Sunday, November 23, 2008

தூக்க‌ம் விற்ற‌ காசுக‌ள்




தூக்க‌ம் விற்ற‌ காசுக‌ள்

இருப்ப‌வ‌னுக்கோ வந்து விட‌ ஆசை

வந்த‌வ‌னுக்கோ சென்று விட ஆசை

இதோ அய‌ல்தேச‌த்து ஏழைக‌ளின்

க‌ண்ணீர் அழைப்பித‌ழ்...

விசாரிப்புக‌ளோடும்

விசா அரிப்புக‌ளோடும் வ‌ருகின்ற‌

க‌டித‌ங்க‌ளை நினைத்து நினைத்து

ப‌ரிதாப‌ப்ப‌ட‌த்தான் முடிகிற‌து...

நாங்க‌ள் பூசிக்கொள்ளும்

சென்டில் வேண்டும‌னால்

வாச‌னைக‌ள் இருக்க‌லாம்

ஆனால் வாழ்க்கையில்...?

தூக்க‌ம் விற்ற‌ காசில்தான்

துக்க‌ம் அழிக்கின்றோம்

ஏக்க‌ம் என்ற‌ நிலையிலே

இள‌மை க‌ழிக்கின்றோம்...

எங்க‌ளின் நிலாக்கால‌

நினைவுக‌ளையெல்லாம்

ஒரு விமான‌ப்ப‌ய‌ன‌த்தூனூடே

விற்று விட்டு

க‌ன‌வுக‌ள்

புதைந்துவிடுமென‌ தெரிந்தெ

க‌ட‌ல் தாண்டி வந்திருக்கிறோம்...

ம‌ர‌ உச்சியில் நின்று

ஒரு தேன் கூட்டை க‌லைப்ப‌வ‌ன் போல‌

வார‌ விடுமுறையில்தான்

பார்க்க‌ முடிகிற‌து...

இய‌ந்திர‌மில்லாத‌ ம‌னித‌ர்க‌ளை...

அம்மாவின் மேனி தொட்டு

எழுந்த‌ நாட்க‌ள் க‌ட‌ந்துவிட்ட‌ன

இங்கே அலார‌த்தின் எரிச்ச‌ல் கேட்டு

எழும் நாட்க‌ள் க‌ச‌ந்து விட்ட‌ன‌...

ப‌ழ‌கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ழ‌கிய‌ வீதிக‌ள்

ப‌ள்ளி நாட்க‌ள் எல்லாமே

ஒரு இர‌வு நேர‌ க‌ன‌வுக்குள்

வ‌ந்து வ‌ந்து காணாம‌ல்

போய்விடுகிற‌து...

ந‌ண்ப‌ர்க‌ளோடு

கிட்டிப்புல் க‌ப‌டி சீட்டு

என சீச‌ன் விளையாட்டுக்க‌ள்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ‌மையும்

எதிர் பார்த்து விளையாடி ம‌கிழ்ந்த‌

உள்ளூர் உல‌க‌க்கோப்பை கால்ப‌ந்து...

வீதிக‌ளில் ஒன்றாய்

வ‌ள‌ர்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளின் திரும‌ண‌த்தில்

கூடி நின்று கிண்ட‌ல‌டித்த‌ல்

ப‌ழைய‌ச‌ட‌ங்குகள்

ம‌றுத்து போராட்ட‌ம்

பெண் வீட்டார் ம‌திக்க‌வில்லை

என‌கூறி வ‌ற‌ட்டு பிடிவாத‌ங்க‌ள்...

இவையெதுவுமெ கிடைக்காமல்

க‌ண்டிப்பாய் வ‌ர‌வேண்டும்

என்ற‌ ச‌ம்பிரதாய‌ அழைப்பித‌ழுக்காக‌...

ச‌ங்க‌ட‌த்தோடு

ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே

தொலைந்து விடுகிற‌து

எங்க‌ளின் நீ..ண்ட‌ ந‌ட்பு...

எவ்வ‌ள‌வு ச‌ம்பாத்தும் என்ன‌?

நாங்க‌ள் அய‌ல்தேச‌த்து

ஏழைக‌ள்தான்...

காற்றிலும் க‌டித‌திலும்

வ‌ருகின்ற‌ சொந்த‌ங்க‌ளின்

ந‌ண்பர்க‌ளின் ம‌ர‌ண‌செய்திக்கெல்லாம்

அர‌பிக்க‌ட‌ல் ம‌ட்டும் தான்

ஆறுத‌ல் த‌ருகிற‌து...

இத‌யம் தாண்டி

ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ளெல்ல‌ம்

ஒரு க‌ட‌லைத்தாண்டிய‌

க‌ண்ணீரிலையே

க‌ரைந்துவிடுகிறார்க‌ள்...

இருப்பையும் இழ‌ப்பையும்

க‌ண‌க்கிட்டு பார்த்தால்

எஞ்சி நிற்ப்ப‌து

இழ‌ப்பு ம‌ட்டும்தான்...

ஒவ்வொறு முறை

ஊருக்கு வ‌ரும்பொழுதும்

புதிய‌ முக‌ங்க‌ளின்

எதிர் நோக்குத‌லையும்

ப‌ழைய‌ முக‌ங்க‌ளின்

ம‌றைத‌லையும் க‌ண்டு

அய‌ல் தேச‌ம் செல்ல‌ மறுத்து

அட‌ம் பிடிக்கும் ம‌ன‌சிட‌ம்

த‌ங்கையின் திரும‌ண‌மும்

வீட்டு க‌ட‌ன்க‌ளும்

பொருளாதார‌மும் வ‌ந்து

ச‌மாதான‌ம் சொல்லி அனுப்பிவிடுகிற‌து

மீண்டும் அய‌ல்தேச‌த்திற்கு...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்‍
துபாய்.

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

/நாங்க‌ள் பூசிக்கொள்ளும்

சென்டில் வேண்டும‌னால்

வாச‌னைக‌ள் இருக்க‌லாம்

ஆனால் வாழ்க்கையில்...?

தூக்க‌ம் விற்ற‌ காசில்தான்

துக்க‌ம் அழிக்கின்றோம்

ஏக்க‌ம் என்ற‌ நிலையிலே

இள‌மை க‌ழிக்கின்றோம்.../

உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை....