Thursday, April 15, 2010
என் நெஞ்சோடு கலந்திடு...
ஒரு யுக
சோகத்தின் கண்ணீர்
உனக்குள்ளே ஆர்ப்பரிக்கிறது.
உன் மனதில்
அடிக்கடி புகுந்து
ஆழமாய் வாட்ட
உனக்கு அப்படி என்ன
சோகத்தின் கீறல்கள்?
ஊமையின் கனவுகளாய்
உன் சோகங்களையும்
பூட்டி வைத்துத் துவளாதே!
இமை வரை முட்டி மோதி
முத்து முத்தாய்
விழும் துளிகளை
நீயும் ஏன் சேமிக்கத் துடிக்கிறாய்?
காலையில் உதிக்கும்
அந்த சூரியன்
மாலையில் அஸ்தமிப்பதாய்
உன் உள்ளத்தில் உதித்த
அந்த சோகங்களை கூட
இன்றே அஸ்தமித்துப் போகட்டும்...
விடியாத வானம் இல்லை
வடியாத வெள்ளம் இல்லை
நாளை பொழுதும்
புதிதாய் மலரட்டும்..
எப்போதும்
தனிமையாய் வெறுமையாய்
இருண்ட அறையினில்
நீயும் மௌனமாய் கரைகின்றாய்...
இந்த உலகில்
உனக்காய் யாருமில்லை என்று
இல்லாத ஓர் வேலியை
உன்னைச் சுற்றிப் போடுகிறாய்...
போதும் போதும்
நீ போட்ட வேலியை
தகர்த்து எறிந்து விடு.
கல்லில் விழுந்த
சிறு ஆலம் விதைகூட
முழைத்து பாறையை பிளப்பதை
நீ பார்க்கவில்லையா?
வாழும் காலம் வரை
வசந்தமாய் வாழ்ந்திடலாம்
வா இப்போதே
உன்னோடு நானும்
உறுதியான நட்புடன்...
உன் உள்ளத்தில் நிறைந்து
வலி சுமக்கும்
சோகத்தின் சுமைகளை
கண்ணீர் ஊறிய
உன் கடந்த காலத் தடயங்களை
புதிய இலட்சியங்களின் புழுதியினால்
தூர்த்து விடச் செய்கிறேன்...
அழுதிடும் போது
உன் சோகம் பகிர்ந்து
உன் விழி துடைப்பதற்கு
உண்மையான நட்புடன் நான்...
நீ சிரித்திடும் போது
நீ சிந்தும் சந்தோசக் கண்ணீரில்
உன்னுடன் சேர்ந்து
நானும் நனைவதற்கு
உறுதியான நட்புடன் நான்...
வா இப்போதே
என் நெஞ்சோடு கலந்திடு
இனிய உறவாக....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை தோழர் வாழ்த்துக்கள்
Post a Comment