தேசப்பிதாவே!
சுதந்திரக்குழந்தையை
சுமந்து பெற்ற கருவறையே!
உன் கல்லறையை சிலர்
காயப்படுத்திய போது
யாரும் கவலைபடவில்லை...
நடிகை ஒருத்திக்கு
நான்கு நாள் காய்ச்சலென்றால்
நாடே சலசலக்கும்
பாரத தேசத்தில்
மகாத்மாவே உன்
சமாதி சேதப்பட்ட போது
யாரும் சஞ்சலப்படவில்லை!
இப்போது புரிகிறது
தேசமே
சேதமடைது கொண்டிருப்பதை
சகித்துக்கொள்ளும் இவர்கள்
உனது சமாதி சேதமடைந்ததற்காவா
சங்கடப்படுவார்கள்?
வைத்துகாக்கும்
வகையறியாதவர்கள்
வாங்கி தந்தவர்கள் மீது
வசை மழை பொழிவது
வாடிக்கைதானே!
கணவன் மீது கொண்ட கோபத்தை
பிள்ளையை அடித்துக்
தீர்த்துக்கொள்ளும்
ஒரு சராசரி இந்திய
மனைவியை போன்றவர்களே
இவர்கள்?
தேசப்பிதாவே நீ
அன்னியர்களின்
சுரண்டலை மட்டுமே
விரட்டி அடித்தாய்...
இப்போது நாங்கள்
சொந்தக்காரனாலேயே
சுரண்டப்படுகிறோம்...
அன்று நீ
கைத்தடியுடன் நடந்து
கள்ளச்சாரயத்தை
ஒழிக்க முயன்றாய்...
இன்று எங்கள் தலைவர்கள்
கள்ளச்சாரயக்காரர்களின்
கைத்தடிகளாய்
பவனி வருகிறார்கள்...
இது ஜனநாயக நாடு என்பது
எங்களுக்கு
தேர்தல் நேரத்தில் தான்
தெரியவருகிறது...
எச்சில் இலைகளுக்கு
எமது மக்கள்
ஏமாறத்தயார் என்பதால்
எங்கள் எஜமானர்கள்
எலும்பு துண்டுகளை வீசி
எளிதில் வயப்படுத்துகிறார்கள்!
அன்னியரிடமிருந்து
எங்களுக்கு
விடுலை வாங்கி தந்தாய்
நாங்கள் சொந்த நாட்டாரிடத்து
சுதந்திரம் பெறுவது எப்போது?
எட்டுப்புலிக்காடுரெ.வீரபத்திரன்
இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள்
3 hours ago
No comments:
Post a Comment