Thursday, July 8, 2010

ஐ.நா. வலை... ராஜபக்ஷே கவலை....4 மாதங்களுக்குப் பிறகு? - சூனியர் விகடன்

இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளை மறைக்க, ராஜபக்ஷே பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் நிலையில்... மனசாட்சியுள்ள உலக நாடுகள் அவரை அவ்வளவு எளிதில் விடாதுபோல் இருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் ராஜபக்ஷே, தற்போது ஐ.நா. சபை அமைத்திருக்கும் மூவர் விசாரணை கமிஷனால் உச்சபட்ச நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கூடவே ஜப்பானும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு எதிராகக் குரல் உயர்த்தி இருப்பதும் ராஜபக்ஷேவின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது!

ராஜபக்ஷேவுக்கு எதிராக முதல் குரலைப் பதிவு செய்தவர் சிங்கப்பூரைச்
செதுக்கிய சிந்தனைச் சிற்பி லீ குவான் யூ, ''ஈழத் தமிழர்கள் மீதான கொடுமைகளை மூடி மறைத்ததாக ராஜபக்ஷே நினைத்தால்... அது முற்றிலும் தவறு. நியாயத்துக்காகப் போராடி மீண்டும் ஈழத் தமிழர்கள் போர்க் கொடி தூக்குவார்கள்!'' எனத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். இதைத் தொடர்ந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய்ந்து வந்த ஐ.நா. சபையின் மனித வள ஆணையம், இப்போது கடைசிக் கட்டப் போரில் திரைக்குப் பின் நடந்த கொடூரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முனைந்துள்ளது.

ஐ.நா-வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள மூவர் குழுவின்
தலைவர், இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி மர்ஸுகி தருஸ்மான். இவர், பெனாசிர் புட்டோ கொலை வழக்கை ஆராய்ந்து பல்வேறு உண்மைகளை வெளியே கொண்டுவந்தவர். மற்ற இருவர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர். ஐ.நா-வின் நடவடிக் கைகளால் கடும் கலக்கத்துக்கும் எரிச்சலுக்கும் ஆளாகி இருக்கும் ராஜபக்ஷே, ''இலங்கையின் மதிப்பைக் குலைக்கும் நோக்கிலேயே ஆதாரமற்ற வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.

எங்களால் முடிந்தவரை, போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணி
களைச் செய்து வருகிறோம். இந்த விசாரணைக் குழு தேவையற்றது...'' என்று சொல்லி இருக்கிறார். இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் காமினி லஷ்மண பீரிஸ், இன்னும் ஒருபடி மேலே போய், 'ஐ.நா-வின் விசாரணை கமிட்டி இலங்கையில் காலடி எடுத்துவைக்க முடியாது. அவர்கள் யாருக்கும் விசா கிடையாது!'' என்று மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார். இவை எல்லாம், நியாயத்தை எதிர்நோக்கும் உலக நாடுகளுக்கு இலங்கை மீதான எரிச்சலை அதிகப்படுத்தி உள்ளது.

ஐ.நா-வின் விசாரணை கமிஷனுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது.
சமீபத்தில்தான் ஜப்பான், நிவாரண நிதியாக அமெரிக்க டாலர் மதிப்பில் 426.4
மில்லியன் டாலர் நிதியை இலங்கைக்கு அளித்திருந்தது. இதுபற்றி இலங்கையின் ஜப்பான் தூதரான யாசுஷி அகாஷி, ''எப்போது நிவாரண நிதி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை எங்களிடம் கையெழுத்திட்டதோ... அப்போதே எங்களுக்கும் ஈழத் தமிழர் பிரச்னையில் கேள்வி கேட்கும் உரிமை உண்டு என்பதை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். 'ஐ.நா-வின் விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்று ராஜபக்ஷேவிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் அதைக் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரிய வில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை
அளிக்கிறது!'' என்கிறார்.

ஜப்பான் இப்படி என்றால், ஐரோப்பியக் கூட்ட மைப்பு மொத்த இலங்கையையும் பதறச்செய்யும் அளவுக்கு ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை, தனது பெரும்பாலான இறக்குமதித் தேவைகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் மேற்கொள்கிறது. ஐரோப்பாவைச் சார்ந்து இலங்கையின் பொருளாதாரம் அமைந்திருக்கும் நிலையில், 'மனிதநேயத்துக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடவில்லை என்று எழுத்துபூர்வமாக இலங்கை கையெழுத்துப் போடாத வரையில், எங்கள் நாடுகளில் இலங்கைக்கான ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படும்.'
என்று அறிவித்துள்ளது.

அதோடு, ஐ.நா. தரப்பு, ''இறுதிப் போரின் சில நாட்களில் மட்டும் சுமார்
7,000 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக எங்களுக்கு ஆதாரங்களுடன்
செய்தி கிடைத் துள்ளது. 2006-ம் ஆண்டு மூன்றில் ஒரு பங்கு வாழ்ந்த ஓர் இனம்... இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் இருக்கிறது என்றால் அது இனப் படுகொலை இல்லாமல் வேறென்ன? ப்ரஸ்ஸல்ஸ் (Brussels) நாட்டின் International Crisis Group, எங்களுக்கு அளித்த தகவல்படி, இலங்கை ராணுவம், தமிழர்களை 'No fire zone' இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் கையைக் கட்டிப்போட்டுச் சுட்டுக் கொன்றது உறுதியாகி உள்ளது. ரஷ்யாவும், சீனாவும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிவரும் நிலையில், தேவைப்பட்டால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும்...'' என்கிறது.

சிங்களப் படையினர் மனிதநேயமற்ற எவ்வித செயல்களிலும் ஈடுபடவில்லை
என்றும், தங்களது ஒவ்வொரு முடிவும் தமிழர்களின் அக்கறையை மனதில்கொண்டுதான் எடுக்கப்பட்டது என்றும் ராஜபக்ஷே கூறி வருகிறார். ஆனால், சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களின் உடம்பைத் தோட்டாக்களால் துளைத்தும், தமிழ்த் தாய்மார்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதும் வீடியோ வடிவில் பல இணைய தளங்களில் உலவுவது ராஜபக்ஷேவுக்கு எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது
போல் இருக்கிறது!

ஆனால், எப்போதும் தன்னை உத்தமராக வே காட்டிக்கொள்ளும் ராஜபக்ஷே கடந்த வாரம் விடுத்த அறிக்கையில், 'நான் எனது படை வீரர்களுக்கு ஒரு கையில் துப்பாக்கியையும், இன்னொரு கையில் மனித உரிமை ஆணையத்தின் ஆவணங்களையும் எடுத்துச் செல்லுமாறுதான் கூறுவேன். அப்படிப்பட்டவர்கள் அத்துமீறி ஓர் அப்பாவித் தமிழனின் உயிரையும் பறித்திருக்க மாட்டார்கள்!' என்று கூசாமல் சொல்லி இருக்கிறார். ஜூலை முதல் தேதியில் இருந்து தொடங்கும் ஐ.நா. சபையின் விசாரணை, சரியாக நான்கு மாதங்களில் முடிந்துவிடும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார் குழுவின் தலைவர் மர்ஸுகி தருஸ்மான். அதில், ராஜபக்ஷேவின்
போர்க் குற்றங்கள் நிரூபணமானால், அவருக்குத் தண்டனை... கிடைக்க
வேண்டும்...

கிடைக்குமா?
- சிங்கப்பூரிலிருந்து ஏ.ஆதித்யன்
- சூனியர் விகடன்

No comments: