Friday, July 23, 2010
துபாயின் புறநகரில் உள்ள சோனாபூர் கொத்தடிமை கூடாரத்தில் பன்னாட்டு தொழிலாளர்கள்
சௌதி அரேபியா. மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சொற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலை கீழாய் மாற்றமடைந்தது. அமெரிக்காவின் அராம்கோ நிறுவனம் எண்ணெய் துரப்பணத்தை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டது, சில மாற்றங்களுடன் இன்றும் அது தொடர்கிறது.
அதுவரை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மட்டுமே அறியப்பட்ட சௌதி, எண்ணெய் பாயத்தொடங்கியவுடன் உள்கட்டுமானம், வளர்ச்சிப் பணிகள் என்று பெருமளவில் வேலை வாய்ப்புகளை கொண்ட நாடாக வளர்ந்தது. அந்த வகையில் எழுபதுகளின் பிற்பகுதியில் உடலுழைப்புக் கூலிகளாய் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர்.
சௌதியின் மக்கள் தொகைக்கு ஈடாக வெளிநாட்டவர்கள் வேலை செய்தாலும், தொழிலாளர்களின் உரிமை என்று எதையும் எதிர்பார்க்கமுடியாது. சொந்த நாட்டு மக்களுக்கே கூட ஜனநாயக உரிமைகள் என்று எதுவுமில்லை. அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை. கூட்டம் கூடி பேசும் உரிமையையோ, எழுதி வெளியிடும் உரிமையையோ நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அச்சிடப்படும் நூல்கள் அனைத்தும் தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும், நாளிதழ்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றாலும் அரசுக்கு எதிராக எதையும் எழுதிவிட முடியாது. மக்களும் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசருக்கோ, அரசுக்கோ எதிராக எதையாவது பேசும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் கூட சுற்றுமுற்றும் பார்த்து தாழ்ந்த குரலில் பேசுவதே மக்கள் வழக்கம்.
இந்நிலையில் வெளிநாட்டுக் கூலித்தொழிலாளர்கள் என்ன உரிமையை எதிர்பார்த்துவிட முடியும்?
குறைந்தபட்ச ஊதியம் என்று எந்த வரம்பும் இங்கு கிடையாது. நிறுவனத்திற்கேற்றாற்போல், நாட்டிற்கேற்றாற்போல் ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஒரே வேலையைச் செய்யும் இருவேறு நிறுவனங்களின் தொழிலாளிகளுக்கு ஒரே விதமான ஊதியமும் வசதிகளும் இருக்குமென எண்ணிவிடமுடியாது. ஒரே வேலையைச் செய்யும் ஒரே நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு கூட நாட்டைப் பொருத்து ஊதியம் வேறுபடும்.
துப்புறவுத் தொழிலாளி ஒருவருக்கு எகிப்தைச் சேர்ந்தவராக இருந்தால் 1200 ரியால் வரை ஊதியம் கிடைக்கும், பிலிபைனியாக இருந்தால் 900 ரியால், இந்தியனுக்கு 800 ரியால், பாகிஸ்தானி, இந்தோனேசியனுக்கு 600 ரியால், இலங்கை என்றால் 500 ரியால், பங்காளி (வங்கதேசம்) என்றால் 400 ரியால், தற்போது நேபாளத்திலிருந்து 300, 250 ரியாலுக்கு கூட ஆட்கள் வருகிறார்கள் (ஒரு ரியால் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 12 ரூபாய்) இது அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து சற்று கூடக் குறைய இருக்கும்.
ஊரில் மிச்சமிருக்கும் கொஞ்ச உடமைகளையும் விற்று, கடன் வாங்கி, தாலியை அடகுவைத்து பெரிய தொகையை தரகனிடம் தந்துவிட்டு அதைவிட பெரிய கனவுடன் வந்திறங்கியதும் முள்ளாய் குத்துவது இந்த ஊதிய வேறுபாடுதான்.
ஊரில் தரப்படும் ஒப்பந்தத்திற்கும் (பெரும்பாலும் தருவதில்லை வற்புறுத்திக் கேட்டால் காண்பிப்பார்கள்) சௌதியில் வந்திறங்கியதும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் ஒரு தொடர்பும் இருக்காது. மொத்த ஊதியத்தில் 60 விழுக்காடுதான் அடிப்படை ஊதியமாக இருக்கும். எந்நேரம் அழைத்தாலும் வேலைக்குச் செல்ல தயாராக இருக்கவேண்டும். எந்த ஊரில் என்றாலும் மறுப்புத் தெரிவிக்க முடியாது. வேறு வெளியாளிடமோ, வெளி நிறுவனங்களிலோ வேலை செய்யக் கூடாது, போன்றவை பொதுவான விதிகள். ஊதிய உயர்வை சட்ட்பூர்வமாக கோரமுடியாது. விண்ணப்பிக்கலாம் அவ்வளவுதான். உபரி வேலை செய்தால் அடிப்படை ஊதியத்திலிருந்து நேரக் கணக்குப்படி தருவார்கள். வேலை நாளாக இருந்தால் ஒன்றரை மடங்கு என்றும் விடுமுறை நாளாக இருந்தால் இரண்டு மடங்கு என்றும் சட்டத்தில் உண்டு. ஆனால் வெகு சில நிறுவனங்களைத் தவிர எனையவை இதை கண்டு கொள்வதில்லை.
சௌதியில் பரிதாபத்தை வரவழைக்கும் நிலையில் இருப்பவர்களில் முதன்மையானவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். 12 மணி நேர வேலை கட்டாயம். ஏனைய தொழிலாளர்களோடு ஒப்பிட்டால் குறைந்த ஊதியம். இங்கு அடிக்கும் வெயிலில் பத்து நிமிடம் நின்றாலே தோலில் சூடு தாங்காமல் ஒருவித அரிப்பு வந்துவிடும், அந்த வெயிலில் காலைமுதல் மாலை வரை நின்று வேலை செய்ய வேண்டும். நகரத்தில் எங்காவது ஒதுக்குப்புறத்தில் தங்குமிடம் இருப்பதால் போய்வருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். இந்தக் களைப்புகளோடு அறைக்கு வந்தால் ஒரு அறையில் ஆறு பேர் முதல் பத்துப் பேர் வரை அடைக்கப்பட்டிருப்பர்.
சாலைகளில், வீதிகளில் துப்புறவுத் தொழிலாளர்களோ, பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பர்தாவை பிசகாமல் பின்பற்றுகிறவர்களாய் இருப்பார்கள். கண்களையும், கைகளையும் தவிர ஏனைய அனைத்தையும் துணிகளால் சுற்றி மூடி மறைத்திருப்பார்கள். வெயிலின் தாக்கம் அப்படி.
யார் எங்கு வேலை செய்தாலும் அந்தந்த சூழலைப்பொருத்து சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் சௌதியில் நேரிடுபவைகளை இந்த ரீதியில் வகைப்படுத்திவிட முடியாது. எந்த உரிமையும் இன்றி வேலையை மட்டும் செய் என்பதுதான் இங்குள்ள நிலை. தொழிற்சங்கம் போன்றவற்றை இங்கு ஏற்படுத்த முடியாது என்பது ஒரு புறமிருந்தாலும் பதிக்கப்படும் ஒரு தொழிலாளிக்காக இங்கு யாரும் பரிந்து பேசவும் முடியாது. வேறு எந்த வளைகுடா நாட்டிலும் இல்லாத பிரச்சனை இது.
துபாயில் தொழிலாளர்கள் போராடி மதியம் 11 மணியிலிருந்து 3 மணிவரை கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று ஆணை பெற்றிருக்கிறார்கள். மஸ்கட்டில் பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பெயரில் தரமற்ற எடை கூடிய உபகரணங்களை தொழிலாளர்களிடம் திணிக்காமல் தரமான, எடைகுறைந்த பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவை பெற்றிருக்கிறார்கள். இவை சாதாரணமான சிறிய சலுகைகள் தான் என்றாலும் இவைகளை வெளிநாட்டு தொழிலாளர்கள் போராடி பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமானது. ஆனால் சௌதியைப் பொருத்தவரை இதைப் போன்ற எதையும் எதிர்பார்க்க முடியாது. நிறுவனங்களின் பொறுப்பிலிருக்கும் தொழிலாளர்கள் குறித்து அரசு எந்த விதத்திலும் தலையிடுவதில்லை.
லேபர் நீதிமன்றங்கள் தொழிலாளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் எழும் பிரச்சனைகளை தீர்ப்பதற்க்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள் கடைகளிலோ அல்லது தனிப்பட்ட சௌதிகளிடமோ வேலை செய்பவர்களுக்குத்தான் தீர்வு சொல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த புகார்களை எடுத்துக்கொள்வதில்லை. தொழிலாளிகளிடமே நிர்வாகத்திற்கு பணிந்து செல்லுமாறு அறிவுரை கூறுகின்றன.
அண்மையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, மருத்துவ விடுப்பில் இருந்த 15 நாளுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று அஃப்ராஸ் எனும் நிறுவனத்திற்கு எதிராக (மருத்துவ விடுப்பிற்கு ஊதியம் வழங்கவேண்டும் என விதி உண்டு) அளித்த புகாரை லேபர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட, அதையும் புகாராகச் சேர்த்து அமீர் நீதிமன்றத்தில் (லேபர் நீதிமன்றத்திற்கு மேல் நீதிமன்றம்) அளிக்க அங்கும் ஏற்கப்படவில்லை. ஆனால் அதே நாளின் இரவில் யாருக்கும் தெரியாமல், அவனது சொந்த உடமைகளைக்கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல், கொடுக்கவேண்டிய ஊதியமோ, எட்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான பலன்களோ எதுவுமின்றி ஊருக்கு அனுப்பப்பட்டான்.
தூதரக அலுவலகங்களும், பெயருக்குத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்திய தூதரக அலுவலகங்களில் தொழிலாளர்களை அலட்சியமும், அவமதிப்பும்தான் வரவேற்கும். கடவச்சீட்டு புதுப்பிப்பதைத் தவிர வேறெதற்கும் அங்கு செல்வதில் ஒரு பயனும் இல்லை. இது இந்திய தூதரகத்திற்கு மட்டுமல்ல இங்கு தொழிலாளர்களாக இருக்கும் எந்த ஆசிய நாட்டு தூதரகமும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன.
துபாய்-சோனாபூர் கொத்தடிமை கூடாரத்திலிருந்து
ஓவர்டைம் என அழைக்கப்படும் உபரி வேலை என்பது சௌதியைப் பொருத்தவரை ஒவ்வொரு தொழிலாளிக்கும் மிகவும் முக்கியமானது. இந்த மாதம் எத்தனை மணி நேரம் உபரி வேலை செய்திருக்கிறோம் என்பது மாதக் கடைசியில் மகிழ்வையும் நிம்மதியையும் தரக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். சம்பளம் மட்டும் தேவைகளுக்கு போதுமானதாக இருக்காது. ஊரில் வாங்கிய கடன், அதற்கான வட்டி, குடும்பச்செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் என அனைத்தையும் சமாளிக்க சம்பளம் மட்டும் போதுமானதாக இருக்காது. இங்கு வேலை செய்யும் அனேகம் பேர் சம்பளத்தில் ஒரு காசு கூட செலவு செய்துவிடாமல் அப்படியே ஊருக்கு அனுப்பவேண்டும் என்று வைராக்கியமாகவே இருப்பார்கள். அவர்களின் தேவைக்கு எல்லாம் உபரி வேலை தான் ஒரே வழி. உபரி வேலைக்கு சட்டப்படியான ஊதியத்தை தராமல் ஏமாற்றுகிறார்கள். அடிமையைப் போல் நடத்துகிறார்கள் என்பன போன்ற எதுவும் அவர்களைப் பாதிக்காது.
ஓய்வு வேண்டும் என உடல் கெஞ்சினாலும் உபரிவேலைக்கு செல்ல ஆயத்தமாய் இருப்பார்கள். இதில் இன்னொரு உளவியல் காரணமும் இருக்கிறது. இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உடலியல் தேவைகளை அசட்டை செய்துவிட்டு வந்தவர்கள் தாம். கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்கத் தோன்றாமல் இளம் மனைவியிடம், முகம் பார்க்கா குழந்தையிடம் தொலைபேசியில் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தாம். அறையில் இருந்து ஆசைகளின் அசையில் கனன்று கொண்டிருப்பதைவிட வேலைக்குச் சென்று அந்த வியர்வையை தெளித்து வெம்மையை ஆற்றுப்படுத்துவோம் என நினைப்பதும் ஒரு காரணம்.
ஒப்பந்த நிறுவனங்கள் என்று சில இருக்கின்றன. பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளைப் பெற்று தங்களது தொழிலாளர்களை வைத்து செய்து முடிப்பது இந்த ஒப்பந்த நிறுவனங்களின் பணி. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தவிர்க்க முடியாத தருணங்களைத்தவிர உபரி வேலை கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் டபுள் டூட்டி எனும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.
அதாவது ஒரு இடத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம் முடிந்ததும் வேறொரு இடத்தில் கொண்டு விட்டுவிடுவார்கள், அங்கு இன்னொரு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். சில நாட்களில் சில மணி நேரம் உபரி வேலை என்பதைவிட மாதத்தில் எல்லா நாளும் வேலை இரட்டைச் சம்பளம் என்று கூறி சம்மதிக்க வைக்கிறார்கள். ஆனால் முதல் வேலைக்கு மட்டுமே ஒப்பந்தப்படி முழுச் சம்பளம். இரண்டாவது வேலைக்கு பாதிச்சம்பளம் மட்டுமே. நிரந்தரமான உபரி வேலைக்கு வழி செய்கிறோம் என்று எட்டு மணி நேரம் வேலை வாங்கி விட்டு நான்கு மணி நேரத்திற்கு ஊதியம் கொடுக்கிறார்கள் (முழு ஊதியமே அவர்களின் வேலைக்கு போதுமானதாக இருப்பதில்லை என்பது வேறு விசயம்)
இதுபோன்ற உபரிவேலை கிடைக்காதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்களில் எட்டு மணி நேர வேலை போதும் வேறு வேலை வேண்டாம் எனக் கருதுபவர்கள் வெகு சிலரே. ஏனையவர்கள் செய்யாத வேலை இல்லை எனும் அளவுக்கு எல்லா வேலைகளையும் செய்கின்றனர். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ஹலாலா தான் (அரை ரியால்) ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் இரண்டு ரியால். இதனால் மொத்தமாக தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு சாலைகளில், சந்திப்புகளில், கடைவீதிகளில் இன்னும் செல்லமுடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று வண்டிகளில் செல்வோர் நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர் புட்டிகளை நீட்டி வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்தை விற்றுக்கொண்டிருப்போர் உண்டு.
ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்துவிட்டு அதற்கு மேல் குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டராவது கையில் தண்ணீர் புட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்து கடக்கும் இவர்களிடம், இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன.
வியர்த்து வழியும் முகம், ஒரு கையில் பை, மறு கையில் போதிய நீளமுள்ள முனையில் வளைந்த ஒரு கம்பி இந்த அடையாளங்களுடன் சாலையில் அநேகரைச் சந்திக்கலாம். குப்பைத்தொட்டிகளைக் கூட வீடு வைக்காமல் கிளறித்தேடி பெப்ஸி டப்பாக்களை சேகரித்து விற்கும் இவர்களும் ஏதோ ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்து விட்டு உபரி வேலையாய் அலைபவர்கள் தாம். யாரும் பெப்ஸி குடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் சற்று தூரத்தில் இவர்களும் நின்று விடுவார்கள். ஓரிரு நிமிடங்கள் ஓய்வெடுத்தது போலும் ஆகிவிடும், ஒரு பெப்ஸி டப்பா கிடைத்தது போலும் ஆகிவிடும். ஒரு பெப்ஸியின் அடக்கவிலையில் குடித்துவிட்டுத் தூக்கி எறியும் டப்பாவுக்காக 60 விழுக்காட்டை வசூலிக்கும் பெப்ஸி நிறுவனம், சாதாரணமாக 50 டிகிரியைத் தாண்டும் தகிக்கும் வெயிலில் அலைந்து சேகரிக்கும் பெப்ஸி டப்பாக்களை கிலோ ஒன்றரை ரியாலுக்கு வாங்கிக் கொள்வதை மெய்யாகவே கொல் வதை என்று சொல்லவேண்டும்.
இன்னும், துணி துவைத்துக் கொடுப்பவர்கள், முடி திருத்துவோர், தொலைபேசி அட்டை விற்பவர்கள், ஓட்டுனர்கள், கணிணி வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்வோர் என்று என்னென்ன வழிகளில் முடியுமோ அதிலெல்லாம் முனைந்து, முயன்று தங்களின் எட்டுமணி நேர வேலைக்குப் பிறகு கரணம் அடித்துக்கொண்டிருக்கும் யாரையும் சந்தித்து நாளின் பெரும்பாலான நேரத்தில் உழைத்தே தேய்ந்து கொண்டிருக்கிறீர்களே உங்களின் சூழ நிகழ்பவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா என்றால், ஒரு அசட்டுச் சிரிப்பு “ஊரில் என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே” என்பதுதான் பதிலாக இருக்கும்.
மொழி தெரியா ஒரு அன்னிய நாட்டில் பதினெட்டு மணி நேரம் வரை உழைத்தாலும், அந்த உழைப்பின் பலனில் பெரும் பகுதி உழைப்பவனைச் சேர்வதில்லை என்பதற்கு சொந்த நாடு அன்னிய நாடு என்பதெல்லாம் பேதமில்லை. உழைப்பவன் சுரண்டப்படவேண்டியவன் என்பதே பொது மொழி. சில கோடியே மக்கள் தொகையுள்ள இந்த நாட்டில் எண்ணெய் வளத்தின் மூலம் செல்வம் கொழித்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.
சௌதிகள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. ஆனால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையிலான வித்தியாசம் படு வேகமாக அதிகரிப்பதையடுத்து முதலில் எந்த நிறுவனமும் 7 விழுக்காடு அளவில் கட்டாயம் சௌதிகளுக்கு வேலை வழங்கவேண்டும் என்றும் பின்னர் இது 15 விழுக்காடாகவும் இது உயர்த்தப்பட்டது. அதையே வாய்ப்பாகக் கொண்டு இங்குள்ள நிறுவனங்கள் சௌதிகளுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பள வரம்பான 3000 ரியால் என்பதை நீக்கிவிட்டன. சௌதி பெண்கள் இப்போது துப்பறவு பணியாளராக 1800 ரியாலுக்கு பணி புறிகிறார்கள்.
அண்மைக் காலங்களில் இந்தியாவில் அறிமுகமான சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், பெரு நிறுவனக்களின் சில்லறை விற்பனை நிலையங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட நகரியங்கள் ஆகிய அனைத்தும் நீண்ட காலமாகவே சௌதியில் செயல் பட்டு வருகின்றன. விளைவு வர்க்கக் கோடு தன்னை அழுத்தம் திருத்தமாக வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது. மக்கள் ஐந்து வேளை தொழுகிறார்களா என கண்காணிப்பதற்கு தனியாக காவல்படை(முத்தவ்வா) அமைத்த அரசு அவர்கள் வளமாக வாழுகிறார்களா என்பதை கண்காணிக்க எதையும் செய்யவில்லை.
முன்பொருமுறை தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியை வெகு சுலபமாக நசுக்கிவிட்டது சௌதி அரசு. இனியொருமுறை கம்யூனிச இயக்கம் சௌதி மண்ணில் தன்னை புதுப்பிக்கும் போது அதை ஒடுக்குவது அரசுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை. இன்று வளைகுடா வெயிலில் சர்வாதிகார ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளிகள், தேசிய இன வேறுபாடு, மதவேறுபாடு இன்றி வர்க்கமாய் ஒன்றிணைந்து ஏகாதிபத்தியக் கொழுப்பில் ஆட்டம் போடும் ஷேக்குகளை வஞ்சம் தீர்ப்பார்கள். தொழிலாளிகளின் வர்க்க ஒன்றிணைப்பில் வளைகுடாவின் விதி மாற்றி எழுதப்படும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம், வேலை செய்வோம்.
______________________________________________________
- வினவு நிருபர், வளைகுடாவிலிருந்து.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment