் முதன் முதலாக இணையம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியும் இதுவாகும். கொடுங்கோல் அரசின் இணையத் தடையை மீறி, டிவிட்டர், முகநூல் (Facebook) போன்ற சமூக வலையமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தன. போலிஸ் அடக்குமுறைகளை காட்டும் வீடியோக்களை, Youtube உடனுக்குடன் அழித்துக் கொண்டிருந்தது. ஆயினும் எல்லாவித தடைகளையும் மீறி, இறுதியில் புரட்சி வென்றது. “இணையத்தில் புரட்சி செய்கிறார்கள்!” என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம்.

துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிகலகத்தை அடக்க அனுப்பப்பட்ட போலிஸ் படை, வழமையான துப்பாக்கிச் சூடு, கைதுகள், என்று மக்கள் எழுச்சியை அடக்கப் பார்த்தது. இறுதியில் துனிசியா சர்வாதிகாரி பென் அலியே முன் வந்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீரென்று உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பென் அலி, வேலையற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி, சவுதி அரேபியாவில் அகதித் தஞ்சம் கோர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

உல்லாசப் பயணிகளால் அதிக வருமானம் கிடைக்கும் கரையோர நகரங்கள் என்றும் போல அமைதியாகத்தான் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்நாட்டு நகரங்களில் தான் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள். உணவுப் பொருட்களின் விலையேற்றம், ஏற்கனவே தொழில் வாய்ப்பற்ற பகுதிகளை மோசமாகத் தாக்கியது.

உலகம் முழுவதும் பொருளாதாரப் பிரச்சினைகளால் மக்கள் கிளர்ச்சிகள் வெடிப்பதைப் பற்றி நான் எழுதினால், பலருக்கு பிடிப்பதில்லை. “மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல, இன மான உணர்வே பெரிதென்று” வாதாடுகின்றார்கள். ஊடகங்களும் அரபு நாடுகளைப் பற்றியும் அப்படியான கருத்துகளைத்தான் பரப்பி வந்தன. “கலாச்சார மோதல்” தத்துவப் படி, அரேபியர்கள் முஸ்லிம்கள், வயிற்றை விட மதமே பெரிதென்று வாழ்பவர்கள் என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். “அரபு நாடுகளில் அல்கைதாவும் இல்லை, அரேபியர்கள் எல்லோரும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளும் இல்லை,” என்று கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையான பிரச்சினை என்ன என்றும் தெளிவு படுத்தியிருந்தேன்.

மேற்கத்திய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் சர்வாதிகாரிகள், ஜனநாயக சுதந்திரத்தை மறுக்கும் அரசு அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, இவை சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். விரக்தியுற்ற இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் வேலையின்றி, வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அமெரிக்காவும், உள்நாட்டு சர்வாதிகாரிகளும் அவர்களை அல்கைதா என்று முத்திரை குத்தி அடக்கினார்கள்.

துனிசியாவில் கலகம் செய்தவர்களையும், பென் அலி அப்படி சொல்லிப் பார்த்தார். யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. கடைசியாக அவரே முன் வந்து, நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பது முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா? மக்களின் கோபாவேசத்திற்கு முகம் கொடுக்க முடியாமல், நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.

துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிதுனிசியா கலவரத்தை சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கிரேக்க மக்கள் என்ன காரணத்திற்காக கிளர்ந்தெழுந்தார்கள்? வேலை, ஊதியம், உணவு பறிபோவதை எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருப்பான்? (இனமான உணர்வாளர்களுக்கு சுடலை ஞானம் பிறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.) வளர்ச்சியடைந்த ஐரோப்பாவை சேர்ந்த கிரேக்கர்களாக இருந்தால் என்ன, வறிய நாடான மொசாம்பிக்கை சேர்ந்த மக்களாக இருந்தால் என்ன, எல்லோரும் வயிற்றுக்காக போராடக் கிளம்புகின்றனர். “முஸ்லிம் நாடுகளான” துனீசியா, அல்ஜீரியா, சூடான் போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை போராடத் தூண்டுகின்றது.

“சிங்களப் பேரினவாதிகளின்” சிறிலங்காவிலும், “தமிழ் இனப்பற்றாளர்களின்” ஈழத்திலும் மக்கள் பொருளாதார பின்னடைவுகளை எதிர்த்து போராடுகின்றனர். முதலாளித்துவ தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்திகளை கூறாமல் இருட்டடிப்பு செய்கின்றன. எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் அளிக்கின்றது. அரசு மானியத்தை விலக்கிக் கொண்டால் விலை ஏறும் என்பதும், அதனால் மக்கள் கலகம் செய்வார்கள் என்பதும், ஓரளவு பொருளாதாரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி துனிசியாவையும் பாதித்தது. பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்த உல்லாசப் பயணத் துறை, நஷ்டத்தை நோக்கி சென்றது. ஏற்றுமதி, அந்நிய முதலீடு அரைவாசியாக குறைந்தது. இதனால் வேலையற்றோர் தொகை அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்தில், துனிசியா அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. இதனால் படித்த வாலிபர்கள் பெருகினார்கள். அரபு நாடுகளில் அதிகளவு படித்த மத்தியதர வர்க்கத்தை கொண்ட நாடுகளில் துனிசியா முன்னணியில் திகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டில் உள்ளதைப் போல, பெண்கள் சம உரிமையுடன் அனைத்து துறைகளிலும் பிரகாசித்தனர். ஆனால் அத்தகைய அபிவிருத்திக்குப் பின்னால், சர்வாதிகார கொடும்கோன்மை மக்களை அடக்கி வைத்திருந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன.

எகிப்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போல, அன்றாட உணவுக்கே அல்லாடும் பரம ஏழைகள் துனிசியாவில் இல்லை. இருப்பினும்,Tunis, Sousse , Sfax, போன்ற நகரங்கள் சுற்றுலாத் துறை, சர்வதேச வணிகம் காரணமாக அதிக வளர்ச்சியடைந்திருந்தன. அப்படி எந்த அதிர்ஷ்டமும் வாய்க்கப் பெறாத பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, குறைந்த ஊதியத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். மொத்த தேசிய வருமானத்தில் 30 % செல்வத்தை, 10 % பணக்கார கும்பல் அனுபவிக்கின்றது. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பொருளாதார பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திறந்த சந்தை, நவ தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவில்லை. சாதாரண பணியாளர்களும், பாவனையாளர்களும் வரி செலுத்திக் கொண்டிருக்கையில், பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் வரிச் சலுகை பெற்று வந்தனர். நாட்டின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி பென் அலியின் குடும்ப சொத்தாக இருந்தன. பென் அலி குடும்பத்தின் பேராசையும், அகங்காரமும் ஊழலுக்கு காரணம் என்று துனீசியா பொது மக்கள் குறைப் பட்டுக் கொள்கின்றனர்.

துனிசியா மக்களின் புரட்சியை சர்வதேச சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இல்லை. மேற்குலக ஊடகங்கள் ஏதோ கடமைக்கு செய்தி வாசித்து விட்டுப் போகின்றன. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஏற்றுமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் துனிசியாவுக்கு அரசு முறை விஜயம் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, “மனித உரிமைகள் நிலவரம் திருப்தியளிப்பதாக” நற்சான்றிதழ் அளித்தார். இன்று மக்கள் எழுச்சியை அடக்க, துனிசியா அரசு கேட்டுக் கொண்டால் படை அனுப்ப தயாராக இருப்பதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதும், பிரான்ஸ் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறிய நாடான துனிசியாவில் மக்கள் புரட்சி வென்று விட்டது. அடுத்தது இயற்கை வளம் நிறைந்த அல்ஜீரியா புரட்சிக்காக தயாராகி வருகிறது.

_________________________________________________________

- கலையரசன்
http://www.vinavu.com/2011/01/17/tunisia-revolution/

No comments: