Saturday, November 29, 2008
இல்லாத ஆலயமும் உனது தீபமும்
நடந்தவைகளையே
நினைத்து நினைத்து
உன் நினைவுகளோடு
நடந்து நடந்து
சொல்லியழ முடியாச்
சோகங்களைத் தந்த
சூழலைப்பிரிந்து அவன்
வெகு தூரம் போய்விட்டான்...
உன் நினைவுகள்
கல்லில் வரைந்த உருவமாய்
குளிரில் உறைந்த நதியாய்
அவன் நினைவின் சிகரங்களில்
அமைதியாய் வீற்றிருந்து
அழுகையை கொடுக்கின்றன...
வாழ்வைத் தேடிப்பறந்து
விலங்கை பூட்ட்டி வந்தவளே
உன் சிறகுகளை விரிக்க
அந்த பழைய வானில்
அன்று அவன்
பூக்களால் தோரணம்
போட்டு வைத்திருந்த
பாதைகள் எல்லாம்
பத்திரமாக இருக்குமென்று
நினைக்கிறாயா?
உன் வாழ்வு தோற்ற பின்னர்
வந்து சொல்கிறாய்...
அவன் உயிர்காக்க நீ
இன்னொருவன்
மனைவியானாய் என்று
உலகம் உன் நியாயத்தில்
உறுதிக் கொள்ளாது பெண்ணே!
குலமகளாய் இருந்து நீ
குதூகலமாய் வாழ்கவென்று
தன்னந்தனியாய்
தொலைதூர தேசமொன்றை
தேடியடைந்தான்...
திரும்பி வர முடியாத
தொலைவிற்கு நீ
பட கோட்டி போனபின்னர்
அவன் கரைகளின்
கலங்கரை விளக்கினை தகர்த்தான்...
ஆபத்துக்களை தாண்டி நீ
வந்தடைய வேண்டுமென்ற
ஆராதனை வேண்டாத போது
அவன் மனதின் ஆலயத்தை
அடியோடு பெயர்த்தான்...
இன்று உன் கரங்களில்
தீப மேந்தி
காதலின் கோவிலை தேடுகிறாய்
துரோகியாய் நீ மாறிய தினத்தன்றே
அந்த ஆலயத்திலும்
இடி வீழ்ந்ததை அறியாமல்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment